15 பிறன்இல் விழையாமை

அதிகாரம் 15.

பிறன்இல் விழையாமை

141      

பிறன்பொருளாட் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்

தறம்பொருள் கண்டார்க ணில்.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விழையாமை.இஃது ஒழுக்கம் உடையார்மாட்டே நிகழ்வதாகலின், ஒழுக்கம் உடைமையின்பின் வைக்கப்பட்டது.)

பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை – பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல் – ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை. (பிறன் பொருள்: பிறன் உடைமை, அறம், பொருள் என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை, விகாரத்தால் தொக்கு நின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் ‘பரகீயம்’ என்று கூறுவராகலின், ‘அறம் பொருள் கண்டார் கண் இல்’ என்றார்.எனவே அப்பேதைமை உடையார் மாட்டு அறமும் பொருளும் இல்லை என்பது பெறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

**

மணக்குடவர் உரை

பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை – வேறொருவன் உடமையாகவுள்ளவளைக் காதலித் தொழுகும் மடைமை ; ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல் – நிலவுலகத்தில் அறநூலையும் , பொருள்நூலையுங் கற்றுத் தெளிந்தவரிடம் இல்லை .

பிறன் மனைவியைக் காதலிப்பவர் , இம்மைக்குரியனவும் மாந்தனுக்கு உறுதிபயப்பனவுமான அறம் பொருளின்பம் என்னும் மூன்றனுள் இன்பம் ஒன்றையே கருதியவர் என்பதை உணர்த்தற்கு , ‘ அறம் பொருள் கண்டார்கணில் ‘ என்றார்.

பொருள்நூலை அறியாததினால் பிறன் மனைவி பிறன் பொருளென்பதும் , அறநூலை யறிதாததினால் பிறன் பொருளை நுகர்தல் தீவினை யென்பதும் , தெரியாதுபோயின . அறம் பொருள் என்பன கருமிய ( காரிய) வாகுபெயர் . எண்ணும்மை தொக்கது . பூமி என்னும் வடசொல் வழங்கவே , ஞாலம் என்னும் தென்சொல் வழக்கற்றது . பேதைமை என்பது நல்லதை விட்டுவிட்டுத் தீயதைத் தெரிந்துகொள்ளுந் தன்மை .

**

கலைஞர் உரை

பிறன்  மனைவியிடத்து    விருப்பம்   கொள்ளும் அறியாமை, உலகில்

அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து   உணர்ந்தவர்களிடம்

இல்லை.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who laws of virtue and possession’s rights have known,

Indulge no foolish love of her by right another’s own.

**

Yogi Shuddhananda Translation

Who know the wealth and virtue’s way

After other’s wife do not stray.

**

142      

அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை

நின்றாரிற் பேதையா ரில்.

பரிமேலழகர் உரை

‘அறன்கடை’ நின்றாருள் எல்லாம் – காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்- பிறன் இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையார் இல்லை. (அறத்தின் நீக்கப்பட்டமையின் அறன்கடை என்றார். அறன்கடை நின்ற பெண்வழிச் செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல மகளிரோடும் கூடி இன்பம் நுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலே அன்றிப், பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், ‘பேதையார் இல்’ என்றார், எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

**

மணக்குடவர் உரை

காமத்தின்கண்ணே நின்றார் எல்லாரினும், பிறனொருவன் கடைத்தலை பற்றி நின்றவர்களைப் போல் அறியாதாரில்லை.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அறன்கடை நின்றாருள் எல்லாம் – காமம்பற்றித் தீவினை செய்தாரெல்லாருள்ளும் ; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல் – பிறன் மனைவியைக் காதலித்து அவன் வீட்டு வாயிற்கண்போய் நின்றாரைப்போலப் பேதையாரில்லை .

