26ஆம் அதிகாரம் (புலான் மறுத்தல்)

அதிகாரம் 26.

புலான் மறுத்தல்

251      

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா

னெங்ஙன மாளு மருள்.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, ஊன் உண்டலை ஒழிதல். கொலைப்பாவத்தைப் பின்னும் உளது ஆக்கலின் அதற்குக் காரணம் ஆதலையும் முன்னும் அதனான் வருதலின் அதன் காரியம் ஆதலையும் ஒருங்குடையதாய ஊன் உண்டல் அருளுடையார்க்கு இயைவதன்று. ஆகலின் அதனை விலக்குதற்கு இஃது அருள் உடைமையின் பின் வைக்கப்பட்டது.)

தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் – தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன், எங்ஙனம் ஆளும் அருள் – எவ்வகையான் நடத்தும் அருளினை? (பயன் இலாத ஊன் பெருக்கலைப் பயன் எனக்கருதி இக்கொடுமை செய்வானே அறிவிலாத கொடியோன் என்றவாறு ஆயிற்று. ‘எங்ஙனம் ஆளும் அருள்’ என்பது, ஆளான் என்பது பயப்ப நின்ற இகழ்ச்சிக் குறிப்பு.)

**

மு.வரதராசனார் உரை

தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?

**

மணக்குடவர் உரை

தன்னுடைம்பை வளர்த்ததற்குத் தான் பிறிதொன்றினது உடம்பை உண்ணுமவன் அருளுடையவனாவது மற்றியா தானோ?

ஊனுண்ண அருள்கெடுமோ என்றார்க்கு இது கூறப்பட்டது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண் பான்-தன் உடம்பைப் பெரிதாக்குவதற்காகத் தான் வேறோர் உயிரியின் உடம்பைக் கொன்று தின்பவன்; எங்ஙனம் அருள் ஆளும்-எங்ஙனந்தான் அருளைக் கையாள்பவன் ஆவன்.

உடம்பைப் பருக்க வைத்தற்குக் கொலையில்லாத வுணவு நிரம்ப விருத்தலானும், உடம்பை எங்ஙனம் பேணினும் அது அழிந்து போவதாதலாலும், ஊனுணவு பெறுதற்கு ஓர் உயிரியை எள்ளளவும் இரக்கமின்றிக் கொல்ல வேண்டியிருத்தலானும், குற்றமற்றவுயிரிகளை மேன்மேலுங் கொல்வது கொடுமையினுங் கொடுமையாதலானும், ‘எங்ஙனம் ஆளும் அருள்’ என்றார். ஆளவே ஆளான் என்பது விடை. உயிருள்ளது உயிரி (பிராணி)

**

கலைஞர் உரை

தன்  உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக்

கொள்பவர் எப்படிக் கருணை யுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

How can the wont of ‘kindly grace’ to him be known,

Who other creatures’ flesh consumes to feed his own?

**

Yogi Shuddhananda Translation

What graciousness can one command

who feeds his flesh by flesh gourmand.

**

252      

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி

யாங்கில்லை யூன்றின் பவர்க்கு.

பரிமேலழகர் உரை

பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை – பொருளால் பயன் கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை, ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்களுக்கு இல்லை – அது போல அருளால் பயன் கோடல் ஊன் தின்பவர்களுக்கு இல்லை. (பொருட்பயன் இழத்தற்குக் காரணம் காவாமை போல, அருட்பயன் இழத்தற்கு ஊன் தின்னல் காரணம் என்பதாயிற்று. ஊன் தின்றாராயினும் உயிர்கட்கு ஒரு தீங்கும் நினையாதார்க்கு அருள் ஆள்தற்கு இழுக்கு இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவை இரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

பொருளுடையவராக இருக்கும் சிறப்பு, அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை; அருளுடையவராக இருக்கும் சிறப்பு, புலால் தின்பவர்க்கு இல்லை.

**

மணக்குடவர் உரை

பொருளினை யாளுதல் அதனைக் காக்கமாட்டாதார்க்கு இல்லை. அதுபோல அருளினை யாளுதல் ஊன் தின்பவர்க்கு இல்லை.

