மதுரன் தமிழவேள் எழுதிய

தமிழ்த்தாய் அந்தாதி

தமிழ்த்தாய் அந்தாதி எழுதி முடிக்கப்பட்ட பொழுதில் மனதில் எழுந்த சொற்கள்

– பாவலர் மதுரன் தமிழவேள்

எனது 36வது பிறந்த நாளான இன்று தமிழ்த்தாய் அந்தாதியை முப்பது பாடல்கள் கொண்ட பனுவலாக எழுதி முடிக்கிறேன்.

‘ஓங்கும்’ என்று தொடங்கி ‘ஓங்கும்’ என்றே முடித்திருக்கிறேன்.

அந்தாதியை எழுதத் தொடங்கிய நாள் தொடக்கம் கம்பரின் சரஸ்வதி அந்தாதி, பட்டரின் அபிராமி அந்தாதி, குமர குருபரரின் சகலகலாவல்லி மாலை, ஒட்டக்கூத்தரின் தக்கயாகப்பரணி, பாரதி கவிதைகள், திருவாசகம் என்று தொடர்ச்சியாக மனம் சந்தமெழும் சொற்கடலில் தோய்ந்து தோய்ந்து துலங்கிக் கொண்டிருந்தது.

தமிழர்கள் மொழியைத் தாயாகவும் கடவுளாகவும்; துதிப்பதன் அடிப்படை மூட நம்பிக்கையோ அல்லது ஆழமற்ற உணர்வெழுச்சியோ அன்று.

ஒலிதான் உணர்வாகிறது, மனமாகிறது, உடலாகிறது, உதிரமாகிறது என்பதை ஆழ்ந்து தியானிக்கும்போது தெட்டத் தெளிவாக உணர முடிகிறது. ஒலியில் இருந்து எல்லாம் தோன்றுகின்றன. மொழியைத் துதிப்பது என்பது நமக்குள் இருக்கும் ஆன்மாவைத் துதிப்பது. நினைவு உருப்பெறுவதும் வலுப்பெறுவதும் ஒலி வழியே. மனம், மனதின் செயலான மனனம் இரண்டும் சாத்தியமாவதும் ஒலி கொண்டே. குழந்தைகளைச் சிறுவயதில் இருந்து செய்யுள் பாடல்களை மனனம் செய்யப் பழக்குவது அவர்களை ஆளுமை உள்ளவர்களாக்கும்.

இந்த அந்தாதிக்குள் இருக்கும் சொற்கள் எங்கிருந்து வந்தன என்பதை எண்ணும்போது திகைப்பாயிருக்கிறது. நான் என்ற ஒற்றை மாயைக்கு இது உரித்தில்லை.

அந்தாதிக்காகத் தேர்ந்து கொண்ட கட்டளைக் கலித்துறை என்ற செய்யுள் வடிவம் பெயருக்கேற்றாற்போல எழுதுவோனைக் கீழ்ப்பணியுமாறு கட்டளையிடுவது. இந்த நூலிலோ மதம் தணிந்து பாகன் சொற்கேட்டு வாகாக நடைபயிலும் களிறுபோலத் தமிழன்னையின் அருட்கடாட்சத்தால் வசப்படுவதைக் கற்றோர் உணர்வர்.

தமிழ்த்தாய் அந்தாதியில் உள்ள குறைகள் என்னுடையவை. நிறை அனைத்தும் தமிழ் அன்னையுடையது.

(07.10.2019)

மதுரன் தமிழவேள் எழுதிய

தமிழ்த்தாய் அந்தாதி

காப்பு

(வெண்பா)

கோடி அகங்களிற் கூத்திடுவாள் காத்திடுவாள்
தேடி வளர்த்தபெருஞ் செல்வமெல்லாம் – ஓடிநமை
விட்டகலும் போதும் விலகாள் தமிழேநம்
கட்டகல இந்நூற்கும் காப்பு 

நூல்

(கட்டளைக் கலித்துறை)

