10 இனியவை கூறல்

அதிகாரம் 10.

இனியவை கூறல்

91       

இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற்களைச் சொல்லுதல். இதுவும், விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதது ஆகலின், விருந்தோம்புதலின்பின் வைக்கப்பட்டது.)

இன்சொல் – இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் – அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். (ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் – அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை – வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. ‘இலவாம் சொல்’ என இயையும். ‘வாய்’ என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

**

மணக்குடவர் உரை

ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இன்சொல்-இனிய சொல்லாவன; ஈரம் அளைஇ-அன்பு கலந்து; படிறு இலவாம்-வஞ்சனை யில்லாத; செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்-மெய்ப் பொருளையறிந்த சான்றோர் வாய்ச் சொற்கள்.

‘ஆல்’ அசைநிலை. படிறு-பொய். எப்பாலவரும் இயையும் உண்மைப்பொருள் என்றும் மாறாது நேராயிருத்தலின் ‘செம்பொருள்’ என்றார். ‘செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்’ என்றது, அவர் வாயினின்று வருஞ்சொற்களெல்லாம் என்றும் இனியனவே என்பதை உணர்த்தற்கு; ‘அளைஇ’ சொல்லிசை யளபெடை.

**

கலைஞர் உரை

ஒருவர்   வாயிலிருந்து   வரும்  சொல்   அன்பு      கலந்ததாகவும்,

வஞ்சனையற்றதாகவும்,  வாய்மையுடையதாகவும்    இருப்பின்     அதுவே

இன்சொல் எனப்படும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Pleasant words are words with all prevading love that burn;

Words from his guileless mouth who can the very truth discern.

**

Yogi Shuddhananda Translation

The words of Seers are lovely sweet

Merciful and free from deceit.

**

92       

அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்

தின்சொல னாகப் பெறின்.

பரிமேலழகர் உரை

அகன் அமர்ந்து ஈதலின் நன்று – நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று; முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் – கண்டபொழுதே முகம் இனியனாய் அதனொடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின். (இன்முகத்தோடு கூடிய இன்சொல் ஈதல் போலப் பொருள் வயத்தது அன்றித் தன் வயத்தது ஆயினும், அறநெஞ்சுடையார்க்கு அல்லது இயல்பாக இன்மையின் அதனினும் அரிது என்னும் கருத்தான், ‘இன்சொலன் ஆகப் பெறின்’ என்றார்.)

**

மு.வரதராசனார் உரை

முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப் பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

**

மணக்குடவர் உரை

மனம் பொருந்திக் கொடுத்தலினும் நன்று: முகம் பொருந்தி இனிமைச்சொல் சொல்ல வல்லவனாயின்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

முகன் அமர்ந்து இன்சொலனாகப் பெறின்-ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ந்து இனிய சொல்லும் உடையனாகப் பெறின்; அகன் அமர்ந்து ஈதலின் நன்று-அது மனமுவந்து ஒரு பொருளைக் கொடுத்தலினும் சிறந்ததாம்.

வெறுநோக்கினும் வெறுஞ் சொல்லினும் ஒரு பொருளைக் கொடுத்தலே உண்மையிற் சிறந்ததாயினும், மக்கள் பொதுவாக வெளிக்கோலத்திற்கே வயப்படுவதால், அகமலர்ச்சி வெளிப்படாத கொடையினும் முகமலர்ச்சியோடு கூடிய இன்சொல்லே நல்ல தென்றார்.

**

கலைஞர் உரை

முகம்   மலர்ந்து   இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக்

கொடுப்பதை விட மேலான பண்பாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

A pleasant word with beaming smile’s preferred,

Even to gifts with liberal heart conferred.

**

Yogi Shuddhananda Translation

Sweet words from smiling lips dispense

More joys than heart’s beneficence.

**

93       

முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா

மின்சொ லினதே யறம்.

பரிமேலழகர் உரை

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி – கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் – பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். (‘நோக்கி’ என்னும் வினையெச்சம் ‘இன்சொல்’ என அடையடுத்து நின்ற முதல்நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

முகத்தால் விரும்பி – இனிமையுடன் நோக்கி – உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

**

மணக்குடவர் உரை

கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

முகத்தா னமர்ந்தினிது நோக்கி-ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ச்சியோடு விரும்பி இனிதாக நோக்கி அகத்தான் ஆம் இன்சொலினதே அறம்-பின்பு நெருங்கியவிடத்து அக மலர்ச்சியோடு கூடிய இனிய சொற்களைச் சொல்லுதலை யுடையதே அறமாவது.