இஃது ஊனுண்ண அருட்கேடு வருமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை-பொருளைக் கையாளுதல் அதைப் பாதுகாவாதார்க்கு இல்லை; ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்க்கு இல்லை-அதுபோல அருளைக்கையாளுதல் ஊன் உண்பவர்க்கு இல்லை.

ஊனுண்பவர்க்கு அருளில்லை யென்பது இங்கு முடிந்த முடிபாகக் கூறப்பட்டது. இம் முடிவிற்கு முந்தின குறள் ஏதுவாம்.

**

கலைஞர் உரை

பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர்  என்னும்

சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும்  சிறப்பு

இல்லை.

**

Rev. Dr. G.U.Pope Translation

No use of wealth have they who guard not their estate;

No use of grace have they with flesh who hunger state.

**

Yogi Shuddhananda Translation

The thriftless have no property

And flesh-eaters have no pity.

**

253      

படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்றி

னுடல்சுவை யுண்டார் மனம்.

பரிமேலழகர் உரை

படை கொண்டார் நெஞ்சம் போல் – கொலைக் கருவியை தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவதல்லது அருளை நோக்காதவாறு போல, ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது – பிறி்தோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குவது அல்லது அருளை நோக்காது. (சுவைபட உண்டல், காயங்களான் இனிய சுவைத்து ஆக்கி உண்டல். இதனான் ஊன் தின்றார் மனம் தீங்கு நினைத்தல் உவம அளவையால் சாதித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகிய அருளைப் போற்றாது.

**

மணக்குடவர் உரை

ஆயுதம் கையிற்கொண்டவர் நெஞ்சுபோல் நன்மையை நினையாது: ஒன்றினுடலைச் சுவைபடவுண்டார் மனம்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

படை கொண்டார் நெஞ்சம் போல்-பகைவரைக் கொல்வதற்குக் கொலைக்கருவியைக் கையிற் கொண்டவரின் மனம் அதனாற் செய்யுங் கொலையை யன்றி அருளை நோக்காதது போல; ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது-ஓர் உயிரியின் உடலைச் சுவையாக வுண்டவர் மனம் அவ்வூனையன்றி அருளை நோக்காது.

ஊன் சுவையாயிருத்தல் காயச் சரக்கை மட்டுமன்றி உயிரியின் இனத்தையும் பொறுத்ததாம். ஊனுண்பார்க்கு அருளின்மை உவமை வாயிலாகவுங் காட்டப்பட்டது.

கதறினும் தொண்டை கீளக் கத்தினும் புள்ளும் மாவும்

பதறினும் நெஞ்சமெல்லாம் பக்கமுந் தலையுங் காலும்

உதறினும் அங்குமிங்கும் ஓடினும் அரத்தம் பீறிச்

சிதறினும் இரக்கங்கொள்ளார் சிதைத்துடல் சுவைக்க வுண்டார்.

என்னும் செய்யுள் இங்கு நினைவுகூரத்தக்கது.

**

கலைஞர் உரை

படைக்   கருவியைப்    பயன்படுத்துவோர்  நெஞ்சமும், ஓர் உயிரின்

உடலைச்  சுவைத்து  உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக்

கூடியவைகள் அல்ல.

**

Rev. Dr. G.U.Pope Translation

Like heart of them that murderous weapons bear, his mind,

Who eats of savoury meat, no joy in good can find.

**

Yogi Shuddhananda Translation

Who wields a steel is steel-hearted

Who tastes body is hard-hearted.

**

254      

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்

பொருளல்ல தவ்வூன் றினல்.

