அதிகாரம் 22.
ஒப்புரவு அறிதல்
211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு.
பரிமேலழகர் உரை
[அஃதாவது உலக நடையினை அறிந்து செய்தல்.உலகநடை வேதநடை போல அறநூல்களுட் கூறப்படுவதன்றித் தாமே அறிந்து செய்யுந் தன்மைத்தாகலின் , ஒப்புரவு அறிதலென்றார்.மேல்,மனம் மொழி மெய்களால் தவிரத் தகுவன கூறினார், இனிச் செய்யத் தகுவனவற்றுள் எஞ்சி நின்றன கூறுகின்றாராகலின், இது தீவினையச்சத்தின் பின் வைக்கப்பட்டது.)
மாரிமாட்டு உலகு என் ஆற்றும் – தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன, கடப்பாடு கைம்மாறு வேண்டா – ஆகலான், அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல. (‘என் ஆற்றும்?’ என்ற வினா, ‘யாதும் ஆற்றா’ என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிரும் தன்மைய அல்ல என்பது ‘கடப்பாடு’ என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாராது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.)
**
மு.வரதராசனார் உரை
இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்? மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை.
**
மணக்குடவர் உரை
ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச் செய்ய வேண்டா: எல்லார்க்கும் நல்வழி சுரக்கின்ற மாரிக்கு உலகம் கைம்மாறு செய்தலுண்டோ?
கடப்பாடு- ஒப்புரவு. இஃது ஒப்புரவாவது கைம்மாறு வேண்டாத கொடை யென்று கூறிற்று.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
உலகு மாரிமாட்டு என் ஆற்றும் – உலகிலுள்ள உயிர்கள் தம் வாழ்க்கைக்கு இன்றியமையாத நீரை யுதவுகின்ற முகிலுக்கு என்ன கைம்மாறு செய்கின்றன! ; ஒன்றுமில்லையே !கடப்பாடு கைம்மாறு வேண்டா – ஆதலால், அம்முகில் போலும் வள்ளல்கள் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு வேண்டுவனவல்ல.
‘என்னாற்றும் ‘ என்ற வினாவிற்குரிய விடை வருவித்துரைக்கப்பட்டது ‘ கடப்பாடு ‘ என்னுஞ் சொல் பெருஞ் செல்வர் வறியார்க்குதவக் கடமைப்பட்டவர் என்பதை யுணர்த்தும். கடப்படுவது கடப்பாடு. இனி, வள்ளல்கள் தம் கடமையாகக் கொண்டொழுகுவது கடப்பாடு எனினுமாம்.
“பாரி பாரி யென்றுபல வேத்தி
யொருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே”.
என்னும் கபிலர் பாட்டு (புறம் 107) இங்குக் கவனிக்கத்தக்கது. செய்வாரது வேண்டாமை அவர் செயலின்மேல் ஏற்றப்பட்டது. ‘ கொல் ‘ , ‘ ஓ ‘ இரண்டும் அசைநிலைகள்.
**
கலைஞர் உரை
கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப்
போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.
**
Rev. Dr. G.U.Pope Translation
Duty demands no recompense; to clouds of heaven,
By men on earth, what answering gift is given?
**
Yogi Shuddhananda Translation
Duty demands nothing in turn;
How can the world recompense rain?
**
212
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
பரிமேலழகர் உரை
தக்கார்க்கு – தகுதி உடையார்க்கு ஆயின், தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் – முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும், வேளாண்மை செய்தற் பொருட்டு – ஒப்புரவு செய்தற் பயத்தவாம். (பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.)
**
மு.வரதராசனார் உரை
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
**
மணக்குடவர் உரை
ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம் தகுதி யுடையார்க்கு உபகரித்தற்காகவாம்.
இது பொருளுண்டானால் ஒப்புரவு செய்கவென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் – ஒப்புரவாளன் முயற்சி செய்து தொகுத்த செல்வம் முழுதும்; தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு – தகுதியுடையார்க்குப் பல்வகையிலும் உதவி செய்தற் பொருட்டேயாம்.
இதனால், இடைவிடாது முயற்சி செய்து மேன்மேலும் பொருளீட்டாது இருந்துண்ணும் சோம்பேறித்தனமும், தகுதியில்லாதவர்க்குச் செய்யும் தவறான வேளாண்மையும் விலக்கப்பட்டன. குந்தித் தின்றாற் குன்றுங் குன்றும். ஆதலின், ஒப்புரவாளனுக்கு இடைவிடா முயற்சி வேண்டுமென்பதாம். பொருளுள்ளவரும் தமிழைக்கெடுப்பவரும் தகுதியற்றவராவர். ஒப்புரவாளன் என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தது.
**
கலைஞர் உரை
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று
திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
The worthy say, when wealth rewards their toil-spent hours,
For uses of beneficence alone ’tis ours.
**
Yogi Shuddhananda Translation
All the wealth that toils give
Is meant to serve those who deserve.
**
213
புத்தே ளுலகத்து மீண்டும் பெறற்கரிதே
யொப்புரவி னல்ல பிற.
பரிமேலழகர் உரை
புத்தேள் உலகத்தும் ஈண்டும் – தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும், ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது – ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது. ( ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராகலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று, யாவர்க்கும் ஒப்பது இது போல் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. ‘பெறற்கரிது’ என்று பாடம் ஓதி, ‘பெறுதற்குக் காரணம் அரிது’ என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.)
**
மு.வரதராசனார் உரை
பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப்போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.