ஓங்கும் பனுவல்கள் உந்தி மிளிர்முடி உச்சியிலே
தாங்கும் அணங்கு! தமிழெனும் தெய்வம்! தழைக்குமவள்
பாங்கும் அருளும் பரந்த புகழும் பகர்ந்துருக
ஏங்கும் மனத்தன் இவனைக் கவிசெய ஏவினளே (1)

ஏவாள் இளையாள் எனவே துணிந்தவர் ஏத்திநிற்ப
மூவாள் மதலையர் மோவாய் முகர்ந்து முலைசுரப்பாள்
பாவாள் பவர்தம் பணியாத வன்மைப் படைத்துணையாம்
நாவாள் சுழல நலியாள் எழுவாள் நதித்தமிழே! (2)

நதித்தமிழ் வாழி! நமன்பதைத் தஞ்சி நடுக்குறவே
உதித்தவள் வாழி! ஒலித்திரள் வாழி!நல் ஒண்பதங்கள்
துதித்தவர் நெஞ்சிற் பதித்தவர் மாண்பிற் சுடர்ந்தொளிர
விதித்தவள் வாழியென் றேவேட்டல் நல்கும் விடுதலையே! (3)

விடுதலை யாவர்க்கும் வேண்டும் மனமே விரும்பிநில்லாய்
சுடுதழல் ஒப்ப அறிவெனுஞ் சோதி தொழிலுறுமேல்
கெடுதலை மாய்த்துத் தமிழெனும் இன்பக் கிளவிவசப்
படுதலை வேண்டிப் பணிவார் எவரும்! பயன்புவிக்கே! (4)

புவிக்குக் கதிரவன் போலாம் நமக்குப் புதுத்தமிழாள்
செவிக்கு நறுந்தேன் சிலிர்க்கும் பெருவான் சிறகுடைந்து
தவிக்கும் பறவையைப் போலாம் நம் வாழ்வு தமிழணங்கைக்
குவிக்கும் கரங்கள் வணங்க மறந்த குறைவரினே (5)

குறைவரின் நெஞ்சம் குறிப்ப(து) எவர்பேர்? குறளெனும் மா
மறைதனைத் தந்து மருள்கெட வைத்த மணித்தமிழாம்
இறைதனை அன்றி எவரையும் நெஞ்சத்(து) இருத்துவமோ?
நறைதரும் வண்டென நாமென்றுந் துய்ப்பது நற்றமிழே! (6)

நற்றமி ழேயெங்கள் நாவில் நிகழ்ந்திடும் நர்த்தனமே!
கற்றவர் உள்ளங் களித்திருள் மௌ;ளக் களைந்திடவே
சொற்றுணை யாகித் துலங்கி வளருஞ் சுவைநலமே!
பெற்றது நின்னை!நெஞ் சுற்றது விண்ணைப் பிணிமருந்தே! (7)

மருந்தும் விருந்தும் மறவா மனத்தே வளர்கனவும்
இருந்தும் கிடந்தும் எழுந்தும் நடந்தும் இதயமிசைப்
பொருந்தும் படியெப் பொழுதிலும் பூண்பதும் பூவுலகோர்
அருந்தும் அமிழ்தும் அழியாப் பொருளும் அருந்தமிழே! (8)

தமிழே! தவமே! தணியாத நெஞ்சுக்குத் தண்ணளியே!
அமிழேன் எனநான் அரண்டிட மாட்டா அலைகடலே
குமிழா யிரமாய் நினைவிற் குழுமும் குளிர்நிலவே
உமிழோ டுறையும் பரம்பொரு ளேயென் உயிர்த் துணையே! (9)

உயிர்த்துணை யாவ(து) அகர முதலாய் ஒலிப்பனவாம்
வியப்பதும் எண்ணி விதிர்ப்பதும் அன்னை வியன்பதங்கள்
நயப்பதும் நண்ணி நவில்வதும் அன்னாள் நடையழகை
துயர்க்கினி எய்தத் துறையிலை தாயைத் தொழுதிடிலே (10)

