அதிகாரம் 2.
வான்சிறப்பு
11
வானின் றுலகம் வழங்கி வருதலாற்,
றானமிழ்த மென்றுணரற் பாற்று.
பரிமேலழகர் உரை
[அஃதாவது ,அக்கடவுளது ஆணையான் உலகமும், அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் – மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று – அம்மழை தான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து. (‘நிற்ப’ என்பது ‘நின்று’ எனத் திரிந்து நின்றது. ‘உலகம்’ என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை ‘அமிழ்தம் என்று உணர்க’ என்றார்.)
**
மு.வரதராசனார் உரை
மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.
**
மணக்குடவர் உரை
மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், அம்மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது.
இஃது அறம் பொரு ளின்பங்களை யுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட வுணவுகளை நிலை நிறுத்தலானும். இம்மழையினை மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்ற நிலைமை கூறிற்று.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
வான் நின்று உலகம் வழங்கி வருதலால் – மழை வரையறவாய் நின்றுவிடாது தொடர்ந்து பெய்துவர அதனால் உலகம் நடைபெற்று வருதலால்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று – அம்மழை உலகிற்குச் சாவாமருந்து என்று கருதப்பெறுந்தன்மையது.
உலகம் என்பது அதிலுள்ள உயிர்களைக் குறித்தலால் இங்கு இடவாகுபெயர். அமிழ்தம் என்றது சாவா மருந்தாகிய இருவகையுணவை. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத சோறும், நீரும் தொடர்ந்த பசிதகை (தாக) நோய்களால் நேரும் சாவைத் தவிர்த்தலால் இருமருந்து எனப்பெறும்.
“இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்” (புறம் 70). நீரும் சோறும் மழையாலேயே பெறப்படுதலால், மழை உலகிற்கு அமிழ்தமாயிற்று. ஆயினும், உயிர்கட்கெல்லாம் பிணிமூப்புச் சாக்காடிருத்தலால், சாவாமை என்பது சாக்காடு வரையுள்ள நிலைமையேயாம். மருந்தினால் நோய் நீங்கினவனைச் சாவினின்று தப்பினான் என்று கூறும் வழக்கைக் காண்க.
அமிழ்தம் என்னும் சொல் சோற்றையும் பாலையுங் குறிக்கும் இருவேறு சொற்களின் திரிபாகும்.
அவிழ் = வெந்து மலர்ந்த சோற்றுப்பருக்கை, சோறு. அவிழ் – அவிழ்து – அவிழ்தம் – அமிழ்தம் = உணவு. “அறுசுவை நால்வகை யமிழ்தம் “(மணி. 28: 116). அவிழ்து –
அமிழ்து – அமுது = சோறு, உணவு, நீர்.
நீரும் உணவாதலால் அமுதெனப் பெற்றது. அமிழ்தம் – அமுதம் = சோறு, நீர்.
மருமம் – (மம்மம்) – அம்மம் = முலை, தாய்ப்பால், குழந்தையுணவு.
பாலும் ஒருவகை யுணவாதலாலும், அம்மம் அமுது என்னும் சொற்களின் ஒருபுடையொப்புமையினாலும், அமுது என்னும் சொல்லும் பாலைக் குறித்தது. அமுது = பால், அமுதம் = பால், அமிழ்து = பால்.
அமுதம் என்னும் தென்சொல் வடமொழியில் அம்ருத என்னும் வடிவுகொள்ளும். அவ்வடிவை அ+ம்ருத என்று பிரித்து, சாவை (மரணத்தை)த் தவிர்ப்பது என்று பொருளுறுத்தி, அதற்கேற்பத் தேவரும் அசுரரும் திருப்பாற்கடலைக் கடைந்தெடுத்த அமிர்தம் என்று கதையுங் கட்டிவிட்டனர் வடமொழியாளர்.
இங்ஙனங்கட்டினும், மீண்டும் அது தென்சொல் திரிபேயாதல் காண்க.
அல் (எதிர்மறை முன்னெட்டு) – அ. ஒ. நோ : நல் – ந. மடி – மரி – ம்ரு (வ.) – ம்ருத, ம்ருதி, ம்ருத்யு (சாவு).
