"இவனை நிலமிசை ஏவினளே" - தமிழ்த்தாய் அந்தாதி

மதுரன் தமிழவேள் (1983 - )

மரபு மற்றும் நவீனக் கவிதை வடிவங்களை நுட்பத்துடன் கையாளக்கூடிய, தனித்திறன் கொண்ட தமிழ்ப்பாவலர். ஓசையின் உயிர்ப்பும் படிமச் செழுமையும் ஆழமான மெய்யியல் நோக்கும் இவரது கவிதையின் அடையாளங்கள். சிக்கலான யாப்பு வடிவங்களைச் சிறப்பாகக் கையாளும் திறமைக்காக அறிஞர்களால் பாராட்டப்படுபவர். மகாகவி பாரதியை வழிகாட்டியாக வரித்துக்கொண்டார். எட்டாவது அகவையில் சந்தப் பாக்கள் எழுத ஆரம்பித்தார்.

கட்டளைக் கலித்துறை யாப்பில் மதுரன் தமிழவேள் 2019ம் ஆண்டு எழுதிய ‘தமிழ்த்தாய் அந்தாதி’  அதன் ஓசை நயத்துக்காகவும் கருத்துச் செறிவுக்காகவும் சந்தச் செழுமைக்காகவும் தமிழறிஞர்களாலும் கவிதைச் சுவைஞர்களாலும் வெகுவாக விதந்தோதப்பட்டது. புத்த பெருமானின் வாழ்க்கை வரலாற்றை ‘அறிவன் காதை’ என்ற பெயரில் காவியமாகவும் நாவலாகவும் எழுதி வருகிறார். ‘ஒளியின் மழலைகள்’ என்ற கவிதைத் தொகுப்பு 2005 டிசம்பரில் – 22வது அகவையில் வெளியாகியது. நாவுயனே ஆரியதம்ம மகாதேரர் எழுதிய ‘ஆனபான ஸதி: சுவாச தியானம்’ என்ற பௌத்த தியான நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். 

தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் இதழியலாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணி புரிந்திருக்கிறார். 

இலங்கையின் Sunday Observer, இலண்டன் ஐபிசி தமிழ் ஆகியவை இவர் நீண்டகாலம் பணிபுரிந்த முன்னணி ஊடகங்கள். Wall Street Journal, New York Times முதலான உலகளாவிய ஊடகங்களுக்கும் பங்களித்திருக்கிறார். யாழ்ப்பாணத்தில் ஐபிசி தமிழின் இலங்கைப் பணிமனை நிறுவப்பட்டபோது அதன் பணிப்பாளராக எட்டு மாதங்கள் கடமையாற்றி வழி நடத்தினார். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் முதலான பல்வேறு புகழ்பெற்ற ஆளுமைகளை நேர்காணல் செய்திருக்கிறார். ‘இலண்டன் கதைகள்’ முதலான குறிப்பிடத்தக்க ஆவணப்படங்கள் பலவற்றை எழுதி, இயக்கி அளித்திருக்கிறார். 

பிறப்பும் பின்னணியும்

“சிதம்பரத்து நடராஜரைப் புலியூரானாகத் துதித்து யமக அணியில் புலியூரந்தாதி புனைந்தவரும் யாழ்ப்பாண வைபவமாலை என்ற வரலாற்றுச் செய்யுள் நூலை எழுதியவருமான மாதகல் மயில்வாகனப்புலவர் இவரது முன்னோர்களில் ஒருவர்”

அக்டோபர்  7, 1983 அன்று இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த மதுரன் தமிழவேளின் இயற்பெயர் சஜிதரன். தந்தையார் தவயோகநாதன். தாயார் இந்திராணி. பெற்றோர் இருவரும் மரபுவழி மருத்துவர்கள்.

