1 கடவுள் வாழ்த்து

அதிகாரம் 1

கடவுள் வாழ்த்து

1         

அகர முதல வெழுத்தெல்லா மாதி

பகவன் முதற்றே யுலகு.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க.]

எழுத்து எல்லாம் அகரம் முதல – எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று – அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, ‘எழுத்து’ எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. ‘உலகு’ என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், ‘ஆதிபகவன் முதற்றே’ என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் – தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

**

மணக்குடவர் உரை

எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.

**

ஞா. தேவநேயப் பாவாணர் உரை

எழுத்து எல்லாம் அகர முதல – நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக வுடையன; உலகு ஆதிபகவன் முதற்று – அது போல உலகம் முதற்பகவனை முதலாகவுடையது.

இது உவமத்தையும் பொருளையும் இணைக்கும் உவமையுருபின்மையால் முதன்மை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குரிய அங்காப்பின்றியும் மகரமெய் ஒலிக்கப் பெறுதலால் ‘நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களெல்லாம்’ என்று உரைக்கப்பட்டது. பெரும்பான்மை பற்றியென்க.

பகவன் என்பது பகுத்துக்காப்பவன் அல்லது எல்லாவுயிர்கட்கும் படியளப்பவன் (Dispenser) என்று பொருள்படும் தென் சொல். பகு – பகவு – பகவன். பகு என்னும் வினைமுதல் வடமொழியில் பஜ் (bhaj) என்று திரியும். ஒ. நோ; புகு – புஜ் (bhuj), உகு – யுஜ்.

பகவன் என்னும் சொல் முதற்காலத்திற் கடவுளையே குறித்தது. ஆயின், பிற்காலத்தார் அதைப் பிரமன் விட்டுணு உருத்திரன் என்னும் ஆரிய மத முத்திருமேனியர்க்கும் அருகன் புத்தன் என்னும் பிற மதத் தலைவர்க்கும் வழங்கிவிட்டமையால், கடவுளைக்

குறிக்க முதல் என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. கடவுள் என்னும் சொல்லும் இங்ஙனமே இழிபடைந்துவிட்டமையால், முதற்கடவுள் என்றும் முழுமுதற்கடவுள் என்றும் அடைகொடுத்துச் சொல்லும் வழக்கை நோக்குக. பகம் (ஆறு) என்னுஞ் சொல்லை மூலமாகக் கொண்டு, பகவன் என்பதற்குச் செல்வம், மறம், புகழ், திரு, ஓதி (ஞானம்), அவாவின்மை என்னும் அறுகுணங்களையுடையவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது.

இறைவன் கடவுள் தேவன் என்னும் பிற சொற்கள் இருக்கவும் பகவன் என்னுஞ் சொல்லை யாண்டது, அகரம் என்னும் சொற்கு எதுகையாயிருத்தல் நோக்கியே.

ஆதி என்பது வடசொல்; அதாவது வடநாட்டுச்சொல். இதன் விளக்கத்தை என் ‘வடமொழி வரலாறு’ என்னும் நூலுட் காண்க.

ஆதிபகவன் என்னுந் தொடர்ச்சொல் தமிழியல்பிற் கேற்ப ஆதிப்பகவன் என்று வலிமிக்கும் இருக்கலாம்.

ஏகாரம் தேற்றம்; ஆதலால் இன்றியமையாததே. இவ்வேகாரத்தை ஈற்றசையாகக் கொண்டு,

“கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள்.”

என்னும் இடைக்காடர் பாராட்டு எங்ஙனம் பொருந்தும் என்று புலவர் ஒருவர் வினவ, அதற்கு இராமலிங்க அடிகள் “முதல் தே” எனப் பிரித்தாற் குற்றமென்ன? என்று எதிர் வினவியதாகச் சொல்லப்படுகின்றது. ஏகாரம் ஈற்றசையுமன்று; அடிகள் விடை மிகைப்படக்கூறலாகவும் உவமச் சொல்லிய (வாக்கிய) அமைப்பொடு ஒவ்வாததாகவும் இருத்தலாற் பொருந்துவது மன்று.

