27ஆம் அதிகாரம் (தவம்)

அதிகாரம் 27.

தவம்

261      

உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை

யற்றே தவத்திற் குரு.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, மனம் பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயில்நிலை நிற்றலும், மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு, அவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துப் பிற உயிர்களை ஓம்புதல்,புலான் மறுத்து உயிர்கண்மேல் அருள் முதிர்ந்துழிச் செய்யப்படுவது ஆகலின், இது புலால் மறுத்தலின்பின் வைக்கப்பட்டது.)

தவத்திற்கு உரு-தவத்தின் வடிவு; உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே – உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று (மற்றுள்ளன எல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், ‘அற்றே,’ எனத் தேற்றேகாரம் கொடுத்தார். ‘தவத்திற்கு உரு அற்று’ என்பது, ‘யானையது கோடு கூரிது’ ‘என்பதனை,’ யானைக்குக் கோடு கூரிது, என்றாற்போல ஆறாவதன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம் இதனால் தவத்தினது இலக்கணம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.

**

மணக்குடவர் உரை

தமக்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு நோய் செய்யாமையுமாகிய அத்தன்மையே தவத்திற்கு வடிவமாம்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே – இயற்கையாகவுஞ் செயற்கையாகவும் தமக்கு நேருந் துன்பங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளுதலும் , பிறவுயிர்கட்குத் துன்பஞ் செய்யாமையுமாகிய அவ்வளவே; தவத்திற்கு உரு – தவத்தின் வடிவாம். இத்தவ விலக்கணம் தொகுத்துக் கூறல் என்னும் உத்தி பற்றியது. ஏகாரம் தேற்றம்.

**

கலைஞர் உரை

எதையும்   தாங்கும்   இதயத்தைப்  பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும்

தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் “தவம்” என்று கூறப்படும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

To bear due penitential pains, while no offence,

He causes others, is the type of ‘penitence’.

**

Yogi Shuddhananda Translation

Pains endure; pain not beings

This is the type of true penance.

**

262      

தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை

யஃதிலார் மேற்கொள் வது.

பரிமேலழகர் உரை

தவமும் தவம் உடையார்க்கு ஆகும் – பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே, அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் – ஆகலான், அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம். (பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், ‘தவம் உடையார்க்கு ஆகும்’ என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போகாமையின், ‘அவம் ஆம்’ என்றும் கூறினார்.)

**

மு.வரதராசனார் உரை

தவக்கோலமும் தவஒழுக்கம் உடையவர்க்கே பொருத்தமாகும்; அக்கோலத்தைத் தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.

**

மணக்குடவர் உரை

தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்; அந்நல்வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை.

இது தவமிலார்க்குத் தவம் வாராது வரினுந் தப்புமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தவமும் தவம் உடையார்க்கு ஆகும் – தவப் பயனன்றித் தவ முயற்சியும் முற்பிறப்பில் தவஞ் செய்தவர்க்கே யுண்டாகும் ; அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் – ஆதலால் , அத் தவத்தை முறபிறப்பில் ஓரளவேனுஞ் செய்யாதார் இப்பிறப்பில் முயல்வது பயனில் முயற்சியாம்.

தவம் பல பிறப்புக்களில் தொடர்ந்து செய்ய வேண்டிய அரும் பெரு முயற்சி யாதலாலும், அறிவும் ஆற்றலும் உடையவரே அதை முற்ற முடியச் செய்யத்தக்கவராதலாலும், ஒரே பிறப்பில் எல்லாரும் அதை மேற்கொள்ள முடியாதாம்.

**

கலைஞர் உரை

உறுதிப்பாடும்,  மன  அடக்கமும்  உடையவருக்கே தவத்தின் பெருமை

வாய்க்கும். எனவே கட்டுப்பாடான  ஒழுக்கம்   இல்லாதவர்கள்,  தவத்தை

மேற்கொள்வது வீண் செயலேயாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

To ‘penitents’ sincere avails their ‘Penitence’;

Where that is not, ’tis but a vain pretence.

**

Yogi Shuddhananda Translation

Penance is fit for penitents

Not for him who in vain pretends.

**

263      

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்

மற்றை யவர்க டவம்.

