17ஆம் அதிகாரம் (அழுக்காறாமை)

அதிகாரம் 17.

அழுக்காறாமை

161      

ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத்

தழுக்கா றிலாத வியல்பு.

பரிமேலழகர் உரை

(இதனுள் ‘அழுக்காறு’ என்பது ஒருசொல்.அதற்குப் பொருள் மேலே (குறள்: 35) உரைத்தாம். அச்சொல் பின் அழுக்காற்றைச் செய்யாமை என்னும் பொருள்பட எதிர்மறை ஆகாரமும் மகர ஐகார விகுதியும் பெற்று ‘அழுக்காறாமை’ என நின்றது. இப்பொறாமையும் பொறைக்கு மறுதலையாகலின், இதனை விலக்குதற்கு இது பொறை உடைமையின்பின் வைக்கப்பட்டது.)

ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு – ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை; ஒழுக்காறாக் கொள்க – தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க. [இயல்பு – அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக என்பதாம்.]

**

மு.வரதராசனார் உரை

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்கநெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

**

மணக்குடவர் உரை

ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பைத் தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க.

இஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு-ஒருவன் தன் நெஞ்சத்திற் பொறாமை யில்லாத தன்மையை; ஓழுக்காறாக்கொள்க-தனக்குரிய ஓழுக்க நெறியாகக்கொள்க.

இயல்பு இயல்பான தன்மை ஒழுக்காறாக் கொள்ளுதல் உயிரினுஞ் சிறப்பாகப் பேணிக் காத்தல்.

**

கலைஞர் உரை

மனத்தில்   பொறாமையில்லாமல்   வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய

நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

As ‘strict decorum’s laws,that all men bind,

Let each regard unenvying grace of mind.

**

Yogi Shuddhananda Translation

Deem your heart as virtuous

When your nature is not jealous.

**

162      

விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையார் மாட்டு

மழுக்காற்றி னன்மை பெறின்.

பரிமேலழகர் உரை

யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் – யாவர் மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்; விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை – மற்று அவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒப்பது இல்லை. (அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார், ‘யார் மாட்டும்’ என்றார். அன்மை-வேறாதல். இவை இரண்டு பாட்டானும் அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.

**

மணக்குடவர் உரை

விழுமிய பேறுகளுள் யார் மட்டும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவனாயின், அப்பெற்றியினை யொப்பது பிறிதில்லை.

இஃது அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்கதென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் – யாரிடத்தும் பொறாமையில்லா தொழுகுதலை ஒருவன் பெறுமாயின்; விழுப் பேற்றின் அஃது ஒப்பது இல்லை – அவன் பெறுஞ் சிறந்த பேறுகளுள் அதை யொப்பது வேறு ஒன்றும் இல்லை.

‘யார் மாட்டும் ‘ என்றதால் , பகைவரிடத்தும் பொறாமை கொள்ளுதல் விலக்கப்பட்டது.

**

கலைஞர் உரை

யாரிடமும்   பொறாமை    கொள்ளாத   பண்பு ஒருவர்க்கு வாய்க்கப்

பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.

**

Rev. Dr. G.U.Pope Translation

If man can learn to envy none on earth,

‘Tis richest gift, -beyond compare its worth.

**

Yogi Shuddhananda Translation

No excellence excels the one

That by nature envies none.

**

163      

அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்

பேணா தழுக்கறுப் பான்.

பரிமேலழகர் உரை

அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் – மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கு அறுப்பான் – பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உதவாது அழுக்காற்றைச் செய்வான். (‘அழுக்கறுத்தல்’ எனினும் ‘அழுக்காறு’ எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாகும்.)

**

மு.வரதராசனார் உரை

தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத்தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் பொறாமைப்படுவான்.

**

மணக்குடவர் உரை

தனக்கு அறனாகிய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படுவான், பிறனுடைய ஆக்கத்தை விரும்பாதே அழுக்காறு செய்வான்.

இஃது அழுக்காறுடையார்க்குப் புண்ணிய மில்லையாமென்று கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

ஆக்கம் அறன் வேண்டாதான் என்பான் -இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய செல்வமும் அறமும் ஆகிய பேறுகளைத் தனக்கு வேண்டாதவனென்று சொல்லப்படுகின்றவன்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான்- பிறன் செல்வங் கண்ட விடத்து அதற்கு மகிழாது பொறாமைப்படுபவனாவன்.