**
மணக்குடவர் உரை
ஒப்புரவு செய்தலின் நன்றாயிருப்பது தேவருலகத்தினும் இவ்வுலகத்தினும் பெறுதற்கு அரிதாம்.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
ஒப்புரவின் நல்ல-ஒப்புரவு போன்ற நல்ல செயல்களை; புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் – தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல்; அரிதே – அரிதேயாம்.
அரிது என்னும் சொல், தேவருலகத்தை நோக்கின் இன்மைப்பொருளும், இவ்வுலகத்தை நோக்கின் அருமைப் பொருளும், தருவதாம்.ஏனெனின், தேவருலகத்தில் ஈவாரும் ஏற்பாருமின்றி எல்லாரும் ஒரு தன்மையர்; இவ்வுலகத்தில் ஒப்புரவு செய்வார் விரல்விட்டெண்ணவும் வேண்டாத ஒரு சிலரே. ஏகாரம் தேற்றம். ‘ பிற ‘ அசைநிலை.
**
கலைஞர் உரை
பிறர்க்கு உதவிடும் பண்பாகிய “ஒப்புரவு” என்பதைவிடச் சிறந்த
பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது
அரிது.
**
Rev. Dr. G.U.Pope Translation
To ‘due beneficence’ no equal good we know,
Amid the happy gods, or in this world below.
**
Yogi Shuddhananda Translation
In heav’n and earth ’tis hard to find
A greater good than being kind.
**
214
ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
பரிமேலழகர் உரை
உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான் – உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான், மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் – அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.(உயிரின் அறிவும் செயலும் காணாமையின், ‘செத்தாருள் வைக்கப்படும்’ என்றார். இதனான் உலகநடை வழு வேத நடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.)
**
மு.வரதராசனார் உரை
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான்; மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
**
மணக்குடவர் உரை
ஒப்புரவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன். அஃதறியான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன்.
இஃது ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் – ஒப்புரவு செய்வானும்செய்யாதானுமாகிய இருவகைச் செல்வருள், செய்பவனே உயிரோடு கூடி வாழ்பவனாவன்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் – மற்றச் செய்யாதவன் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படுவான்.
உயிருக்குரிய அறிவுஞ் செயலுமின்மையின், நடைப்பிணமென்றுங்
கருதப்படாது பிணமென்றே இழிந்திடப்படுவான் என்றார்.
**
கலைஞர் உரை
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக்
கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன்
இறந்தவனே ஆவான்.
**
Rev. Dr. G.U.Pope Translation
Who knows what’s human life’s befitting grace,
He lives; the rest ‘mongst dead men have their place.
**
Yogi Shuddhananda Translation
He lives who knows befitting act
Others are deemed as dead in fact.
**
215
ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிரு.
பரிமேலழகர் உரை
உலகு அவாம் பேர் அறிவாளன் திரு – உலகநடையை விரும்பிச் செய்யும்பெரிய அறிவினை யுடையவனது செல்வம், ஊருணி நீர் நிறைந்தற்று – ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற் போலும். (நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ் போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.)
**
மு.வரதராசனார் உரை
ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம், நீரால் நிறைந்தாற் போன்றது.
**
மணக்குடவர் உரை
ஊர் உண்கின்றகேணி நீர் நிறையப் புகுந்தாலொக்கும்: உலகத்தாரெல்லாராலும் நச்சப்படுகின்ற பெரிய வொப்புரவு அறிவானது செல்வம்.
இஃது ஒப்புரவறிவார்க்கு உளதாகிய செல்வம் நச்சிச்சென்றார் வேண்டியவாறு முகக்கலா மென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
உலகு அவாம் பேரறிவாளன் திரு – உலகிலுள்ள உயிர்களையெல்லாம் விரும்பி ஒப்புரவு செய்யும் பேரறிவுடையான் செல்வம்; ஊருணி நீர்நிறைந்த அற்றே – ஊர்வாழ்நரின் குடிநீர்க்குளம் நிரம்பினாற் போன்றதே.
பாரி முல்லைக்குத் தேரும் பேகன் மயிலுக்குப் போர்வையும் உதவிய செயல்கள், ஒப்புரவாளர் அஃறினை யுயிர்களையும் விரும்புவதை அறிவிக்கும். ஊருண்பது ஊருணி. இது பாண்டி நாட்டு வழக்கு. இல்லற நிலையிலேயே இருதிணையுயிர்களிடத்தும் அன்பு செய்பவனைப் பேரறிவாளன் என்றார். ஊருணி என்ற உவமத்தால் மாபெரும் செல்வம் என்பதும் ஒப்புரவாளன் வாழுங் காலமெல்லாம் எல்லார்க்கும் என்றும் எளிதில் உதவும் என்பதும் பெறப்படும். ‘ நீர்நிறைதல் ‘ ஒரு சொற்றன்மையது. ஏகாரம் தேற்றம்.
**
கலைஞர் உரை
பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர்
மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப்
போன்றதாகும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
The wealth of men who love the ‘fitting way,’ the truly wise,
Is as when water fills the lake that village needs supplies.
**
Yogi Shuddhananda Translation
The wealth that wise and kind do make
Is like water that fills a lake.
**
216
பயன்மர முளளுர்ப் பழுத்தற்றாற் செல்வ
நயனுடை யான்கட் படின்.
பரிமேலழகர் உரை
செல்வம் நயன் உடையான்கண் படின் – செல்வம் ஒப்புரவு செய்வான் கண்ணே படுமாயின், பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்று – அது பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும். (உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின் அதனையே ‘நயன்’ என்றார்.எல்லார்க்கும் எளிதில் பயன் கொடுக்கும் என்பதாம்.)
**
மு.வரதராசனார் உரை
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சோந்தால், அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.