பரிமேலழகர் உரை

மற்றையவர்கள் – இல்லறத்தையே பற்றி நிற்பார், துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் – துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும். ( துப்புரவு – அனுபவிக்கப்படுவன. ‘வேண்டியாங்கு எய்தற்’ பயத்தது ஆகலின் (குறள்265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும். எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம்.)

**

மு.வரதராசனார் உரை

துறந்தவர்க்கு உணவு முதலியவை கொடுத்து உதவ வேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்வதை மறந்தார்களோ?

**

மணக்குடவர் உரை

துறந்தவர்களுக்கு உணவு கொடுத்தலை வேண்டித் தவிர்ந்தாராயினரோ? இல்வாழ்வார் தவஞ் செய்தலை.

இது தானத்திலும் தவம் மிகுதியுடைத்தென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

மற்றை யவர்கள் – துறவிய ரல்லாத மற்ற இல்லறத்தார்; துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார் கொல்-துறவியர்க்கு ஊணுடையும் உறையுளும் மருந்தும் முதலிய கொடுத்துதவுதலை விரும்பியே, தாம் தவஞ் செய்தலை மறந்தார் போலும்!

துத்தல் உண்ணுதல் அல்லது நுகர்தல். துப்பரவு நுகரப்படும் பொருள்கள். தவம் சிறந்ததே யாயினும் , எல்லாருந் துறவியராயின் தவஞ் செய்வார்க்கு இன்றியமையாதவற்றை உதவுவார் ஒருவருமில்லாது போய் விடுவராதலின்,அவ்வுண்மையை ஓர் ஐயந்தழுவிய தற்குறிப் பேற்ற அணியால் உணர்த்தினார். ‘கொல்’ ஐயம்.

**

கலைஞர் உரை

துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம்  என்பதற்காகத்  தாங்கள்

கடைப்பிடிக்க  வேண்டிய  தவ   ஒழுக்கத்தை  மற்றவர்கள்  மறந்து விடக்

கூடாது.

**

Rev. Dr. G.U.Pope Translation

Have other men forgotten ‘penitence, ‘who strive

To earn for penitents the things by which they live?

**

Yogi Shuddhananda Translation

Is it to true penitent’s aid,

That others austere path avoid?

**

264      

ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு

மெண்ணிற் றவத்தான் வரும்.

பரிமேலழகர் உரை

ஒன்னார்த் தெறலும் – அறத்திற்குப் பகையாய் அழிவு செய்தாரைக் கெடுத்தலும், உவந்தாரை ஆக்கலும் – அதனை உவந்தாரை உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும் எண்ணின் தவத்தான் வரும் – தவம் செய்வார் நினைப்பராயின், அவர் தவ வலியான் அவை அவர்க்கு உளவாம். (முற்றத் துறந்தார்க்கு ஒன்னாரும் உவந்தாரும் உண்மை கூடாமையின், தவத்திற்கு ஏற்றி உரைக்கப்பட்டது. ‘எண்ணின்’ என்றதனால், அவர்க்கு அவை எண்ணாமை இயல்பு என்பது பெற்றாம். ஒன்னார் பெரியராயினும், உவந்தார் சிறியராயினும், கேடும் ஆக்கமும் நினைந்த துணையானே வந்து நிற்கும் எனத் தவம் செய்வார் மேலிட்டுத் தவத்தினது ஆற்றல் கூறியவாறு.)

**

மு.வரதராசனார் உரை

தீமை செய்யும் பகைவரை அடக்குதலும், நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.

**

மணக்குடவர் உரை

இவ்விடத்துப் பகைவரை தெறுதலும், நட்டோரை யாக்குதலுமாகிய வலி ஆராயின் முன்செய்த தவத்தினாலே வரும்.

இது பிறரை யாக்குதலும் கெடுத்தலுந் தவத்தினாலே வருமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

ஒன்னார்த் தெறலும்- அறியாமையால் தமக்கு மாறாக வந்த வலியோரையுந் தீயோரையும் சாவித்தலும் ; உவந்தாரை ஆக்கலுங் – அறிந்ததினால் தம்மை விரும்பித் தம் உதவி நாடி வந்த எளியோரை வாழ்வித்தலும் ; எண்ணின் தவத்தான் வரும் – தவத்தோர் கருதுவாராயின் அவன் தவ வலிமையால் அவை கூடும்.

