ஒரு சொல், ஒரு குறள்: 51-90

மூன்று நாள்களுக்கு முன் முகநூலில் விளையாட்டாக இந்தத் தொடர் உருப்பெறத் தொடங்கிய கதையையும் முதல் 50 குறள் வெண்பாக்களையும் இங்கே படிக்கலாம்.

செய்தியின் சுருக்கம் இதுதான்: தமிழ் ஒலிப்புள்ள சொல்லொன்று தந்தால் நான் உடனுக்குடன் குறள் வெண்பா யாத்துத் தருவேன். குறள்வெண்பா தமிழின் பழைய செய்யுள் வடிவங்களுள் ஒன்று. இரண்டு அடிகளில், ஏழு சீர்களில் வெண்டளை பிறழாமல் அமைவது.

கீழே உள்ளவை 51 முதல் 90 வரையான குறட்பாக்கள். நூறு பாக்களோடு இந்தத் தொடரை நிறைவு செய்ய இருக்கிறேன். இன்றைய நாலாம் நாளோடு நிறைவு பெறும் என்று நினைக்கிறேன். முதலில் வரும் 10 சொற்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

அம்மா

அம்மாவின் மிக்கார்தாம் ஆருளரோ அன்புசெய

இம்மா நிலத்தே? இயம்பு (51)

*

குரு

திருவென்றால் வேறில்லை சிந்தையிலே சூடக்

குருவின்றாள் ஒன்றே குறி (52)

*

குறிஞ்சி

குறிஞ்சி நிலத்துக் குமரனடி ஏத்தப்

பெறுஞ்சீர் அளவுளதோ பேசு (53)

*

இமை

விழிக்கிமை போலவே மேவிவந் தென்றன்

வழிக்குமை ஆனாள்காண் வாழ்த்து (54)

*

இடக்கரடக்கல்

மிடுக்கை யொடுக்கி முடக்கி நடக்க

இடக்க ரடக்கல் வரும் (55)

*

பயணம்

செல்லும் பயணம் சிலகாலம் உற்றார் நெஞ்(சு)

ஒல்லும் பொழுதில் உயர்வு (56)

*

முருகுவளவன்

பெருகி எழுகவினிப் பேராறாய்ப் பேராய்

முருகு வளவ முனைந்து (57)

*

முகில்வெற்பன்

தகைநிறைத்துக் கன்னற் றமிழ்வளர்த்து வாழ்க

முகில்வெற்ப யாண்டும் முகிழ்ந்து (58)

*

முடிசூட்டு

மண்ணாள்மன் னர்க்கோ மணிமுடி சூட்டுவோம்?

பண்ணாள் முடியரசைப் பார் (59)

(வீறுகவியரசர் முடியரசர் குறித்து)

*

நுதல்

குறள் வெண்பாவில் *இரட்டுற மொழிதல் சற்றுக் கடினமானது – வெளி போதாது.

நுதல் என்ற சொல்லை வைத்து இரட்டுற மொழிதலணி பூண்ட குறள் வெண்பா ஒன்றை யாத்துத் தர இயலுமா? – முக நூலில் திரு. ரஜினி பிரதாப்சிங் கேட்டது.

*சிலேடை என்றுஞ் சொல்வர்

மதுரன் தமிழவேள்:

வண்டமிழால் வான மதியழகை வாழ்த்தென்றால்

நுண்டுணையாம் பாவை நுதல் (60)

பாவை நுதல் – பெண் நெற்றி, பாட்டினைச் சொல்வாயாக

பாவை – பெண், பாவினை / பாட்டினை

நுதல் – நெற்றி, சொல்லுக/குறிப்பிடுக

நுண்டுணை – நுண் துணை

வண்டமிழ் – வண் தமிழ்

 பொருள் 1: வண்மை (கொடை) மிக்க தமிழால் வான நிலவின் அழகை வாழ்த்து என்றால், பாவை நுதல் – பெண்ணின் நெற்றி – நுண் துணை ஆகும்.

பொருள் 2: வண்மை (கொடை) மிக்க தமிழால் வான நிலவின் அழகை வாழ்த்து என்றால், நுண் துணையாவது பா (அதாவது பாட்டு). அத்தகைய பாவினை – பாட்டினை – நுதல்வாயாக (சொல்வாயாக).


வெண்பா முதலான பல்வகைப் பாக்களின் இலக்கணத்தைப் பயின்று பாட்டெழுத விரும்புவோர் ‘உச்சி’ வலைத்தளத்தின் கற்கை நெறியில் இணைந்து கொள்ளலாம்:


*

இறுதிமுறி

ஐம்பெரும் பேறுடையாள் அந்தமிலாள் அந்தமிழ்க்கென்

மொய்ம்பார் இறுதி முறி (61)

*

பிறைநிலா

குறைநில்லா குற்றமும் நில்லாவென் றேயிப்

பிறை நிலா ஈட்டட்டும் பேர் (62)

*

இனியன்

நனியன்பும் நற்பண்பும் நாளும் நிறைக

இனியன் பால் ஏற்றம் இசைத்து (63)

*

கெழுதகை

உழுதகை மாந்தர்க்(கு) உதவல்போல் ஞான்றும்

கெழுதகை பின்னிற்கும், கேள் (64)