**
மணக்குடவர் உரை
பயன்படுமரம் ஊர்நடுவே பழுத்தாற் போலும்: பிறரால் விரும்பப்படுவான்மாட்டுச் செல்வ முண்டாயின்.
இது வேண்டாதார்க்கும் பயன்படு மென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
செல்வம் நயன் உடையான்கண் படின் – செல்வம் ஒப்புரவு செய்யும் நேர்மையாளனிடம் சேருமாயின்; பயன் மரம் உள்ளூர்ப்பழுத்த அற்று – அது பயன்படும் மரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும்.
ஒப்புரவு நேர்மை மிக்க செயலாதலின் அதை நயன் என்றார். நச்சு மரத்தை விலக்கப் பயன்மரம் என்றார். ஊருள் என்பது உள்ளூர் என முறை மாறியது இலக்கணப் போலி. ‘ ஆல் ‘ அசைநிலை.
**
கலைஞர் உரை
ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின்
நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல
எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
A tree that fruits in th’ hamlet’s central mart,
Is wealth that falls to men of liberal heart.
**
Yogi Shuddhananda Translation
Who plenty gets and plenty gives
Is like town-tree teeming with fruits.
**
217
மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்.
பரிமேலழகர் உரை
செல்வம் பெருந்தகையான்கண் படின் – செல்வம் ஒப்புரவு செய்யும் பெரிய தகைமையுடையான் கண்ணே படுமாயின், மருந்து ஆகித் தப்பா மரத்தற்று – அஃது எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும். (தப்புதலாவது, கோடற்கு அரிய இடங்களில் இன்றாதல், மறைந்து நின்றாதால் , காலத்தான் வேறுபட்டாதல், பயன்படாமை. தன் குறை நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் கடப்பாட்டாளனுடைய பொருள் பயன்படுமாறு கூறப்பட்டது.)
**
மு.வரதராசனார் உரை
ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடம் செல்வம் சேர்ந்தால், அஃது எல்லா உறுப்புக்களும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.
**
மணக்குடவர் உரை
பிணிமருந்தாகித் தேடுவார்க்கு மறைதலில்லாத மரத்தை யொக்கும், செல்வமானது பெருந்தகைமையான்மாட்டு உண்டாயின்.
தப்புதலென்றது ஒளித்தலை.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
செல்வம் பெருந்தகையான்கண் படின் – செல்வம் ஒப்புரவு செய்யும் பெருந்தகையாளனிடம் சேரின், மருந்து ஆகித் தப்பா மரத்து அற்று – அது வேர்முதல் கொழுந்துவரை எல்லாவுறுப்பும் பல்வேறு நோய்க்கு மருந்தாகித் தப்பாது பயனபடும் மரத்தையொக்கும்.
மரத்தை மருந்தென்றமையால் அதன் உறுப்புக்களெல்லாம் மருந்தாதல் அறியப்படும். சில மருந்துகள் சிலருடம்பிற்கு ஏற்காமையானும் சிறிது காலம் பொறுத்து ஆற்றல் கெடுதலானும், எல்லார்க்கும் என்றும் தப்பாது குணந்தரும் என்பதை யுணர்த்தத் ‘ தப்பா மரம் ‘ என்றார்.
மேற்கூறிய மூவேறுவமங்களும் ஊருணியென்பது எல்லார்க்கும் பயன்படும் செல்வத்தையும், பழுமரம் என்பது பலர்க்குப் பயன்படும் செல்வத்தையும் மருந்து மரம் என்பது சிலர்க்குப் பயன்படும் செல்வத்தையும் குறிக்குமென்று கொள்ள இடமுண்டு. இங்ஙனம் பயனளவில் வேறுபடுவது செல்வத்தின் அளவையும் ஒப்புரவாளரின் குறிக்கோளையும் பொறுத்ததாகும். ‘ ஆல் ‘ அசைநிலை.
**
கலைஞர் உரை
பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம்,
செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும்
மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
Unfailing tree that healing balm distils from every part,
Is ample wealth that falls to him to large and noble heart.
**
Yogi Shuddhananda Translation
The wealth of a wide-hearted soul
Is a herbal tree that healeth all.
**
218
இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.
பரிமேலழகர் உரை
இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் – செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார், கடன்அறி காட்சியவர் – தாம் செய்யத் தகுந்தவற்றை அறிந்த இயற்கை அறிவுடையார். (பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.)
**
மு.வரதராசனார் உரை
ஒப்புரவு அறிந்து ஒழுகுதலாகிய தம் கடமை அறிந்த அறிவை உடையவர், சொல்வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
**
மணக்குடவர் உரை
செல்வம் விரிவற்ற காலத்திலும் ஒப்புரவிற்குத் தளரார்: ஒப்புரவை யறியும் அறிவுடையார்.
இது செல்வம் விரிவில்லாத காலத்தினும் செய்யவேண்டு மென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
கடன் அறி காட்சியவர் – கடப்பாட்டை யறிந்த அறிவுடையோர்; இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் – தம் செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார்.
வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செண்டத்தூர் ஐயாத்துரை முதலியார் என்னும் வள்ளல், தம் செல்வம் சுருங்கிய காலத்தும் ஓரிலக்கம் உருபா கடன்கொண்டு ஒப்புரவாற்றியது, இதற்கோரெடுத்துக்காட்டாம்.
**
கலைஞர் உரை
தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும்,பிறர்க்கு உதவிடும்
ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.
**
Rev. Dr. G.U.Pope Translation
E’en when resources fail, they weary not of ‘kindness due,’
They to whom duty’s self appears in vision true.
**
Yogi Shuddhananda Translation
Though seers may fall on evil days
Their sense of duty never strays.
**
219
நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயனீர்மை
செய்யா தமைகலா வாறு.
