4 அறன் வலியுறுத்தல்

அதிகாரம் 4.

அறன் வலியுறுத்தல்

31       

சிறப்பீனும் செல்வமு மீனு மறத்தினூஉங்

காக்க மெவனோ வுயிர்க்கு.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள் ஏனைப் பொருளும் இன்பமும் போலாது, அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். ‘சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல'(புறநா.31) என்றார் பிறரும்.)இல்லறவியல்

சிறப்பு ஈனும் – வீடுபேற்றையும் தரும்; செல்வமும் ஈனும் – துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் – ஆதலான் உயிர்கட்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் – ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது? (எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு ‘சிறப்பு’ எனப்பட்டது. ஆக்கம் தருவதனை ‘ஆக்கம்’ என்றார். ஆக்கம் : மேன் மேல் உயர்தல், ஈண்டு ‘உயிர்’ என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனால் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது.

**

மு.வரதராசனார் உரை

அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?

**

மணக்குடவர் உரை

முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை.

இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று

கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

சிறப்பு ஈனும் – மறுமையில் விண்ணுலக வின்பத்தையும் வீடுபேற்றையுந் தரும்; செல்வமும் ஈனும் – இம்மையிற் செல்வத்தையுந்தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவனோ – ஆதலால் மக்களுயிர்க்கு அறத்தைவிடச் சிறந்த ஆக்கம் எதுதான்?

எல்லாப் பேற்றுள்ளும் சிறந்த பேரின்ப வீடும் சிற்றின்பத்துட் சிறந்த விண்ணின்பமும் சிறப்பெனப் பெற்றன. செல்வமும் விண்ணின்பமும் இல்லறத்தார்க்கும் வீடு துறவறத்தார்க்கும் உரியனவாம். ஆகுவது ஆக்கம். ஆகுதல் மேன்மேலுயர்தல் ‘அறத்தினூஉங்கு’ இன்னிசை யளபெடை. ஆக்கம் என்றது அகற்கேதுவை. ஓ அசைநிலை.

**

கலைஞர் உரை

சிறப்பையும்,  செழிப்பையும்   தரக்கூடிய    அறவழி   ஒன்றைத்தவிர

ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

**

Rev. Dr. G.U.Pope Translation

It yields distinction, yields prosperity: what gain

Greater than virtue can a living man obtain?

**

Yogi Shuddhananda Translation

From virtue weal and wealth outflow;

What greater good can mankind know?

**

32       

அறத்தினூஊங் காக்கமு மில்லை யதனை

மறத்தலினூங் கில்லையாங் கேடு.

பரிமேலழகர் உரை

அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை – ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை – அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. (‘அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை’. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.

**

மணக்குடவர் உரை

ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை.

இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை – ஒருவர்க்கு அறஞ்செய்வதிலும் சிறந்த ஆக்கவழியுமில்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை – அதை மறந்து செய்யாது விடுவதினும் பெரிய கெடுதல்வழியு மில்லை.

‘அறத்தினூஉங்கு’ இன்னிசை யளபெடை. செய்யாமையாகிய எதிர்மறையொடு வேற்றுமைப் படுத்திக் காட்டற்கு, மேற்கூறிய உடன்பாட்டுச் சொல்லியத்தை (வாக்கியத்தை) வழிமொழிந்தார்.

**

கலைஞர் உரை

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய

வாழ்க்கைக்கு  ஆக்கம்  தரக்   கூடியது   எதுவுமில்லை; அந்த அறத்தை

மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

**

Rev. Dr. G.U.Pope Translation

No greater gain than virtue aught can cause;

No greater loss than life oblivious of her laws.

**

Yogi Shuddhananda Translation

Virtue enhances joy and gain;

Forsaking it is fall and pain.

**

33       

ஒல்லும் வகையா னறவினை யோவாதே

செல்லும்வா யெல்லாஞ் செயல்.