தொழுதால் முறியாத சொல்லேர் பொருத்தித் துணிந்துளத்தை
உழுதால் பெறுவ(து) ஒளிஞானம்! அன்னை உயர்வுகண்டு
பழுதாம் அகத்தால் பகைமை வளர்ப்பார் பணிந்திடவே
எழு தாள் இரண்டின் மதர்ப்பை நிதம்நிதம் எண்ணுவமே (11)

எண்ணுதற்(கு) ஏற்ற(து) இயல்இசை நாடகம் எங்களம்மை
தண்ணுதல் மீது தரிப்பதும் அச்செழுஞ் சாந்தின்வண்ணம்
விண்ணுகந்(து) ஈயும் மிகுமழை வெள்ளம் விரைந்திறங்கி
மண்ணுறும் பாங்கிலெம் வண்டமிழ்ப் போதம் மலிகிறதே! (12)

மலிவது செம்மொழி மாணொளி! ஆர்த்தெழும் வல்லினத்தால்
நலிவது வன்பகை! நாடி உவந்தவர் நாவினிலே
பொலிவது மெல்லினப் பூந்தேறல்! பொன்னெழிற் பொய்யிடையாள்
மெலிவதும் உண்டோ மிகைத்துச் செழிக்கும் மிடுக்கினிலே (13)

மிடுக்கிவள் பெற்றது மெய்யணி மெய்மணி மேகலையால்
ஒடுக்கம் ஒழித்த(து) ஒளியார் அடிகள் உறுசிலம்பால்
இடுக்கண் வருங்கால் நகுகவென் றோதிய இன்குறளோ
தடுக்க இயலாத தானைக் கவசம் தரணியிலே (14)

தரணி நிலைக்கத் தமிழ்நிலைக் கும்நம் தவந்தழைக்கும்
மரணமில் லாதவள் மாண்பினிற் றோய்ந்து மனந்திளைக்கும்
பரணி கலம்பகம் பண்டைக் குரவர்தம் பண்ணமுதம்
அரணென் றமைய அசைந்தம்மை செங்கொடி ஆடுதிங்கே! (15)

ஆடுதி தித்திமி ஆனந்தத் தாண்டவம்! ஐயணிகள்
சூடுதி தூயநற் சொன்மலர் மாலை தொடுத்துநிதம்
கூடுதி றல்பெறு கொற்றம் உடையவள் கோன்மைமிகப்
பாடுதி வானிடி போலநம் நெஞ்சப் பறையறைந்தே! (16)

பறையறை வீர் உயிர் பன்னிரண் டாகப் பகுத்துளவள்
நிறையுறு மெய்யோ பதினெண் வகையாய் நிலைத்துளவள்
உறையுறு வாளினும் கூரிய ஆயுதம் ஒன்றுடையாள்
பொறையுறு பூமி புளகிதம் கொள்ளப் புரிவளென்றே! (17) 

என்று பிறந்தவள் என்ப தறிந்திலர் இங்கெவரும்
தொன்று பிறந்தொளித் துங்கம் செறிந்தமுச் சங்கமெனும்
மன்றில் வளர்ந்தவள் மங்குல் மதிதவழ் வானிடையே
நின்று சுடர்ந்திடும் தாரகை ஒத்தநம் நித்திலமே (18)

நித்தில மேனி நிகரேதும் இல்லா நிமிர்ந்தநடை
இத்தனை காலம் இகத்திருந் தாலும் இளமைகுன்றாப்
புத்தெழில் பூண்டு பொருள்வனப் போங்கும் புகழுடையாய்
முத்தமி ழேநீயென் மூச்சிலும் பேச்சிலும் முந்துகவே (19)

முந்துக என்நாவில் மோனச் சுடராய் முதற்சுவையாய்
சிந்துக சிந்தை தெளிந்த கவிச்சுளைத் தௌ;ளமுதம்
அந்தக ராகி அயல்மொழி போற்றும் அவநிலையை
நந்தமிழ் மாந்தர் நறுக்குக அன்னை நலம்பெறவே (20)

பெறவேண்டும் வையம் பிறர்நமர் மாயப் பிரிப்பகல
உறவேஇங்(கு) எல்லா உயிர்களும் என்று முழங்கிநின்ற
அறவேந்தன் பூங்குன்றன் ஐயன்மெய்ஞ் ஞானி அவனகத்தை
அறவேண்டும் துன்பம் தமிழினி மன்பதை ஆளுகவே! (21)