பரிமேலழகர் உரை
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் – ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது, செயும் நீர செய்யாது அமைகலா ஆறு – தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம். (தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம். இவ்விரண்டு பாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.)
**
மு.வரதராசனார் உரை
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
**
மணக்குடவர் உரை
நயனுடையான் நல்கூர்ந்தா னாகின்றது செய்ய வேண்டுவன செய்யாதே யமைய மாட்டாத இயல்பாம்.
இது செல்வங் குறைபடினுஞ் செய்வரென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் – ஒப்புரவாளன் வறியவனாதலாவது; செயும்நீர செய்யாது அமைகலா வாறு – தவிராது செய்யும் தன்மையவான வேளாண்மைச் செயல்களைச் செய்யவியலாது அமைதியற்றிருக்கும் நிலைமையே.
அமைதியற்றிருக்கும் நிலைமையாவது வருந்துதல். ஒப்புரவுசெய்யவியலாவாறு செல்வம் அற்றவிடத்து, பிறரை நுகர்வியாமைபற்றியேயன்றித் தான் நுகராமை பற்றி வருந்துவதில்லை யென்பதாம்.
**
கலைஞர் உரை
பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட
பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை
உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும்
நிலைமைதான்.
**
Rev. Dr. G.U.Pope Translation
The kindly-hearted man is poor in this alone,
When power of doing deeds of goodness he finds none.
**
Yogi Shuddhananda Translation
The good man’s poverty and grief
Is want of means to give relief.
**
220
ஒப்புரவி னான்வருங் கேடெனின் னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து.
பரிமேலழகர் உரை
ஒப்புரவினால் கேடு வரும் எனின் – ஒப்புரவு செய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின், அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து – அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து. (தன்னைவிற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே? இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி. இதனான் ஒப்புரவினால் கெடுவது கேடு அன்று என்பது கூறப்பட்டது.)
**
மு.வரதராசனார் உரை
ஒப்புரவால் கேடு வரும் என்றால், அக்கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும்.
**
மணக்குடவர் உரை
ஒருவன் ஒப்புரவு செய்தலினாலே பொருட்கேடு வருமென்று சொல்லின், அக்கேட்டைக் கேடாகச் சேர்த்துக் கொள்ளல் கூடாது. அஃது ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற வாணிகமாகக் கொள்ளுந் தகுதியுடைத்து.
கெட்டானாயினும் அதனை ஆக்கமாகக் கொள்ளல் தகும்: பிற்பயப்பன நன்மையாதலான்.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
ஒப்புரவினால் கேடு வரும் எனின் – ஒப்புரவினால் ஒருவனுக்குப் பொருட்கேடு வருமாயின்; விற்றுக்கோள் தக்கது உடைத்து – அக்கேடு ஒருவன் தன்னை விற்றாகிலுங் கொள்ளத்தக்க தகுதியுடையதாம்.
ஒப்புரவினால் வருங்கேடு, ஒருவராலும் பழிக்கப்படாமல் இவ்வுலகிற் புகழும் மறுமைக்கு அறமும் விளைத்தலால், ஒரு சிறந்த பேறேயன்றி இழப்பன்று என்பதாம். அப்பேற்றின் சிறப்பை மிகுத்துக் காட்டற்கே தன்னை விற்றுங் கொள்ளத்தக்க தென்றார்.
“களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடின் பனுவற் பாண ருய்த்தெனக்
களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை யரிய இழையணி மகளிரொடு
சாயின் றென்ப ஆஅய் கோயில்
சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில்
பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி
உரைசா லோங்குபுக ழொரீஇய
முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே”.
என்னும் புறப்பாட்டு (127) ஆய்வள்ளல் ஒப்புரவினால் அடைந்த பொருட்கேட்டைத் தெரிவிப்பதாம்.
**
கலைஞர் உரை
பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக்
கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்
கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
Though by ‘beneficence’ the loss of all should come,
‘Twere meet man sold himself, and bought it with the sum.
**
Yogi Shuddhananda Translation
By good if ruin comes across
Sell yourself to save that loss.
**
அதிகாரம் 23.
ஈகை
221
வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
பரிமேலழகர் உரை
[அஃதாவது, வறியராய் ஏற்றார்க்கு மாற்றாது கொடுத்தல். இது மறுமை நோக்கியது ஆகலின், இம்மை நோக்கிய ஒப்புரவு அறிதலின் பின் வைக்கப்பட்டது.)
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை – ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது, மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து – அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து. (ஒழிந்த கொடைகளாவன: வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது. ‘நீரது’ என்புழி, ‘அது’ என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால் வருதலின், ‘குறியெதிர்ப்பை நீரது உடைத்து’ என்றார். இதனால் ஈகையது இலக்கணம் கூறப்பட்டது.)
**
மு.வரதராசனார் உரை
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.
**
மணக்குடவர் உரை
ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்; இஃதொழிந்த கொடையெல்லாம் குறியெதிர்ப்பைக் கொடுத்த நீர்மையாதலையுடைத்து.
இது கொடுக்குங்கால் இல்லார்க்குக் கொடுக்கவேண்டுமென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை – பொருளில்லாதவரும் திரும்பிச் செய்ய இயலாதவருமான ஏழையர்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பதே ஈகை என்னும் அறச் செயலாம்; மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து – மற்றக் கைம்மாறு கருதிய கொடுப்பெல்லாம் அளவு குறித்துக் கடன் கொடுக்கும் தன்மையதாம்.
