18ஆம் அதிகாரம் (வெஃகாமை)

அதிகாரம் 18.

வெஃகாமை

171      

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்

குற்றமு மாங்கே தரும்

பரிமேலழகர் உரை

[அஃதாவது, பிறர்க்குரிய பொருளை வௌவக் கருதாமை. பிறர் உடைமை கண்ட வழிப் பொறாமையே அன்றி, அதனைத் தான் வௌவக் கருதுதலும் குற்றம் என்றற்கு, இஃது அழுக்காறாமையின் பின் வைக்கப்பட்டது.)

நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் – ‘பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று’ என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்; குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் – அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச்செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும். (குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார்.’நன்பொருள் வெஃகின்’என்றார், ‘பொன்ற’ என்பது ‘பொன்றி’ எனத் திரிந்து நின்றது. ‘செய்து’ என்பது சொல்லெச்சம்.)

**

மு.வரதராசனார் உரை

நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டு குற்றமும் அப்பொழுதே வந்து சேரும்.

**

மணக்குடவர் உரை

நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின் அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம்,

இது சந்தான நாச முண்டாமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

நடுவு இன்றி நல் பொருள் வெஃகின்-பிறர் பொருளையும் தம்பொருள்போற் கருதும் நடுவுநிலைமையில்லாது அவரது நற்செல்வத்தின்மேல் ஒருவன் ஆசைவைப்பின்; குடிபொன்றி – அவன் குடிகெட்டு; குற்றமும் ஆங்கே தரும் – அத்தீய ஆசைவைப்பு அவனுக்கு மறுமைத் துன்பத்திற்கேதுவாகிய தீவினைக் குற்றத்தையும் உண்டாக்கும்.

அறவழியில் ஈட்டப்பட்டு நல்வழியிற் செலவிடப்பெறும் செல்வத்தை ‘நன்பொருள்’ என்றார். பொன்றி என்பது பொன்றியபின் என்னும் பொருளது.

**

கலைஞர் உரை

மனச்சான்றை   ஒதுக்கிவிட்டுப்    பிறர்க்குரிய    அரும் பொருளைக்

கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும்   வந்து

சேரும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

With soul unjust to covet others’ well-earned store,

Brings ruin to the home, to evil opes the door.

**

Yogi Shuddhananda Translation

Who covets others’ honest wealth

That greed ruins his house forthwith.

**

172      

படுபயன் வெஃகிப் பழிப்படவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்.

பரிமேலழகர் உரை

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் – பிறர் பொருளை வௌவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வௌவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; நடுவு அன்மை நாணுபவர் – நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர். (‘நடுவு’ ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.)

**

மு.வரதராசனார் உரை

நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.

**

மணக்குடவர் உரை

தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடுபடுவன செய்யார், நடுவன்மைக்கு நாணுபவர்.

இது நடுவுநிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

நடுவு அன்மை நாணுபவர் – நடுவுநிலையன்மைக்கு அஞ்சி நாணுபவர்; படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் – பிறர் பொருளைக் கவர்வதனால் தமக்குண்டாகும் பயனை விரும்பிப் பழிக்கத் தக்க செயல்களைச் செய்யார்.

‘நடுவு’ தமவும் பிறவும் ஒப்ப நாடிப் பிறவுந் தம்போற் பேணுதல்.

**

கலைஞர் உரை

நடுவுநிலை  தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர்

தமக்கு ஒரு பயன் கிடைக்கும்   என்பதற்காக,    பழிக்கப்படும்  செயலில்

ஈடுபடமாட்டார்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Through lust of gain, no deeds that retribution bring

Do they, who shrink with shame from evey unjust thing.

**

Yogi Shuddhananda Translation

Who shrink with shame from sin, refrain

From coveting which brings ruin.

**

173      

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்.

பரிமேலழகர் உரை

சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் – பிறர்பால் வௌவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; மற்று இன்பம் வேண்டுபவர் – அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தை காதலிப்பவர். [‘பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்’ என்பார், ‘சிற்றின்பம்’ என்றார். ‘மற்றையின்பம்’ என்பது ‘மற்றின்பம்’ என நின்றது.]

**

மு.வரதராசனார் உரை

அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

**

மணக்குடவர் உரை

சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார் பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர்.

இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் – பிறர் பொருளைக் கவர்வதால் தாம் அடையும் நிலையில்லாத சிற்றளவான தீய இன்பத்தை விரும்பி அறனல்லாத செயல்களைச் செய்யார்; மற்றின்பம் வேண்டுபவர் – அறத்தால் வருவதும் நிலையானதும் பேரள வினதுமான வேறு நல்லின்பத்தை வேண்டும் அறிவுடையோர்.

இன்பத்தின் சிறுமை காலமும் அளவும் தீமையும் பற்றியது. மற்று வேறு. ஏகாரம் தேற்றம்.

**

கலைஞர் உரை

அறவழியில்   நிலையான   பயனை   விரும்புகிறவர்  உடனடிப் பயன்

கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.

**

Rev. Dr. G.U.Pope Translation

No deeds of ill, misled by base desire,

Do they, whose souls to other joys aspire.

**

Yogi Shuddhananda Translation

For spiritual bliss who long

For fleeting joy commit no wrong.

**

174      

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர்.

பரிமேலழகர் உரை

இலம் என்று வெஃகுதல் செய்யார் – ‘யாம் வறியம்’ என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்; புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் – ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார். (வெல்லுதல்: பாவ நெறிக்கண் செல்ல விடாமை. புலம்வென்ற புன்மை இல் காட்சியவர்க்கு வறுமை இன்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி: பொருள்களைத் திரிபு இன்றி உணர்தல்.)

**

மு.வரதராசனார் உரை

ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், `யாம் வறுமை அடைந்தோம்’ என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.

**

மணக்குடவர் உரை

வறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்: ஐம்புலனையும் வென்ற புன்மையிலாத தெளிவுடையார்.

இது தெளிவுடையார் செய்யா ரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் – ஐம்புலன்களையும் அடக்கிய குற்றமற்ற அறிவினையுடையோர்; இலம் என்று வெஃகுதல் செய்யார் – யாம் பொருளிலேம் என்று எண்ணி அவ்வின்மையைத் தீர்த்தற்பொருட்டுப் பிறர்பொருளை விரும்புதல் செய்யார்.

புலம் வெல்லுதல் தீய வழியில் இன்புறாது மனத்தைத்தடுத்தல். ‘புன்மையில் காட்சி’ ஐயந்திரிபறப் பொருள்களை யறிதல். அதாவது, பிறர்பொருள் மீது தமக்குரிமையில்லையென்றும், அதைக் கவரின் அது நிலையாதாகையாற் பின்னும் வறுமையுண்டாகுமென்றும் , ஆகவே , அக்கவர்வால் இருமையிலுந் துன்பமன்றி யின்பமில்லை யென்றும் , உணர்தல்.

**

கலைஞர் உரை

புலனடக்கம்  வாய்ந்த   தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப்

பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்பமாட்டார்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Men who have conquered sense, with sight from sordid vision freed,

Desire not other’s goods, e’en in the hour of sorest need.

**

Yogi Shuddhananda Translation

The truth-knowers of sense-control

Though in want covet not at all.

**

175      

அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின்.

பரிமேலழகர் உரை

அஃகி அகன்ற அறிவு என்னாம் – நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகியார் மாட்டும் வெறிய செயின் – பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின். (‘யார்மாட்டும் வெறிய செய்த’லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் ‘அறிவு என்னாம்’ என்றார்.)

**

மு.வரதராசனார் உரை

யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?

**

மணக்குடவர் உரை

நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்? எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின்,

இஃது அறிவுடையார் செய்யாரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அஃகி அகன்ற அறிவு என் ஆம் – உணர்வால் நுணுகிப் பொருளாற் பரந்த ஒருவரது கல்வியறிவால் என்ன பயனாம்? வெஃகி யார்மாட்டும் வெறிய செயின் -அவர் பிறர் பொருளை விரும்பி எல்லாரிடத்தும் தம் அறிவொடு பொருந்தாத செயல்களைச் செய்வாராயின்.

