அதிகாரம் 13.
அடக்கம் உடைமை
121
அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.
பரிமேலழகர் உரை
[அஃதாவது, மெய், மொழி, மனங்கள் தீநெறிக்கண் செல்லாது அடங்குதல் உடையன் ஆதல். அஃது ஏதிலார் குற்றம்போல் தம் குற்றமும் காணும்(குறள்.190) நடுவுநிலைமை உடையார்க்கு ஆகலின், இது நடுவு நிலைமையின்பின் வைக்கப்பட்டது.)
அடக்கம் அமரருள் உய்க்கும் – ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் – அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும். ( ‘இருள்’ என்பது ஓர் நரக விசேடம். “எல்லாம் பொருளில் பிறந்துவிடும்” (நான்மணி.7) என்றாற்போல, ‘உய்த்துவிடும்’ என்பது ஒரு சொல்லாய் நின்றது.)
**
மு.வரதராசனார் உரை
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்திவிடும்.
**
மணக்குடவர் உரை
மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும்.
மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
அடக்கம் அமரருள் உய்க்கும் – அடக்கமாகிய நன்று ஒருவனைத் தேவருலகத்திற் கொண்டுபோய்ச் சேர்க்கும்; அடங்காமை ஆர் இருள் உய்த்துவிடும் – அடங்காமையாகிய தீது ஒருவனைத் தங்குதற்கரிய இருளுலகத்திற்குச் செலுத்திவிடும்.
இருள் என்றது இருளுலகத்தை. இருளுலகமாவது நரகம். : “இருளுலகஞ் சேராதவாறு” என்று நல்லாதனார் ( திரிகடுகம் , 90) கூறுதல் காண்க. பண்டைக் காலத்தில் இருட்டறையுள் அடைப்பதும் ஒருவகைத் தண்டனையாயிருந்தமையின், நரகம் இருளுலகம் எனப்பட்டது. ஆர் இருள் என்பது திணிந்த இருள் என்றுமாம். விடு என்பது விரைவும் நிறைவும் உணர்த்தும் துணை வினைச்சொல்.
**
கலைஞர் உரை
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே
இருளாக்கி விடும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
Control of self does man conduct to bliss th’ immortals share;
Indulgence leads to deepest night, and leves him there.
**
Yogi Shuddhananda Translation
Self-rule leads to realms of gods
Indulgence leads to gloomy hades.
**
122
காக்க பொருளா வடக்கத்தை யாக்க
மதனினூங் கில்லை யுயிர்க்கு.
பரிமேலழகர் உரை
உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை – உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாகக் காக்க – ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. (உயிர் என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.)
**
மு.வரதராசனார் உரை
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்கவேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.
**
மணக்குடவர் உரை
ஒருவன் தனக்குப் பொருளாக அடக்கத்தை யுண்டாக்குக. அவனுயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறிதில்லை.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
அடக்கத்தைப் பொருளாக் காக்க -அடக்க முடைமையை ஒரு செல்வமாகப் பேணிக் காக்க; உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை – மக்கட்கு அதனினுஞ் சிறந்து ஆக்கந் தருவது வேறொன்று மில்லை.
உயிர் என்பது வகுப்பொருமை அது இங்கு மக்களுயிரைக் குறித்தது ; அடக்க முடைமையாகிய அறத்தை மேற்கொள்வது அதுவே யாகலின். அறிவற்றதும் பிறவிதொறும் நீங்குவதுமான உடம்பை இயக்குவதும் இன்ப துன்பங்களைத் துய்ப்பதும் உயிரேயாதலின், ‘உயிர்க்கு’ என்றார்.
**
கலைஞர் உரை
மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும்.அடக்கத்தைவிட
ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.
**
Rev. Dr. G.U.Pope Translation
Guard thou as wealth the power of self-control;
Than this no greater gain to living soul!
**
Yogi Shuddhananda Translation
No gains with self-control measure
Guard with care this great treasure.
**
123
செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந்
தாற்றி னடங்கப் பெறின்.
பரிமேலழகர் உரை
அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் – அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின்; செறிவு அறிந்து சீர்மை பயக்கும் – அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும். (இல்வாழ்வானுக்கு அடங்கும் நெறியாவது, மெய்ம்முதல் மூன்றும் தன்வயத்த ஆதல்.)
**
மு.வரதராசனார் உரை
அறியவேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப் பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.
**
மணக்குடவர் உரை
அறியப்படுவனவும் அறிந்து அடக்கப்படுவனவும் அறிந்து நெறியினானே யடங்கப்பெறின் அவ்வடக்கம் நன்மை பயக்கும்.