தேவர் அமுதமுண்டார் என்பது கட்டுக்கதையாதலால், தேவரமுதம் என்னும் இல்பொருளை உவமையாகக் கூறுவதால் ஒரு பயனுமில்லையென உணர்க.
**
கலைஞர் உரை
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே
அமிழ்தம் எனப்படுகிறது.
**
Rev. Dr. G.U.Pope Translation
The World its course maintains through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives.
**
Yogi Shuddhananda Translation
The genial rain ambrosia call:
The world but lasts while rain shall fall.
**
12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.
பரிமேலழகர் உரை
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி – உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை – அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை. (தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின் அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.)
**
மு.வரதராசனார் உரை
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
**
மணக்குடவர் உரை
பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண்டாக்கித் தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே.
இது பசியைக் கெடுக்கு மென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி – உண்பார்க்கு நல்ல வுணவுகளை உண்டாக்கி; துப்பார்க்கு – அவற்றை உண்பவர்க்கு; துப்பாயதும் மழை – தானும் உணவாவது மழையே.
இருதிணை யறுவகை யுயிர்கட்கும் உணவு இன்றியமையாததேனும், தலைமைபற்றித் துப்பார் என உயர்திணைமேல் வைத்துக் கூறினார். முந்தின குறளில் அமிழ்தம் என ஒன்றாகக் கூறியதை, இக்குறளில் நீரும் உணவும் என இருவகையாக வகுத்தார். உணவென்றது உண்பனவும் தின்பனவும் பருகுவனவும் நக்குவனவுமான நால்வகை விளைபொருட்களை, சோறுங் களியுமாகச் சமைக்கப் பெறும் நெல் புல் (கம்பு) முதலியன உண்பன; காய்கறிகள் தின்பன; பாலும் பதனீரும் (தெளிவும்) பருகுவன; தேனும் நெகிழ்நிலைப் பயினும் நக்குவன. மழை உணவுப்பொருளை விளைப்பதொடு தானும் நீராக உண்ணப்படுவது என்று அதன் சிறப்புக் கூறப்பட்டது.
துத்தற்சொல் நான்முறை வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி. “துப்பாய துப்பாக்கி”
என்பது சொற்பின் வருநிலையணி. துப்பாய தூஉம் என்பது இசைநிறை யளபெடை.
**
கலைஞர் உரை
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை
பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும்
உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.
**
Rev. Dr. G.U.Pope Translation
The rain makes pleasant food for eaters rise;
As food itself, thirst-quenching draught supplies.
**
Yogi Shuddhananda Translation
The rain begets the food we eat
And forms a food and drink concrete.
**
13
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி.
பரிமேலழகர் உரை
விண் இன்று பொய்ப்பின் – மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்; விரி நீர் வியன் உலகத்துள் – கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்; நின்று உடற்றும் பசி – நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி. (கடலுடைத்தாயினும் அதனால் பயன் இல்லை யென்பார், ‘விரி நீர் வியன் உலகத்து’ என்றார். உணவு இன்மையின் பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.)
**
மு.வரதராசனார் உரை
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
**
மணக்குடவர் உரை
வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரிந்த நீரினையுடைய அகன்ற வுலகத்திடத்தே பசியானது நின்று வருத்தாநிற்கும், எல்லாவுயிர்களையும்.
பொய்த்தல்- தன்றொழில் மறுத்தல். இது பசி என்று பொதுப்படக் கூறியவதனான் மக்களும் விலங்கும் பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்ப முறுமென்று கூறிற்று.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
விண் இன்று பொய்ப்பின் – வேண்டிய காலத்து மழை பெய்யாது நின்றுவிடுமாயின்; விரிநீர் வியன் உலகத்துள் – பரந்த கடலாற் சூழப்பட்ட அகன்ற நிலவுலகத்தின்கண்; பசிநின்று உடற்றும் – பசி நிலைத்துநின்று உயிர்களை வருத்தும்.
ஞாலத்தின் (பூமியின்) முக்காற் பங்கு என்றும் வற்றாக் கடலாயினும் அதனாற் பஞ்சக்காலத்திற் பயனில்லையென்பதை, விரிநீர் என்னும் அடைமொழியாற் குறிப்பாக வுணர்த்தினார், வருத்துதலாவது உணவு விளையாமையால் மீண்டும் மழை பெய்யும்வரை கொல்லுதலும் துன்புறுத்துதலும். பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது பெய்யாமை பொய்த்தது போலாயிற்று.
