கலீல் ஜிப்ரான், கணியன் பூங்குன்றன், கம்பன்

“கடலுடன் கலக்கப்போகும் நொடியில் ஓர் ஆறு அச்சத்தால் கலங்குவதாகச் சொல்லப்படுகிறது.

மலையுச்சிகளில் தோன்றி, வளைந்து நீண்ட பாதைகளின் வழி காடுகளையும் ஊர்களையும் கடந்து வந்ததை அது திரும்பிப் பார்க்கிறது.

இத்துணை பெரிய ஆழியுடன் கலந்து விடுவது என்பது, என்றைக்கும் இல்லாமல் போவதே அன்றி

வேறு என்ன என்று தன்முன்னே பரந்திருக்கும் கடலைப் பார்க்கும்போது அதற்குத் தோன்றுகிறது.

ஆனால் அங்கே வேறு வழி கிடையாது.

ஆற்றினால் திரும்பிப்போக முடியாது.

எவராலும் திரும்பிப்போக முடியாது .

திரும்பிப்போவது என்பது இருப்பிலே இயலாத ஒன்று.

கடலுக்குள் நுழையும் சாகசத்தை ஆறு நிகழ்த்தியே ஆக வேண்டும். ஏனென்றால் அப்போது மட்டுமே அதன் அச்சம் மறையும். அப்போதுதான் அது அறிந்துகொள்ளும்: இது கடலுடன் கலந்து இல்லாமல் போவதைப் பற்றியது அன்று; மாறாகக் கடலாகவே ஆகிவிடுவது பற்றியது என்று.”

மேலே உள்ளது மகாகவி கலீல் ஜிப்ரானின் கவிதை. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்திருக்கிறேன்.

கலீல் ஜிப்ரான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் – 1883ஆம் ஆண்டு -பிறந்தவர். தற்போதைய லெபனானில் – அப்போதைய ஒட்டோமானியப் பேரரசில் – உள்ள மலைசூழ் சிற்றூர்  ஒன்று அவரை ஈன்று புறந்தந்தது.

அவரது தாய்க்கும் தந்தைக்கும் பிறந்த மூன்று குழந்தைகளில் அவர் இரண்டாம் பிள்ளை.  அவரது தாயின் முதல் திருமணத்தின் வழியாகப் பிறந்த மூத்த சகோதரர் ஒருவரும் இருந்தார். கலீல் ஜிப்ரானின் தந்தை ஒட்டோமானியப் பேரரசின் வரித்துறை அதிகாரியாக இருந்தவர். சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அரசாங்கத்தால் அவர் சிறையில் அடைக்கப்பட, ஜிப்ரானின் தாய் துணையிழந்து ஏதிலியாகிறார். நெஞ்சுரம் மிக்க பெண்மணியான அவர் அதனால் சோர்ந்து விடவில்லை. தனது சொந்தக்காலில் நின்று பிள்ளைகளை வளர்த்தெடுப்பது என்று தீர்மானிக்கிறார். தாயும் பிள்ளைகளும் குடும்பமாக ஐக்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்கின்றனர். அப்போது கலீல் ஜிப்ரானுக்கு 12 வயது. தந்தையின் துணையின்றித் தாயின் தனித்த அரவணைப்பிலும் நெறிப்படுத்தலிலும் வளர்கிறார் ஜிப்ரான். இதன் தாக்கம் அவரது எழுத்தெங்கும் விரவிக் கிடக்கிறது.