குறியெதிர்ப்பாவது அளவு குறித்துக் கொடுத்து அவ்வளவில் திரும்பப் பெறுங் கடன். நீரது என்பதில் அது என்பது முதனிலைப் பொருளீறு. “ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே”.(928) என்னும் தொல்காப்பிய நெறிப்படி, ஈகை என்னும் சொல் சிறப்பாகத் தாழ்ந்தோர்க்கு ஈதலைக் குறிக்கும்.
**
கலைஞர் உரை
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு
வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து
வழங்கப்படுவதாகும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
call that a gift to needy men thou dost dispense,
All else is void of good, seeking for recompense.
**
Yogi Shuddhananda Translation
To give the poor is charity
The rest is loan and vanity.
**
222
நல்லா றெனினுங் கொளறீது மேலுலக
மில்லெனினு மீதலே நன்று.
பரிமேலழகர் உரை
கொளல் நல் ஆறு எனினும் தீது – ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது, மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று – ஈந்தார்க்கு அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும் , ஈதலே நன்று. (‘எனினும்’ என்பது இரு வழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களின் ஈதல் சிறந்தது என்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.)
**
மு.வரதராசனார் உரை
பிறரிடமிருந்து பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது. மேலுலகம் இல்லையென்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.
**
மணக்குடவர் உரை
ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல் தீது: ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும் கொடுத்தல் நன்று.
கொள்வோ ரமைதி யறிந்து கொடுக்கவேண்டுமெனினும் இது வரையாது கொடுத்தலாதலால் யாதொருவாற்றானுங் கொடை நன்றென்பது கூறிற்று.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
கொளல் நல் ஆறு எனினும் தீது – பிறரிடத்தினின்று வாங்குவது வீட்டுலகத்திற்கு நல்வழியென்று அறநூல் கூறினும் வாங்குவது தீயது; மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று – பிறருக்குக் கொடுப்பதால் அவ்வுலகத்தை அடைய முடியாதென்று அந்நூல் கூறினும், கொடுத்தலே நல்லது.
உம்மை ஈரிடத்தும் எதிர்மறை, கொடுத்தல் தருதல் என்னும் சொற்களினும் ஈதல் என்னும் சொல்லே இவ்வதிகாரத்திற்கு ஏற்றதாம்.
**
கலைஞர் உரை
பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது
பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம்
என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக்
கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
Though men declare it heavenward path, yet to receive is ill;
Though upper heaven were not, to give is virtue still.
**
Yogi Shuddhananda Translation
To beg is bad e’en from the good
To give is good, were heaven forbid.
**
223
இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே உள.
பரிமேலழகர் உரை
‘இலன் என்னும் எவ்வம் உரையாமை – யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும், ஈதல் – அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும், உள குலன் உடையான் கண்ணே- இவை இரண்டும் உளவாவன குடிப் பிறந்தான் கண்ணே. (மேல் தீது என்றது ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு. இனி இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் என்பதற்கு, அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல்’ எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல் எனவும், யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லேன் ‘எனக் கரப்பார்’ சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும் உரைப்பாரும் உளர். அவர் ‘ஈதல்’ என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.)
**
மு.வரதராசனார் உரை
`யான் வறியவன்’ என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு.
**
மணக்குடவர் உரை
இரந்துவந்தார்க்கு இலனென்னா நின்ற துன்பத்தைக் கூறாது ஈதலும் குடிப்பிறந்தான்மாட்டே யுளதாம்.
இது கொடுக்குங்கால் மாறாது கொடுக்க வேண்டுமென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
இலன் என்னும் எவ்வம் உரையாமை – யான் ஏழையென்று இரப்போன் சொல்லும் இழிவுரையைத் தான் பிறனிடத்துச் சொல்லாமையும்; ஈதல் – அவ் விரப்போன் வேண்டியதொன்றை இல்லையென்னாது அவனுக்கு ஈதலும்; குலன் உடையான் கண்ணே உள – ஆகிய இரண்டும் உயர்குடிப் பிறந்தான் கண்ணே உள்ளன.
எவ்வம் துன்பம். அது இங்குத் துன்பந்தரும் இழிவுரையைக் குறித்தது.
இனி, ‘ இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்’ என்னும் தொடருக்குப் பின்வருமாறும் உரைகள் கூறப் பெறும்.
(1) யான் பொருளில்லாதவன் என்று இரப்போன் தன் இளிவரவைச் சொல்லுமுன் அவன் குறிப்பறிந்து கொடுத்தல்.
(2) அவ்விழிவுரையைப் பின்னும் இன்னொருவனிடம் சென்று உரையா வண்ணம் அவ்விரப்போனுக்கு நிரம்பக் கொடுத்தல்.
(3) இல்லத்தான் என்னிடம் இப்பொழுது பொருளில்லையென்று ஈயாதார் சொல்லும் இழிவுரையைச் சொல்லாது கொடுத்தல்.
இம் மூவுரையும் எளிதாய்ப் பொருந்துவன. இனி, வலிந்து பொருந்தும் வேறுமூவுரையுமுள.அவை வருமாறு : –
(1) அவ்விரப்போனை ஒன்றுமில்லாதவனென்று பிறர் இழிந்துரையா வண்ணம் கொடுத்தல்.
(2) அவ்விரப்போனுக்கு மறுத்த இல்லறத்தான் அது பற்றிப்பின்பு வறியனானபின், தானும்
(3) அவனை யிரந்தோனும் பிறரும் இலனென்னும் இனிவரவு கூறாவண்ணங் கொடுத்தல்.
இவ்வுரைகட்கெல்லாம் ‘ ஈதல் ‘ என்பது 139 ஆம் குறளிலுள்ள ‘ சொலல் ‘ என்பது போலப் பன்மையாம். இக்குறளால், உயர்குடிப் பிறந்தோன் ஈகையாளனே யன்றிப் பிராமண னல்லன் என்பது பெறப்பட்டது.