அறியப்படுவன- சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்: அடக்கப் படுவன- மெய் வாய் கண்
மூக்கு செவி.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் – ஒருவன் அறியத் தக்க நூல்களை யறிந்து இல்லறத்தின்கண் அடங்கி யொழுகுவானாயின்; செறிவு அறிந்து சீர்மை பயக்கும் – அவ்வடக்கம் பிறரால் அறியப்பட்டு அவனுக்குச் சிறந்த நன்மையை விளைவிக்கும்.
ஆற்றின் அடங்குதலாவது, பிறன் பொருளைக் கவராமையும் பிறன் மனைவியை விழையாமையும் பிறனைத் தனக்கு அடிப்படுத்தாமையுமாம்.
**
கலைஞர் உரை
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன்
நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
If versed in wisdom’s lore by virtue’s law you self-restrain,
Your self – repression known will yeild you glory’s gain.
**
Yogi Shuddhananda Translation
Knowing wisdom who lives controlled
Name and fame seek him untold.
**
124
நிலையிற் றிரியா தடங்கியான் றோற்ற
மலையினு மாணப் பெரிது.
பரிமேலழகர் உரை
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் – இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப்பெரிது – மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது. (திரியாது அடங்குதல் – பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். ‘மலை’ ஆகுபெயர்.)
**
மு.வரதராசனார் உரை
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வைவிட மிகவும் பெரிதாகும்.
**
மணக்குடவர் உரை
தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது.
நிலை- வன்னாச்சிரம தன்மம்.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் – இல்லறத்தின்கண் வழுவாது நின்று அடங்கினவனது உயர்ச்சி; மலையினும் மாணப் பெரிது – மலையுயர்ச்சியினும் மிகப் பெரிது.
மலை யென்பது வளமிகுந்ததாதலின், குட மலையும் பனி (இமய) மலையும் போல்வதாகும். உம்மை உயர்வு சிறப்பு. ‘ நிலையிற்றிரியா தடங்குதல்’ ஐம்புலவின்பமும் நுகர்ந்து கொண்டே அடங்கியொழுகுதல்.
**
கலைஞர் உரை
உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும்
கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
In his station, all unswerving, if man self subdue,
Greater he than mountain proudly rising to the view.
**
Yogi Shuddhananda Translation
Firmly fixed in self serene
The sage looks grander than mountain.
**
125
எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.
பரிமேலழகர் உரை
பணிதல் எல்லாாக்கும் நன்றாம் – பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து – அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வம் ஆம் சிறப்பினை உடைத்து. (பெருமிதத்தினைச் செய்யுங் கல்வியும் குடிப்பிறப்பும் உடையார் அஃது இன்றி அவை தம்மானே அடங்கியவழி அவ்வடக்கஞ் சிறந்து காட்டாது ஆகலின், ‘செல்வர்க்கே செல்வம் தகைத்து’ என்றார். ‘செல்வத்தகைத்து’ என்பது மெலிந்து நின்றது. பொது என்பாரையும் உடம்பட்டுச் சிறப்பாதல் கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும் பொதுவகையான் அடக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
**
மு.வரதராசனார் உரை
பணிவுடையராக ஒழுகுதல் பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.
**
மணக்குடவர் உரை
அடங்கியொழுகல் எல்லார்க்கும் நன்மையாம்: அவரெல்லாரினுஞ் செல்வமுடை
யார்க்கே மிகவும் நன்மை யுடைத்தாம்.
செல்வம் – மிகுதி.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
பணிதல் எல்லார்க்கும் நன்றாம் – செருக்கின்றியடங்குதல் எல்லார்க்கும் பொதுவாக நல்லதாம்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து – ஆயினும், அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையவர்க்கே அது வேறொரு செல்வமாந் தன்மையதாகும்.
எல்லாராலும் மதிக்கப்படும் இயல்பும், எண்ணியதைச் செய்து முடிக்குந் திறனும், ஒட்டோலக்கமாக (ஆடம்பரமாக) வாழ்ந்தின்புறும் உயர்வும், இடம்பொருளேவலால் வரம்பிறந் தொழுகத் தூண்டும் நிலைமையும், உடைய செல்வரின் வாழ்க்கை அடக்கமுடைமைக்குப் பெரிதும் ஏற்காததாயிருப்பதால், அவரிடத்து அவ்வறம் அமைவது அவர்க்கு மற்றொரு செல்வப்பேறாம் என்றார். செல்வந் தகைத்து என்பது இன்னோசை பற்றி மெலிந்து நின்றது.