தந்தை வழி முன்னோர் 

மாதகலில் மொழிப்புலமையையும் மரபுவழித் தமிழ் மருத்துவத்தையும் தலைமுறை தலைமுறையாகப் போற்றிப் பேணிவந்தவர்கள் மதுரன் தமிழவேளின் தந்தைவழி மூதாதையர். தமிழகத்தின் வேதாரண்யத்துடன் (திருமறைக்காடு) குருவழித் தொடர்புடையவர்கள். மதுரன் தமிழவேளின் தந்தைவழிப் பெயரனாரான வேலுப்பிள்ளை தமது ஊரில் பெயர் பெற்ற சித்த மருத்துவர். திருச்சி தாயுமான சுவாமிகளின் குருவாகிய மௌனகுருச் சித்தர் வேதாரண்யத்திலிருந்து கடல் தாண்டி மாதகல், யாழ்ப்பாணம் வந்தார் என்றும் அவரை ஆதிகுருவாகக் கொண்டு தோன்றியதே வேலுப்பிள்ளையாரின் சித்த மருத்துவ மரபு என்றும் குடும்ப வரலாறு சொல்கிறது. அசோகச் சக்கரவர்த்தியின் புதல்வி சங்கமித்தை புத்த போதத்தை நிலை நாட்டுவதற்காக இலங்கையில் வந்திறங்கிய இடம் மாதகல் என்பதும் குறிப்பிடத் தக்கது. சிதம்பரத்து நடராஜரைப் புலியூரானாகத் துதித்து யமக அணியில் புலியூரந்தாதி புனைந்தவரும் யாழ்ப்பாண வைபவமாலை என்ற வரலாற்றுச் செய்யுள் நூலை எழுதியவருமான மாதகல் மயில்வாகனப்புலவர் மதுரன் தமிழவேளது முன்னோர்களில் ஒருவர்.  

தாய்வழி முன்னோர் 

தாய்வழிப் பெயர்த்தியாரான திருமதி தங்கரத்தினம் கந்தையா சமூக மாற்றத்தில் அக்கறை கொண்டிருந்த இடதுசாரிச் செயற்பாட்டாளர்; பள்ளி ஆசிரியை. மேடைப் பேச்சாளர். இலங்கை முற்போக்கு மாதர் முன்னணியின் தலைவர்களில் ஒருவர். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தவர். சமூக அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பியதற்காகவே பலமுறை பணிஇடமாற்றம் பெற்றவர். புகழ் பெற்ற புலவரான ‘தங்கத் தாத்தா’ நவாலியூர் சோமசுந்தரப் புலவர் இவருக்கு சிற்றப்பா உறவு முறையுடையவர். மதுரன் தமிழவேள் பிறந்த வேளை, புலவரது மகன் பன்மொழி அறிஞர் நடராசனாருக்கு கன்னத்தில் இருந்ததைப் போன்ற மறு குழந்தைக்கும் இருந்ததைச் சுட்டிக்காட்டி ‘இவன் புலவர் மகன்போலப் பெரிய ஆளாக வருவான்’ என்று பெயர்த்தியார் தங்கரத்தினம் உச்சி முகர்ந்து வாழ்த்தியிருக்கிறார். தமிழோடு பாளி, சமஸ்கிருதம், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளைத் துறைபோகக் கற்றிருந்த நடராசனார் பிற்றை நாள்களில் துறவு பூண்டு யாப்பண தர்மரத்தின தேரர் என்ற தீட்சா நாமத்துடன் பௌத்த பிக்குவானார். மேற்சொன்ன மொழிகளில் இருந்து முகாமையான பல நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்தவர். புத்த பெருமான் காட்டிய பாதை மீது நாட்டம் ஏற்பட்டதற்குப் பெயர்த்தியாரின் இந்த ஆசி காரணமாகியிருக்கலாம் என்று மதுரன் தமிழவேள் எண்ணிக்கொள்வதுண்டு. 