**
கலைஞர் உரை
தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு
ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
‘I’ ve nought’ is ne’er the high – born man’s reply;
He gives to those who raise themselves that cry.
**
Yogi Shuddhananda Translation
No pleading, “I am nothing worth,”
But giving marks a noble birth.
**
224
இன்னா திரக்கப் படுத லிரந்தவ
னின்முகங் காணு மளவு.
பரிமேலழகர் உரை
இரக்கப்படுதல் இன்னாது – இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் இனிது அன்று, இரந்தவர் இன்முகம் காணும் அளவு – ஒரு பொருளை இரந்தவர் அது பெற்றதனால் இனிதாகிய அவர் முகங் காணும் அளவும்; (எச்ச உம்மையும் முற்று உம்மையும் விகாரத்தால் தொக்கன. இரக்கப் படுதல் – ‘இரப்பார்க்கு ஈவல்’ என்று இருத்தல். அதனை ‘இன்னாது’ என்றது. ‘எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை’ (நாலடி.145) கூடுங்கொல்லோ என்னும் அச்சம் நோக்கி. எனவே எல்லாப் பொருளும் ஈதல் வேண்டும் என்பது பெறப்பட்டது.)
**
மு.வரதராசனார் உரை
பொருள் வேண்டும் என்று இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே) இரந்து கேட்கப்படுதலும் துன்பமானது.
**
மணக்குடவர் உரை
பிறன் ஒருவனா லிரக்கப்படுதலும் இன்னாது எவ்வளவு மெனின், இரந்து வந்தவன் தான் வேண்டியது பெற்றதனானே இனிதான முகங் காணுமளவும்.
இது கொடுக்குங்கால் தாழாது கொடுக்க வேண்டுமென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
இரந்தவர் இன்முகம் காணும் அளவு – ஒருபொருளை இரந்தவர் அதைப் பெற்றதினால் மலரும் அவரது இனிய முகத்தைக் காணுமளவும்; இரக்கப்படுதல் இன்னாது – இரத்தலேயன்றி இரக்கப் படுதலும் குடிப்பிறந்தானுக்குத் துன்பந்தருவதாம்.
படுதலும் என்னும் எச்சவும்மையும் அளவும் என்னும் முற்றும் மையுந் தொக்கன. இன்முகங் காணுமளவுந் துன்பமென்றதனால், இரந்த பொருள்களை யெல்லாம் ஈதல் வேண்டுமென்பது பெறப்பட்டது. ஆயினும், தன் மானத்திற்கு இழுக்கு நேராவாறு என்னும் வரையறை பகுத்தறிவாற் கொள்ளப்பெறும்.
**
கலைஞர் உரை
ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை
பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரைவில், அவருக்காக இரக்கப்படுவதும்
ஒரு துன்பமாகவே தோன்றும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
The suppliants’cry for aid yeilds scant delight,
Until you see his face with grateful gladness bright.
**
Yogi Shuddhananda Translation
The cry for alms is painful sight
Until the giver sees him bright.
**
225
ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.
பரிமேலழகர் உரை
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் – தவத்தான் வலியார்க்கு வலியாவது தம்மையுற்ற பசியைப் பொறுத்தல், அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் – அவ் வலிதான் அங்ஙனம் பொறுத்தற்கு அரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின். (தாமும் பசித்துப் பிறரையும் அது தீர்க்க மாட்டாதார் ஆற்றலின், தாமும் பசியாது பிறரையும் அது தீர்ப்பார் ஆற்றல் நன்று என்பதாம்.)
**
மு.வரதராசனார் உரை
தவ வலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும். அதுவும் அப்பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.
**
மணக்குடவர் உரை
பெரியாரது பெருமையாவது பசியைப் பொறுத்தல்: அதுவும் பெரிதாவது பிறர் பசியைத் தீர்ப்பாரது பெருமைக்குப் பின்பு.
இது தவம்பண்ணுவாரினும் தானம் பண்ணுவார் வலியுடைய ரென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் – தவத்தால் வலிமையடைந்தாரது வலிமையெல்லாம் தம்மை வருத்தும் பசியைப் பொறுத்துக் கொள்ளுதலே; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின்பின் – அவ்வலிமையும் அப்பொறுத்தற்கரிய பசியை ஈகையால் ஒழிப்பவரது வலிமைக்குப் பிற்பட்டதே. தம்பசியை மாற்ற மாட்டாதவரது வலிமையினும், தம்பசியையும் பிறர் பசியையும் ஒருங்கே மாற்றுவாரது வலிமை சிறந்ததென்பதாம்.
“யான்வாழு நாளும் பண்ணன் வாழிய
பாணர் காண்கிவன் கடும்பின திடும்பை
யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன
வூணொலி யரவந் தானுங் கேட்கும்
பொய்யா வெழிலி பெய்விட நோக்கி
முட்டை கொண்டு வற்புலஞ் சேருஞ்
சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக் கேய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீ றியங்கு
மிருங்கிளைச் சிறா அர்க் காண்டுங் கண்டு
மற்று மற்றும் வினவுதுந் தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே.”
என்று (புறம். 173) சிறுகுடிகிழான் பண்ணனின் பசியாற்ற லறத்தைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சிறப்பித்துப் பாடியிருத்தல் காண்க.
**
கலைஞர் உரை
பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப் பிடிப்பதைவிடப்
பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
‘Mid devotees they’re great who hunger’s pangs sustain,
Who hunger’s pangs relieve a higher merit gain.
**
Yogi Shuddhananda Translation
Higher’s power which hunger cures
Than that of penance which endures.