*

கைத்தறி

உய்த்தறி யாவையும் ஓம்பும் ஒழுக்கத்தால்

கைத்தறி போல்மனதைக் கட்டு (65)

*

ஒற்றர், கொற்றம்

ஒற்றரும் வேண்டா உறுபடை வேண்டா நற்

கொற்றமே ஓச்சுமெனில் கோல் (66)

*

பான்மை

வான்மகிழ்ந்து வாரிநீர் உண்டு வழங்கிவரும்

பான்மையிலே உண்டு பரிவு (67)

*

தென்தமிழ்நாடு

இன்றமிழ் நாடும் இடமெதுவோ என்கில்நம்

தென்றமிழ் நாடென்றே செப்பு (68)

*

சமத்துவம்

நமைத்துயர் அண்டாது நன்மை மலிக

சமத்துவம் வாழ்க தழைத்து (69)

*

ஆரணன்

ஆரணன் வாழ்க அறிவிலும் வன்மையிலும்

வாரணம் போல வளர்ந்து (70)

*

புத்தனுடன் ஒட்டகச்சிவிங்கி

(கவிஞர் சேரனின் ஒளிப்படம் பற்றிய பா: படத்தில் புத்தகங்களுக்கே மேலே ஒரு புத்தன் சிலை இருந்தது. அருகே ஒட்டகச்சிவிங்கியின் சிலை. வேறு நூல்களும் பென்சிலால் வரையப்பட்ட கவிஞரின் படமும் இருந்தன)

ஒட்டகச்சி விங்கி உரைப்பதுமென்? ஒன்றோடும்

ஒட்டா அகத்தான் உடன் (71)

ஒட்டா அகத்தான் – பற்றில்லா மனங்கொண்ட புத்தன்

*

கலைச்செல்வி

வெண்டா மரைமீது வீற்ற கலைச்செல்வி

திண்டாள் பணிந்தோம் தெளிந்து (72)

*

உமாதேவி

யாதா யினுந்துன்பம் ஏத்த மறையும்உ

மாதேவி பாத மலர் (73)

*

பொற்குவை

சொற்குவை மூழ்கியின்பு துய்ப்பவர்க் கேனம்ம

பொற்குவை ஆய பொருள் (74)

*

நற்பவம்

கற்பன கேட்பன காத்தே ஒழுகாக்கால்

நற்பவம் உண்டோ நவில் (75)

*

பகழி

பகழி முனையனைய பார்வை தெளிவு

நிகழில் அடைக நினைவு (76)

*

ஆமந்திரிகை

ஆமந் திரிகை அறைமின் தமிழணங்காள்

கோமன்றில் வீற்றாள் கொலு (77)

இலங்கை

இலங்கையென்றேன் பேர்வைத்தார்? இந்நாளில் ஒன்றும்

இலங்கையிலென் றேங்குவார் என்று (78)

ஒன்றும் இலம் கையில் – கையில் ஒன்றும் இல்லோம் (இலங்கையில் தற்போது நிலவும் பொருளியல் நெருக்கடியைச் சுட்டுகிறது)

*

இளைய அப்துல்லாஹ்

உளயாவும் செய்திட்டோன் ஒப்பற்றோன் சேவை

இளையவப்துல் லாஹ்வேநீ ஏல் (79)

அப்துல்லாஹ் – இறையின் சேவகன்

*

கணவன்

கண்ணவனே யாகியன்பாற் காக்கும் கணவனுற்ற

பெண்ணவட்கிங் கெந்நாளும் பீடு (80)

*

கவீனா

நவில் நா தமிழின் நலனுணரு மாறே

கவீனா நினதுமொழி கா (81)

*

ஆடலிறை

பாடலிறை தீராப் பரிவை இறை,தில்லை

ஆடலிறை வாவென் அகத்து (82)

இறைத்தல் – நிறைத்தல், பாய்ச்சுதல்

*

நேசம்

நீசம் மதித்தால் நிலவையுமீ வேனென்றான்

நேசம் அகத்தில் நிறைத்து (83)

*

சிறப்பு

பிறப்போம் இறப்போம் பிணியச்சம் வாழ்வில்

உறப்புகா தோங்கல் சிறப்பு (84)

*

விகடகவி

விட்டு மடமை விலக நகைபிறக்கக்

கட்டு விகட கவி (85)

*

அக்கருமம்

எக்கருமம் நோற்கினும் ஈகை தவறற்க

அக்கருமம் நன்றென்றே ஆம் (86)

*

குறளறம்

வறளுற வாடுகையில் வாய்த்தமழை போலும்

குறளறம் வாய்த்தநலன் கூறு (87)

*

கலைமகன்

தலைநிகர் நந்தமிழ்த் தாயொளிரச் செய்தல்

கலைமகன் நுந்தங் கடன் (88)

*

வஞ்சனை

நஞ்சனைய தென்றும் நவைசேர்க்கும் மாந்தருளம்

வஞ்சனையை விட்டால் வளம் (89)

*

ஏறு

(ஏறு = காளை. காளையின் படம் தந்து வெண்பா கோரப்பட்டது)

ஏறு முகம்போல் இலங்குக வாழ்வென்றும்

ஏறுமுகங் காண்க இனிது (90)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×