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்”.

“குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயுங் காத்த லரிது”.

என்று ஏற்கெனவே துறவியரின் ஆக்க வழிப்பாற்றல் கூறப்பட்டிருத்தல் காண்க.

**

கலைஞர் உரை

மன    உறுதியும்   கட்டுப்பாடும்  கொண்டு   தவமென்னும் நோன்பு

வலிமையுடையதாக   அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை

வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Destruction to his foes, to friends increase of joy,

The ‘Penitent’ can cause if this his thoughts employ.

**

Yogi Shuddhananda Translation

In penance lies the power to save

The friends and foil the foe and knave.

**

265      

வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ

மீண்டு முயலப் படும்.

பரிமேலழகர் உரை

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் – முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் – செய்யப்படுவதாய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான் முயலப்படும். (‘ஈண்டு’ என்பதனான் ‘மறுமைக்கண்’ என்பது பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா என்பதாம். இவை நான்கு பாட்டானும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.

**

மணக்குடவர் உரை

விரும்பின விரும்பினபடியே வருதலால், தவஞ்செய்தலை இவ்விடத்தே முயல வேண்டும்.

இது போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலால் – தவத்தின் பயனாக மறுமையில் தாம் விரும்பிய பேறுகளையெல்லாம் விரும்பியவாறே பெறக்கூடிய நிலைமையிருத்தலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் – செய்ய வேண்டிய தவம் இம்மையில் அறிவுடையோரால் முயன்று செய்யப்படும்.

‘ஈண்டு முயலப்படும் ‘ என்றதனால் மறுமையிற் பயன்படும் என்பது பெறப்பட்டது. ‘வேண்டிய’ என்றவை மண்ணின்பமும் விண்ணின்பமும் வீட்டின்பமு மாகிய மூவகை யின்பங்கள்.

இல்லறத்தாலும் இம் மூன்றையும் பெறலாம். இவ்விரு வழிகளுள் ஒன்றைத் தெரிந்து கொள்வது அவரவர் ஆற்றலையும் விருப்பத்தையும் பொறுத்தது. அன்புடைமை , விருந்தோம்பல் , நடுநிலைமை, ஒப்புரவறிதல் , ஈகை முதலிய அறங்கள் ஆரியர் மேற்கொள்ளுதற்கு அரியனவாகலின், அவர் துறவறத்தையே விரும்புவர். அதனாலேயே, “மேற்கதி வீடுபேறுகள் தவத்தானன்றி எய்தப்படா” என்றார் பரிமேலழகர் . கூடா வொழுக்கமும் போலித் துறவும் பூண்டு கொண்டே ஒருவன் மெய்த்துறவிபோல் நடிக்கலாம். இந்நடிப்பு இல்லறத்தில் இயலாது.

**

கலைஞர் உரை

உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய

முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப் படுவதாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

That what they wish may, as they wish, be won,

By men on earth are works of painful ‘penance’ done.

**

Yogi Shuddhananda Translation

What they wish as they wish is won

Here hence by men penance is done.

**

266      

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா

ரவஞ்செய்வா ராசையிற் பட்டு.

பரிமேலழகர் உரை

தம் கருமம் செய்வார் தவம் செய்வார் – தம் கருமம் செய்வாராவார் துறந்து தவத்தைச் செய்வார், மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் – ஒழிந்த பொருள் இன்பங்களைச் செய்வார், அவற்றின்கண் ஆசையாகிய வலையுள்பட்டுத் தமக்குக் கேடு செய்வார். (அநித்தமாய் மூவகைத் துன்பத்ததாய் உயிரின் வேறாய உடற்கு வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பம் எய்தி வருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம் செய்வாரைத் ‘தம் கருமம் செய்வார்’ என்றும், கணத்துள் அழிவதான சிற்றின்பத்தின் பொருட்டுப் பலபிறவியும் துன்புறத்தக்க பாவஞ்செய்து கோடலின், அல்லாதாரை ‘அவம் செய்வார்’ என்றும் கூறினார். ‘மற்று’ வினைமாற்றின்கண் வந்தது.)