யார் மாட்டும் வெறிய செய்தலாவது , நல்லார் பொல்லார் சிறியார் , பெரியார் , இளையார் மூத்தார் , ஆடவர் பெண்டிர், நலவர் பிணியர், என்னும் வேறுபாடின்றி , இழிந்தனவுங் கடியனவுஞ் செய்தல். வெறுமை அறிவென்னும் உள்ளீடின்மை. அறிவாற் பயனின்மையின் ‘என்னாம்’ என்றார்.

**

கலைஞர் உரை

யாராயிருப்பினும்  அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர

விரும்பினால்  ஒருவருக்குப்  பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான்

என்ன பயன்?

**

Rev. Dr. G.U.Pope Translation

What gain, though lore refined of amplest reach he learn,

His acts towards all mankind if covetous desire to folly turn?

**

Yogi Shuddhananda Translation

What is one’s subtle wisdom worth

If it deals ill with all on earth.

**

176      

அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும்.

பரிமேலழகர் உரை

அருள் வெஃகி ஆற்றின் கண் நின்றான் – அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் – பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும். (இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு ‘ஆறு’ என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். ‘சூழ்ந்த துணையானே கெடும்’ எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

**

மணக்குடவர் உரை

அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன்,

இஃது அருளுடையானுங் கெடுவனென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் – அன்பை மட்டுமன்றி அருளையும் விரும்பி இல்லறத்தின்கண் நின்றவன் , பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் – பிறர் பொருளைவிரும்பி அதைக் கைப்பற்றத் தீய வழிகளை ஆராய்ந்தெண்ணிய மட்டிற்கெட்டு விடுவான்.

விருந்தோம்பல் ஒப்புரவொழுகல் ஈகை ஆகிய அறங்கட்கு அன்பும் , இரப்போர்க்கீதற்கு அருளும் வேண்டியிருப்பதால் , இல்லறமும் ஓரளவு அருள்நெறிப்பட்டதாம். ஆதலால் , இல்லறத்தைத் துறவறத்திற்கு ஆறென்று பரிமேலழகர் கூறியது முழுதும் பொருந்தாது. சூழ்வு வெளிப்பட்டவுடன் பொருளையிழக்க விருந்தாரால் தீங்குநேர்தலின் , ‘சூழக்கெடும்’ என்றார்.

**

கலைஞர் உரை

அருளை   விரும்பி  அதனை  அடைவதற்கான  வழியில் செல்பவன்

தவறிப்போய்ப்  பிறர்   பொருளை   விரும்பிப்   பொல்லாத    செயலில்

ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Though, grace desiring, he in virtue’s way stand strong,

He’s lost who wealth desires, and ponders deeds of wrong.

**

Yogi Shuddhananda Translation

Who seeks for grace on righteous path

Suffers by evil covetous wealth.

**

177      

வேண்டற்க வெஃகியா மாக்கம் வினைவயின்

மாண்டற் கரிதாம் பயன்.

பரிமேலழகர் உரை

வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க – பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக; விளைவயின் பயன் மாண்டதற்கு அரிது ஆம் – பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான். (‘விளை’ என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். இவை ஏழு பாட்டானும் வெஃகுதலின் குற்றம் கூறப்பட்டது)

**

மு.வரதராசனார் உரை

பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.

**

மணக்குடவர் உரை

பிறர்பொருளை விரும்பிப் பெறுகின்ற ஆக்கத்தை வேண்டாதொழிக; அது பயன்படுங் காலத்தில் ஆகும் பயன் நன்றாதலில்லையாதலான்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க -பிறர் பொருளைக்கவர்தலால் உண்டாகும் ஆக்கத்தை விரும்பற்க ; விளைவயின் பயன் மாண்டற்கு அரிது ஆம் – பின்பு நுகருங் காலத்தில் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதலில்லையாதலின்.

‘விளைவயின்’ வினைத்தொகை. அருமை இங்கு இன்மை மேற்று.

**

கலைஞர் உரை

பிறர்  பொருளைக்  கவர்ந்து  ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த

வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.

**

Rev. Dr. G.U.Pope Translation

Seek not increase by greed of gain acquired;

That fruit matured yeilds never good desired.

**

Yogi Shuddhananda Translation

Shun the fruit of covetousness

All its yield is inglorious.

**

178      

அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்.

பரிமேலழகர் உரை

செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் – சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை – அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம். (‘அஃகாமை’ ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதாயிற்று.)