**
கலைஞர் உரை
பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே
செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு
செல்வமாகும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
To all humility is goodly grace; but chief to them
With fortune blessed,,- ’tis fortune’s diadem.
**
Yogi Shuddhananda Translation
Humility is good for all
To the rich it adds a wealth special.
**
126
ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து.
பரிமேலழகர் உரை
ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் – ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து – அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து. (ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்க வேண்டும் என்பார் ‘ஆமை போல்’ என்றார். ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.)
**
மு.வரதராசனார் உரை
ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.
**
மணக்குடவர் உரை
ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
ஆமைபோல் – ஆமையானது, தனக்குத் தீங்கு நேராவாறு, தன் ஓருடம்பிற்குள் தன் தலையும் நாற்காலுமாகிய ஐந்துறுப்புக்களையும் அடக்கிக் கொள்ளுதல் போல; ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் – இல்லறத்தானும் ஒரு பிறப்பில் தன் ஐம்பொறிகளையும் தீவினை நேராதவாறு அடக்க வல்லனாயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து – அவ்வல்லமை அவனுக்கு எழு பிறப்பளவும் அரணாதலை யுடையது.
ஒருமை, ஐந்து, எழுமை என்பன தொகைக் குறிப்பு. இவற்றுள் ஒருமை எழுமை என்பன எண்ணாயிருக்கும் நிலைமை குறியாது எண்ணையே குறித்து நின்றன. எழுபிறப்புஎன்பதற்கு 62 ஆம் குறளுரையில் தந்த விளக்கத்தையே இங்குங் கொள்க.
**
கலைஞர் உரை
உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல்
ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக்
காவல் அரணாக அமையும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
Like tortoise, who the five restrains
In one, through seven world bliss obtains.
**
Yogi Shuddhananda Translation
Who senses five like tortoise hold
Their joy prolongs to births sevenfold.
**
127
யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
பரிமேலழகர் உரை
யாகாவாராயினும் நாகாக்க – தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க, காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் – அதனைக் காவாராயின் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் – அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர். (‘யா’ என்பது அஃறிணைப் பன்மை வினாப்பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உணர நின்றது. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. சொற்குற்றம் – சொல்லின்கண் தோன்றும் குற்றம். ‘அல்லாப்பர்செம்மாப்பர்’ என்பன போலச் ‘சோகாப்பர்’ என்பது ஒரு சொல்.)
**
மு.வரதராசனார் உரை
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்கவேண்டும்; காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
**
மணக்குடவர் உரை
எல்லாவற்றையும் அடக்கிலராயினும் நாவொன்றினையும் அடக்குக: அதனை அடக்காக்காற் சொற்சோர்வுபட்டுத் தாமே சோகிப்பா ராதலான்.
இது சோகத்தின்மாட்டே பிணிக்கப் படுவரென்பது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
யா காவாராயினும் நா காக்க – மக்கள் வேறெவற்றைக் காவாவிடினும் நாவையாவது காத்துக் கொள்க; காவாக்கால் சொல்லிழுக்குப் பட்டுச் சோகாப்பர் – அதைக் காவாவிடின் சொற்குற்றப்பட்டுச் சிறைத் தண்டம் அடைவர்.
யா = எவை. இதற்கு யாவும் என்று பொருள் கொண்டு “முற்றும்மை விகாரத்தாற் றொக்கது”. என்றார் பரிமேழகர். “காவாராயினும்” என்னும் வைத்துக்கொள்வு அல்லது ஒத்துக்கொள்வுக் கிளவியத்திற்கு (Adverb Clause of Supposition or Concession) அப்பொருள் பொருந்தாமை காண்க. சொல்லிழுக்கு என்றது இங்குப் பழிச் சொல்லை. சோ காத்தல் சிறையிற் காத்திருத்தல், அது கனக விசயர் என்னும் ஆரிய மன்னர் தமிழ் வேந்தரைப் பழித்ததினால், சேரன் செங்குட்டுவனின் சீற்றத்திற் காளாகிச் சிறைப்பட்டது போல்வது.
“அடல்வேல் மன்ன ராருயி ருண்ணும்
கடலந் தானைக் காவல னுரைக்கும்
பால குமரன் மக்கள் மற்றவர்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனக்
கூற்றங் கொண்டிச் சேனை செல்வது”
(சிலப். 26 : 156 – 162)
“ஆரிய வரசரை யருஞ்சிறை நீக்கி”
(சிலப். 28 : 195).