**
226
அற்றார் ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
பரிமேலழகர் உரை
அற்றார் அழிபசி தீர்த்தல் – வறியாரது மிக்க பசியை அறன் நோக்கித் தீர்க்க, பொருள் பெற்றான் ஒருவன் வைப்புழி அஃது – பொருள் பெற்றான் ஒருவன் அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம் அவ்வறம் ஆகலான். (எல்லா நன்மைகளும் அழிய வருதலின், ‘அழி பசி’ என்றார். ‘அறம் நோக்கி’ என்பது எஞ்சி நின்றது. ‘அற்றார் அழிபசி தீர்த்த’ பொருள் பின் தனக்கே வந்து உதவும் என்பதாம்.)
**
மு.வரதராசனார் உரை
வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
**
மணக்குடவர் உரை
பொருளற்றாராது குணங்களையழிக்கும் பசியைப் போக்குக. அது செய்ய ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றானாம்.
இது பகுத்துண்ணப் பொருளழியாது என்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
அற்றார் அழிபசி தீர்த்தல்-வறியவரின் கடும்பசியைத் தீர்க்க; அஃது ஒருவன் பொருள் வைப்புழி பெற்றான்-அவ்வறச் செயலால் ஒருவன் தான் தேடிய செல்வத்தை மறுமையில் தனக்குப் பயன்படுமாறு சேமித்து வைக்கும் ஏம வைப்பகத்தைப் (Savings Bank) பெற்றானாவன்.
கொல்வது போல வருத்துவதனாலும், குடிப்பிறப்பு கல்வி மானம் அறிவுடைமை முதலிய பேறுகளையும் பண்புகளையும் அழிப்பதனாலும், கடும்பசி அழிபசி யெனப்பட்டது. வறியவரின் பசியைத் தீர்த்தற்குச் செலவிட்ட பொருள் பின்பு தனக்கே வந்துதவுதலால் அருள் நோக்கிச் செய்யாவிடினும் தனக்குப் பயன்படும் அறம் நோக்கியேனும் அதைச்செய்க என்றவாறு.
‘தீர்த்தல்’ தல்லீற்று வியங்கோள். பெற்றான் என்பது தேற்றம் பற்றிய காலவழுவமைதி. அஃதொருவன் என்பது அதுவொருவன் என்றும் இருக்கலாம். அடுத்த அதிகார முதற் குறளில் ‘வாழ்தலதுவல்லது’ என வருதல் காண்க.
**
கலைஞர் உரை
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது.
அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச்
சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.
**
Rev. Dr. G.U.Pope Translation
Let men relieve the wasting hunger man endure;
For treasure gained thus finds he treasure-house secure.
**
Yogi Shuddhananda Translation
Drive from the poor their gnawing pains
If room you seek to store your gains.
**
227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது.
பரிமேலழகர் உரை
பாத்து ஊண் மரீஇயவனை – எஞ்ஞான்றும் பகுத்து உண்டல் பயின்றவனை, பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது – பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை. (இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தலின், ‘தீப்பிணி’ எனப்பட்டது. தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது என்பதாம். இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக் கூறப்பட்டது.)
**
மு.வரதராசனார் உரை
தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுதல் இல்லை.
**
மணக்குடவர் உரை
பகுத்து உண்டலைப் பழகியவனைப் பசியாகிய பொல்லா நோய் தீண்டுத லில்லை.
இஃது ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றமை ஈந்தால் பொருள் குறையும். அதனாலே பசியுண்டாமென் றஞ்சியன்றோ? அவ்வாறு நினைத்தல் வேண்டா. பகுத்துண்ணப் பசிவாராதென்று கூறிற்று.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
பாத்து ஊண் மரீஇ யவனை-எப்போதும் பலரொடும் பகிர்ந்துண்டு பயின்றவனை; பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது-பசியென்று சொல்லப்படும் கொடிய நோய் தாக்குதலில்லை.
நாள்தோறும் வந்து வருத்துவதாலும், நல்லார் வல்லாருட்பட எல்லாரையுந் தாக்குவதாலும், எம்மருந்தாலும் அறவே நீக்கப்படாமையாலும், பிற நோய்கள் அழிக்காதவற்றையும் அழித்து மறுமையிலுந் துன்புற வழிகோலுவதாலும், பசி தீப்பிணி யெனப் பட்டது . “இறைக்க வூறும் மணற் கேணி; ஈயப் பெருகும் பெருஞ் செல்வம் .” ஆதலின், பாத்துண்டு பயின்றவனைப் பசிப்பிணி தீண்டுவதில்லை. தீண்டுவதுமில்லை யெனவே வருத்தாமையைச் சொல்ல வேண்டுவதில்லை. ‘மரீஇ’ (மருவி) இன்னிசையளபெடை. அரிது என்பது இங்கு இன்மைப் பொருளது.
**
கலைஞர் உரை
பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய
நோய் அணுகுவதில்லை.
**
Rev. Dr. G.U.Pope Translation
Whose soul delights with hungry men to share his meal,
The hand of hunger’s sickness sore shall never feel.
**
Yogi Shuddhananda Translation
Who shares his food with those who need
Hunger shall not harm his creed.
**
228
ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
பரிமேலழகர் உரை
தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் – தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார், ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் – வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ! (உவக்கும் என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம், அஃது இன்பம் என்னும் காரியப் பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து இழவார் என்பது கருத்து.)
**
மு.வரதராசனார் உரை
தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் வன்கண்மை உடையவர் பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ?
**
மணக்குடவர் உரை
கொடுத்த கொடையினால் பெற்றவர்க்கு வரும் முகமலர்ச்சியைக் கண்டறியாரோ? தாமுடைய பொருளைக் கொடாதே வைத்துப் பின் னிழக்கின்ற வன்கண்ணர்.