**

மு.வரதராசனார் உரை

தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமைகளைச் செய்கின்றவர் ஆவர்; அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண்முயற்சி செய்கின்றவரே.

**

மணக்குடவர் உரை

தங்கருமஞ் செய்வார் தவம் செய்வார்; அஃதல்லாதன செய்வாரெல்லாம் ஆசையிலே அகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றார்.

இது தவம்பண்ண வேண்டுமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தவம் செய்வார் தம் கருமம் செய்வார் – உலகப் பற்றைத் துறந்து தவஞ் செய்வாரே தம் கருமத்தைச் செய்பவராவர்; அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் – அவரல்லாதார் பிறவிக்கேதுவான பொருளின்ப ஆசை வலையுள் அகப்பட்டுத் தமக்குக் கேடு செய்பவரேயாவர்.

‘கருமம்’ என்றது நன்மையான. கருமத்தை , தொடக்கமிலியாக (அநாதியாக)க் கணக்கற்ற பிறந்திறந்துழன்று வரும் ஆதன் (ஆன்மா) , அப் பிறவித் துன்பத்தினின்று விடுதலை பெற்றுப் பெயராப் பேரின்பந் துய்த்தற்கு , உடலை யொடுக்கி ஆசையை யடக்கி உள்ளத்தை யொருக்கி இறைவனொடு ஒன்றுவிக்கும் தவத்தை மேற்கொள்வதே தகுந்த வழியாதலின் , அதைச் செய்பவரைத் ‘ தங்கருமஞ் செய்வார்’ என்றும் ; நிலையாது திடுமென்று மாய்வதும் பிணி மூப்பால் நலிவதுமாகிய உடம்பில் நின்று , மின்னல் போல் தோன்றி மறையுஞ் சிற்றின்பத்தை நுகர்தற் பொருட்டு, எல்லையில்லாது தொடந்து செல்லும் பிறவித் துன்பத்திற் கேதுவான தீவினைகளைச் செய்து கொள்பவரை ‘ அவஞ் செய்வார்’ என்றுங் கூறினார்.

ஆசைக்கோ ரளவில்லை யாதலால் , தன்பொருட்டும் மனைவி மக்கள் பொருட்டும் ஆசைக் கடலுள் அழுந்தச் செய்யும் இல்லறத்தினும், தன்னந்தனியாயிருந்து தவத்தின் வாயிலாய் ஆசையறுக்கும் துறவறமே , வீடு பேற்றிற்குச் சிறந்த வழி யென்பது கருத்து.

இல்லறத்தானும் தன் கடமையை அற நூற்படி செய்வானாயின் தவஞ் செய்தவனாவான் என்றும் , பகவற் கீதையில் கூறியவாறு பயன் நோக்காது தன் கடமையைச் செய்பவன் கருமவோகி என்றும், இதற்குப் பொருள் கூறுவது பொருந்தாது. தவம் ஈரறத்திற்கும் ஓரளவிற் பொதுவாகுமே யன்றி இல்லறவினை துறவறவினை யாகாது.

**

கலைஞர் உரை

அடக்கமும்,  அன்பு  நெறியும்,  துன்பங்களைத் தாங்கும் பொறுமையும்

வாய்ந்த   தவம்  மேற்கொண்டவர்கள்   மட்டுமே   தமது   கடமையைச்

செய்பவர்கள்; அதற்கு  மாறானவர்கள்,  ஆசையால்  அலைக்கழிக்கப்பட்டு

வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who works of ‘penence’ do , their end attain,

Others in passion’s net ensnared, toil but in vain.

**

Yogi Shuddhananda Translation

Who do penance achieve their aim

Others desire-rid themselves harm.

**

267      

சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்

சுடக்சுட நோற்கிற் பவர்க்கு.

பரிமேலழகர் உரை

சுடச்சுடரும் பொன் போல் – தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளி மிகுமாறு போல, நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளி விடும். தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும். ( ‘சுடச்சுடரும் பொன் போல்’ என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ஒளி போலப் பொருள்களை விளக்கலின். ‘ஒளி’ என்றார்.)

**

மு.வரதராசனார் உரை

புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல், தவம் செய்கின்றவரைத் துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.