பொறாமைக்காரன் பிறனுக்கு ஒரு தீங்குஞ் செய்ய இயலாது தனக்கே கேட்டை வருவித்துக் கொள்கின்றான் என்பது, இதனாற் கூறப்பட்டது.

**

கலைஞர் உரை

அறநெறியையும், ஆக்கத்தையும்  விரும்பிப்  போற்றாதவன்தான்,  பிறர்

பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Nor wealth nor virtue does that man desire, ’tis plain

Whom others’ wealth delights not, feeling envious pain.

**

Yogi Shuddhananda Translation

Who envies others’ good fortune

Can’t prosper in virtue of his own.

**

164      

அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி

னேதம் படுபாக் கறிந்து.

பரிமேலழகர் உரை

அழுக்காற்றின் அல்லவை செய்யார் – அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து – அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து. (அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.)

**

மு.வரதராசனார் உரை

பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதலை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவடையோர்.

**

மணக்குடவர் உரை

அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்: நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அழுக்காற்றின் அல்லவை செய்யார்-அறிவுடை யோர் பொறாமை கொண்டு அதனால் அறனல்லாதவற்றைச் செய்யார்; இழுக்கு ஆற்றின ஏதம் படுபாக்கு அறிந்து-அத்தீய நெறியால் தமக்கு இருமையிலுங் கேடு வருதலை யறிந்து.

அல்லவை செய்தலாவது, கல்வி செல்வம் அதிகாரம் ஆற்றல் முதலியன வுடையார்க்குத் தீங்கு எண்ணுதலும் சொல்லுதலும் செய்தலுமாம். பாக்கு ஒரு தொழிற்பெயரீறு.

**

கலைஞர் உரை

தீய   வழியில்   சென்றால்  துன்பம்  ஏற்படுமென்பதை அறிந்தவர்கள்

பொறைமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The wise through envy break not virtue’s laws,

Knowing ill-deeds of foul disgrace the cause.

**

Yogi Shuddhananda Translation

The wise through envy don’t others wrong

Knowing that woes from evils throng.

**

165      

அழுக்கா றுடையர்க் கதுசாலு மொன்னார்

வழுக்கியுங் கேடீன் பது.

பரிமேலழகர் உரை

ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது – அழுக்காறு பகைவரைஒழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் – அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும். (‘அதுவே’ என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.)

 **

மு.வரதராசனார் உரை

பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்குசெய்யத் தவறினாலும் தவறாமல் கேட்டைத் தருவது அது.

**

மணக்குடவர் உரை

அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்: பகைவர் கேடுபயத்தல் தப்பியும் கெடுப்பதற்கு,

இஃது உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது-பகைவர் கேடு செய்யத் தவறினும் பொறாமை தப்பாது கேடு செய்வதாதலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் -பொறாமையுள்ளவர்க்குக் கேடு செய்ய அது ஒன்றே போதுமானது; வேறு பகை வேண்டிய தில்லை.

உம்மை எதிர்மறைப் பொருட்டு. அதுவே என்னும் பிரிநிலை யேகாரம் தொக்கது.

**

கலைஞர் உரை

பொறாமைக் குணம்  கொண்டவர்களுக்கு  அவர்களை  வீழ்த்த  வேறு

பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Envy they have within! enough to seal their fate!

Though foemen fail, envy can ruin consummate

**

Yogi Shuddhananda Translation

Man shall be wrecked by envy’s whim

Even if enemies spare him.

**

166      

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ

முண்பதூஉ மின்றிக் கெடும்.

பரிமேலழகர் உரை

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் – ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்; உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் – உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும். (கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை செய்தல். ‘சுற்றம் கெடும்’ எனவே அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும் என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

**

மணக்குடவர் உரை

பிறனொருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குமவனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும்.

இது நல்குரவு தருமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்-ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதைப் பொறாமையால் தடுப்பவன் மட்டு மன்றி அவன் உறவினரும்; உண்பதும் உடுப்பதும் இன்றிக் கெடும்-உண்ணும் பொருளும் உடுக்கும் பொருளு மின்றிக் கெடுவர்.