ஆளாகி னேனுனக் கேயம்ம! என்னை அறிந்தவள் நீ
மூளாத தீக்கங்கு முன்னி வெறிகொண்டு மூள்வதுபோல்
மாளாத சொல்லொன்று வைரச் சுடர்வீசும் மந்திரமாய்
மீளாது நெஞ்சக் குகையுற வாழ்த்தி மிழற்றுதியே! (22)

மிழற்றுவன் நின்பிள்ளை மெய்யெனச் செய்ய நின் மேன்மைகொண்ட
கழற்றுணைப் பீடொன்று காணுங்கண் டாயென் கடுவழியில்
நிழற்றுணை வேறில்லை நீயின்றி உய்வில்லை நெஞ்சிலெழும்
எழிற்றிரு வேயென்றும் என்னில் விரவி இருப்பவளே (23) 

இருப்பவ ளேயென்றும் இன்கரும் பாகி இனிப்பவளே
திருப்புக ழேஐந் திணைப்பொரு ளேவளர் செம்பொழிலே
கருப்பொரு ளாகிக் கவியில் இழையுங் கதிர்ப்பொருளே
உருப்பெறு வாயென்றன் உள்ளத்தில் என்னாவி உன்னிடமே (24)

உன்னிட உன்னிட உச்சி சிலிர்க்கும் உரை நலத்தால்
மின்னிடும் பூங்கொடி மெய்யடி தன்னை! மிகுபுகழ்சேர்
தென்னகத் தேபிறந் தாள்பின் திறலால் திசையனைத்தும்
தன்னிட மாக்கி ஒளிர்ந்தாள்! தமிழாள்! தவம்வளர்த்தே! (25)

வளர்த்தாள் ஒளியை மலர்த்தாள் தனையென் மதியில்வைத்து!
தளர்த்தாள் கொடையைத் தராதலத் தேயெத் தடைவரினும்!
வளத்தால் நிலத்தால் மதத்தால் செருக்கால்பொய் வஞ்சகர்போர்க்
களத்தால் அழிக்கக் கருதியும் சாகாள் கழல்வெல்கவே! (26)

வெல்லும் தமிழ்ச்சொல் விதையில் உறங்கும் விரிவனமாய்!
வில்லும் கணையும் மிரளப் புலவர் விடுக்கும்மொழி
அல்லும் பகலும் மனமா வெளியில் அடுக்கும்மொழி
செல்லும் தொடராய்த் திரியாச் சுடராய்ச் சிதைவொழித்தே! (27)

ஒழித்தேன் மமதை உயிர்த்தேன் தமிழை உணர்ந்தபின்னே
செழித்தேன் தயையில் சிலிர்த்தேன்முன் நாடிய சீர்த்தியெல்லாம்
பழித்தேன் தமிழெனும் ஆழித் துளியைப் பருகியதால்
விழித்தேன் சிறுமை விடுத்தேன் இனிநெஞ்சில் மெய்ச்சுகமே! (28)

மெய்ச்சுகம் வேண்டில் விரைந்தன்னை பாத விழுத்துணையை
மெச்சுக மீட்சிக்கு வேறு வழியில்லை! வெஞ்சினங்கொண்(டு)
இச்சகத் துள்ளார் எதிர்த்திடும் போதும் இமைத்தலின்றி
அச்சம் தவிர்த்திடச் சொன்னவன் தாய்ப்பதம் ஆனந்தமே (29) 

அந்தமும் ஆதியும் அற்றவள் கொற்றவள் அன்பில்மெச்சிச்
சந்தமும் ஓசையும் சந்ததம் நந்தமிழ் தந்தவள்காண்!
சிந்துமும் மாரி நிகர்த்துயிர் வாழ்விற் செழுமைசெய்வாள்
உந்தமும் கீர்த்தியும் பெற்றவள் மாட்சிமை ஓங்குகவே! (30)

×