**
கலைஞர் உரை
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்துவிட்டால் பசியின்
கொடுமை வாட்டி வதைக்கும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
If clouds. The promised rain, deceive, and in the sky remain,
Famine, sore torment, stalks o’er earth’s vast ocean-girdled plain.
**
Yogi Shuddhananda Translation
Let clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth.
**
14
ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
பரிமேலழகர் உரை
உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் – மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். (‘குன்றியக்கால்’ என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.)
**
மு.வரதராசனார் உரை
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர்கொண்டு உழ மாட்டார்.
**
மணக்குடவர் உரை
ஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து.
இஃது உழவாரில்லை யென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் – மழையென்னும் வருவாய் வரவற்றுவிடின்; உழவர் ஏரின் உழார் – உலகத்திற்கு ஆணியாகிய உழவர் தமக்கும் பிறர்க்கும் உணவு விளைவிக்குமாறு ஏரால் உழுதலைச் செய்யார்.
சுழல்காற்று மழையைக் குறிக்கும் புயல் (Cyclone) என்னும் சொல் இங்குப் பொதுப்பொருளில் ஆளப்பட்டது. பசி உயிர்களை வருத்துதற்குக் கரணியங் கூறியவாறு.
உழாஅர் என்பது இசைநிறை யளபெடை. குன்றியக்கால் என்பது குன்றிக்கால் எனக்குறைந்து நின்றது. குன்றுதல் இங்கு இன்மையாதல்.
**
கலைஞர் உரை
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில்
குன்றிவிடும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
If clouds their wealth on waters fail on earth to pour,
The ploughers plough with oxen’s sturdy team no more.
**
Yogi Shuddhananda Translation
Unless the fruitful shower descend,
The ploughman’s sacred toil must end.
**
15
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉ மெல்லா மழை.
பரிமேலழகர் உரை
கெடுப்பதூஉம் – பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்; கெட்டார்க்குச்சார்வாய் மற்று ஆங்கேஎடுப்பதூஉம்-அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற் போல எடுப்பதூஉம்; எல்லாம் மழை – இவை எல்லாம் வல்லது மழை. (‘மற்று’ வினை மாற்றின்கண் வந்தது, ஆங்குஎன்பது மறுதலைத் தொழிலுவமத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், ‘கெட்டார்க்கு என்றார்’. ‘எல்லாம்’ என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளால் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. ‘வல்லது’ என்பது அவாய் நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு.)
**
மு.வரதராசனார் உரை
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்குத் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
**
மணக்குடவர் உரை
பெய்யாது நின்று எல்லாப் பொருளையுங் கெடுப்பதும் அவை கெடப் பட்டார்க்குத் துணையாய்த் தான் பெய்து பொருள்களெல்லாவற்றையும் அவ்விடத்தே யுண்டாக்குவதும் மழை.
இஃது இரண்டினையுஞ் செய்யவற்றென்றவாறு.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
கெடுப்பதூஉம் – பெய்யாதுநின்று பண்பாட்டிலும் தொழிலிலும் மக்களைக் கெடுப்பதும்; கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் – அங்ஙனங் கெட்டார்க்குத் துணையாகப்பெய்து முன்பு கெடுத்தது போன்றே பின்பு அவரைத் தூக்கிவிடுவதும்; எல்லாம் மழை – ஆகிய எல்லாம் செய்வது மழையே.