சுற்றமும் என்னும் எச்சவும்மை தொக்கது. ஒரு செல்வனது பொருளைக் கண்டு பொறாமைப் படுவதினும் ஒரு செல்வன் ஓர் ஏழைக்குக் கொடுப்பதைப் பொறாமையால் தடுப்பது மிகக் கொடியதாதலின், அக் கொடுமை செய்தவன் தன் சுற்றத்தோடும் உண்பதும் உடுப்பதுமின்றிக் கெடுவான் என்றார். இவ் விளைவு பொறாமைக் குற்றத்தோடு ஏழை வயிற்றெரிச்சலும் கூடுவதால் நேர்வது. ஊணுடை யென்னாது உண்பது முடுப்பதும் என்றமையால், உண்ணத்தக்கனவும் உடுக்கத்தக்கனவுமான எவ்வகைப் பொருளையுமிழப்பர் என்பது பெறப்படும். ‘சுற்றம்’ தொழிலாகு பெயர். சுற்றியிருக்கும் இனம் சுற்றம். அளபெடை ஈரிடத்தும் இன்னிசை பற்றியது.

**

கலைஞர் உரை

உதவியாக  ஒருவருக்குக்  கொடுக்கப்படுவதைப்  பார்த்துப்  பொறாமை

கொண்டால்  அந்தத்  தீய  குணம்,  அவனை  மட்டுமின்றி    அவனைச்

சார்ந்திருப்போரையும்    உணவுக்கும்,   உடைக்கும்கூட   வழியில்லாமல்

ஆக்கிவிடும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who scans good gifts to others given with envious eye,

His kin, with none to clothe or feed them, surely die.

**

Yogi Shuddhananda Translation

Who envies gifts shall suffer ruin

Without food and clothes with his kin.

**

167      

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ

டவ்வையைக் காட்டி விடும்.

பரிமேலழகர் உரை

அழுக்காறு உடையானை – பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் – திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும். (தவ்வை: மூத்தவள். ‘தவ்வையைக் காட்டி’ என்பது ‘அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே’ (கலி.மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். ‘மனத்தைக் கொடுவித்துஅழுக்காறுடையன் ஆயினானை’ என்று உரைப்பாரும் உளர்.)

**

மு.வரதராசனார் உரை

பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.

**

மணக்குடவர் உரை

அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம்,

இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அழுக்காறு உடையானை-பிறராக்கங் கண்டவிடத்துப் பொறாமை கொள்பவனை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டி விடும்-செங்கோலத்தினளாகிய திருமகள் தானும் பொறாது தன் அக்கையாகிய மூதேவிக்குக் காட்டி விட்டு நீங்கும்.

அவ்வை அக்கை. தம் அவ்வை தவ்வை; தம் அக்கை தமக்கை என்பது போல. திருமகளின் அக்கை வறுமைக்குத் தெய்வமாதலின், அவளுக்குக் காட்டுதல் என்பது இரண்டாம் வேற்றுமையுருபு நாலாம் வேற்றுமைப் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம். ‘விடும்’ என்பது இங்குத் தலைமையாய் வந்த தனிவினை.

**

கலைஞர் உரை

செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி

என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு

அடையாளம் காட்டிவிட்டுத்  தங்கை  இலக்குமி  அவனைவிட்டு  அகன்று

விடுவாள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

From envious man good fortune’s goddess turns away,

Grudging him good, and points him out misfortune’s prey.

**

Yogi Shuddhananda Translation

Fortune deserts the envious

Leaving misfortune omnious.

**

168      

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்

தீயுழி யுய்த்து விடும்.

பரிமேலழகர் உரை

அழுக்காறு என ஒரு பாவி – அழுக்காறு என்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி; திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும் – தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து,மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும். (பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையுங்கெடுத்தற் கொடுமை பற்றி, அழுக்காற்றினைப் ‘பாவி’ என்றார், கொடியானைப் ‘பாவி’ என்னும் வழக்கு உண்மையின். இவை ஆறு பாட்டானும் அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தையும் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்திவிடும்.

**

மணக்குடவர் உரை

அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை: அச்செயலிலாதார் பெருக்கத்தி னீங்கினாரு மில்லை.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அழுக்காறு என ஒரு பாவி-பொறாமை யென்று சொல்லப்படும் ஒப்பற்ற கரிசன் (பாவி) திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்-தன்னை யுடையவனை இம்மைக்கண் செல்வங்கெடுத்து மறுமைக்கண் நரகத்திற் புகுத்தி விடுவான்.