அகரம் எல்லா எழுத்துக்கட்கும் முதலாகவும், ஏனையுயிரெழுத்துக்களோடு நுண்ணிதாகக் கலந்தும், எல்லா மெய்யெழுத்துக்களையும் இயக்கியும், நிற்றல் போல்; இறைவனும் உலகிற்கு முந்தியும் உயிருக்குயிராகியும் உயிரற்ற பொருள்களையெல்லாம் இயக்கியும் நிற்பவன் என்னும் உண்மை, இம்முதற்குறளால் உணர்த்தப் பெற்றது.

உலகம் பலவாதலின், உலகு என்பதைப் பால்பகா அஃறிணைப் பெயராகவும் முதற்று என்பதை வகுப்பொருமைக் குறிப்புவினை முற்றாகவுங் கொள்ளின், உவமத்தின் பன்மை பொருளிற்கும் ஏற்கும்.

[அருவிலிருந்து உருவாக ஆபவனே ஆதி என்னும் இறைவன்.அவனே ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் ஆதலினால் பகவன் எனப்படுவான்.அருவான இறைநிலையிலிருந்து உருவாகத் தானே ஆதலையுடையவன் ஆதி எனவும் அமையும் ஆதியானவனே பலவாகப் பகுபடும் நிலையில் பகவன் எனப்படுவான். எனவே, ஆதியும் பகவனுமான இறைவனிடத்திலிருந்து உலகங்கள் தோன்றுவன எனலே பொருத்தம்.(மொ.அ.துரை அரங்கனார்-‘அன்பு நெறியே தமிழர் நெறி, பக்கம் 205,206)

மேற்கண்ட விளக்கம் பொருந்துவதே என்பர் பெரும்புலவர் பேராசிரியர் முனைவர் இரா.சாரங்கபாணி (திருக்குறள் உரைவேற்றுமை – பக்கம்5 – அண்ணாமலைப் பதிப்பு 1989).

‘ஆதல்’ என்ற தொழி்ற்பெயரடியாகப் பிறந்ததே ஆதி என்ற தமிழ்ச்சொல். செய்தல் –

செய்தி; உய்தல்-உய்தி. தோற்றுவிப்பாரின்றித் தானே தோன்றிய இறைவனைத் ‘தான்

தோன்றி’ (சுயம்பு) என்பர்.ஆதி-ஆதன்-ஆதப்பன் என்ற பெயர்கள் செட்டிநாட்டில் பெருவழக்கில் உள்ளன.

ஆதி என்பது முதல், மூலம், தொடக்கம், அடிப்படை, எனவும், முதல்வன், முதலி, முன்னவன், மூலவன் எனவும் பொருள்படும் தமிழ்ச் சொல்லே. இச்சொல் 543-ஆம்

குறளிலும் ஆளப்பட்டிருத்தல் காண்க.அகராதி (Dictionary) என்பதும் தமிழ்ச்சொல்லே.

பகவன் என்பதற்கு,மொ.அ.து.உரைத்தாங்கு ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் என்றோ, தொடக்கத்தில் ஒன்றாக நின்று, காலப்போக்கில் (பல் சமயமாகிப்) பல பெயரில் பகுபட்டவன் என்றோ கொள்ளலாம்: பதிப்பாசிரியர்.]

**

கலைஞர் உரை

அகரம்   எழுத்துக்களுக்கு   முதன்மை;  ஆதிபகவன், உலகில் வாழும்

உயிர்களுக்கு முதன்மை.

**

Rev. Dr. G.U.Pope Translation

A, as its first of letters, every speech maintains;

The ‘Primal Deity’ is First through all the world’s domains

**

Yogi Shuddhananda Translation

‘A’ leads letters; the Ancient Lord

Leads and lords the entire world.

**

2         

கற்றதனா லாய பயனென்கொல், வாலறிவ

னற்றா டொழாஅ ரெனின்.

பரிமேலழகர் உரை

கற்றதனால் ஆய பயன் என் – எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் – மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. ‘கொல்’ என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் ‘நற்றாள்’ என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.