ஒருவரைக் கண்டபொழுதே ஒரு பொருளை யீதல் பொதுவாக இயையாமையின், முதற்கண் இன்முகங் காட்டலும் உடனும் அடுத்தும் இன்சொற் சொல்லுதலும் மக்களைப் பிணித்து மகிழ்விக்குந் தன்மையனவாதலின், விருந்தினரிடத்தும் இம்முறையைக் கையாள்வதே சிறந்ததென்றார்.

**

கலைஞர் உரை

முகம்  மலர   நோக்கி, அகம்   மலர  இனிய சொற்களைக் கூறுவதே

அறவழியில் அமைந்த பண்பாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

With brightly beaming smile, and kindly light of loving eye,

And heart sincere, to utter pleasant words is charity.

**

Yogi Shuddhananda Translation

Calm face, sweet look, kind words from heart

Such is the gracious virtue’s part.

**

94       

துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு

மின்புறூஉ மின்சொ லவர்க்கு.

பரிமேலழகர் உரை

யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு – எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும் – துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். (நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், ‘துவ்வாமை’ என்றார். ‘யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேஆம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்’ என்பது கருத்து.)

**

மு.வரதராசனார் உரை

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

**

மணக்குடவர் உரை

துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும். யாவர்மாட்டுங் கூற இன்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு-யாரிடத்தும் இன்புறுத்தும் இன்சொல்லைச் சொல்வார்க்கு; துன்புஉறூஉம் துவ்வாமை இல்லாகும்-துன்புறுத்தும் வறுமை இலதாகும்.

‘ உறூஉம் ‘ ஈரிடத்தும் பிறவினையான சொல்லிசை யளபெடை ‘துவ்வாமை நுகராமை , துய்-து .எல்லாரிடத்தும் இன்சொற் சொல்வார்க்கு எல்லாரும் நண்பரும் அன்பருமாவராதலின் , எல்லாப் பொருளுங் கிடைக்குமென்றும் அதனால் வறுமையிராதென்றும் கூறினார் . வறுமையால் ஐம்புல நுகர்ச்சி கூடாமையின் வறுமையைத் துவ்வாமை யென்றார் . வறியவரைத் ‘ துவ்வாதவர் ‘ என்று முன்னரே ( சஉ) கூறியிருத்தல் காண்க .

**

கலைஞர் உரை

இன்சொல்   பேசி    எல்லோரிடத்திலும்   கனிவுடன்  பழகுவோர்க்கு

‘நட்பில் வறுமை’ எனும் துன்பமில்லை.

**

Rev. Dr. G.U.Pope Translation

The men of pleasant speech that gladness-breathe around,

Through indigence shall never sorrow’s prey be found.

**

Yogi Shuddhananda Translation

Whose loving words delight each one

The woe of want from them is gone.

**

95       

பணிவுடைய னின்சொல னாதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற.

பரிமேலழகர் உரை

ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் – ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார் கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல், பிற அல்ல – அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா. (இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார். ‘மற்று’ அசை நிலை. வேற்றுமை உடைமையான், பிற எனவும், இவைபோலப் பேரழகு செய்யாமையின் ‘அல்ல’ எனவும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப் பயன் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும், மற்றைய அணிகள் அணிகள் அல்ல.

**

மணக்குடவர் உரை

ஒருவனுக்கு அழகாவது தாழ்ச்சி யுடையனா யினிய சொற்களைக் கூற வல்லவ னாதல்: பிறவாகிய அழகெல்லாம் அழகெனப்படா.

இது தாழ்த்துக் கூறவேண்டு மென்பதும் அதனாலாம் பயனுங் கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் – ஒருவனுக்கு அணியாவன அடக்கமுடைமையும் இன்சொலுடைமையுமாம் ; பிற அல்ல – மற்ற பொன்னாலும் மணியாலும் செய்யப்பட்ட அணிகள் அணிகளாகா.

பணிவுடைமை இன்முகத்தோடு கூடியதாகலின் இன்சொற்கு உடன் சேர்த்துக் கூறப்படும் இனமாயிற்று . பண்டைக்காலத்தில் ஆடவரும் காதிலும் கழுத்திலும் கையிலும் அணியணிவது பெருவழக்கமாதலின் , ‘ஒருவற்கு’ என ஆண்பாலாற் குறித்தது தலைமை பற்றியதாகும். அடக்கமுடைமையும் இன்சொலுடைமையும் இருபாற்கும் ஒப்பப் பொதுவேனும் , அணியுடைமை பெண்பாற்குப் போல் ஆண்பாற்குத் தேவையன்று என்பது குறிப்பான் அறியப்படும்.’மற்று’ அசைநிலை.

**

கலைஞர் உரை

அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர,

ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.

**

Rev. Dr. G.U.Pope Translation

Humility with pleasant speech to man on earth,

Is choice adornment; all besides is nothing worth.