பரிமேலழகர் உரை

அருள் யாது எனின் கொல்லாமை – அருள் யாது எனின், கொல்லாமை : அல்லது (யாதெனின்) கோறல் – அருள் அல்லது யாது எனின் கோறல்: அவ்வூன் தினல் பொருள் அல்லது – ஆகலான் அக்கோறலான் வந்த ஊனைத் தின்கை பாவம். (உபசாரவழக்கால் ‘கொல்லாமை, கோறல்’ ஆகிய காரியங்களை ‘அருள் அல்லது’ எனக் காரணங்கள் ஆக்கியும் ‘ஊன் தின்கை’ ஆகிய காரணத்தைப் ‘பாவம்’ எனக் காரிய மாக்கியும் கூறினார். அருளல்லது – கொடுமை. சிறப்புப்பற்றி அறமும் பொருள் எனப்படுதலின், பாவம் பொருள் அல்லது எனப்பட்டது. ‘கோறல்’ என முன் நின்றமையின் ‘அவ்வூன்’ என்றார். இனி இதனை இவ்வாறன்றி ‘அருளல்லது’ என்பதனை ஒன்றாக்கிக், ‘கொல்லாமை கோறல்’ என்பதற்குக் ‘கொல்லாமை என்னும் விரதத்தை அழித்தல்’ என்று உரைப்பாரும் உளர்.)

**

மு.வரதராசனார் உரை

அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல்; அருளல்லாதது எது என்றால் உயிரைக் கொல்லுதல்; அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

**

மணக்குடவர் உரை

அருளல்லது யாதெனின், கொல்லாமையைச் சிதைத்தல்; பொருளல்லது யாதெனின் அவ்வூனைத் தின்றல்.

இஃது அதனை யுண்டதால் அருள் கெடுதலேயன்றிப் பெறுவதொரு பயனுமில்லை என்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அருள் யாது எனின் கொல்லாமை-அருள் என்பது என்னது எனின் கொல்லாமை; அல்லது (யாது எனின்) கோறல்-அருளல்லாதது எதுவெனின் கொல்லுதல் ; அவ்வூன் தினல் பொருள் அல்லது-ஆதலால், அக்கொல்லுதலால் வந்த ஊனைத் தின்பது கரிசு (பாவம்).

கொல்லாமை கோறல் ஆகிய கருமகங்களை (காரியங்களை) அருள் அல்லது எனக் கரணகங்களாக (காரணகங்களாக)க் கூறியது சார்ச்சி (உபசார) வழக்கு. அறமும் பொருளெனப்படுவதால் அறமல்லாத கரிசைப் பொருளல்லது என்றார். அவ்வூன் என்ற சேய்மைச் சுட்டு முன்னின்ற கோறலைத் தழுவியது. மணக்குடவர் முதலடியை நிரனிறையாகப் பகுக்காது ஆற்றொழுக்காகக் கொண்டு “அருளல்லது யாதெனின் கொல்லாமையைச் சிதைத்தல்”, என்று பொருள் கூறுவர்.

**

கலைஞர் உரை

கொல்லாமை  அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும்.

எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது.

**

Rev. Dr. G.U.Pope Translation

‘What’s grace, or lack of grace?’To kill’ is this , that ‘not to kill’;

To eat dead flesh can never worthy end fulfil.

**

Yogi Shuddhananda Translation

If merciless it is to kill,

To kill and eat is disgraceful.

**

255      

உண்ணாமை வேண்டும் புலாலைப் பிறிதொன்றின்

புண்ண துணர்வார்ப் பெறின்.

பரிமேலழகர் உரை

புலால் பிறிதொன்றன் புண் – புலாலாவது பிறிதோர் உடம்பின் புண், அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் – அது தூய்து அன்மை அறிவாரைப் பெறின் அதனை உண்ணாதொழியல் வேண்டும். (‘அஃது’ என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால்தொக்கது. அம்மெய்ம்மை உணராமையின், அதனை உண்கின்றார் என்பதாம். பொருந்தும் ஆற்றானும் புலால் உண்டல் இழிந்தது என்பது இதனான் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

புலால் உண்ணாமலிருக்க வேண்டும்; ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப்புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.

**

மணக்குடவர் உரை

உயிர் நிலையைப் பெறுதல் ஊனை யுண்ணாமையினால் உள்ளது; ஊனையுண்ண உண்டாரை எல்லாவுலகத்தினும் இழிந்த நரகம் விழுங்கிக் கொண்டு அங்காவாது.

அங்காவாமை- புறப்பட விடாமை.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

புலால் பிறிது ஒன்றன் புண் – புலால் என்பது வேறோர் உடம்பின் புண்ணே; அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் – அவ்வுண்மையை அறியப் பெறின் அதை உண்ணாதிருத்தல் வேண்டும்.