**

மு.வரதராசனார் உரை

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

**

மணக்குடவர் உரை

மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின்.

சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

வால் அறிவன் நல்தாள் தொழார் எனின் – தூய அறிவையுடைய இறைவனின் நல்ல திருவடிகளைத் தொழாதவராயின்; கற்றதனால் ஆய பயன் என் – நூல்களைக் கற்றவர்க்கு அக்கல்வியால் உண்டான பயன் யாதாம்?

அஃறிணை யிருபாற் பொதுவான எவன் என்னும் வினாப்பெயர் ‘என்’ என்று தொக்கு இங்கு இன்மை குறித்தது. கொல் என்பது அசைநிலை. தூய அறிவாவது இயற்கையாகவும் முழுநிறைவாகவும் ஐயந்திரிபற்றும் இருப்பது. தமிழக மருந்துகள் பெரும்பாலும் தழையுந் தண்டு மாயிருத்தலின், பிறவிப்பிணிக்கு மருந்தாகும் குறிப்புப்பட இறைவன் திருவடிகளை நற்றாள் என்றார். ‘தொழாஅர்’ இசை நிறையளபெடை.

கல்வியின் சிறந்த பயன் கடவுளை வழிபட்டுப் பேரின்ப வீடு பெறுவதென்பதே பண்டையறிஞர் கொள்கை.

“ஆண்டவனுக்கு அஞ்சுவதே அறிவின் தொடக்கம்”. என்றார் சாலொமோன் ஓதியார் (ஞானியார்.)

“எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்

மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் – மொழித்திறத்தின்

முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து

கட்டறுத்து வீடு பெறும்.”

என்பது பழஞ் செய்யுள்.

“கற்பக் கழிமடம் அஃகும் மடமஃகப்

புற்கந்தீர்ந் திவ்வுலகிற் கோளுணரும் – கோளுணர்ந்தால்

தத்துவ மான நெறிபடரும் அந்நெறியே

இப்பால் உலகத் திசைநிறீஇ யுப்பால்

உயர்ந்த வுலகம் புகும்.”

என்பது நாண்மணிக்கடிகை. (27)

கடவுளை வணங்காவிடின் கல்வியாற் பயனில்லை என்பது இக்குறட் கருத்து.

**

கலைஞர் உரை

தன்னைவிட   அறிவில்  மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி

நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும்  அதனால்

என்ன பயன்? ஒன்றுமில்லை.

**

Rev. Dr. G.U.Pope Translation

No Fruit have men of all their studied lore,

Save they the ‘Purely Wise One’s’ feet adore.

**

Yogi Shuddhananda Translation

That lore is vain which does not fall

At His good feet who knoweth all.

**

3         

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

பரிமேலழகர் உரை

மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் – மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் – எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார். (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் ‘ஏகினான்’ என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? “வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்” (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் ‘பூமேல் நடந்தான்’ என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் – இடைவிடாது நினைத்தல்)

**

மு.வரதராசனார் உரை

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

**

மணக்குடவர் உரை

மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார்.

‘நிலம்’ என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

மலர் மிசை யேகினான் மாண்அடி சேர்ந்தார் – அடி யாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் நினைந்த மட்டில் விரைந்து சென்றமரும் இறைவனின் மாட்சிமைப்பட்ட அடிகளை அடைந்தவர்; நிலமிசை நீடுவாழ்வார் – எல்லா வுலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வார்.

மலர் என்னுஞ்சொல் தனித்துநின்று மனத்தைக் குறியாமையாலும், ஏகினான் என்னுஞ் சொல்லாட்சியாலும், மலர்மிசையேகினான் என்பது இயல்பாக இறைவன் பெயராதற்கு ஏற்காமையாலும், ‘பூமேல் நடந்தான்’ என்னும் அருகன் பெயரையே ஆசிரியர் இறைவனுக்குப் பொருந்துமாறு ஆண்டார் என்பது தெரிகின்றது. “மலர்மிசை நடந்தோன்” என்று இளங்கோவடிகளும் கவுந்தி யடிகள் கூற்றாகக் கூறுதல் காண்க (சிலப். 10:204.). சமணர் தம் பொய்யான சமயத்தை விட்டுவிட்டு மெய்யான கடவுளை வணங்க வேண்டுமென்பது இக்குறளின் உட்குறிப்பு.