அறத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டதென்னுங் கருத்தால் கரிசு (பாவம் ) அறங்கடை எனப்பட்டது . காமத்தாற் பெண்ணிற்கடிமை யாகும் அண்ணாளரும் விலைமகளிரொடு கூடும் காமுகரும் போல , அறமும் பொருளும் இழத்தலேயன்றி , அச்சத்தால் தாம் விரும்பிய இன்பமும் இழத்தலால் , பிறன் மனைவியை விரும்புவாரைப் போலப் பேதையாரில்லை என்றார் . கடை என்னும் சொல்லொப்புமை பற்றித் தீவினையில் நிலைத்தவரையும் ‘ நின்றார் ‘ என்றார் . பிறன் கடைநிற்றல் என்பது இரப்போன் நிலை போன்ற இழிவையும் உணர்த்திற்று .

**

கலைஞர் உரை

பிறன்   மனைவியை   அடைவதற்குத்   துணிந்தவர்கள்  அறவழியை

விடுத்துத்  தீயவழியில்   செல்லும்   கடைநிலை மனிதர்களைக் காட்டிலும்

கீழானவர்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

No fools, of all that stand from virtue’s pale shut out,

Like those who longing lurk their neighbour’s gate without.

**

Yogi Shuddhananda Translation

He is the worst law breaking boor

Who haunts around his neighbour’s door.

**

143      

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற்

றீமை புரிந்தொழுகு வார்.

பரிமேலழகர் உரை

தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் – தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார், விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற- உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர். (அறம் பொருள் இன்பங்கள் ஆகிய பயன் உயிர் எய்தாமையின், ‘விளிந்தாரின் வேறல்லர்’, என்றும், அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவு பற்றியாகலின், ‘தெளிந்தார் இல்’ என்றும் கூறினார்.)

**

மு.வரதராசனார் உரை

ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்.

**

மணக்குடவர் உரை

தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார் மெய்யாகச் செத்தாரின் வேறல்லர்.

இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின் பிணத்தோடொப்ப ரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் – தம்மை நல்லவரென்று நம்பித் தாராளமாய்ப் பழகவிட்டவரின் மனைவியின் கண் தீவினை செய்தலை விரும்பியொழுகுவார் ; மன்ற – உறுதியாக ; விளிந்தாரின் வேறு அல்லர் – இறந்தாரின் வேறுபட்டவரல்லர் .

உயிர் அடையவேண்டிய அறம்பொருளின்பங்களை அடையாமை பற்றியும் , தீமை செய்யாரென்று நம்பிப் பழகவிட்ட நிலைமையையே தீமை செய்தற்குப் பயன்படுத்தியது பற்றியும் , உயிருடையவரேனும் செத்தவரே என்றார் .’மன்ற’ தேற்றப் பொருளிடைச் சொல்.

**

கலைஞர் உரை

நம்பிப்   பழகியவர்   வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில்

ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.

**

Rev. Dr. G.U.Pope Translation

They ‘re numbered with the dead, e’en while they live-how otherwise?

With wife of sure confiding friend who evil things devise.

**

Yogi Shuddhananda Translation

The vile are dead who evil aim

And put faithful friends’ wives to shame.

**

144      

எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந்

தேரான் பிறனில் புகல்.

பரிமேலழகர் உரை

எனைத்துணையர் ஆயினும் என்னாம் – எத்துணைப் பெருமையுடையார் ஆயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும், தினைத்துணையும் தேரான் பிறன் இல் புகழ் – காம மயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல். (இந்திரன் போல எல்லாப் பெருமையும் இழந்து சிறுமை எய்தல் நோக்கி, ‘என்னாம்’ என்றார். ‘என் நீர் அறியாதீர் போல இவை கூறின் நின் நீர அல்ல நெடுந்தகாய்’ (கலித்.பாலை 6) உயர்த்தற்கண் பன்மை ஒருமை மயங்கிற்று. ‘தேரான் பிறன்’ என்பதனைத் ‘தம்மை ஐயுறாத பிறன்’ என்று உரைப்பாரும் உளர்.)

**

மு.வரதராசனார் உரை

தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?

**

மணக்குடவர் உரை

எல்லாவமைதியினையும் உடையவராயினும், தினையளவுந் தேராது பிறனுடைய இல்லிலே புகுதல் யாதாய்ப் பயக்குமோ?