**

மு.வரதராசனார் உரை

ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

**

மணக்குடவர் உரை

செல்வஞ் சுருங்காமைக்குக் காரண மியாதோவெனின், பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை,

இது செல்வ மழியாதென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

செல்வத்திற்கு அஃகாமை யாது எனின் – ஒருவனது செல்வம் சுருங்காமலிருத்தற்கு வழி எதுவெனின்; பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை – அது பிறனுக்குத்தேவேயான அவனது கைப்பொருளைத்தான் விரும்பாமையாம்.

அஃகாமை இங்கு ஆகு பொருளது.

**

கலைஞர் உரை

தன்னுடைய   செல்வச்   செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால்

பிறருடைய       பொருளையும்    தானே   அடைய    வேண்டுமென்று

ஆசைப்படாமலிருக்க வேண்டும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

What saves prosperity from swift decline?

Absence of lust to make another’s cherished riches thine!

**

Yogi Shuddhananda Translation

The mark of lasting wealth is shown

By not coveting others’ own.

**

179      

அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந்

திறனறிந் தாங்கே திரு.

பரிமேலழகர் உரை

அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் – இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் – திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும். (அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.

**

மணக்குடவர் உரை

அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும்,

அறனறிதல்- விரும்பாமை யென்றறிதல். இது செல்வமுண்டாமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அறன் அறிந்து வெஃகா அறிவு உடையார் – இது அறமென்று தெளிந்து பிறர்பொருளை விரும்பாத அறிவுடையாரிடத்து; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் – திருமகள் தான் அடைதற்கான திறங்களையறிந்து அவற்றின்படியே சென்றடைவாள்.

‘திரு’ ஆகுபெயர். திறங்கள் காலமும் இடமும் வினையும் பிறன் பொருளை விரும்பாமையாற் செல்வம் சுருங்காதிருப்பதோடு புதிதாகத் தோன்றவுஞ்செய்யும் என்பது இதனாற் கூறப்பட்டது.

**

கலைஞர் உரை

பிறர்    பொருளைக்    கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர்

பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Good fortune draws anigh in helpful time of need,

To him who, schooled in virtue, guards his soul from greed.

**

Yogi Shuddhananda Translation

Fortune seeks the just and wise

Who are free from coveting vice.

**

180      

இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும்

வேண்டாமை யென்னுஞ் செருக்கு.

பரிமேலழகர் உரை

எண்ணாது வெஃகின் இறல் ஈனும் – பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வௌவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் – அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும். [பகையும் பாவமும் பெருக்கலின் ‘இறல்ஈனும்’ என்றும், அப்பொருளை வேண்டி உழல்வோர் யாவரையும் கீழ்ப் படுத்தலின், ‘விறல்ஈனும்’ என்றும் கூறினார். ‘செருக்கு’ ஆகு பெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.]

**

மு.வரதராசனார் உரை

விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

******************************************************************

மணக்குடவர் உரை

விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின் அது கேட்டைத் தரும். அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத்தரும்.

இஃது உயிர்க்குக் கேடு தருமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

எண்ணாது வெஃகின் இறல் ஈனும் – பின் விளைவதை எண்ணிப்பாராது ஒருவன் பிறன் பொருளைக் கைப்பற்றக் கருதின், அக்கருத்து அவனுக்கு முடிவைத் தரும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் – பிறன் பொருளை விரும்பாமை யென்னும் பெருமிதம் ஒருவனுக்கு வெற்றியைத் தரும்.

முடிவு பொருளிழந்தாராலும் அரசனாலும் நேர்வது. “கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று” என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூறியமை காண்க (சிலப். 20 – 64). வெற்றி வெஃகுவார் எல்லார் மீதும் ஆசை மீதுங்கொண்டது.

**

கலைஞர் உரை

விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக்  கவர்ந்துகொள்ள

விரும்பினால்  அழிவும்,   அத்தகைய   விருப்பம்    கொள்ளாதிருந்தால்

வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

From thoughtless lust of other’s goods springs fatal ill,

Greatness of soul that covets not shall triumph still.

**

Yogi Shuddhananda Translation

Desireless, greatness conquers all;

Coveting misers ruined fall.

**

×