அடியாரின் உள்ளத்தாமரை நோக்கி ஏகுவானை ஏகினான் என்று இறந்தகால வாய்பாட்டாற் கூறியது, விரைவு பற்றிய கால வழுவமைதி . அடிசோர்தல் – இடைவிடாது நினைத்து அதற்கேற்ப ஒழுகுதல்.

**

கலைஞர் உரை

மலர்   போன்ற   மனத்தில்  நிறைந்தவனைப்      பின்பற்றுவோரின்

புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

His Feet, ‘who o’er the full- blown flower hath past,’ who gain

In bliss long time shall dwell above this earthly plain.

**

Yogi Shuddhananda Translation

Long they live on earth who gain

The feet of God in florid brain.

**

4         

வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்கு

யாண்டு மிடும்பை யில.

பரிமேலழகர் உரை

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு – ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல – எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)

**

மு.வரதராசனார் உரை

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

**

மணக்குடவர் உரை

இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்.

பொருளுங் காமமுமாகாவென்றற்கு “வேண்டுதல் வேண்டாமையிலான்” என்று பெயரிட்டார்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு – விருப்பு வெறுப்பில்லாத இறைவனடியைச் சேர்ந்தவர்க்கு; யாண்டும் இடும்பை இல-எங்கும் எக்காலத்தும் துன்ப

மில்லை.

விருப்பு வெறுப்பினாலேயே துன்பங்கள் வருவதனாலும், விருப்பு வெறுப்பில்லாத இறைவனை யடைந்தவரும் விருப்பு வெறுப்பற்றவராயிருப்பராதலாலும், இறைவன் இன்ப வடிவினனாகவும் எல்லாம் வல்லவனாகவுமிருப்பதனாலும், அவனடியடைந்தார்க்கு எங்கும் என்றும் எவ்வகைத் துன்பமும் இல்லையென்பது.

**

கலைஞர் உரை

விருப்பு  வெறுப்பற்றுத்  தன்னலமின்றித்   திகழ்கின்றவரைப் பின்பற்றி

நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

**

Rev. Dr. G.U.Pope Translation

His foot, ‘Whom want affects not, irks not grief’, who gain

Shall not, through every time, of any woes complain.

**

Yogi Shuddhananda Translation

Who hold His feet who likes nor loathes

Are free from woes of human births.

**

5         

இருள்சேர் ரிருவினையுஞ் சேரா விறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பரிமேலழகர் உரை

இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்)

**

மு.வரதராசனார் உரை

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

**

மணக்குடவர் உரை

மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு – இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து; இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கஞ் செய்யும் நல்வினை தீவினை என்னும் இரு வினையும் இல்லாதனவாகும்.

வழிதெரியாத இருள் போலிருத்தலின் அறியாமையை இருளென்றும், நல்வினையும் பிறவிக்கேதுவாமென்பது கொண்முடிபு (சித்தாந்தம்) ஆதலின் இருவினையுஞ் சேராவென்றும் கூறினார். மக்கள் எத்துணைப் பெரியோராயிருப்பினும் அவரின் அறிவாற்றலுங் காலமுங் குறுகிய வரையறைப்பட்டிருப்பதனாலும், அவரை மகிழ்விக்கக் கூறும் புகழுரைகளெல்லாம் உயர்வுநவிற்சியும் இன்மைநவிற்சியுமேயாதலாலும், எல்லாவாற்றலும் என்றும் நிறைந்திருக்கும் இறைவன் புகழே பொருளுள்ள புகழ் எனப்பட்டது. புரிதல் – விரும்பிச் சொல்லுதல். இறைவன் – எங்குந் தங்கியிருப்பவன். இறுத்தல் – தங்குதல். நல்வினை பிறவிக்கேதுவாவது கடவுள் வழுத்தொடு கூடாத போதும் தீவினையொடு கலந்த விடத்துமாம்.