**

Yogi Shuddhananda Translation

To be humble and sweet words speak

No other jewel do wise men seek.

**

96       

அல்லவை தேய வறம்பெருகு நல்லவை

நாடி யினிய சொலின்.

பரிமேலழகர் உரை

நல்லவை நாடி இனிய சொலின் – பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும் – அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும். (தேய்தல் : தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். “தவத்தின்முன் நில்லாதாம் பாவம்” (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடைய சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

**

மணக்குடவர் உரை

நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

நல்லவை நாடி இனிய சொலின் – விளைவாற் பிறர்க்கு நன்மை பயக்குஞ் சொற்களை ஆராய்ந்தறிந்து அவற்றைச் செவிக்கினிதாக ஒருவன் சொல்வானாயின் ; அல்லவை தேய அறம் பெருகும் – அவனுக்குத் தீவினைப் பயன் குன்ற நல்வினைப் பயன் வளரும் .

அறம் நல்வினை ; இங்கு அதன் பயனைக் குறித்தது . அறமல்லாதவை தீவினைகள் . தீவினைகள் தேய்தலாவது தீவினைப் பயன் குன்றல் . நல்வினையும் தீவினையும் ஒளியும் இருளும் போல மறுதலைப் பொருள்களாதலின் , ஒளியின் முன் இருள் கெடுதல் போல நல்வினைப் பயன் முன் தீவினைப் பயன் கெடுமென்றார் . நல்லவற்றைச் சொன்னாலும் அறமாகுமேனும் , அவற்றைக் கடுமையாகச் சொல்லின் கேட்பார் மனம் வருந்தி அவ்வறங் கெடுதலால் , நல்லவற்றையும் இனிதாகச் சொன்னாலன்றி அறமாகாதென்றார் . இதனால் இன்சொல்லின் அறத்தன்மை வலியுறுத்தப் பெற்றது .

 **

கலைஞர் உரை

தீய செயல்களை  அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால்,

இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who seeks out good, words from his lips of sweetness flow;

In him the power of vice declines, and virtues grow.

**

Yogi Shuddhananda Translation

His sins vanish, his virtues grow

Whose fruitful words with sweetness flow.

**

97       

நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று

பண்பிற் றலைப்பிரியாச் சொல்.

பரிமேலழகர் உரை

நயன் ஈன்று நன்றி பயக்கும் – ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்: பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் – பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல். (நீதி: உலகத்தோடு பொருந்துதல். ‘பண்பு’ என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் – ஒரு சொல் நீர்மைத்து.)

**

மு.வரதராசனார் உரை

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

**

மணக்குடவர் உரை

பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும்

பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் – விளைவாற் பிறர்க்கு நன்மை செய்து இனிமைப் பண்பினின்றும் நீங்காத சொல் ; நயன் ஈன்று நன்றி பயக்கும் – இம்மைக்கு நேர்ப்பாட்டை ( நீதியை ) உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் விளைவிக்கும் .

நேர்பாடு என்பது நீதி என்னும் வடசொற்கு நேர்த்தென்சொல் . நேர்மை என்பது நேர்பாட்டையுங் குறிக்கும் பல பொருளொரு சொல் . நேர்பாடு நேர்மையான ஒழுக்கம் . ” கோணே நேர்பாடாயிருந்தான் ” ( பாரத . சூது .227 ) . ‘ பண்பு ‘ என்பது இங்கு அதிகாரத்தால் இனிமைப் பண்பைக் குறித்தது . தலைப்பிரிதல் என்பது தலைக்கூடுதல் என்பதற்கு எதிர் .

**

கலைஞர் உரை

நன்மையான  பயனைத்  தரக்கூடிய  நல்ல   பண்பிலிருந்து   விலகாத

சொற்கள்  அவற்றைக்    கூறுவோருக்கும்  இன்பத்தையும், நன்மையையும்

உண்டாக்கக் கூடியவைகளாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The words of sterling sense, to rule of right that strict adhere,

To virtuous action prompting, blessings yeild in every sphere.

**

Yogi Shuddhananda Translation

The fruitful courteous kindly words

Lead to goodness and graceful deeds.

**

98       

சிறுமையு ணீங்கிய வின்சொன் மறுமையு

மிம்மையும் மின்பந் தரும்.

பரிமேலழகர் உரை

சிறுமையுள் நீங்கிய இன்சொல் – பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும் – ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். (மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

பிறர்க்குத் துன்பம் விளைவிக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

**

மணக்குடவர் உரை

புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள் இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

சிறுமையுள் நீங்கிய இன்சொல் – விளைவாலும் பொருளாலும் குரலாலும் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல் ; இம்மையும் மறுமையும் இன்பம் தரும் – ஒருவனுக்கு இருமையிலும் இன்பம் விளைவிக்கும் .