அரேபிய ஆன்மீக வேர்கள் நெஞ்சில் ஊன்றப்பெற்ற ஜிப்ரானுக்கு அமெரிக்கப் புலப்பெயர்வு புதியதோர் உலகத்தைத் திறந்து காட்டுகிறது. சிறுவயதில் இருந்தே இரு வேறு பண்பாட்டுச் சூழல்களைப் பார்த்து வளர்கிறார் அவர். அரபு, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதும் வாய்ப்பையும் இது அவருக்குத் தந்தது. கிறிஸ்தவ, இஸ்லாமிய, சூஃபிச மெய்யியல் நோக்குகள் ஆழமாக விரவிக்கிடப்பன ஜிப்ரானின் எழுத்துகள். ஜிப்ரான் முறைசார் கல்வியினூடாகப் பட்டங்கள் பெற்றுச் சாதனை புரிந்தவர் அல்லர் எனினும், The Prophet என்ற அவரது ஆங்கில நூல் அவரது மேதைமையை உலகுக்குப் பறை சாற்றியது.

வாழ்வின் போக்கிலே இனம், மதம், மொழி முதலான பல்வேறு அடையாளங்கள் நம்மோடு வந்து ஒட்டிக்கொள்கின்றன. இந்த அடையாளங்கள்தாம் வாழ்க்கையைக் கொண்டு நடத்துகின்றன. ஆனால் ஒரு புள்ளியில், அடையாளம் கடந்த பேருணர்வுடன் கலப்பதற்கு – தளைகளால் பிணிக்கப்படாத முழு விடுதலையை உள்ளுயிர் எய்துவதற்கு – இந்த அடையாளங்கள் மீது நாம் கொள்ளும் பற்றுதல் தடையாகி விடுகிறது. இத்துணை பெருமிதங்களையும் துறப்பது தான் விடுதலை என்றால் அது அச்சம் தரும் ஒன்று என்று மனம் எண்ணுகிறது. பேருணர்வின் முன் உயிர் அடையும் இந்த அச்சம், கடலுடன் கலக்கப்போகும்போது, தான் கடந்து வந்த பாதை மீதான பற்றுதலால் ஆறு கொள்கின்ற அச்சமாக ஜிப்ரானின் கவிதையில் உருவகிக்கப்படுகிறது. ஆறு தனது வடிவமிழந்து போவது, கடலாகவே அது ஆகி நிறை நிலை எய்துவதற்கான முன்நிபந்தனை என்பது சொல்லப்படுகிறது.

**

கலீல் ஜிப்ரான் பிறந்து ஏறத்தாழப் பத்து ஆண்டுகள் கழித்து,

பரத கண்டத்தின் தென் கோடி முனையில்,

தமிழ்கூறு நல்லுலகத்தின் எல்லை என்று தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிக்கும் குமரி நிலத்தில்,

மூன்று பெருங்கடல்கள் ஒன்றோடு ஒன்று கலந்து சங்கமிக்கும் புள்ளியில்,

பேரலை ஓசைகளுக்கிடையே பாறை மீது அமர்ந்து மூன்று நாள் ஆழ்தவமியற்றிய ஓர் இளந்துறவி அமெரிக்கா செல்வதென்று தீர்மானிக்கிறார்.

விவேகானந்த அடிகள் என்று பின்னாளில் அறியப்பட்ட நரேந்திரர், கன்னியாகுமரியில் வாய்க்கப்பெற்ற உந்துணர்வின் வழிகாட்டலில் 1893 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றடைகிறார்.

எல்லா நிலத்து நெறிகளையும் ஏற்றதே தனது நிலத்து நெறி என்றும் வழிமுறைகள் வேறானாலும் ஈற்றிலே அனைத்து நெறிகளும் ஒரே பேருண்மையை நோக்கியே செல்கின்றன என்றும் அதற்குத் தனது குருதேவரின் இறைவாழ்க்கையே சான்று என்றும் சிக்காகோவில் நடந்த உலக மதங்களின் ஒன்றுகூடலில் வைத்து அறிவிக்கிறார் நரேந்திரர். உலகத்தோர் எல்லோரும் ஒரு குடும்பத்தவரே என்று உணர்த்தும் பாங்கில் “எனது அன்புச் சகோதர சகோதரிகளே” என்று தனது உரையை ஆரம்பித்தார் அவர்.