**

மணக்குடவர் உரை

நெருப்பின்கண்ணே இட இடத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போலத் துன்பம் நலிய நலியத் தவஞ்செய்வார்க்குத் தம்மோடு மருவின வினை விட்டு ஒளிவிடும்.

இது வினைவிட் டொளி யுண்டாம் என்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

சுடச் சுடரும் பொன்போல்-உருக்கப்படும் பொன் தீத் தன்னைச் சுடச்சுடத் தன் மாசு மறு நீங்கி ஒளி மிகுவது போல; நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளிவிடும் – தவஞ் செய்ய வல்லவர்க்குஅதனால் வருந்துன்பம் தம்மை வருத்த வருத்தத் தம் தீவினைத் தன்மையும் நீங்கித் தெள்ளறிவு மிகும்.

தவம் என்னும் சொல்லின் வேர்ப்பொருள் இக் குறளிலுள்ள உவமம் பொருளிரண்டிலும் விளக்கமாயிற்று. ‘கில்’ ஆற்ற லுணர்த்தும் இடைநிலை.

**

கலைஞர் உரை

தம்மைத்  தாமே   வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு

நோற்பவர்களை  எந்தத்  துன்பங்கள்  தாக்கினாலும்  அவர்கள்  சுடச்சுட

ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The hotter glows the fining fire, the gold the brighter shines;

The pain of penitence, like fire, the soul of man refines.

**

Yogi Shuddhananda Translation

Pure and bright gets the gold in fire;

and so the life by pain austere.

**

268      

தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய

மன்னுயி ரெல்லாம் தொழும்.

பரிமேலழகர் உரை

தன் உயிர் தான் அறப்பெற்றானை – தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை, ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் – பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும். (தனக்கு உரித்தாதல் – தவம் ஆகிய தன் கருமம் செய்தல். அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், ‘பெற்றானை’ என்றார். ‘அது பெறாதன’ என்றது ஆசையுட் பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின் ‘தொழும்’ என்றார்.)

**

மு.வரதராசனார் உரை

தவவலிமையால் தன்னுடைய உயிர் தான் என்னும் பற்று நீங்கப்பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.

**

மணக்குடவர் உரை

தன்னுயிரானது தானென்று கருதுங் கருத்து அறப்பெற்றவனை, ஒழிந்தனவாகிய நிலைபெற்ற உயிர்களெல்லாம் தொழும்.

உயிரென்றது சலிப்பற்ற அறிவை; தானென்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை; தானறுதலாவது அகங்கார மறுதல்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தன் உயிர் தான் அறப் பெற்றானை-தன்னுயிரைத் தனக்கு முற்றுரிமையாகப் பெற்றவனை; ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் – அங்ஙனம் பெறாத மற்ற மக்களெல்லாம் கைகூப்பி வணங்குவர்.

முற்றுரிமையாகப் பெறுதலாவது தவத்தால் தன் ஐம்புல வாயை முற்றும் அடக்குதல். அறப் பெறுதல் முற்றும் பெறுதல். “மன்னுயிர்க் கெல்லா மினிது” ( 68) என்னுங் குறளடியிற் போன்றே, இங்கு மன் என்பது மாந்தனைக் குறித்தது. ‘உயிர்’ என்னும் அஃறிணை வடிவிற்கேற்பத் தொழும் என்னும் பலவின்பாற் படர்க்கை வந்தது. உயிர் வகுப் பொருமை. தொழுதல் தூய்மையும் ஆக்க வழிப்பாற்றலும் பற்றி. இரு வகைப் பற்றுந் துறத்தல் துறவதிகாரத்திற் கூறப்படுதலால், தானற என்பதற்குத் ‘தான் என்னும் முனைப்பற’ என்று இங்குப் பொருளுரைக்கத் தேவையில்லை.

**

கலைஞர் உரை

“தனது  உயிர்”   என்கிற   பற்றும்,  “தான்”   என்கிற    செருக்கும்

கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who gains himself in utter self-control,

Him worships every other living soul.

**

Yogi Shuddhananda Translation

He worship wins from every soul

Who Master is by soul control.

