தமிழ்க்கனலின் பொறி

மாமழைநீர் பைம்புலத்து மண்ணில் ஊற
மரம்கொடிகள் வளன்மிகுத்துக் கனியீ தல்போல்
 
தேமதுரத் தமிழே நீ நெஞ்சில் ஊறச்
செம்மையினைச் சூடிமதி சிலிர்ப்ப தென்ன!
 
தாமதியேன் ஒருகணமும் தரித்து நில்லேன்
சழக்குகளால் உடற்பிணியால் தளர்ந்து சோரேன்
 
போம் எனதோர் உயிர்எனினும் புழுங்க மாட்டேன்
பொறுமையுடன் தமிழ்க்கனலின் பொறிவ ளர்ப்பேன்
 
– பாவலர் மதுரன் தமிழவேள் –
ஆதி மொழி

தொன்மையும் வன்மையும் செறிந்திருக்கும் தமிழ் போன்றவோர் ஆதி மொழி, அகவாழ்வை ஈடேற்றக்கூடிய நிறைநிலையை – இறை நிலையைக் – கொண்டிருக்கிறது. பல்லாயிரம் ஆண்டு கால மனித வாழ்வின் அறச் சாரத்தைத் தன்னுள் தேக்கி வைத்திருக்கிறது.

மொழியே மந்திரம்

தமிழின் மந்திரத் தன்மையை உணர்ந்து தன்வயம் கொண்டால் மனச்செம்மையும் ஒளியும் வாய்ப்பது திண்ணம்.

மாயத் துயரம் மடிந்தொழிக! மரணத் தளையின் திரையறுக! நோயுங் கசடும் வருத்தாத நுண்மைத் திறனை மதிபெறுக! காயங் கனலாய்ச் சுடர்ந்திடுக! கருத்தில் உண்மை உறைந்திடுக! தாயும் தயவும் ஆனவனின் தாளில் மலராய்த் தளிர்த்தெழுக! - மதுரன் தமிழவேள் (02.11.2018, புதுவை)

'ஓங்கும் பனுவல்கள் உந்தி மிளிர்முடி உச்சியிலே
தாங்கும் அணங்கு தமிழெனும் தெய்வம்' (தமிழ்த்தாய் அந்தாதி)

×