இந்த உரையில் விவேகானந்த அடிகள் ஒரு கவிதையை மேற்கோள் காட்டுகிறார். அக்கவிதையிலும் ‘எங்கெங்கோ தோன்றிப் பாதை பல கடந்து இறுதியில் கடலுடன் சங்கமிக்கும் நதி’யே குறியீடாகிறது. கலீல் ஜிப்ரான் கவிதைக்கு முந்தைய நிகழ்வு இது. சிக்காகோ உரையில் விவேகானந்தர் மேற்கோள் காட்டும் கவிதை முண்டக உபநிடதத்தில் வருமொரு பாடலைத் தழுவி அமைந்தது. உபநிடதப் பாடல் கலீல் ஜிப்ரான் கவிதைக்கு இன்னமும் நெருக்கமாக இருக்கிறது. ‘யதா நத்யா’ என்று தொடங்கும் அந்தப் பாடல் வருமாறு (ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது):

“பாயும் ஆறுகள் தமது பெயரையும் வடிவையும் இழந்து கடலுடன் கலப்பதைப்போல, அறிவுள்ளவன் தனது பெயர், வடிவம் ஆயவற்றிலிருந்து விடுபட்டுத் தெய்வீகப் பராபரப் புருடனை அடைகிறான்”

(இரண்டாம் அடி, சமற்கிருத மூலத்தில்  ‘ததா வித்வான் நாமரூபாவிமுக்த பராபரம் புருஷமுபைதி திவ்யம்’ என்று வருகிறது. ‘ நாம-ரூபம்’ என்பது புத்த மரபிலே ‘ நான்’ என்ற அடையாளத்தை உருவாக்கும் மனம்-உடல் இரண்டினதும் சேர்க்கையைக் குறிப்பதையும் இங்கே கருத்தில் கொள்ளலாம்.)

**

விவேகானந்தர் மேற்கோள் காட்டிய கவிதைக்கு முண்டக உபநிடதம் மூலமென்று சொல்லப்பட்டாலும், அங்கே அவர் வழங்கிய உலக ஒருமைப்பாடு குறித்த செய்திக்கான உள்ளுணர்வை, அவர் மூன்று நாள் தவமியற்றிய தமிழ் நிலமே வழங்கியது என்று நம்ப இடமுண்டு: புறவயமாக அன்று – அகவயமாக.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (கேளிர் – உறவினர்) என்று பாடிய கணியன் பூங்குன்றனாரின் முழக்கத்தை சிக்காகோ அரங்கில் அவர் எதிரொலித்தார்.  பூங்குன்றனார் குரலாக நின்றுகொண்டு, மானுடக் குலத்தின் தலைவர் என்ற பொருள்படும் பெயர் கொண்ட நரேந்திரர் (நர – இந்திரன்), அரங்கில் கூடியிருந்தோரை ‘எனது அன்புச் சகோதர சகோதரிகளே’ என்று விளித்தார் (இஃதொரு கவித்துவ உரைப்பு மட்டுமே. நரேந்திரர், கணியன் பூங்குன்றனார் பற்றி அறிந்திருந்தார் என்பதற்குச் சான்று கிடையா).

கணியன் பூங்குன்றன் கவிதையிலும் ஆறு வருகிறது. கலீல் ஜிப்ரான் பார்வையில் கலக்கத்தோடு தோன்றும் ஆறு, பூங்குன்றனார் நெஞ்சிலே தெள்ளிய நீரோட்டமாக நடைபயில்கிறது:

“பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம்”

ஆற்றிலே மிதக்கும் ஓடம் போல இந்த ஆருயிர் வாழ்க்கை நகர்கிறது.

துன்பம், இன்பம் (நோதல், தணிதல்), பிறப்பு, இறப்பு (சாதலும் புதுவதன்றே) இவை எப்போதும் நிகழ்ந்து கொண்டிருப்பன. இதை அறிந்து கொண்டதால் அதீதமாக ஆரவாரித்து அகம் மகிழ்வதுமில்லை, அல்லலுற்றுச் சோர்வதும் இல்லை (வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின் இன்னா தென்றலும் இலமே).