பரிமேலழகர் உரை

ஒல்லும் வகையான் – தத்தமக்கு இயலுந்திறத்தான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் – அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க. (இயலுந்திறம் ஆவது – இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

**

மணக்குடவர் உரை

தமக்கியலுந் திறத்தானே, அறவினையை ஒழியாதே செய்யலாமிடமெல்லாஞ் செய்க.

இயலுந்திறமென்பது மனமொழிமெய்களும் பொருளும். செல்லும்வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாகிய பல விடங்களும் ஒழியாதென்றது நாடோறு மென்றது. இஃது அறம் வலி தென்றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அறவினை – அறமாகிய நல்வினையை; ஒல்லும் வகையான் – தத்தமக் கியன்றவாறு; செல்லும்வாய் எல்லாம் ஒவாதே செயல் – அது நடை பெறக் கூடிய வழியெல்லாம் இடைவிடாது செய்க.

ஒல்லும் வகையாவது, இல்லற வினையை இடம்பொருளேவற்கு ஏற்பவும், துறவறவினையை உடம்புநிலைக்கும் உளநிலைக்கும் ஏற்பவும், செய்தல். செல்லும் வாய்கள் மனம் மொழி மெய் என்னும் முக்கரணங்கள். அவற்றாற் செய்யப் பெறுவன நல்லெண்ணம் நன் சொல் நற்செயல் என்பன. வாய் என்பது வழியை மட்டுமன்று இனத்தையுங் குறித்தலால், ‘செல்லும் வாய்’ என்பன எல்லா அறத் துறைகளுமாம்.

**

கலைஞர் உரை

செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும்

தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

To finish virtue’s work with ceaseless effort strive,

What way thou may’st where’er thou see’st the work may thrive.

**

Yogi Shuddhananda Translation

Perform good deeds as much you can

Always and everywhere, o man!

**

34       

மனத்துக்கண் மாசில னாத லனைத்தற

னாகுல நீர பிற.

பரிமேலழகர் உரை

மனத்துக்கண் மாசு இலன் ஆதல் – அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அனைத்து அறன் – அவ்வளவே அறம் ஆவது; பிற ஆகுலநீர – அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா, ஆரவார நீர்மைய; (குற்றம் – தீயன சிந்தித்தல். பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், ‘ஆகுல நீர’ என்றார். மனத்து மாசுடையான் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

**

மணக்குடவர் உரை

ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய.

பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று. மேல் நான்கு பொருளைக் கடியவேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் – ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே அறமாவது; பிற ஆகுல நீர – மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன.

மனம் தூய்மையாயிருப்பின் அதன் வழிப்பட்ட முக்கரண வினைகளும் தூய்மையாயிருக்குமாதலின், மாசிலா மனமே அறத்திற்கு அடிப்படை என்றவாறு. மனம் தூயதாயிருப்பின் வெளிக்கோலம் வேண்டாததாயும், தீயதாயிருப்பின் வெளிக்கோலம் பிறரை ஏமாற்றுவதாயுமிருத்தலின், இருவழியும் பயனின்மை நோக்கி வெளிக் கோலத்தை வீண் ஆரவாரமென்றார். ‘ஆதல்’ வியங்கோளுமாம்.

**

கலைஞர் உரை

மனம்  தூய்மையாக  இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர

வேறொன்றுமில்லை.

**

Rev. Dr. G.U.Pope Translation

Spotless be thou in mind! This only merits virtue’s name;

All else, mere pomp of idle sound, no real worth can claim.

**

Yogi Shuddhananda Translation

In spotless mind virtue is found

And not in show and swelling sound.

**

35       

அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு

மிழுக்கா வியன்ற தறம்.

பரிமேலழகர் உரை

அழுக்காறு – பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா – புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி – அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்- அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம் – இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது. (இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.

**

மணக்குடவர் உரை

மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ்சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும்.

பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்குமென்று கூறிய அறம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அழுக்காறு – பிறராக்கம் பொறாமையும்; அவா – அவ்வாக்கத்தின்மேற் செல்லும் ஆசையும்; வெகுளி – அதைப் பெறாதவிடத்து எழும் சினமும்; இன்னாச் சொல் – அது பற்றிவருங் கடுஞ்சொல்லும்; நான்கும் இழுக்கா இயன்றது அறம் – ஆகிய இந் நான்கையும் விலக்கி நடந்ததே அறமாவது. (இழுக்கா = இழுக்கி )

**

கலைஞர் உரை

பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல்  ஆகிய

இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

‘Tis virtue when, his footsteps sliding not through envy, wrath,

Lust, evil speech-these four, man onwards moves in ordered path.

**

Yogi Shuddhananda Translation

Four ills eschew and virtue reach,

Lust, anger, envy, evil-speech.

**

36       

அன்றறிவா மென்னா தறம்செய்க மற்றது

பொன்றுங்காற் பொன்றாத் துணை.

பரிமேலழகர் உரை

அன்று அறிவாம் என்னாது அறம் செய்க – ‘யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்’ எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை – அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். (‘மற்று’ என்பது அசைநிலை. ‘பொன்றாத் துணை’ என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது.

**

மு.வரதராசனார் உரை

இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.

**

மணக்குடவர் உரை

பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம்.

இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அன்று அறிவாம் என்னாது அறம் செய்க – யாம் இன்று இளைமையாயிருப்பதாற் பிந்தி முதுமையிற் செய்வே மென்று கடத்திவையாது இன்றிருந்தே அறவினையைச் செய்து வருக; மற்று அது பொன்றுங்கால் பொன்றாத் துணை.பின்பு அவ்வறம் இறக்குங் காலத்து இறவாத் துணையாம்.

இறத்தலாவது உடம்பினின்றும் உயிர் நீங்குதல். உயிர் நீங்கிய உடம்பு அழியவும் அதனாற் செய்யப்பட்ட அறம் அதனோடழியாது உயிரோடொன்றி நின்று உதவுவதால், பொன்றாத்துணையாயிற்று. நிலையாத உடம்பு நிலையும் பொழுதே நிலைக்கும் பயனைப் பெற்றுக் கொள்க என்பது ஆசிரியரின் அன்பார்ந்த அறிவுரை.

**

கலைஞர் உரை

பிறகு  பார்த்துக்கொள்ளலாம்   என்று  நாள்  கடத்தாமல் அறவழியை

மேற்கொண்டால்   அது   ஒருவர்   இறந்தபின்  கூட  அழியாப் புகழாய்

நிலைத்துத் துணை நிற்கும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Do deeds of virtue now, Say not, ‘To-morrow we’ll be wise’;

Thus, when thou diest, shalt thou find a help that never dies.

**

Yogi Shuddhananda Translation

Do good enow; defer it not

A deathless aid in death if sought.

**

37       

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோ டூர்ந்தா விடை.

பரிமேலழகர் உரை

அறத்து ஆறு இது என வேண்டா – அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை – சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும். (பயனை ‘ஆறு’ என்றார், பின்னது ஆகலின். ‘என’ என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், ‘பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது. தன்னானே உணரப்படும். (பயனை ‘ஆறு’ என்றார், பின்னது ஆகலின் ‘என’ என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், ‘பொறுத்தாணோடு ஊர்ந்தானிடை’ என்றதனால் காட்சியளவையும் பெற்றாம், உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது.

**

மு.வரதராசனார் உரை

பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

**

மணக்குடவர் உரை

நீங்கள் அறநெறி யித்தன்மைத்தென் றறிய வேண்டா, சிவிகைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காணலாம்.

இது பொன்றினாலுந் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அறத்து ஆறு இது என வேண்டா – அறத்தின் பயன் இதுவென்று உரையளவையால் ஒருவர் அறிவிக்க வேண்டியதில்லை ; சிவிகை பொறுத்தானோடு ஊந்தான் இடை – பல்லக்கைச் சுமப்பானோடு அதில் ஏறிச் செல்வானிடைப் பட்ட காட்சியளவையாலேயே அது அறியப்படும்.