பிறனில் விழைவால் வருங் குற்றங் கூறுவார் முற்பட வெல்லாக் குணமுமிழியுமென்று கூறினார்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

எனைத்துணையர் ஆயினும் – எத்துணை உயர்ந்தோராயினும் ; தினைத்துணையும் தேரான் பிறன் இல்புகல் – தாம் செய்யுந் தீவினையைத் தினையளவும் எண்ணிப்பாராது பிறன் மனைவியை விரும்பி அவன் இல்லத்திற்குட் புகுதல்; என் ஆம் – என்ன பயனுடைத்தாம்?

உயர்ந்தோர் அரசனும் தலைமையமைச்சனும் படைத்தலைவனும் போலப் பதவியிற் சிறந்தார். தேரான் என்பது தேர்வான் என்னும் உடன்பாட்டு எதிர்கால வினையெச்சத்தின் எதிர்மறை. எத்துணை உயர்ந்தோனாயினும் குற்றங் குற்றமே யென்பது இக்குறளாற் கூறப்பட்டது.

**

கலைஞர் உரை

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச்  சிந்தித்துப்  பாராமல்,

பிறன்     மனைவியிடம்      விருப்பம்     கொள்வது,    எத்துணைப்

பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

How great soe’er they be, what gain have they of life,

Who, not a whit reflecting, seek a neighbour’s wife.

**

Yogi Shuddhananda Translation

Their boasted greatness means nothing

When to another’s wife they cling.

**

145      

எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி.

பரிமேலழகர் உரை

எளிது என இல் இறப்பான் – ‘எய்துதல் எளிது’ என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான், விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும் – மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும். (இல்லின்கண் இறத்தல் – இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.)

**

மு.வரதராசனார் உரை

இச் செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறிதவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.

**

மணக்குடவர் உரை

தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன் எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான்.

இது பழியுண்டா மென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

எளிது என இல் இறப்பான் – பின்விளைவு கருதாது இன்பம் ஒன்றையே நோக்கி அதையடைவது எளிதென்று பிறன் மனைவியின் கண் நெறிகடந்தொழுகுபவன் ; விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும் – தீராது எப்போதும் நிற்கும் தன் பழியையும் தன்குடிப்பழியையும் அடைவான்.

‘இல்லிறப்பான்’ என்பது இல்லத்தின்கண் கொல்லப்பட்டுச் சாவான் என்றும் பொருள்பட்டு இரட்டுறலாய் நின்றது.

**

கலைஞர் உரை

எளிதாக   அடையலாம்   என  எண்ணிப்  பிறனுடைய மனைவியிடம்

முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.

**

Rev. Dr. G.U.Pope Translation

‘Mere triflel’ saying thus, invades the home; so he ensures.

A gain of guilt that deathless aye endures.

**

Yogi Shuddhananda Translation

Who trifles with another’s wife

His guilty stain will last for life.

**

146      

பகைபாவ மச்சம் பழியென நான்கு

மிகவாவா மில்லிறப்பான் கண்.

பரிமேலழகர் உரை

இல் இறப்பான்கண் – பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம் – பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம். (எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

**

மணக்குடவர் உரை

பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்: பிறனில்லின்கண்ணே மிகுவான் மாட்டு.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இல் இறப்பான் கண் – பிறன் மனைவியின் கண் நெறிகடந்து ஒழுகுபவனிடத்து; பகை , பாவம் , அச்சம் , பழி என நான்கும் இகவாவாம் – பகையும் கரிசும் அச்சமும் பழியும் ஆகிய நாற்கேடுகளும் ஒருகாலும் நீங்காவாம்.

அறம்புகழ் கேண்மை பெருமையிந் நான்கும்

பிறன்றாரம் நச்சுவார்ச் சேரா – பிறன்றாரம்

நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென்

றச்சத்தோ டிந்நாற் பொருள்.