“தனக்குமிஞ்சித் தானம்”. ஆதலால், வளமில்லாக் காலத்தில் வள்ளன்மை இல்லாதாரின் பண்பாடு கெடுவதும், விளைபொருளும் கருவிப்பொருளும் இல்லாக்காலத்தில் வணிகர் கைத்தொழிலாளர் ஆகியோரின் தொழில் கெடுவதும், இயல்பாதலாலும்; மழையில்லாப் பஞ்சக்காலம் நெடிதுங் குறிதுமாக இடையிடை நேரினும், பின்பு இறைவனருளால் மீண்டும் மழைபெய்து மக்கட்பண்பாடும் தொழிலும் முன்போல் திருந்துவதனாலும்; கெடுப்பதும் எடுப்பதுமாகிய இரு முரண்பட்ட செயலையும் மழை செய்வதாகக் கூறினார். ஆயினும், காலத்திற்கேற்ப மக்கள் நிலைமை மாறும் என்பதும், இடையிடை நிற்பினும் அறுதியாய் நின்றுவிடாது உலகம் அழியும் வரை மழைபெய்துவரும் என்பதும், மழை பெய்யாமைக்கு ஏதேனும் ஒரு கரணியம் இருத்தல்வேண்டும் என்பதும், குறிப்பாக உணர்த்தப்பெறும் உண்மைகளாகும். செல்வமிழந்தவரைக் கெட்டார் என்பது இருவகை வழக்கிலுமுண்டு.
கெடுப்பதூஉம், எடுப்பதூஉம் என்பன இன்னிசையளபெடை. ‘மற்று’ வினைமாற்றிடைச் சொல். ‘ஆங்கு’ உவமையுருபு.
**
கலைஞர் உரை
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும்,
பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும்
மழையே ஆகும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
‘Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;
As, in the happy days before, it bids the ruined rise.
**
Yogi Shuddhananda Translation
Destruction it may sometimes pour,
But only rain can life restore.
**
16
விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
பசும்புற் றலைகாண் பரிது.
பரிமேலழகர் உரை
விசும்பின் துளி வீழின் அல்லால் – மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது – வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது. (‘விசும்பு’ ஆகு பெயர். ‘மற்று’ வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.)
**
மு.வரதராசனார் உரை
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.
**
மணக்குடவர் உரை
வானின்று துளிவீழினல்லது அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது.
ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும். இஃது ஓரறிவுயிருங் கெடுமென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
விசும்பின் துளிவீழின் அல்லால் – வானத்தினின்று மழைத்துளி விழுந்தாலன்றி; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பு அரிது – பின் அப்பொழுதே பசும்புல் நுனியையும் காண்பது அரிதாகும்.
‘மற்று’ விளைவு குறித்த பின்மைப் பொருளிடைச்சொல். ஆங்கே என்றது தேற்றமும் விரைவும் பற்றிய காலவழுவமைதி. புற்றலை என்பது புன்னிலம் என்றுமாம். ஒரு நாட்குள் முளைக்கும் புல்லும் இல்லையெனின், மற்ற மரஞ்செடி கொடிகளின் இன்மையைச் சொல்லவேண்டுவதில்லை. ஓரறிவுயிர் இல்லையெனின் மற்ற ஐவகையுயிர்களும் நாளடைவில் இராவென்பதாம். இழிவு சிறப்பும்மை செய்யுளால் தொக்கது.
**
கலைஞர் உரை
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை
காண்பது அரிதான ஒன்றாகும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
If from the clouds no drops of rain are shed,
‘Tis rare to see green herb lift up its head.
**
Yogi Shuddhananda Translation
No grassy blade its head will rear,
If from the cloud no drop appear.
**
17
நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின்.
பரிமேலழகர் உரை
நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் – அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தான் தடிந்து நல்காது ஆகி விடின் – மேகம் தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின். (உம்மை சிறப்பு உம்மை. தன் இயல்பு குறைதலாவது நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையும் ஆம். ஈண்டுக் குறைத்தல் என்றது முகத்தலை. அது “கடல்குறை படுத்தநீர் கல் குறைபட வெறிந்து”(பரி.பா.20) என்பதனாலும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம். இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.
**
மு.வரதராசனார் உரை
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
**
மணக்குடவர் உரை
நிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறையும், மின்னி மழையானது பெய்யாவிடின்.
தடிந்தென்பதற்கு, கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முளர். இது நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினானும் பொருட்கேடு கூறினார், பொருள்கெட இன்பங்கெடு மென்பதனால் இன்பக்கேடு கூறிற்றிலர்.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் – மாபெருங்கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தடிந்துதான் நல்காதாகிவிடின் – முகில் (மேகம்) அதனைக் குறைத்துப் பின்புதான் அதன்கண் பெய்யாது விடின்.