இம்மை இன்பமாவது ஐம்புல நுகர்ச்சி பெற்று நோயற்ற நீடு வாழ்வு . மறுமையின்பமாவது விண்ணுலக வாழ்வு அல்லது மண்ணுலக நற்பதவி . இன்சொல் என்பது இன்செயலையுந் தழுவும் .

**

கலைஞர் உரை

சிறுமைத்தனமற்ற  இனியசொல்  ஒருவனுக்கு  அவன் வாழும் போதும்,

வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Sweet kindly words, from meanness free, delight of heart,

In world to come and in this world impart.

**

Yogi Shuddhananda Translation

Kind words free from meanness delight

This life on earth and life the next.

**

99       

இன்சொலா லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ

வன்சொல் வழங்கு வது.

பரிமேலழகர் உரை

இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் – பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல் – அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி? (‘இனிது’ என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.)

**

மு.வரதராசனார் உரை

இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

**

மணக்குடவர் உரை

இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொலாதலானே அருளொடு பொருந்திக் குற்றமிலவாம்.

இஃது ஒருவனைக் கடிந்து சொல்லவேண்டு மிடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டுமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் – பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பந் தருதலை நுகர்ந்தறிகின்றவன் ; வன்சொல் வழங்குவது எவனோ – தான் மட்டும் பிறரிடத்தில் வன் சொல்லை ஆள்வது என்ன பயன்கருதியோ !

‘ கொல் ‘ அசைநிலை . ‘ ஒ ‘ இரக்கப் பொருளது . ” தன்னுயிர் போல் மன்னுயிரை நினைக்க வேண்டும் . ” என்பது , இங்கு வற்புறுத்தப் பட்டது .

**

கலைஞர் உரை

இனிய  சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு

மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?

**

Rev. Dr. G.U.Pope Translation

Who sees the pleasure kindly speech affords,

Why makes he use of harsh, repellant words?

**

Yogi Shuddhananda Translation

Who sees the sweets of sweetness here

To use harsh words how can he dare?

**

100      

இனிய வுளவாக லின்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

பரிமேலழகர் உரை

இனிய உளவாக இன்னாதகூறல் – அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று – இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும். (‘கூறல்’ என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம். இவை இரண்டு பாட்டானும் இன்னாத கூறலின் குற்றம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

**

மணக்குடவர் உரை

பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இனிய உளவாக இன்னாத கூறல்–தனக்கு அறமும் பிறர்க்கு இன்பமும் பயக்கும் இனிய சொற்களும் எளிதாய் வழங்குமாறு தன்னிடத்திருக்கவும்,அவற்றை வழங்காது தனக்குத் தீதும் (பாவமும்) பிறர்க்குத் துன்பமும் பயக்கும் கடுஞ் சொற்களை ஒருவன் வழங்குதல் ; கனி இருப்பக் காய் கவர்ந்த அற்று – இனியனவும் வாழ்நாளை நீட்டிப்பனவுமான கனிகளும் கைப்பனவும் சாவைத் தருவனவுமான காய்களும் ஒரு சரியாய்க் கைக்கு எட்டுவனவாக விருக்கவும் , அவற்றுள் முன்னவற்றை விட்டுவிட்டுப் பின்னவற்றை மட்டும் பறித்துண்ட லொக்கும் .

பொருளைச் சிறப்பிக்கும் அடைமொழிகள் உவமத்திற்கும் ஏற்கு மாதலால், இனிய கனி என்பது ஒளவையாருண்ட அருநெல்லிக் கனி போலும் வாழ்வு நீட்டியையும்,இன்னாத காய் என்பது எட்டிக்காய் போலும் உடன்கொல்லியையும், குறிக்கும் என அறிக. ‘ கவர்ந்தற்று ‘ என்னும் சொல் மரங்களினின்று காய்கனிகளைப் பறிக்குஞ் செயலை நினைவுறுத்தும். கவர்தல் பறித்தல்; இங்குப் பறித்துண்டல். பிறரிடத்து இன்னாச் சொற் சொல்லுதல் தனக்கே தீங்கை வருவிக்கும் பேதைமை யென்பது இதனாற் கூறப்பட்டது.

உவமமும் பொருளும் சேர்ந்தது உவமை என அறிக.

**

கலைஞர் உரை

இனிமையான    சொற்கள்    இருக்கும்போது   அவற்றை   விடுத்துக்

கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக்   காய்களைப்   பறித்துத்

தின்பதற்குச் சமமாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

When pleasant word are easy, bitter words to use,

Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.

**

Yogi Shuddhananda Translation

Leaving ripe fruits the raw he eats

Who speaks harsh words when sweet word suits.

**

×