**

கலைஞர் உரை

இறைவன்   என்பதற்குரிய   பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற

விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The men, ‘who on the ”King’s’ true praised delight to dwell,

Affects not them the fruit of deeds done ill or well.

**

Yogi Shuddhananda Translation

God’s praise who tell, are free from right

And wrong, the twins of dreaming night.

**

6         

பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

பரிமேலழகர் உரை

பொறி வாயில் ஐந்து அவித்தான் – மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் – பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. ‘கபிலரது பாட்டு’ என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது)

**

மு.வரதராசனார் உரை

ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

**

மணக்குடவர் உரை

மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்?

இது சாவில்லையென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பொறிவாயில் ஐந்து அவித்தான் – மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்பொறிகளையும் வழியாகக்கொண்ட ஐவகையாசைகளையும் விட்ட இறைவனது; பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார் – மெய்யான ஒழுக்கநெறியில் ஒழுகினவர்; நீடு வாழ்வார் – வீட்டுலகில் என்றும் இன்புற்று வாழ்வார்.

ஊறு, சுவை, காட்சி, மணம், இசை என்பன ஐவகை ஆசைப்புலன்கள். ஊறென்பது உடம்பால் தொட்டின்புறுதல். இறைவன் இயல்பாகவே ஆசையில்லாதவனாதலால், ஐந்தவித்தான் என்னும் பெயரும் சமணரை வயப்படுத்துமாறு சமண நெறியினின்று எடுத்தாண்டதே. ஐவரை வென்றோன் என்று இளங்கோவடிகளுங் கூறுதல் காண்க (சிலப். 10:198). ஒழுக்கநெறி இறைவனாற் சொல்லப்பட்டது அல்லது அவனுக்கு ஏற்றது.

இந்நான்கு குறளாலும், இறைவனை இடைவிடாது நினைப்பாரும் வழுத்துவாரும், அவனெறியொழுகுவாரும் வீடு பெறுவரென்பது கூறப்பட்டது.

**

கலைஞர் உரை

மெய்,    வாய்,   கண்,   மூக்கு,  செவி  எனும்   ஐம்பொறிகளையும்

கட்டுப்படுத்திய    தூயவனின்   உண்மையான  ஒழுக்கமுடைய நெறியைப்

பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Long live they blest, who’ve stood in path from falsehood freed;

His, ‘Who quenched lusts that from the sense-gates five proceed.

**

Yogi Shuddhananda Translation

They prosper long who walk His way

Who has the senses signed away.

**

7         

தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் லரிது.

பரிமேலழகர் உரை

தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் – ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது – மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. (“உறற்பால தீண்டா விடுதலரிது” (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு ‘அருமை’ இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

**

மணக்குடவர் உரை

தனக்கு நிகரில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது மனத்துண்டாங் கவலையை மாற்றுத லரிது.

வீடுபெறலாவது அவலக்கவலைக் கையாற்றினீங்கிப் புண்ணிய பாவமென்னுமிரண்டினையுஞ் சாராமற் சாதலும் பிறத்தலுமில்லாத தொரு தன்மையை யெய்துதல். அது பெறுமென்பார் முற்படக் கவலை கெடுமென்றார். அதனால் எல்லாத் துன்பமும் வருமாதலின்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தனக்கு உவமை இல்லாதான் – ஒருவகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய; தாள் சேர்ந்தார்க்கல்லால் – திருவடிகளை யடைந்தார்க்கல்லாமல்; மனக்கவலை மாற்றல் அரிது – மனத்தின்கண் நிகழுந்துன்பங்களையும் அவற்றாள் ஏற்படும் கவலையையும் நீக்குதல் இயலாது.