சோ என்பது அரிய பொறிகள் ஏற்றப்பட்ட சிறந்த அரண். அஃது இராவணனின் இலங்காபுரியிலும் வாணனின் சோணிதபுரத்திலும் இருந்தது.
“தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்”
(சிலப். ஆய்ச்சியர் குரவை)
“ஆனிரை தாங்கிய குன்றெடுத்தான் சோவின்
அருமை யழித்த மகன்”.
(நான்மணி, 2.)
சோ என்னும் சொல்லைப் பிற்காலத்தார் பொதுவான மதிற் பெயராகவும் ஆண்டு விட்டனர்.
சோமே லிருந்தொரு கோறா வெனின் “
(சி.சி.மறைஞான தேசிகர் உரை.)
காத்தல் என்பது காத்திருத்தல் அல்லது நிலையில்லாது தங்கியிருத்தல் . wait என்னும் ஆங்கிலச் சொற்கும் tarry , stay என்று ஆக்கசுப் போர்டு ஆங்கிலச் சிற்றகரமுதலி பொருள் கூறியிருத்தல் காண்க .
சோகா என்னும் சொல்லை வடசொல் தொடர்பினதாகக் காட்டல் வேண்டி , சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகர முதலி , அதற்குச் சோகம் + யா என்று மூலங் குறித்திருப்பது பொருந்தாது . யாத்தல் கட்டுதல் , அரையாப்பு , கழல்யாப்பு , மார்யாப்பு ( மாராப்பு) விதலையாப்பு முதலிய கூட்டுச் சொற்கள் போல் சோக(ம்) யாப்பு என்றொரு சொல் இயற்கையாகப் பொருந்தாமையும் , நோக்குக . இனி , சோ என்னும் சொல்லையும் , வாணன் தலைநகர்ப் பெயரான சோணிதபுரம் என்பதன் சிதைவாக அவ்வகரமுதலி காட்டியிருப்பதும் குறும்புத்தனமாம் , வாணனுக்கு முந்தின இராவணன் காலத்திலேயே சோவரண் இருந்தமையை நோக்குக .
**
கலைஞர் உரை
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக்
காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர்
துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
What’er they fail to guard, o’er lips men guard should keep;
If not, through fault of tongue, they bittter tears shall weep.
**
Yogi Shuddhananda Translation
Rein the tongue if nothing else
Or slips of tongue bring all the woes.
**
128
ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி
னன்றாகா தாகி விடும்.
பரிமேலழகர் உரை
தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின்- தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்; நன்று ஆகாது ஆகிவிடும் – அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும். (தீயசொல்லாவன – தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் ‘தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்’ என்று உரைப்பாரும் உளர்.)
**
மு.வரதராசனார் உரை
தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.
**
மணக்குடவர் உரை
ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்மையாகாதாகியே விடும்.
இது சால மொழிகூறினாலுந் தீதாமென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
தீச்சொற் பொருட்பயன் ஒன்றானும் உண்டாயின் – ஒருவன் கூறும் தீய சொற்களின் பொருளால் விளையும் துன்பம் ஒன்றேனும் பிறர்க்கு உண்டாயின் ; நன்று ஆகாது ஆகிவிடும் – அவன் ஏற்கெனவே செய்துள்ள பிறவறங்கள் பயன்படாமற்போம் .
சொற்குற்றம் பொய் , குறளை , கடுஞ்சொல் , பயனில் சொல் என நான்கு என்பர்.
” ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீய சொல்லின் பொருளைப் பயக்குமாயின் , நன்மை யாகாதாகியேவிடும் ” என்னும் மணக்குடவ ருரை பொருந்துவதன்று .
**
கலைஞர் உரை
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல்
தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில்
உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
Though some small gain of good it seem to bring,
The evil word is parent still of evil thing.
**
Yogi Shuddhananda Translation
Even a single evil word
Will turn all good results to bad.
**
129
தீயினாற் சுட்டபு ணுள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு.
பரிமேலழகர் உரை
தீயினால் சுட்டபுண் உள் ஆறும் – ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும், மனத்தின்கண், அப்பொழுதே ஆறும்; நாவினால் சுட்ட வடு ஆறாது – அவ்வாறன்றி வெவ்வுரை உடைய நாவினால் சுட்ட வடு அதன் கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது. (ஆறிப்போதலால் தீயினால் சுட்டதனைப் ‘புண்’ என்றும், ஆறாது கிடத்தலால் நாவினால் சுட்டதனை ‘வடு’ என்றும் கூறினார். தீயும் வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்கும் ஆயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது போதரலின், இது குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம். இவை மூன்று பாட்டானும் மொழி அடக்கம் கூறப்பட்டது.