தன்னியல்பு குறைதலாவது மீன் முதலியன கலியாமையும் முத்து முதலியன விளையாமையும். கடலைக் குறைத்தலென்பது அதில் நீரை முகத்தல். இது பண்டை நம்
பிக்கை.
‘கடல்குறை படுத்தநீர் கல்குறைபட வெறிந்து’ என்று பரிபாடலும் (20),
“இலங்க லாழியி னான்களிற் றீட்டம்போற்
கலங்கு தெண்டிரை மேய்ந்து கனமழை”.
என்று சிந்தாமணியும் (32) கூறுதல் காண்க. முகப்பது முகில். முகந்தபின் மேலெழுவது எழிலி. கடல்நீர் ஆவியாக மாறி மேலெழுவது முகிலாவதால், பண்டை நம்பிக்கையும் ஒருமருங்கு உண்மை யானதே. மழைக்கு மூலமாகிய மாபெரு நீர்நிலைக்கும் மழை வேண்டும் என்று மழையின் சிறப்புக் கூறியவாறு.
உம்மை சிறப்பும்மை.
**
கலைஞர் உரை
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப்
பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து
புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான்
அந்தச் சமுதாயம் வாழும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
If clouds restrain their gifts and grant no rain,
The treasures fail in ocean’s wide domain.
**
Yogi Shuddhananda Translation
The ocean’s wealth will waste away,
Except the cloud its stores repay.
**
18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கு மீண்டு.
பரிமேலழகர் உரை
வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது – தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல் – மழை பெய்யாதாயின் (நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் ‘செல்லாது’ என்றார். ‘உம்மை’ சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.)
**
மு.வரதராசனார் உரை
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
**
மணக்குடவர் உரை
சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண்.
மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
வானம் வறக்குமேல் – மழை பெய்யாவிடின்; ஈண்டு வானோர்க்கும் பூசனைசிறப்பொடு செல்லாது – இவ்வுலகில் தேவர்க்கும் அன்றாடு பூசையும் ஆட்டைவிழாவும் நடைபெறா.
அன்றாடு பூசை, கதை நிகழ்ச்சி குறியாதும் கொண்டாட்ட மின்றியும் ஒரு சிலரான அக்கம் பக்கத்தார் மட்டும் கலந்தும் கலவாமலும், வழக்கம்போற் சிற்றளவான வழிபாடாகக் கோவிற்குள் மட்டும் நடைபெறுவது; ஆட்டைவிழா ஒருகதை நிகழ்ச்சி குறித்தும் கொண்டாட்டத்துடனும் நாட்டு மக்களையெல்லாம் வரவழைத்தும், பேரளவாக ஊர்வலஞ்செய்து நடைபெறுவது. உம்மை சிறப்பும்மை.
பூசுதல் = கழுவுதல், தெய்வப் படிமையை நீரால் துப்புரவாக்குதல். பூசு-பூசி. பூசித்தல்=பூச்சாத்தியும் தேங்காய் பழம் முதலியன படைத்தும் வழிபடுதல். உழவு என்பது பயிர்த்தொழிலின் பின்வினைகளையும் குறித்தல்போல், பூசித்தல் என்பதும் வழிபாட்டின் பின்வினைகளையும் குறித்தது.
பூசி-பூசை. ஒ.நோ: ஆசு (பற்று) — ஆசி (அவாவு)-ஆசை (அவா).பூசி-பூசனை,பூசனம். ஐ,அனை,அனம் என்பன தமிழ் ஈறுகளே. பூசை-பூசாரி. ஆரி தலையாரி என்பதிற்போல் ஓர் ஈறு. பூசாச்சாரி (பூசை+ஆச்சாரி) என்னும் வழக்கு வடமொழியிலுமில்லை.
பூ செய் என்பது பூசை என்றாயிற்றென்று கொள்வது பொருந்தாது.
பூசி-பூஜ் (வ.), பூசை-பூஜா(வ.), பூசனம்-பூஜன(வ.), பூசனை-பூஜனா(வ.).
வேத ஆரியர்க்கு வேள்வி வேட்டலேயன்றிப் படிமைப்பூசையும் கோவில் வழிபாடும் இல்லை. பூஜ் என்னும் சொல்லும் வேதத்திலில்லை. பாரதம் முதலிய பிற்கால வடபனுவல்களிலேயே அது வழங்குகின்றது.