பாவலர் மதுரன் தமிழவேள் பிறந்தது யாழ்ப்பாணம் என்றாலும் வளர்ந்ததும் சிறந்ததும் மலை நிலமான மாத்தளையில்தான். மாத்தளை தவ சஜிதரன் என்ற பெயரிலேயே பதின்பருவ கால எழுத்துகள் வெளியாகின. கல்வி பயின்றது மாத்தளை இந்துக் கல்லூரியில். 2010ம் ஆண்டு தொடக்கம் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.

பள்ளிக் காலம்

“பாவேந்தர் கவிதை அடிகளைப் படித்த ஈர்ப்பில் எழுதிய ‘சூரியன்’ என்ற கவிதை இலங்கையின் தேசிய நாளிதழான தினகரனில் தவ சஜிதரன் என்ற இயற்பெயர் தாங்கி 1992ம் ஆண்டு – அவரது ஒன்பதாவது வயதில் – வெளியானது”

தந்தையார் ஊட்டிய தமிழ்ப்பற்றின் விளைவாக மதுரன் தமிழவேள் தனது எட்டாவது அகவையில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். திருக்குறள், திருப்புகழ், பாரதியார் பாடல்கள் முதலானவற்றை விரும்பிப் படிக்கும்  பழக்கம் இளமைகாலந் தொட்டு இருந்தது. தந்தையார் முருக உபாசகர் என்ற காரணத்தால் அன்றாடம் கந்தர் சஷ்டிக் கவசம் பாராயணம் செய்து வரும் வழக்கம் இருந்தது. எட்டு வயதில் அந்நூலின் 246 அடிகளும் இவருக்கு மனப்பாடம். பல சந்தக் கவிதைகளைச் சுவை குன்றாமல் கணீரென்ற குரலில் ஓதிக்காட்டவும் பயிற்சி பெற்றிருந்தார்.

வெளியான முதற்கவிதை

‘காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்’ என்று தொடங்கும் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை அடிகளைப் படித்த ஈர்ப்பில் அதனைத் தழுவி விருத்தப்பா வடிவில் எழுதிய ‘சூரியன்’ என்ற தலைப்பிலான கவிதை இலங்கையின் தேசிய நாளிதழான தினகரனில் தவ சஜிதரன் என்ற இயற்பெயர் தாங்கி 1992ம் ஆண்டு – பாவலரின் ஒன்பதாவது வயதில் – வெளியானது. அதனைத் தொடர்ந்து தினகரன், வீரகேசரி முதலான நாளிதழ்களில் அவரது பல்வேறு கவிதைகள் வெளியாகின. 

முதல் மேடை

1993ம் ஆண்டு மாத்தளையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றின்போது (எழுத்தாளர் ஏ.பி.வி கோமஸ் எழுதிய ‘வாழ்க்கையே ஒரு புதிர்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு) இவர் மேடையேறிப் படித்த கவிதை அவையில் இருந்த அனைவரையும் கவர்ந்தது. பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் துரை மனோகரன் தனது உரையின்போது சிறுவனை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டிருந்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே எஸ் ராஜா உள்ளிட்ட பலரும் இளங்கவிஞனின் கவித்திறனைப் பாராட்டிப் பேசினர். புரவலர் துரை விஸ்வநாதன் ‘பாரதிதாசன் கவிதைகள்’ நூலைப் பரிசளித்தார்.

பின்வந்த நாள்களில் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளிலும் போட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு துலங்கலானார். கொழும்பு இராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்த ஆத்மகணானந்த அடிகள் ஒரு கடிதத்தில் “அன்புள்ள சஜிதரன், எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளனாகவும் பேச்சாளனாகவும் வருவதற்குரிய அறிகுறிகள் உன்னிடம் தென்படுகின்றன. அத்துடன் நற்பண்புகளையும் வளர்த்துக் கொள்வாய்” என்று வாழ்த்தி எழுதினார். இலங்கையின் முன்னாள் அமைச்சர் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான், பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் முதலான பலரிடமிருந்தும் பாராட்டுப் பெற்றார்.