உண்மையை உணர்தலாவது நோய்ப்பட்டதென்றும் துப்புர வற்றதென்றும் அருவருப்பானதென்றும் அறிதல். அங்ஙனம் அறியின் உண்ணாரென்பது கருத்து. ‘புலாஅல்’ இசை நிறையளபெடை. அது வுணர்வார் என்பதின் வகர வுடம்படுமெய் தொக்கது.

**

கலைஞர் உரை

புலால்  என்பது  வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர்

அதனை உண்ணாமல் இருக்க வேண்டும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

With other beings’ ulcerous wounds their hunger they appease;

If this they felt, desire to eat must surely cease.

**

Yogi Shuddhananda Translation

From eating flesh men must abstain

If they but feel the being’s pain.

**

256      

தினற்பொருட்டாற் கொள்ளா துலகெனின் யாரும்

விலைப்பொருட்டா லூன்தருவா ரில்.

பரிமேலழகர் உரை

தினற்பொருட்டால் உலகு கொல்லாது எனின் – பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின், விலைப்பொருட்டு ஊன் தருவார் யாரும் இல் – பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. (‘உலகு’ என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது. பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், ‘தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை’ என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணமாதல் சாதித்தலின், இதனான் மேலது வலியுறுத்தப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

புலால் தின்னும்பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லாதிருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவர்.

**

மணக்குடவர் உரை

தின்னுதற்காக உலகத்தார் கொள்ளாராயின், விலைக்காக ஊன் விற்பார் யாரும்

இல்லை.

இது கொன்று தின்னாது விலைக்குக்கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னை

யென்றார்க்கு அதனாலுங் கொலைப்பாவம் வருமென்று கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தினற்பொருட்டு உலகு கொல்லாது எனின்-பேதைமை அல்லது குறும்புத்தனம் பற்றியல்லது ஊன் தின்பதற்காக உலகத்தார் உயிரிளைக் கொல்லாரெனின்; விலைப் பொருட்டு ஊன் தருவார் இல்-பொருள் பெறும் நோக்கத்தோடு ஊன் விற்பவரும் ஒருவரும் இரார்.

ஊன் தின்பதற்காக ஓர் உயிரியைக் கொன்றால், அக் கொலைக்குற்றம் அதைக் கொன்றவனைச் சாருமே யன்றி அதன் ஊனைத் தின்றவரைச் சாராது, என்னும் புத்த சமய வுறழியை (வாதியை) நோக்கிக் கூறிய கூற்றாகும் இது. விலைக்கு வாங்கி யுண்பாரும் வீட்டிற் கொன்று உண்பாரும் ஆக ஊனுண்பார் இரு திறத்தார். குற்றத்தைப் பொறுத்த அளவில் இவ்விரு திறத்தாரும் ஒரு திறத்தாரே. ஒருவன் ஒர் உண்ணப்படும் உயிரியைக் கொல்வதற்கு அதன் ஊனுண்பவரும் நேர்வகையிலும் நேரல்லா வகையிலும் தூண்டுபவராயிருத்தலால், அக் கொலைக் குற்றம் கொன்றானையும் தின்றாரையும் ஒக்கச் சாரும் என்பது வள்ளுவர் கருத்தாகும். உலகம் என்பது இங்குப் பெரும்பான்மை பற்றிய ஆகுபெயர். ‘ஆல்’ ஈரிடத்தும் அசைநிலை.

**

கலைஞர் உரை

புலால்   உண்பதற்காக  உலகினர்   உயிர்களைக் கொல்லா திருப்பின்,

புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.

**

Rev. Dr. G.U.Pope Translation

‘We eat the slain,’ you say, ‘by us no living creatures die;

Who’d kill and sell, I pray, if none came there the flesh to buy?

**

Yogi Shuddhananda Translation

None would kill and sell the flesh

For eating it if they don’t wish.

**

257      

உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண

வண்ணாத்தல் செய்யா தளறு.