இம்மைக்கும் மறுமைக்கும் உரிய எல்லாப் பொருள்களையும் நலங்களையும், எல்லார்க்கும் என்றும் வரையாதளிக்கக்கூடிய வள்ளல் இறைவன் ஒருவனேயாதலின், அவனையடைந்தார்க்கல்லது துன்பமுங் கவலையும் நீங்காவென்பதாம்.

அருமைச் சொல்லிற்குரிய சின்மை இன்மையென்னும் இரு பொருள்களுள், இங்கு வந்துள்ளது இன்மை.

**

கலைஞர் உரை

ஒப்பாரும்   மிக்காருமில்லாதவனுடைய  அடியொற்றி  நடப்பவர்களைத்

தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

**

Rev. Dr. G.U.Pope Translation

Unless His foot, ‘to Whom none can compare,‘ men gain,

‘Tis hard for mind to find relief from anxious pain.

**

Yogi Shuddhananda Translation

His feet, whose likeness none can find,

Alone can ease the anxious mind.

**

8         

அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்த லரிது.

பரிமேலழகர் உரை

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் – அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், ‘அறஆழி’ அந்தணன் என்றார். ‘அறஆழி’ என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, ‘அதனை உடைய அந்தணன்’ என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், ‘நீந்தல் அரிது’ என்றார். இஃது ஏகதேச உருவகம்.)

**

மு.வரதராசனார் உரை

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது.

**

மணக்குடவர் உரை

அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது.

இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அறவாழி அந்தணன் – அறக்கடல் வடிவினனும் அழகிய குளிர்ந்த அருளாளனுமாகிய இறைவனது; தாள் சேர்ந்தார்க் கல்லால் – திருவடியாகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது – அதனொடு சேர்ந்த பிறவாகிய பொருளின்பக் கடல்களைக் கடத்தல் இயலாததாகும்.

எல்லா அறங்களுந் தொக்கதொகுதி கடல்போற் பரந்ததாதலின், இறைவனை அறவாழியென்றார். பொருளின்பங்களைக் கடலாக வுருவகித்தமையால், அவற்றொடு தொடர்புள்ள அறவாழி என்பது அறக்கடலையன்றிப் புத்தனது தரும சக்கரத்தை யுணர்த்தாது, பிறவாழி கடவாமையாவது பொருளின்ப ஆசையுள் மூழ்கித் துன்புறுதல். இறைவனடி சேர்ந்தவர் அத்துன்பத்தினின்று நீங்கி என்றென்றும் பேரின்பத்தில் திளைப்பர் என்பதாம்.

அறம் பொருளின்பத்தை ஆழியென்றுருவகித்து இறைவன் திருவடியைப் புணையென்றுருவகியாது விட்டது, ஒருமருங்குருவகம்.

**

கலைஞர் உரை

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால்,அறக்கடலாகவே

விளங்கும்    அந்தச்   சான்றோரின்   அடியொற்றி  நடப்பவர்க்கேயன்றி,

மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக்  கடப்பது  என்பது   எளிதான

காரியமல்ல.

**

Rev. Dr. G.U.Pope Translation

Unless His feet, the Sea of Good, the Fair and Bountilful,’men gain,

‘Tis hard the further bank of being’s changeful sea to attain.

**

Yogi Shuddhananda Translation

Who swims the sea of vice is he

Who clasps the feet of Virtue’s sea.

**

9         

கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்

றாளை வணங்காத் தலை.

பரிமேலழகர் உரை

கோள் இல் பொறியில் குணம் இல – தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை – எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. ‘அணிமா’ வை முதலாக உடையன எனவும், ‘கடை இலா அறிவை’ முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

**

மணக்குடவர் உரை

அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள்.

உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்

**

ஞா. தேவநேயப் பாவாணர்

எண் குணத்தான் – எண்வகைப்பட்ட குணங்களையுடைய இறைவனின்; தாளை வணங்காத் தலை – திருவடிகளை வணங்காத தலைகள்; கோளில் பொறியின் – தத்தம் புலன்களைக் கொள்ளாத பொறிகளைப்போல; குணம் இல – பயன் படாதனவாம்.

