எது வள்ளலார் பூமி?

நல்லறிஞர், இடதுசாரிச் சிந்தனையாளர், தோழர் வே.மு.பொதியவெற்பன் அவர்களுடன் முக நூலில் நடந்த உரையாடல் கீழே உளது.

பொதிகைச்சித்தருடனான இவ்வுரையாடலைக் கண்டு வேண்டாத முன்முடிவுகளுக்கு வர உந்தப் பெறுவோர்

” சிவைதாவும் உவேசாவும் ஆறுமுகத்து நாவல்லோனும் ‘வரலாறில்லாத் தமிழ’னெனும் வசைகிழித் திசைபடச் சங்க இலக்கிய இலக்கண உரைகள் மீட்டெடுத்திங்கே நாட்டி விட்டாரே”

என்று நாவலர் திறத்தை நவின்றபடியே தனது கண்டனத்தைப் பதியும் அவர்தம் சான்றாண்மை உணர்க. வீண் உரை தவிர்த்திடுக!

தோழர் வே.மு. பொதியவெற்பன்:

இது இராமலிங்க பூமி! ஈழச்சைவ அடிப்படைவாதம் இங்கு செல்லாது! கநாசு கும்பல் திகம்பர ஆடை, அதுகள் அற்றம் மறைக்காது!

மதுரன் தமிழவேள்:

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து என்பார் வள்ளுவர்.

நாம் எந்த உயர் நிலையை அடைய விரும்புகிறோமோ அதற்கான சூழல் வாய்க்காது தள்ளினும் நாம் உயர்வையே உள்ளுதல் வேண்டும்.

பாகுபாட்டை ஒறுத்து அன்பென்ற அருட்சோதியைப் பரப்பிய இராமலிங்க வள்ளலார் எல்லோர்க்குமானவர்.

சாதியப் பாகுபாடு தாய்த்தமிழ் நிலத்தும் உண்டு. ஈழத்தேயும் உண்டு. சாதியத்தின் மடமையை மறுக்கும் விரியறிவுடையாரும் இரு நிலத்தும் உளர். இரு நிலம் என்பதும் மொழியின் குறையால் விளைவதே. பேருணர்வில் எல்லாமும் ஒன்றே.

நாம் முன்னிறுத்த வேண்டியது சாதிய மறுப்பையும் எல்லோர்க்குமான நீதியையுமே. அவ்வகையில் எல்லா நிலமும் இரமலிங்க வள்ளலார் நிலமே.

அதை விடுத்து இராமலிங்க பூமி x ஈழச்சைவ அடிப்படை வாதம் என்று இருமை முரண்களைக் கட்டமைப்பது பிளவையே விளைக்கும்.

எல்லோர்க்குமாய் இருந்த தம்மத்தைக் குறுக்கி, ‘இது சிங்கள பௌத்த பூமி’ என்று அடிப்படைவாதம் பரப்ப முற்பட்டதால் அன்றோ இன்று இத்தனை அவலம்!

(ஆறுமுக நாவலரின் ‘ஆகம அடிப்படைவாத’த்தைக் கண்டிக்கும் தோழர் பொதியின் முழுப்பதிவு இங்குக் காண்க)

தோழர் வே.மு. பொதியவெற்பன்:

சிங்களபௌத்த அடிப்படை வாதத்துக்கு எதிரதாகச் சைவ அடிப்படை வாதத்தை முன்னெடுக்கும் சைவப்புலிகள் காந்தளகம் சச்சி, காசி ஆனந்தன், தீபச்செல்வன், அகரமுதல்வன் வகையறா இந்துத்துவப் பாசிசத்துடன் இங்கே மோடி, அர்ஜுன் சம்பத், ஜெயமோகனோடு கைகோக்கின்றனர்.