பரிமேலழகர் உரை

உயிர் நிலை உண்ணாமை உள்ளது – ஒருசார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது; உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது – ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின், அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்வதற்கு அங்காவாது. (உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக, ஏனைய பலவாய் வருதலின், ‘உண்ணாமை உள்ளது உயிர்நிலை’ என்றார். ‘உண்ணின் என்பது உண்ண’ எனத்திரிந்து நின்றது. ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் என்பதாம். கொலைப் பாவம் கொன்றார்்மேல் நிற்றலின், பின் ஊன் உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

உயிர்கள் உடம்புபெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது; ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.

**

மணக்குடவர் உரை

புலாலை யுண்ணாமை வேண்டும். அது பிறிதொன்றின் புண். ஆதலால் அதனை அவ்வாறு காண்பாருண்டாயின்.

இது புலால் மறுத்தல் வேண்டுமென்பதூஉம், அது தூயதாமென்பதூஉங் கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

உயிர்நிலை ஊன் உண்ணாமை உள்ளது-ஒருசார் உயிர்கள் உடம்பொடு கூடி நிற்றல் ஊனுண்ணாமையாகிய அறத்தால் நேர்வது; ஊன் உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது-ஆதலால், ஒருவன் ஊனுண்பானாயின், அவனை விழுங்கிய நரகம் பின்பு அவனை வெளிப்படுத்தற்கு வாய் திறவாது.

உண்ணப்படும் உயிரிவகைகள் வரவரத் தொகை குறைந்து வருவதனாலும், சில காட்டுயிரிகள் நாளடைவில் அற்றும் போவதனாலும், ‘உண்ணாமையுள்ள துயிர்நிலை’ என்றார். உயிர்களெல்லாம் நிற்றியம் என்பது கொள்கையாதலின், உண்ணப்படும் உயிர்கள் குறையின் உண்ணப்படா வுயிரிகள் கூடும் என்பதாம். ஊனுண்டவன் நீண்டகாலம் நரகத்தில் துன்புறுவான் என்பது ‘அண்ணாத்தல் செய்யா தளறு’ என்பதன் கருத்தாம். ஊன் என்பது முன்னும் பின்னுஞ் சென்றிசைதலின் தாப்பிசைப் பொருள்கோளும் இடைநிலை விளக்கணியுமாகும். நிற்றியம்-நித்ய(வ.).

**

கலைஞர் உரை

உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது;புலால்

உண்ணாதவர்கள்    இருப்பதால்,    பல   உயிர்கள்   கொல்லப்படாமல்

வாழ்கின்றன.

**

Rev. Dr. G.U.Pope Translation

If flesh you eat not, life’s abodes unharmed remain;

Who eats, hell swallows him,and renders not again.

**

Yogi Shuddhananda Translation

Off with flesh; a life you save

The eater hell’s mouth shall not waive!

**

258      

செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா

ருயிரிற் றலைப்பிரிந்த வூண்.

பரிமேலழகர் உரை

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் – மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார், உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் – ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார். ( ‘தலைப்பிரிவு’ என்பது ஒரு சொல். பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின், ‘உண்ணார்’ என்றார்.)

**

மு.வரதராசனார் உரை

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஓர் உயிரினடத்திலிருந்து பிரிந்துவந்த உடம்பாகிய ஊனை உண்ணமாட்டார்.

**

மணக்குடவர் உரை

குற்றத்தினின்று நீங்கின தெளிவுடையார் உண்ணார்; உயிரினின்று நீங்கின உடம்பை.

இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனைத் தெளிவுடையாருண்ணாரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் – மயக்கம் என்னும் குற்றத்தினின்று நீங்கிய தெள்ளறிவினர்; உயிரின் தலைப் பிரிந்த ஊன் உண்ணார் – ஓர் உயிரினின்று நீங்கிய வுடம்பை உண்ணார்.

உயிரினின்று நீங்கியது பிண மென்று உணர்தலின் உண்ணா ரென்றார். ‘தலைப்பிரிதல்’ என்பது ஒரு சொற்றன்மைப்பட்ட கூட்டுச்சொல். மயக்கம் ஐயமுந் திரிபும்.

**

கலைஞர் உரை

மாசற்ற  மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண

மாட்டார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Whose souls the vision pure and passionless perceive,

Eat not the bodies men of life bereave.