இதுவே ஆசிரியர் கருத்தென்பது, பின்னர் அவர் ஆங்காங்கு நூலிற் கூறும் கூற்றுக்களாலும், பல்பிறவியும் பழவினையும் பற்றி அவர்க்கிருந்த நம்பிக்கையாலும்,

“செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்

எய்த வருமோ இருநிதியம்-வையத்து

அறும்பாவ மென்னவறிந் தன்றிடார்க் கின்று

வெறும்பானை பொங்குமோ மேல்”.

என்னும் ஒளவையார் கூற்றாலும்,

(நல்வழி-17)

“Need not in words to dwell on virtue’s fruits: compare .The man in litter borne with them that toiling bear!”

என்னும் போப்பையர் மொழிபெயர்ப்பாலும், அறியப்படும்.

பல்லக்கைச் சுமப்பாரையும் அதில் ஏறிச் செல்வானையுங் காட்டி இதுதான் அறத்தின் பயன் என்று கூறாதே. என்பதை இக்குறளுரையாகக் கூறுவது ; இக்காலத்திற் கேற்குமேயன்றி ஆசிரியர் கருத்தாகாது.

ஆறென்பது வழி, அறத்தின் வழிப்பட்ட பயனை ஆறென்றார் அறியப்படும் என்பது சொல்லெச்சம்.

**

கலைஞர் உரை

அறவழியில் நடப்பவர்கள்  பல்லக்கில்  உட்கார்ந்து   செல்பவர்களைப்

போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும்   எளியவாகக்

கருதி  மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை

ஆட்படுத்திக்  கொண்டவர்களோ  பல்லக்கைத்  தூக்கிச் சுமப்பவர்களைப்

போல   இன்பத்திலும்   அமைதி  கொள்ளாமல்,  துன்பத்தையும் தாங்கிக்

கொள்ளும்    மனப்பக்குவமின்றி    வாழ்வையே    பெரும்  சுமையாகக்

கருதுவார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Needs not in words to dwell on virtue’s fruits; compare

The man in litter borne with them that toiling bear!

**

Yogi Shuddhananda Translation

Litter-bearer and rider say

Without a word, the fortune’s way.

**

38       

வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்குங் கல்.

பரிமேலழகர் உரை

வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் – செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் – அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம். (ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன : அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் ‘பஞ்சக்கிலேசம்’ என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.

**

மு.வரதராசனார் உரை

ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

**

மணக்குடவர் உரை

ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம்.

இது வீடு தருமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் – செய்யாது வீணாகக் கழியும் நாள் இல்லாவாறு ஒருவன் நாள்தோறும் அறத்தைச் செய்துவருவானாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் – அச்செயல் அவன் இவ்வுலகில் உடம்போடுகூடி வாழும் நாள் வரும் வழியை அடைக்குங் கல்லாகும்.

‘படாஅமை’ இசைநிறை யளபெடை. வாழ்நாள் வழியடைத் தலாவது பிறவியை நீக்கி வீடுபெறுவித்தல்.

**

கலைஞர் உரை

பயனற்றதாக   ஒருநாள்கூடக்   கழிந்து   போகாமல்,     தொடர்ந்து

நற்செயல்களில்  ஈடுபடுபவருக்கு    வாழ்க்கைப்   பாதையைச்    சீராக்கி

அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

If no day passing idly, good to do each day toil,

A Stone ’t will be to block the way of future days of moil.

**

Yogi Shuddhananda Translation

Like stones that block rebirth and pain

Are doing good and good again.

**

39       

அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்

புறத்த புகழு மில.

பரிமேலழகர் உரை

அறத்தான் வருவதே இன்பம் – இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்த – அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இல – அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல. (‘ஆன்’ உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, ‘தூங்கு கையான் ஓங்கு நடைய’ (புறநா.22) என்புழிப்போல. இன்பம் – காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் ‘பிறனில் விழைவு’ முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின் ‘புறத்த’ என்றார். அறத்தோடு வாராதன ‘புகழும் இல’ எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.

**

மணக்குடவர் உரை

அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம்.

இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அறத்தான் வருவதே இன்பம் – அறவழியால் ஒருவர்க்கு வரும் இன்பமே உண்மையான இன்பமாவது; மற்று எல்லாம் புறத்த-வேறு தீயவழியில் வருவனவெல்லாம் இன்பம்போல் தோன்றினும் துன்பத்தின்பாற் படுவனவே; புகழும் இல-அதோடு அவை புகழுடையனவும் ஆகா.

இங்கு இன்பமென்று பொதுப்படக் கூறியது உலகின்பமாகிய சிற்றின்பத்தை; அறவழியல்லது வேறுவழியிற் பேரின்பம் ஒருவன் பெறமுடியாதாகலின். உலக வின்பம் ஒருபுலவின்பமும் பல புலவின்பமும் ஐம்புலவின்பமாகிய முற்றின்பமும் என முத்திறப்படும். வண்ணவோவியமும் எழுவும்யாழும் இன்னடிசிலும் நறுவிரையும் மெல்லணைக் கட்டிலும் போல்வன, ஒருபுலவின்பமே தருவன; அழகிய வளமனையும் பல்வகைப் பழுமரக்காவும் போல்வன பலபுலவின்பந் தருவன; கட்டழகியான கற்புடை மனைவியெனின் ஐம்புலவின்பமும் ஒருங்கே தர வல்லாள். இனி, இன்பப் பொருள் போன்றே அதனைக்கொள்ளும் செல்வப்பேறும் உள்ளத்திற்கு இன்பந்தருவதாகும். காசு தானாக இன்பந்தராவிடினும் இன்பப் பொருள்களைக் கொள்ளுங் கருவியாதல் காண்க. விலையாகக் கூடிய எல்லாப் பொருளும் காசுபோற் பயன் படுவனவே.

ஒருவன் அறவழியில் தேடிய தன்பொருளை நுகர்வதே புகழோடு கூடிய இன்பமாம்;பிறன்பொருளை நுகர்வது பழியோடு கூடிய துன்பமாம். பிரிநிலை யேகாரம் பின்னுங் கூறப்பட்டது.

**

கலைஞர் உரை

தூய்மையான   நெஞ்சுடன்  நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற

புகழால்  ஏற்படுவதே   இன்பமாகும். அதற்கு மாறான வழியில்   வருவது

புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.

**

Rev. Dr. G.U.Pope Translation

What from virtue floweth, yieldeth dear delight;

All else extern, is void of glory’s light.

**

Yogi Shuddhananda Translation

Weal flows only from virtue done

The rest is rue and renown gone.

**

40       

செயற்பால தோரு மறனே யொருவற்

குயற்பால தோரும் பழி.

பரிமேலழகர் உரை

ஒருவற்குச் செயற்பாலது அறனே – ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே. ( ‘ஓரும்’ என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் ‘பழி’ என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.)

**

மு.வரதராசனார் உரை

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத் தக்கது அறமே, செய்யாமல் காத்துக் கொள்ளத் தக்கது பழியே.

**

மணக்குடவர் உரை

ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே, தப்பும் பகுதியது பழியே.

மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

ஒருவற்குச் செயற்பாலது அறனே-ஒருவன் என்றுஞ் செய்யத்தக்கது நல்வினையே; உயற்பாலது பழியே-செய்யாது விடத்தக்கது தீவினையே.

‘ஓரும்’ ஈரிடத்தும் அசைநிலை. ஆயினும், முதற்காலத்தில் ‘ஆராய்ந்தறியும்’ என்று பொருள்படும் ஏவற்பன்மை அல்லது பெயரெச்சமாகவே அது வழங்கியிருத்தல் வேண்டும். பிரிநிலையேகாரம் பின்னுங் கூட்டப்பட்டது.

**

கலைஞர் உரை

பழிக்கத்   தக்கவைகளைச்   செய்யாமல்   பாராட்டத்தக்க   அறவழிச்

செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

‘Virtue’ sums the things that should be done;

‘Vice’ sums the things that man should shun.

**

Yogi Shuddhananda Translation

Worthy act is virtue done

Vice is what we ought to shun.

**

×