பெரியோரை வியத்தலும் இல்லை; சிறியோரை இகழ்தல் அதனினும் இல்லை (பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே).

இவை கணியன் பூங்குன்றனார் கவிதை சொல்லும் செய்திகள்:


யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

கணியன் பூங்குன்றனார் வாழ்ந்த காலம் எதுவென்று தெரியவில்லை. ஆனால் அவரது பாடல், மாற்றம் பற்றிய புத்தபோதத்தை முற்றிலும் எதிரொலிக்கிறது: எல்லாமும் எப்போதும் நீர் மேல் தோன்றும் குமிழி போல மாறிக் கொண்டிருப்பன (அநிச்ச – புத்த பனுவல்களில் ஒன்றான சம்யுத்த நிக்காயத்தில் ஓரிடத்தில் விளக்கப்பட்டுள்ளபடி), இதனால் இறப்பும் பிறப்பும் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்தபடியுள்ளன, பெருந்தீங்கையும் பெருநன்மையையும் இழைக்க வல்லது நமது மனமே (தம்மபதம் – 1ஆம் 2ஆம் சூக்தங்கள்) – அவை பிறர் தந்து வருவதில்லை (தீதும் நன்றும் பிறர் தர வாரா – கணியன் பூங்குன்றனார்).

**

கிரேக்கத்தைச் சேர்ந்த தத்துவ ஞானி ஹெராக்லிடஸ் கோதம புத்தரின் சமகாலத்தவர். ஆனால் முற்றிலும் மாறுபட்ட பண்பாட்டுப் பின்புலத்தைக் கொண்டவர். மாற்றம் பற்றி அவர் இதே கருத்தைக் கூறுகிறார்:

“ஒரே ஆற்றில் ஒரு மனிதனால் இரண்டு முறை இறங்க முடியாது. காரணம் அந்த ஆறும் மனிதனும் அடுத்த கணம் மாறி விடுகின்றன” என்பது அவர் கூற்று.

மாற்றம் அவ்வளவு வேகமாக – இடையறாமல் – நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

**

இனி, இந்தத் தொடரின் நாயகன் கம்பனிடத்தில் வருவோம். கம்பன் தனது கவிதையின் வழியாகப் பேருலகங்கள் பலவற்றைப் படைத்தவன். திருமாலைத் தொழுதொழுகும் வைணவ நெறி சார்ந்தவன் என்றபோதும் தனது கடவுள் வாழ்த்திலே இறைவன் பெயராக எதனையும் குறிக்காமல் பொதுமை பேணியவன். வள்ளுவத்தின் வையந்தழுவிய நோக்குடன் இசைந்து நடந்தவன்.

ஆறு, நாடு, நகரம் முதலானவற்றின் சிறப்பைப் பாடுவது காவிய மரபு. கோசல நாட்டுச் சரயு நதியின் சிறப்பைச் சொல்வதற்குக் கம்பன் வரிசையாக அடுக்கிச்செல்லும் அணி உத்திகள் உலகப் பெருங்கவிஞனாக அவனை ஒளியூட்டிக் காட்டுவன.

மூதறிவாளர் பல்லோர் சிந்தையிலும் உதித்த ‘ஆறு-கடல்’ உருவகம், கம்பராமாயணத்தின் ஆற்றுப்படலத்தின் ஈற்றிலே வருகிறது:  

கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,
எல்லையில் மறைகளாலும் இயம்பரும் பொருளீ தென்னத்
தொல்லையில் ஒன்றே ஆகித் துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
பல்பெரு சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்த தன்றே

மலையுச்சியில் பிறந்து கடலை அடையும் நீர் வெள்ளம் இடையில் பல உருவங்களையும் பெயர்களையும் ஏற்கிறது. எத்தனை பெயர்களால் அறியப்பட்டாலும் ஈற்றில் அது ஒன்றே. தொன்மையில் – தொடக்கத்தில் ஒன்றாக இருந்தது, பிறகு வழிச்செலவில் பலவாகப் பிரிந்தது. இது எதனை ஒத்தது என்றால், சொல்லுதற்கரிய, எல்லையில்லாத மறைகளாலும் இயம்புதற்கு அரிய பரம்பொருள் ஒன்றாய் இருக்க அது பல பெயர்களாலும் அழைக்கப்படுவதைப் போன்றது என்கிறான் கம்பன்.