இளம் இதழியலாளன்

தனது பதினோராவது அகவையில் சிந்தனைச் சிறுவர் அமைப்பு என்றவொரு கழகத்தை நிறுவி மாணவர் நூலகம் அமைத்ததோடு ‘சிந்தனைச் சிறகு’ காலாண்டுக் கையேடு ஒன்றையும் வெளிக்கொணர்ந்தார் மதுரன் தமிழவேள். புரவலர் முத்தையா (புகழ்மிகு கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் தந்தையார்) ஒவ்வோர் இதழ் வெளிவரும்போது ஆயிரம் உரூபா காசோலை அனுப்பி இவரை ஊக்குவிப்பது வழக்கம். அக்கால மதிப்பில் அது பெருந்தொகை. மாணவர் ஆக்கங்களைத் தாங்கி ‘சிந்தனைச் சிறகு’ இதழ் வெளிவந்தது. 

 

பரிசில்கள் 

தமிழ் மற்றும் ஆங்கில மொழியிலான போட்டிகளில் மாவட்ட மற்றும் தேசிய அளவில் பல்வேறு பரிசில்களைப் பாடசாலையில் பயின்ற காலத்தில் பெற்றார். உயர்தர வகுப்பில் பயின்று கொண்டிருந்தபோது தேசிய மட்டத்தில் நடைபெற்ற தமிழ்மொழி நாள் கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார். அதற்கடுத்த ஆண்டு (2003) கொழும்புக் கம்பன் கழகம் நடத்திய நாடளாவிய கவிதைப் போட்டியில் முதலிடம் வகித்து, ஓய்வு பெற்ற நீதியரசர் (பின்னை நாள்களில் வட மாகாண முதலமைச்சர்) சீ.வி. விக்னேஸ்வரனிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றார். 

 

ஊடகத் துறை

 

2004-2005ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை இதழியல் கல்லூரியில் டிப்ளோமா கற்கை முடித்த பிற்பாடு முன்னணி ஆங்கில வார ஏடான சண்டே ஆப்சேர்வரில் ஊடகவியலாளராகப் பணியில் சேர்ந்தார் மதுரன் தமிழவேள். தவ சஜிதரன் என்ற இயற்பெயரில் செய்திகளும் கட்டுரைகளும் வெளியாகின. அதற்கு முன்னதாக மாணவப் பருவத்தில் இருந்தே தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களில் எழுதிவரும் பழக்கம் இருந்தது. லக்பிம நியூஸ், இண்டர் நியூஸ் ஆகிய ஊடகங்களிலும் உயர் பதவிகள் வகித்தார்.

2008ம் ஆண்டு இலண்டனில் இருக்கும் பொதுநலவாயச் செயலகத்தின் தலைமைப்பணியகத்தால் ஆறு மாத காலம் ஊதியத்துடனான பயிற்சிப் பணிக்காகத் தெரிவு செய்யப்பட்டார். சார்க் நாடுகளில் உள்ள திறமை வாய்ந்த ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த புலமைப்பரிசில் இது. எனினும் அக்காலத்தில் இங்கிலாந்தின் வீசா சார்ந்த சட்டங்களில் கொண்டுவரப்பட்ட மாற்றம் காரணமாக அதில் பங்கேற்க முடியாமல் போனது. 

2009 டிசம்பரில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் இலண்டனில் நடத்திய ஊடகப் பயிற்சி நெறிக்காகப் புலமைப் பரிசில் அடிப்படையில் தெரிவாகிப் பங்கேற்றார். 2010ம் ஆண்டில் இங்கிலாந்தில் நிரந்தரமாகக் குடியேறினார். ஜிரிவி, ஐபிசி தமிழ் ஆகிய ஊடகங்களில் தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

 

×