பொறாமைக் குணத்தை ஒரு கொடியனாகக் குறித்தது ஆட்படையணி (Personification). தீயுழி என்பது எரிவாய் நரகத்தின் பெயர். விடும் என்பது செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று. கரிசி (பாவம்)-கரிசன் (ஆண்பால்), கரிசு (பெண் பால்).

**

கலைஞர் உரை

பொறாமை  எனும்  தீமை  ஒருவனுடைய  செல்வத்தையும்  சிதைத்துத்

தீயவழியிலும் அவனை விட்டுவிடும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Envy, embodied ill, incomparable bane,

Good fortune slays, and soul consigns to fiery pain.

**

Yogi Shuddhananda Translation

Caitiff envy despoils wealth

And drags one into evil path.

**

169      

அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான்

கேடு நினைக்கப் படும்.

பரிமேலழகர் உரை

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் – கோட்டத்தினைப் பொருந்திய மனத்தை உடையவனது ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும் – ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும். (கோட்டம்: ஈண்டு அழுக்காறு. ‘உளவாயின்’ என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், ‘இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?’ என்று ஆராயப்படுதலின்’ ‘நினைக்கப்படும்’ என்றார். “இம்மைச் செய்தன யான் அறி நல்வினை; உம்மைப் பயன்கொல்ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக்கொழுந்துடன் போந்தது” (சிலப். 15: 91-93) என நினைக்கப்பட்டவாறு அறிக.)

**

மு.வரதராசனார் உரை

பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.

**

மணக்குடவர் உரை

அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும் செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்-பொறாமை மனத்தானது செல்வமும்; செவ்வியான் கேடும்-பொறாமை கொள்ளாத செவ்விய மனத்தானது வறுமை அல்லது துன்பமும்; நினைக்கப்படும்-எக்கரணியம் பற்றி நேர்ந்தன வென்று ஆராயப்படும்.

இரு நிலைமையும் இயற்கைக்கும் அறநூற் கொள்கைக்கும் மாறாயிருப்பதால் அவற்றிற்குக் கரணியம் பழவினையே என்பது ஆராய்ச்சியால் அறியப்படும்.

“இம்மைச் செய்தன யானறி நல்வினை

யும்மைப் பயன்கொ லொருதனி யுழந்தித்

திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது”

என்னும் மாடலன் கூற்றும் (சிலப். 15;91-93.)

“என்செய லாவதி யாதொன்று மில்லை யினித்தெய்வமே

உன்செய லேயென் றுணரப்பெற் றேனிந்த வூனெடுத்த

பின்செய்த தீவினை யாதொன்று மில்லைப் பிறப்பதற்கு

முன் செய்த தீவினை யோவிங்ங னேவந்து மூண்டதுவே”.

என்னும் பட்டினத்தார் பாடலும், இவ்வகை யாராய்ச்சியைக் குறிக்கும்.

**

கலைஞர் உரை

பொறாமைக்   குணம்  கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும்,

பொறாமைக்  குணம்  இல்லாதவனின்  வாழ்க்கை வேதனையாக இருப்பதும்

வியப்புக்குரிய செய்தியாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

To men of envious heart, when comes increase of joy,

Or loss to blameless men, the ‘why’ will thoughtful hearts employ.

**

Yogi Shuddhananda Translation

Why is envy rich, goodmen poor

People with surprise think over.

**

170      

அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார்

பெருக்கத்திற் றீர்ந்தாரு மில்.

பரிமேலழகர் உரை

அழுக்கற்று அகன்றாரும் இல்லை – அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் – அச் செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை. (இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது)

**

மு.வரதராசனார் உரை

பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.

**

மணக்குடவர் உரை

அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்தி விடும்.

ஒரு பாவி- நிகரில்லாத பாவி, இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அழுக்கற்று அகன்றாரும் இல்லை-பொறாமைப் பட்டுப் பெரியவராயினாருமில்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்-அக்குணமில்லாதவர் பேராக்கத்தினின்று நீங்கினாருமில்லை.

இது பழவினையால் தாக்குண்ணாத பிறப்பின் நிலைமையைக் கூறுவது.

**

கலைஞர் உரை

பொறாமை   கொண்டதால்   புகழ்    பெற்று உயர்ந்தோரும் இல்லை;

பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழந்தோரும் இல்லை.

**

Rev. Dr. G.U.Pope Translation

No envious men to large and full felicity attain;

No men from envy free have failed a sure increase to gain.

**

Yogi Shuddhananda Translation

The envious prosper never

The envyless prosper ever.

**

×