**

269      

கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி

னாற்ற் றலைப்பட்ட வர்க்கு.

பரிமேலழகர் உரை

கூற்றம் குதித்தலும் கைகூடும் – கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம், நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு – தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு. ( சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம் தொழுதலேயன்றி இதுவும் கைகூடும் என எச்ச உம்மையாக உரைப்பினும் அமையும். ஆற்றல் – சாப அருள்கள். இவை நான்கு பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால்) யமனை வெல்லுதலும் கைகூடும்.

**

மணக்குடவர் உரை

கூற்றத்தைத் தப்புதலுங் கைகூடும்; தவத்தினாகிய வலியைக் கூடினார்க்கு.

இது மார்க்கண்டேயன் தப்பினாற்போல வென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு-தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு; கூற்றம் குதித்தலும் கைகூடும்-கூற்றுவனை வெல்வதுங் கூடுவதாம்.

கூற்றுவனை வெல்வதாவது சாவினின்று தப்புதல். அது இங்கு ஒருவர்க்குங் கூடாமையின் உம்மை எதிர்மறை. மார்க்கண்டேயன் இன்று மண்ணுலகில் இல்லாமையாலும், வேறுலகிலுள்ளான் என்பது உண்மைக்கும் உத்திக்கும் பொருந்தாமையாலும், அவனைப் பற்றிய கட்டுக் கதையை இங்கு எடுத்துக்காட்டுவது எள்ளளவும் ஏற்காது. வீட்டிலகிலுள்ளா னெனின் அது உரையளவையாற் பொருந்தும். ஆயின், அதற்கும், இறைவனே அவனை என்றும் பதினாறாட்டை யுலக வாழ்வினனாக்கினான் என்பது தடை யாகும். இறைவன் முன்பு தீர்மானித்த தொன்றைப் பின்பு மாற்றினானெனின், அது அவன் இறைமையை நீக்கி மாந்தத் தன்மையையே ஊட்டும். ‘ஆற்றல்’ ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்’ ஆம்.

**

கலைஞர் உரை

எத்தனைத் துன்பங்கள்  வரினும்  தாங்கிக்  குறிக்கோளில்  உறுதியாக

நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Even over death the victory he may gain,

If power by penance won his soul obtain.

**

Yogi Shuddhananda Translation

They can even defy death

Who get by penance godly strength.

**

270      

இலர்பல ராகிய காரண நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.

பரிமேலழகர் உரை

இலர் பலர் ஆகிய காரணம் – உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், நோற்பார் சிலர் நோலாதார் பலர் – தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல். (செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன, என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார் ஆகலின். ‘நோற்பார் சிலர்’ எனக்காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம், தவம் செய்கின்றவர் சிலராகவும் செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

**

மணக்குடவர் உரை

பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம் தவஞ்செய்வார் சிலராதல்; அது செய்யதார் பலராதல்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இலர் பலர் ஆகிய காரணம்-இவ்வுலகத்திற் செல்வர் சிலராகவும் வறியர் பலராகவும் இருத்தற்குக் கரணியம்; நோற்பார் சிலர் நோலாதவர் பலர்-தவஞ் செய்வார் சிலராகவும் அது செய்யாதவர் பலராகவும் இருத்தலே.

‘கேடில் விழுச்செல்வங் கல்வி” (400) என்று ஆசிரியரே கூறுவதால், இங்குக் குறிக்கப்பட்ட செல்வ வறுமைகள் கல்வி பொருள் என்னும் இருவகைச் செல்வத்திற்கும் பொதுவாம். ‘நோற்பார் சிலர்’ என்னும் கரணியத்திற்குரிய கருமியம் கூறப்படாமையால் வருவித்துரைக்கப்பட்டது. இம்மை நிலைமையினின்று முன்னை வினைப்பயனுக்குக் கரணியம் உய்த்துணரப்பட்டன.

**

கலைஞர் உரை

ஆற்றலற்றவர்கள்    பலராக    இருப்பதற்குக்   காரணம், மன உறுதி

கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The many all things lack! The cause is plain,

The ‘penitents’ are few. The many shun such pain.

**

Yogi Shuddhananda Translation

Many are poor and few are rich

For they care not for penance much.

**

×