(82)

புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்

துய்க்கு மிடத்தச்சந் தோன்றாமற் காப்பச்சம்

எக்காலு மச்சந் தருமா லெவன்கொலோ

வுட்கான் பிறனில் புகல்

(83)

காணிற் குடிப்பழியாங் கையுறிற் கால்குறையும்

ஆணின்மை செய்யுங்கா லச்சமாம் -நீணிரயத்

துன்பம் பயக்குமால் துச்சாரி நீகண்ட

இன்ப மெனக்கெனைத்தாற் கூறு.

(84)

இவை நாலடியார்.

**

கலைஞர் உரை

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை,

தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who home invades, from him pass nevermore,

Hatred and sin, fear, foul disgrace; these four.

**

Yogi Shuddhananda Translation

Hatred, sin, fear, and shame-these four

Stain adulterers ever more.

**

147      

அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள்

பெண்மை நயவா தவன்.

பரிமேலழகர் உரை

அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் – அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான், பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் – பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன். (ஆன் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.

**

மணக்குடவர் உரை

அறநெறியானே யில்வாழ்வானென்று சொல்லப் படுவான். பிறன்வழியானவளது பெண்மையை விரும்பாதவன்.

இது பிறனில் விழையாமை வேண்டும் என்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் – அறவியல்போடு கூடி இல்வாழ்வானென்று சொல்லப்படுவன்; பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் – பிறனுக்கு உரிமைபூண்டு அவன் வழி நிற்பவளின் பெண்டன்மையை விரும்பாதவனாவான்.

ஆனுருபு உடனிகழ்ச்சிக்கண் வந்தது. பிறன் மனையை விழையாதவனே உண்மையான இல்லறத்தான் என்றவாறு.

**

கலைஞர் உரை

பிறன்   மனைவியிடம்   பெண்மை  இன்பத்தை நாடிச் செல்லாதவனே

அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who sees the wife, another’s own with no desiring eye

In sure domestic bliss he dwelleth ever virtuously.

**

Yogi Shuddhananda Translation

He is the righteous householder

His neighbour’s wife who covets never.

**

148      

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்

கறனொன்றோ வான்ற வொழுக்கு.

பரிமேலழகர் உரை

பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை – பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்தகைமை, சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு – சால்புடையார்க்கு அறனும் ஆம், நிரம்பிய ஒழுக்கமும் ஆம். (புறப் பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும், உட்பகை ஆகிய காமம் அடக்குதற்கு அருமையின், அதனை அடக்கிய ஆண்மையைப் ‘பேராண்மை’ என்றார். ‘ஒன்றோ’ என்பது எண்ணிடைச் சொல். செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.

**

மணக்குடவர் உரை

பிறனது மனையாளைப் பாராத பெரியவாண்மைதானே சான்றோர்க்கு அறனும்

அமைந்த வொழுக்கமுமாம்.

இஃது இதனை விரும்பாமைதானே அறனும் ஒழுக்கமுமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

சான்றோர்க்கு – அறிவுநிறைந்தோர்க்கு ; பிறன்மனை நோக்காத பேராண்மை அறன் ஒன்றோ – பிறன் மனைவியைக் கருதாத பெரிய ஆண்டகைமை அறம் மட்டுமோ ; ஆன்ற ஒழுக்கு – நிரம்பிய ஒழுக்கமுமாம்.

புறப் பகைகளை வெல்வதினும் அகப் பகைகளை வெல்வதே அருமையாதலின் , அறுவகை உட்பகைகளுள் ஒன்றாகிய காமத்தை அடக்குவதைப் பேராண்மை என்றார். ஒன்றோ என்பது ஒன்று தானோ என்று பொருள்படுவதாம். பிறன்மனை நோக்காமை பிறர்க்குச் சிறந்த அறமாயினும் சான்றோக்கு இயல்பான ஒழுக்கம் என்பது கருத்து. எச்சவும்மை தொக்கது.