**

Yogi Shuddhananda Translation

Whose mind from illusion is freed

Refuse on lifeless flesh to feed.

**

259      

அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றி

னுயிர்செகுத் துண்ணாமை நன்று.

பரிமேலழகர் உரை

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் – தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று – ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

நெய் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட, ஒன்றன் உயிரைக் கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

**

மணக்குடவர் உரை

நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் – தீயின்கண் நெய் முதலிய வுணவுகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ; ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று – ஒரு விலங்கின் உயிரைப் போக்கி உடம்பைத் தின்னாமை நன்றாம்.

ஆரிய வேள்விகள் கொலை வேள்விகளாதலானும், ஆயிரம் வேள்விப் பயனினும் ஓருயிரியைக் கொல்லாமையின் பயன் பெரிதென்றமையானும், அவை விலக்கப்பட்டனவாம்.

பாட வேறுபாடு:

அவிசொரிந் தாயிரம் வேட்டலன் றொன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று.

இப்பாடம், அவிசொரிந்து ஆயிரம் வேட்டலன்று ; ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமையே நன்று என்று பொருள் தருதல் காண்க. இதில் ஏகாரம் தொக்கது.

**

கலைஞர் உரை

நெய்   போன்ற   பொருள்களைத்   தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை

நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.

**

Rev. Dr. G.U.Pope Translation

Than thousand rich oblations, with libations rare,

Better the flesh of slaughtered beings not to share.

**

Yogi Shuddhananda Translation

Not to-kill-and-eat, truly

Excels thousand pourings of ghee!

**

260      

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

யெல்லா வுயிருந் தொழும்.

பரிமேலழகர் உரை

கொல்லான் புலாலை மறுத்தானை – ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை, எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் – எல்லா உயிரும் கை குவித்துத் தொழும். (இவ்விரண்டு அறமும் ஒருங்கு உடையார்க்கு அல்லது ஒன்றே உடையார்க்கு அதனால் பயன் இல்லை ஆகலின், கொல்லாமையும் உடன் கூறினார். இப்பேரருள் உடையான் மறுமைக்கண் தேவரின் மிக்கான் ஆம் என அப் பயனது பெருமை கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் ஊன் உண்ணாமையது உயர்ச்சி கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

**

மணக்குடவர் உரை

கொல்லானுமாய்ப் புலாலையுண்டலையுந் தவிர்த்தவனைக் கை குவித்து எல்லாவுயிருந் தொழும்.

மேல் எல்லாப்புண்ணியத்திலும் இது நன்றென்றார்; அது யாதினைத் தருமென்

றார்க்குக் கொல்லாதவன் தேவர்க்கும் மேலாவனென்று கூறினார்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

கொல்லான் புலாலை மறுத்தானை – ஓருயிரையுங் கொல்லாதவனாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் – எல்லா மக்களும் கைகுவித்து வணங்குவர்.

கொல்லாதவன் புலாலுண்பவனாகவும் புலாலுண்ணாதவன் கொல்பவனாகவும் இருக்கலா மாதலால், அவற்றால் பயினின்மை கருதி ஈரறங்களையும் உடன் கூறினார். கைகூப்பித் தொழுதல் மற்ற வுயிர்கட் கியையாமையின் மக்களுயிர் எனக் கொள்ளப்பட்டது. உயிர் என்பது சொல்லால் அஃறிணை யாதலின், பல்லோர் படர்க்கையிற் செல்லாச் செய்யுமென்னும் முற்று இங்குச் செல்வதாயிற்று. ஈரறங்களையுங் கடைப்பிடிப்பார் , மறுமையில் (தேவர் நிலையில் ) மட்டு மன்றி இம்மையில் மக்கள் நிலையிலும் பிறரால் தெய்வமாக மதிக்கப் படுவர் என்பது கருத்து.

**

கலைஞர் உரை

புலால்     உண்ணாதவர்களையும்,      அதற்காக      உயிர்களைக்

கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who slays nought – flesh rejects – his feet before,

All living things with clasped hands adore.

**

Yogi Shuddhananda Translation

All lives shall lift their palms to him

Who eats not flesh nor kills with whim.

**

×