**
கலைஞர் உரை
வானமே பொய்த்து விடும்போது, அதன் பின்னர் அந்த வானத்தில்
வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான்
ஏது?
**
Rev. Dr. G.U.Pope Translation
If heaven grow dry, with feast and offering never more,
Will men on earth the heavenly ones adore.
**
Yogi Shuddhananda Translation
The earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.
**
19
தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
பரிமேலழகர் உரை
வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா – அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் – மழை பெய்யாது ஆயின். (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.)
**
மு.வரதராசனார் உரை
மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.
**
மணக்குடவர் உரை
தானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத்துக்கண் மழை பெய்யாதாயின்.
இது தானமும் தவமுங் கெடுமென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
வானம் வழங்காதெனின் – மழை பெய்யாவிடின்; வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா-இப் பரந்தவுலகின்கண் அறக்கொடையும் தவமும் ஆகிய இருவகை நல்வினைகளும் செய்யப்பெறா.
தானம் என்பது, நல்வழியில் ஈட்டப்பட்ட பொருளை, தெய்வப் பற்றுக் கரணியமாகக் கோவிற்கும் அடியார்க்கும் , அருளுடைமை கரணியமாக இரப்போர்க்கும், ஈடின்றிக் கொடுத்தல். தவம் என்பது ஐம்புலவடக்கம் பற்றித் துறவறத்தார் கடுமையாகவும், மகப்பேறு முதலியன கருதி இல்லறத்தார் எளிமையாகவும், உடலை வருத்துதல். கடுமையாக வருத்தும் வகைகள் துறவறவியலிற் கூறப்பெறும், எளிமையாக வருத்தும் வகைகள் உண்டி சுருக்குதல், எளிய வுடையுடுத்தல், இன்பம் விலக்கல் முதலியன.
“மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்.”
என்று திருவள்ளுவரும்,
“முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமந்து” என்று பட்டினத்தடிகளும் பாடியிருப்பதால், தவம் துறவறத்தின் மேலதென்று வரையறுப்பது பொருந்தாது. தானம் பிறர்க்குக்கொடுப்பது; தவம் தன்னை ஒடுக்குவது.
தானம் என்பது தென்சொல்லென்பதை என் ‘வடமொழி வரலாறு’ என்னும் நூலிற் கண்டு தெளிக.
**
கலைஞர் உரை
இப்பேருலகில் மழை பொய்த்துவிடுமானால் அது, பிறர் பொருட்டுச்
செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும்
தடங்கலாகும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
If heaven its watery treasures ceases to dispense,
Through the wide world ceases gifts, and deeds of ’penitence’.
**
Yogi Shuddhananda Translation
Were heaven above to fail below
Nor alms nor penance earth would show.
**
20
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.
பரிமேலழகர் உரை
யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் – எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது – அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது. ( பொருள் இன்பங்களை ‘உலகியல்’ என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின், இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின்,அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், ‘நீர் இன்று அமையாது உலகம் எனின்’ என்றார். இதனை,’நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது’ என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.)
**
மு.வரதராசனார் உரை
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
**
மணக்குடவர் உரை
நீரையின்றி யுலகம் அமையாதாயின் யாவர்க்கும் மழையையின்றி ஒழுக்கம் உண்டாகாது.
ஒழுக்கம்- விரதம். இஃது ஆசாரங்கெடுமென்றது. இவை மூன்றினானும் நான்கறமுங் கெடுமென்று கூறினார்.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
யார் யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் – எத்துணை உயர்ந்தவர்க்கும் நீரின்று உலக வாழ்வு நடவாதாயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது – அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் மழையின்றி நிகழாது.
உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆளும் ஒப்புயர்வற்ற வேந்தனாயினும், மழையின்றி வாழும் வழியில்லை யென்பதாம்.
**
கலைஞர் உரை
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற
நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட
வேண்டும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
When water fails, functions of nature cease, you say;
Thus when rain fails, no men can walk in ‘duty’s ordered way’.
**
Yogi Shuddhananda Translation
Water is life that comes from rain
Sans rain our duties go in vain.
**