**
மு.வரதராசனார் உரை
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும் . ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
**
மணக்குடவர் உரை
தீயினாற் சுட்டபுண் உள்ளாறித் தீரும்: நாவினாற் சுட்ட புண் ஒருகாலத்தினுந் தீராது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
தீயினால் சுட்ட புண் உள் ஆறும் – ஒருவன் ஒருவனை நெருப்பினாற் சுட்ட புண் காட்சிப் பொருளாகிய உடம்பையே சுட்டதினால் , அப்பொழுதேயோ அப்புண் ஆறின பின்போ உள்ளத்தில் ஆறிவிடும் ; நாவினால் சுட்ட வடு ஆறாது – ஆயின் , நாவினாற் சுட்ட புண்ணோ , கருத்துப் பொருளாகிய உள்ளத்தைச் சுட்டதினால் , ஒருகாலும் ஆறாது அதன் கண்ணே நிற்கும் .
தீயினாற் சுட்ட புண் ஆறிப்போதலால் அதைப் புண் என்றும் , நாவினாற் சுட்ட புண் ஆறாது நிற்றாலால் அதை வடு என்றும் , வெவ்வேறு சொல்லாற் குறித்தார் . மருந்தினால் ஆறிவிடுவது புண் ; புண் ஆறியபின் என்றும் மாறாது நிற்பது வடுவெனும் தழும்பு . நாவினாற் சுட்டது புண்ணிலைமையும் வடுநிலைமையும் , ஒருங்கே கொண்டது என்பதை உணர்த்தச் ‘ சுட்ட வடு ‘ என்றார் . கடுஞ்சொல்லும் பழிச்சொல்லுமாகிய சுடு சொல்லின் தொழில் , அதற்குக் கருவியான நாவின்மேல் ஏற்றிக்கூறப்பட்டது ஏகாரம் தேற்றம்.
இனி , சூடிடுதல் சில நோய்க்கு மருந்துமாகலின் , சுடுசொல் இருவகையில் தீயினுங்கொடியதாம் . இருவகைப் புண்ணையும் வேறு படுத்திக் காட்டியது வேற்றுமையணி யாகும்.
**
கலைஞர் உரை
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு
திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.
**
Rev. Dr. G.U.Pope Translation
In flesh by fire inflamed, nature may throughly heal the sore;
In soul by tongue inflamed, the ulcer healeth nevermore.
**
Yogi Shuddhananda Translation
The fire-burnt wounds do find a cure
Tongue-burnt wound rests a running sore.
**
130
கதம்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
யறம்பார்க்கு மாற்றி னுழைந்து.
பரிமேலழகர் உரை
கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி – மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையவனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை, அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – அறக் கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெற்றியின்கண் சென்று. (அடங்குதல் – மனம் புறத்துப் பரவாது அறத்தின் கண்ணே நிற்றல். செவ்வி – தன் குறை கூறுதற்கு ஏற்ற மனம், மொழி முகங்கள் இனியனாம் ஆம் காலம். இப் பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம். இதனான் மனவடக்கம் கூறப்பட்டது.)
**
மு.வரதராசனார் உரை
சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.
**
மணக்குடவர் உரை
வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன்மாட்டு, அறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும்.
இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
கற்றுக் கதம் காத்து அடங்கல் ஆற்றுவான் செவ்வி – அறநூல்களைக் கற்றறிந்து சினம் வராமற் காத்து அடங்கி யொழுக வல்லவனின் செவ்விய மனநிலையை ; அறம் ஆற்றின் நுழைந்து பார்க்கும் – அறத்தெய்வம் அவனைத் தலைக்கூடுமாறு அவனையடையும் வழிச்சென்று நுணுகி நோக்கும் .
செவ்வியாவது ஒருவரைக் கண்டுரையாடுதற் கேற்ற இனிய மனநிலை . செவ்வையான நிலை செவ்வி . அறத்தெய்வம் அவனைக் கண்டு பாராட்டி மகிழ்தற்குச் சமயம் பார்க்கும் என்றது , அந்த அளவிற்கு அவன் அடக்கமுடைமையிற் சிறந்தவன் என்பதை உணர்த்தற்கு. ” நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை ” (தொல் . 857)
**
கலைஞர் உரை
கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை
அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
Who learns restraint, and guards his soul from wrath,
Virtue, a timely aid, attends his path.
**
Yogi Shuddhananda Translation
Virtue seeks and peeps to see
Self-controlled savant anger free.
**