அகரமுதல்வன்ஆறுமுக நாவலரை இத்தொடர்பில் முன் எடுக்கின்றார். ஈழச்சைவம் இந்துமயமானது யாரால்? ஆனால் தமிழகச் சைவத்தில் வேத எதிர்ப்பு மரபு வேரோடிக் கிடக்கின்றது. சைவசமய ஆய்வில்: இந்த இருமையை எம்மனோரா கட்டமைத்தோம். இராமலிங்கர் ‘சாதியும் மதமும் சமயமும் பொய்யென’ ஆன்மநேயத்தை முன்னெடுத்தார். ஆறுமுகத்தைக் கொண்டாடும் ஈழச்சைவர் பொட்டுப் பூச்சியாய்ய்ப் புன்மைத் தேரையாய் தலித்துகளையும் பெண்களையும் நடத்துகையில் கண்டிக்காத கள்ளமௌனம் ஈழச் சைவர்க்கே உரித்தானதா இல்லையா? தொடர்புடைய பதிவு

மதுரன் தமிழவேள்:

கள்ள மௌனிகளைக் கண்டிப்பது மெத்தச்சரி..

இப்படியான தொடர்களில் இலக்கண வேற்றுமை விரிவு மனிதருள் விரிசலைத் தடுக்கக்கூடும்:

‘ஈழச்சைவ அடிப்படைவாதம்’ என்று பண்புத்தொகையாகச் சொல்லும்போது ஈழம், சைவம் எல்லாவற்றின் மீதும் அடிப்படைவாதத்தை ஏற்றிப் பேசுகிறீர்கள். பன்மை மறுத்துப் பொதுமைப்படுத்துகிறீர்கள்.

ஈழத்தின்கண் நிலவும் சாதியச் சைவ அடிப்படைவாதம் என்று வேற்றுமை உருபு புலப்படுமாறு விரித்துரைப்பது தகு பொருளும் பயனும் தரும்.

தோழர் வே.மு. பொதியவெற்பன்:

தமிழகச் சைவம் × ஈழச்சைவம்இரண்டுக்குமான முரண் குறித்ததே இப்பதப்பிரயோகம்.

தமிழகச் சைவத்தில் வேத எதிர்ப்பு – காபாலிகப் பிரிவு இன்றளவும் உண்டு. தொகை விரிச் சொன்மை தெரிதல் புலமை விளையாட்டு எல்லாங் கிடக்கட்டும். வேத எதிர்ப்பு உங்கான சைவத்தில் எங்கேனும் உண்டானால் அத்தை விதந்தோதியே விரித்துரைமின்.

மதுரன் தமிழவேள்:

நான் சொல்ல வருவது:

புத்தரின் பூமி என்று ஒரு குறு நிலத்தை மட்டும் சுட்டுவது ஆபத்தானது. சிந்தனையை ஒடுக்குவது.புத்தரின் பூமி என்பது மொத்தப் பேரண்டமும்தான்.

அது போலவே வள்ளலார் பூமி என்பதும்.

நடப்பு நிலைகளைச் சுட்டிப் பேசுவதற்குப் பெயரடைக் குறுக்கங்களை விட, விரி தொடர்களே பொருத்தமானவை; நாடும் பொருள் தர வல்லவை.

‘ஈனப் பறையர்கள் ‘ என்ற பாரதி சொல்லாடலில் பாரதிக்காகப் பரிந்து பேசுவோர் சொல்லும் நியாயம், அக்காலத்தில் பறையர்கள் தாழ்வான நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள்; அதைச் சுட்டும் முகமாகவே பாரதி அப்படிப் பாடினார் என்பது.

பாரதியின் மேம்பட்ட நுண் மனம் இத்தகைய ஏற்றத்தாழ்வை மறுத்தது என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால் குறிப்பாக அந்த வரிகளில் தொழிற்பட்டது அவரது தாழ் மனமே. நுண் மனம் தொழிற்பட்டிருந்தால் பட்டிருந்தால் “ஈனப் பறையர் என்றுரைக்கும் – மதி – ஈனம் ஒழிந்திட வேண்டும்” என்றல்லவோ பாடியிருக்க வேண்டும். பெயரடையாகக் குறுக்குவதில் உள்ள அபாயம் இத்தகையதே.

தோழர் வே.மு. பொதியவெற்பன்:

அய்யா தங்கள் அளவிற்குச் சொன்மை தெரியவல்லேன் அல்லன் யான்.

தமிழகச் சைவம் × ஈழச் சைவம் என்பதை எத்தகைய பொருண்மையில் நான் பாவித்துள்ளேனோஅதனை உள்ளவாறே உங்களால் உள்வாங்ககக் கூடுமேயானால் அதற்கேற்பத் தொகை வகை விரி யாவும் தொடுத்துரைத்தே எம் போலும் பேதையர்க்கும் அறிவு கொளுத்தி ஆற்றுப்படுத்தி அருளிச் செய்வீர்களாக!