கம்பன் காலத்தில் சைவரும் வைணவரும் தத்தம் கடவுளரே பெரியர் என்று ஓய்ச்சலின்றிச் சண்டையிட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. வில்லம்பினைக் காட்டிலும் ஆழ்ந்த தாக்கினை நிகழ்த்த வல்லது புலவன் தன் சொல்லம்பே அன்றோ? ‘அரியும் அரனும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயில மண்ணு’ என்ற செய்தியை அணி நயத்துடன் காவியத் தொடக்கத்திலேயே சொல்லி விடுகிறான் கம்பன். அங்கும் கடலும் மழையுமே கைகொடுக்கின்றன:


நீற ணிந்த கடவுள் நிறத்தவான்
ஆற ணிந்துசென் றார்கலி மேய்ந்தகிற்
சேற ணிந்த முலைத்திரு மங்கைதன்
வீற ணிந்தவன் மேனியின் மீண்டதே

வெண்ணீறு அணிந்தவன் சிவன். அந்த நிறத்தையுடைய மேகங்கள் அலைந்து திரிந்து கடலை மொண்ட பிறகு, (அகிற்குழம்பு பூசிய திருமகளின் திருமார்பு கொண்ட வீறு அணிந்தவனாகிய) திருமாலின் நிறத்தில் – கரிய நிறத்தில் – மழைமேகங்களாகத் திரும்பின என்கிறான் கம்பன். வெண்மேகமோ கருமேகமோ இரண்டும் ஒன்றுதான் – அரனும் அரியும் போல. 

இந்தப் பொழுது ஒன்றாக இருக்கும் ஆறு அடுத்த பொழுது வேறொன்றாக மாறி விடுகிறது என்ற கிரேக்கத் தத்துவ மேதை ஹெராக்லிடசின் கூற்றினை மேலே பார்த்தோம், இல்லையா? மாற்றம் பற்றிய அந்தச் சிந்தனையின் சாயல் கம்பன் கவிதையிலும் பொதிந்திருக்கக் காணலாம்.

பிறிதோரிடத்தில் மும்மூர்த்திகளுக்கும் அப்பாலான பரம்பொருள் என்று இராமனைத் தொழுதேத்துபவன்தான் கம்பன். ஆனால் தனது நோக்குக்கு அப்பாலும் ஓர் உலகு உண்டு என்ற அவனது மெய்யறிவு மாயச் சழக்குகளால் பிளவுண்டு கிடக்கும் இன்றைய மாந்தரையும் வழிகாட்ட வல்லது.

கம்பன் துதி:

வைய கம்பெறு காரிருள் போக்கிட

வெய்ய ஞாயிறு மீயருள் பெய்திடும்

மெய்ய றிந்தொளிச் சொல்லுளம் மேவிட

ஐய யாண்டும் நின் ஆய்மனங் காவலே

அடுத்த வாரம்: கம்பரும் கார்ல் மார்க்சும்

1 thought on “கலீல் ஜிப்ரான், கணியன் பூங்குன்றன், கம்பன்”

  1. Great Service to Tamil World with Great Courage Enthusiasm Dedication Happiness Hardwork Devotion Vision etc! God is with U always my friend! You wrote in my magazine “SarvadesaTamilar” 1994-2000 as a Youngman with Great Courage! I am very happy to see your valuable article at “Virakesari” the most Popular Tamil daily/weekly in Srilanka!
    God is With U Always my Friend!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×