எண் குணங்களாவன தன்வயத்தம், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, கட்டின்மை, பேரருள், எல்லாம் வன்மை, வரம்பிலின்பம் என்பன. தாளை வணங்காத் தலையென்று தலையையே விதந்தோதினாரெனினும், வழுத்தாநாவும், புகழ்கேளாச் செவியும் அங்ஙனமே பயனில்லாதனவென்று கொள்க. குணமிலவே என்னும் பன்மை வினைகொண்டு முடிதலால், தலை என்பது பன்மை குறித்துவந்த பால் பகாவஃறிண்ணைப் பெயர். இறைவனுக்கு உடம்பில்லாவிடினும், அவன் என்றேனும் ஒருவடிவுகொள்ளின் அதன் அடியும் முடியும் ஒரு நிகரவாகவே தூய்மையாயிருப்பினும், அவனை வணங்கும் மக்களின் பணிவியலை மிகுத்துக்காட்டற்கே, திருவடி தொழுதல் அல்லது வணங்குதல் என்று கூறுவது மரபாகும்.

இறைவன் வழிபாட்டிற்குப் பயன்படுவதே மாந்தன் உடம்பின் தலையாய பயன் என்பது இக்குறட் கருத்து.

**

கலைஞர் உரை

உடல்,   கண்,  காது,  மூக்கு,  வாய்  எனும்  ஐம்பொறிகள் இருந்தும்,

அவைகள்  இயங்காவிட்டால்  என்ன  நிலையோ அதே நிலைதான் ஈடற்ற

ஆற்றலும் பண்பும்  கொண்டவனை  வணங்கி  நடக்காதவனின்  நிலையும்

ஆகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Before His Foot, ‘the Eight-fold Excellence,‘ with unbent head,

Who stands, like palsied sense, is to all living functions dead.

**

Yogi Shuddhananda Translation

Like senses stale that head is vain

Which bows not to Eight-Virtued Divine.

**

10       

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தா

ரிறைவனடி சேரா தவர்.

பரிமேலழகர் உரை

இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் – இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் – அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், ‘பிறவிப் பெருங்கடல்’ என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.)

**

மு.வரதராசனார் உரை

இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.

**

மணக்குடவர் உரை

பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இறைவன் அடி (சேர்ந்தார்) – இறைவன் திருவடியாகிய புணையைச் சேர்ந்தவர்; பிறவிப் பெருங்கடல் நீந்துவர் – பிறவியாகிய பெரியகடலைக் கடப்பர்; சேராதார் நீந்தார் – அப்புணையைச் சேராதவர் அக்கடலைக் கடவாதவராய் அதனுள் அழுந்துவர்.

வீடுபேறுவரை கணக்கில் கழிநெடுங்காலம் விடாது தொடர்ந்து வருவதாகக் கருதப்படுதலின், பிறவியைப் பெருங்கடல் என்றார். பிறவி வாழ்வு எல்லையில்லாது தொடர்ந்துவரும் துன்பம் மிகுந்த நிலையற்ற சிற்றின்பமேயாதலால், அதனின்று விடுதலைபெற்று நிலையான தூய பேரின்பந்துய்க்கும் பிறவாவாழ்வைப் பெறும்வழியை இக்குறள் கூறுகின்றது.

சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். பிறவியைப் பெருங்கடலாக உருவகித்து இறைவனடியைப் புணையாக உருவகியாதுவிட்டது ஒருமருங்குருவகம். புணை யெனினும் கலம் எனினும் ஒக்கும்.

**

கலைஞர் உரை

வாழ்க்கை   எனும்   பெருங்கடலை   நீந்திக்   கடக்க  முனைவோர்,

தலையானவனாக   இருப்பவனின்   அடி  தொடர்ந்து செல்லாவிடில் நீந்த

முடியாமல் தவிக்க நேரிடும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

They swim the sea of births, the ‘Monarch’s’ foot who gain;

None other’s reach the shore of being’s mighty main.

**

Yogi Shuddhananda Translation

The sea of births they alone swim

Who clench His feet and cleave to Him.

**

×