இஃது இடார் இழப்பரென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் – தாம் உடைய பொருளை ஈயாது வைத்திருந்து பின்பு கள்வராலும் கொள்ளைக்காரராலும் இழக்கும் கன்னெஞ்சர்; ஈத்து உவக்கும் இன்பம் அறியார் கொல்-வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியாரோ!
அறிந்தாராயின், தாம்வைத்திழந்து வருந்தாது வறியார்க்கீந்து மகிழ்ந்து மறுமையிலும் இன்புறுவர் என்பது கருத்து. ‘கொல்’ ஐயம்.
**
கலைஞர் உரை
ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள்
அனைத்தையும் இழந்திடும் ஈவு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி
மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?
**
Rev. Dr. G.U.Pope Translation
Delight of glad’ning human hearts with gifts do they not know,
Men of unpitying eye, who hoard their wealth, and lose it so?
**
Yogi Shuddhananda Translation
The joy of give and take they lose
Hard-hearted rich whose hoarding fails.
**
229
இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.
பரிமேலழகர் உரை
நிரப்பிய தாமே தமியர் உணல் – பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல் இரத்தலின் இன்னாது மன்ற – ஒருவர்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக. (பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ எண்களைக் குறித்து இத்துணை ஈட்டுவதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு இவறிக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை, தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், ‘இரத்தலின் இன்னாது’ என்றார். ‘நிரப்பிய’ என்பதற்குத் ‘தேடிய உணவுகளை’ என்று உரைப்பாரும் உளர்.)
**
மு.வரதராசனார் உரை
பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது.
**
மணக்குடவர் உரை
இரத்தல்போல மெய்யாக இன்னாதாம்: தேடின உணவைத் தாமே தமியராயிருந் துண்டல்.
தமியரா யென்றது ஒருவருங் காணாமலென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
நிரப்பிய தாமே தமியர் உணல்-தாம் ஈட்டக் கருதிய பொருட்குறையை நிரப்பவேண்டி வறியார்க் கொன்றீயாது தாமே தமித்துண்டல்; மன்ற-திண்ணமாக; இரத்தலின் இன்னாது-இரத்திலினும் தீயதாம்.
ஆசைக்கோரளவில்லை யாதலின், ஈயாத கஞ்சர் மேன்மேலும் பொருளீட்டற் பொருட்டு இடைவிடாது உடலையும் உள்ளத்தையும் வருத்தி, எத்துணைப் பொருளீட்டினும் எள்ளளவும் பொந்திகை (திருப்தி) யின்மையால் உண்மையிற் செல்வராயினும் உள்ளத்தில் வறியராய், இன்பமும் அறப்பயனும் ஒருங்கே தரும் பாத்துண்டலின்றி நடைப்பிணமாய் உழல்வதினும்; ஆசையுங் கவலையுமில்லாத இரப்போர் உடல் வருத்தமின்றித் தாம் பெற்றதைக் கொண்டு மகிழ்வதோடு, தாம் இரப்பெடுத்ததையும் பகிர்ந்துண்ணும் வாழ்க்கை மேலாதலின்; ‘இரத்தலினின்னாது’ என்றார். ‘மன்ற’ தேற்றப் பொருளிடைச் சொல் . ‘நிரப்பிய’ செய்யிய என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம்.
**
கலைஞர் உரை
பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத்
தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும்
கொடுமையானது.
**
Rev. Dr. G.U.Pope Translation
They keep their garners full, for self alone the board they spread;-
‘Tis greater pain, be sure, than begging daily bread!
**
Yogi Shuddhananda Translation
Worse than begging is that boarding
Alone what one’s greed is hoarding.
**
230
சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை.
பரிமேலழகர் உரை
சாதலின் இன்னாதது இல்லை – ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை, அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது – அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது. (பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் ‘இனிது’ என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.)
**
மு.வரதராசனார் உரை
சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச்சாதலும் இனியதே ஆகும்.
**
மணக்குடவர் உரை
சாதலின் மிக்க துன்பமில்லை. அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து.
இஃது ஈயாது வாழ்தலில் சாதல் நன்றென்றது.
**
ஞா. தேவநேயப் பாவாணர்
சாதலின் இன்னாதது இல்லை-ஒருவனுக்கு இறத்தலைப்போலத் துன்பந் தருவது வேறொன்றுமில்லை; அதுவும் ஈதல் இயையாக்கடை இனிது-அவ்விறப்பும் வறியார்க்கொன்றீதல் இயலாவிடத்து இன்பந்தருவதாம்.
ஈகையாளனுக்கு இறப்புத் துன்பத்திலும் ஈயாத்துன்பம் பெரியதும் பொறுத்தற்கரியது மாதலின், சாதல் அவனுக்கு இனிதென்றார். இது வெளிப்படை. இனி, ஈயாத கஞ்சர் உலகத்திலிருத்தல் தகாது என்பது குறிப்பு. “ஈயாத புல்லரிருந்தென்ன போயென்ன எட்டிமரம்; காயாதிருந்தென்ன காய்த்துப் பலனென்ன” என்று படிக்காசுப் புலவரும் பாடியமை காண்க. ‘இனிததூஉம்’ இன்னிசை யளபெடை.
**
கலைஞர் உரை
சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத
மனத்துன்பம் பெரியது.
**
Rev. Dr. G.U.Pope Translation
‘Tis bitter pain to die. ‘Tis worse to live,
For him who nothing find to give!
**
Yogi Shuddhananda Translation
Nothing is more painful than death
Yet more is pain of giftless dearth.
**