**

கலைஞர் உரை

வேறொருவன்    மனைவியைக்   காம   எண்ணத்துடன்   நோக்காத

பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Manly excellence, that looks not on another’s wife,

Is not virtue merely, ’tis full ‘propriety’ of life.

**

Yogi Shuddhananda Translation

They lead a high-souled manly life

The pure who eye not another’s wife.

**

149      

நலக்குரியார் யாரெனி னாமநீர் வைப்பிற்

பிறற்குரியா டோடோயா தார்.

பரிமேலழகர் உரை

நாம நீர் வைப்பின் – அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்து; நலக்கு உரியார் யார் எனின் – எல்லா நன்மைகளும் எய்துதற்கு உரியார் யார் எனின், பிறர்க்கு உரியாள் தோள் தோயாதார் – பிறனொருவனுக்கு உரிமை ஆகியாளுடைய தோளைச் சேராதார். (அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின், ‘நாமநீர்’ என்றார். ‘நலத்திற்கு’ என்பது ‘நலக்கு’ எனக்குறைந்து நின்றது. உரிச்சொல் (நாம) ஈறு திரிந்து நின்றது. இருமையினும் நன்மை எய்துவர் என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றால் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.

**

மணக்குடவர் உரை

நலத்துக்கு உரியார் யாரெனின் நினைத்ததைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதார்.

நலக்குரியார்- விரும்புதற்குரியார்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

நாமநீர் வைப்பின் – அஞ்சத்தக்க கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தின் கண் ; நலக்கு உரியர் யார் எனின் – எல்லா நலங்களும் பெறுதற்குரியார் எவர் எனின் ; பிறற்கு உரியாள் தோள் தோயாதார் – பிறனொருவனுக்குரியவளின் தோளைத் தழுவாதார்.

நாமம் அச்சம் இஃது உரிச்சொல். அகலம் , ஆழம் , தீயவுயிர்கள், கொந்தளிப்பு , நிலமுழுக்கு முதலியவற்றால் அஞ்சத்தக்கதாதலின், கடலை நாமநீர் என்றார். ‘நலத்திற்கு’ என்பது அத்துச் சாரியை தொக்கு நின்றது. ‘தோள் தோய்தல்’ இடக்கரடக்கல்.

**

கலைஞர் உரை

பிறன்  மனைவியின்  தோளைத்  தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின்

பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who ‘re good indeed, on earth begirt by ocean’s gruesome tide?

The men who touch not her that is another’s bride.

**

Yogi Shuddhananda Translation

Good in storm bound earth is with those

Who clasp not arms of another’s spouse.

**

150      

அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்

பெண்மை நயவாமை நன்று.

பரிமேலழகர் உரை

அறன் வரையான் அல்ல செயினும் – ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும், பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று – அவனுக்குப் பிறன் எல்லைக்கண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின், அது நன்று. (இக்குணமே மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறன் இல் விழையாதான்கண், குணம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.

**

மணக்குடவர் உரை

அறத்தை வரையாதே அறமல்லாதன செய்யினும் பிறனிடத்து ஆளானவளது பெண்மையை விரும்பாமை நன்று.

இஃது ஓரறமுஞ் செய்திலனாயினும் நன்மை பயக்குமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அறன் வரையான் அல்ல செயினும் – ஒருவன் அறத்தைத் தனக்கு உரியதாகக் கொள்ளாது தீவினைகளைச் செய்து வருவானாயினும் ; பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று – பிறனாட்சிக் குட்பட்டவளின் பெண்டன்மையை விரும்பாமையை அவன் மேற்கொள்ளின் அது அவனுக்கு நல்லதாம்.

இக்குணம் அவன் குற்றங்களை ஓரளவு மறைக்கும் என்பது கருத்து.

**

கலைஞர் உரை

பிறன்  மனைவியை  விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர்

செயலைவிடத் தீமையானதாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Though virtue’s bounds he pass, and evil deeds hath wrought;

At least, ’tis good if neighbour’s wife he covet not.

**

Yogi Shuddhananda Translation

Sinners breaking virtue’s behest

Lust not for another’s wife at least.

**

×