மதுரன் தமிழவேள்:

ஐயா,

//வேதஎதிர்ப்பு உங்கான சைவத்தில் எங்கேனும் உண்டானால் அத்தை விதந்தோதியே விரித்துரைமின்//என்ற தங்கள் கூற்றுத் தொடர்பாக:

சான்று தேடி வாதிட்டு ஒரு தரப்பை நிலை நாட்ட வேண்டும் என்ற நாட்டம் உடையேன் அல்லேன்.

அங்கான சைவத்தில் வேத எதிர்ப்பு எங்கேனும் உண்டா என்று தேடித் தெரிவது, தெளிவது, தெளிந்தக்கால் தெரிவிப்பது எல்லோரையும் ஒரு குடுவையிலிட்டுப் பொதுமைப்படுத்திப் பேசும் தங்கட்குள பொறுப்பு.

நான் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடிய கணியன் பூங்குன்றனின் பெயரன். எல்லாம் எல்லாக் காலத்தும் மாறுவன என்ற போதந்தந்த ஐயன் வழி நடக்கத் தலைப்படுபவன். இவ்வுண்மை தெரிந்ததால் பொதுமைப்படுத்திப் பேச இயலாதென்பதும் அதன்வழி வியத்தலோ இகழ்தலோ தகாதென்பதும் உணர்ந்திருக்கிறேன்.

உள்ள நிலை முற்றுமாய்ந்தே தாங்கள் இவ்வண்ணம் தெரிவிக்கின்றீர்களாயின் நன்று. ஆனால் எனக்குள்ள மட்டுற்ற அனுபவத்தில் இருந்து சொல்லக்கூடியது, அப்படி ஒருவழிக் கோடாய் உலகம் எக்காலத்தும் இயங்குவதில்லை.

மதுரன் தமிழவேள்:

 // தமிழகச் சைவம் × ஈழச் சைவம் என்பதை எத்தகைய பொருண்மையில் நான் பாவித்துள்ளேனோஅதனை உள்ளவாறே உங்களால் உள்வாங்ககக் கூடுமேயானால்//

தாங்கள் கூறும் பொருளைப் புரிந்து கொண்டுள்ளேன். தங்கள் நிலைப்பாட்டை முற்றும் ஒப்புகிறேன் (சாதியங்கடிதல், சம நீதி வேண்டல், அன்பு வளர்த்தல்).

பொதுவெளியில் பல்லோரும் எப்படிப் புரிந்துகொள்ளக்கூடும் என்பதே நான் சுட்ட விழைவது.

மதுரன் தமிழவேள்:

ஆறுமுக நாவலர் வகைச் சாதியச் சைவத்துக்கு மாற்றான சைவத்தை யாழ் மண்ணில் முன்னெடுத்த பெரியார் சூரன் போன்றோரையும் தாங்கள் கருத்தில் கொள்ளலாம். கா.சிவத்தம்பி பல இடங்களில் இவர் குறித்து எழுதியிருக்கிறார்:

சூரன் சுயசரிதை – நூலகத் தளத்தில் மின்னூலாக

ஆனால் இவர்களின் குரல் மேலோங்கி ஒலிக்கவில்லை – வேளாளமையச் சாதியச் சைவமே யாழ்ப்பாணத்தில் நிலை பெற்றது – என்பது உண்மை.

இது யாழ் மையச் சைவம்.

ஈழத்தமிழ் என்ற சொல்லால் இலங்கைவாழ் தமிழ் நெறிகள் அனைத்தையும் குறிக்கிறீர்கள் என்றால் அங்கு வேறும்பல நெறிமுறைகள் உள.

யாழ்ப்பாணத்தில் இருந்து மலை நிலத்துக்கு ஏழாம் அகவையில் போர் காரணமாகப் புலம்பெயர்ந்தபோது அங்குள்ள தமிழர் (so called “இந்திய வம்சாவளி’த் தமிழர்) தீபாவளியன்று மாமிசம் சமைத்துத் தெய்வத்துக்கும் மூதையோர்க்கும் படையலிடுவார் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. யாழ் மையச் சைவத்தின்பாற்பட்டு நான் புலால் தவிர்த்துண்ணப் பழக்கப்பட்டவன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×