25ஆம் அதிகாரம் (அருள் உடைமை)

அதிகாரம் 25.

அருள் உடைமை

241      

அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணு முள.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை. இல்லறத்திற்கு அன்புடைமைபோல இது துறவறத்திற்குச் சிறந்தமையின் முன் கூறப்பட்டது.)

செல்வத்துள் செல்வம் அருட்செல்வம் – செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம், பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள – அஃது ஒழிந்த பொருளான் வரும்செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான். ( அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம், ஏனை நீசர்கண்ணும் உளவாம்பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டும் உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.

**

மணக்குடவர் உரை

செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடைமையாகிய செல்வமாம்; பொருட்செல்வமானது கீழாயினோர்மாட்டும் உளவாதலால்.

இஃது அருள்நிலை கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

செல்வத்துள் செல்வம் அருள் செல்வம் – செல்வங்களெல்லாவற்றுள்ளும் சிறந்தது அருளாகிய செல்வமே; பொருள் செல்வம் பூரியார் கண்ணும் உள – மற்றப் பொருளாகிய செல்வங்கள் கீழ் மக்களிடத்திலும் உள்ளன.

செல்வம் போன்ற பண்பைச்செல்வ மென்றார். உம்மை இழிவு சிறப்பு.

**

கலைஞர் உரை

கொடிய   உள்ளம்   கொண்ட  இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில்

செல்வம்      குவிந்திருக்கலாம்; ஆனாலும்  அந்தச் செல்வம்    அருட்

செல்வத்துக்கு ஈடாகாது.

**

Rev. Dr. G.U.Pope Translation

Wealth ‘mid wealth is wealth ‘kindliness;

Wealth of goods the vilest too posses.

**

Yogi Shuddhananda Translation

The wealth of wealth is wealth of grace

Earthly wealth e’en the basest has.

**

242      

நல்லாற்றா னாடியருளாள்க பல்லாற்றாற்

றேரினு மஃதே துணை.

பரிமேலழகர் உரை

நல் ஆற்றான் நாடிஅருள் ஆள்க – அளவைகளானும் பொருந்து மாற்றானும் நன்றான நெறியிலே நின்று, நமக்குத் துணையாம் அறம் யாது? என்று ஆராய்ந்து, அருளுடையராக, பல் ஆற்றான் தேரினும் துணை அஃதே – ஒன்றையொன்று ஒவ்வாத சமய நெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை. (அளவைகளாவன: பொறிகளான் காணும் காட்சியும், குறிகளான் உய்த்துணரும் அனுமானமும், கருத்தா மொழி ஆகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப்பற்றி உணரும் உவமையும், இங்ஙனம் அன்றாயின் இது கூடாது என்று உணரும் அருத்தாபத்தியும், உண்மைக்கு மாறாயஇன்மையும் என இவற்றைக் கூட்டி, ஆறு என்பாரும் உளர். இவையும் ஒரு ஆற்றான் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்று என்றலே கருத்து. பொருந்தும் ஆறாவது, ‘இது கூடும் , இது கூடாது’ எனத் தன் கண்ணே தோன்றுவது. இதனை வடநூலார் ‘உத்தி’ என்ப. ‘ஆற்றான்’ என்பது வேற்றுமை மயக்கம். ஒன்றை ஒன்று ஒவ்வாமையாவது மத வேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும் தம்முள் மாறுகோடல்; அன்னவாயினும், அருள் துணை என்றற்கண் ஒக்கும் என்பதாம். உயிரை விட்டு நீங்காது இருமையினும் உதவலின், ‘துணை’ என்றார். இவை இரண்டு பாட்டானும் அருளினது சிறப்புக் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும். பல வழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக உள்ளது.

**

மணக்குடவர் உரை

நல்ல வழியாலே நாடி அருளையுண்டாக்குக: பல வழியினும் ஓடி யாராயினும் தமக்கு அவ்வருளே துணையாம்.

நல்லாற்றானாடியருளாள்க என்றது அருளுடைமை யுண்டாகப் பலவறங்களையுஞ் செய்கவென்றவாறு. இஃது அருளுடைமை வேண்டுமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க – உத்திக்குப் பொருத்தமான நல்ல அளவைகளால் ஆராய்ந்து பார்த்து அருளைமேற் கொள்க; பல் ஆற்றால் தேரினும் அஃதே துணை – பல்வேறு சமயநெறிகளால் ஆராய்ந்தாலும் இறுதியில் அவ்வருளே துணையாக முடியும்.

காட்சி, கருத்து, ஒப்பு, உரை, இன்மை, எதிர்நிலை (அருந்தாபத்தி), சார்பு (இயல்பு), உலகுரை, ஒழிபு, உண்மை என அளவைகள் மொத்தம் பத்தென்பர். அவை யாவும் முதல் நான்கனுள் அடங்கும். அன்பின் முதிர்ச்சியாகிய அருள் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த அறப்பண் பாதலானும், இம்மை மறுமை வீடாகிய மும்மைக்கும் உதவுதலானும், அஃதே துணை என்றார். உத்தியாவது பகுத்தறிவிற்குப் பொருந்து முறை. உத்தல் – பொருந்துதல். உத்தி யென்பது வட மொழியில் யுக்தி எனத் திரியும்.

**

கலைஞர் உரை

பலவழிகளால்    ஆராய்ந்து    கண்டாலும்    அருள்  உடைமையே

வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The law of ‘grace’ fufil, by methods good due trial made,

Though many systems you explore, this is your only aid.

**

Yogi Shuddhananda Translation

Seek by sound ways good compassion;

All faiths mark that for-salvation.

**

243      

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த

வின்னா வுலகம் புகல்.

பரிமேலழகர் உரை

இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் – இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை – அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. (‘இருள் செறிந்த துன்ப உலகம்’ என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், ‘உலகம்’ எனப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

**

மணக்குடவர் உரை

அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதலில்லை.

இது நரகம் புகாரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் – இருள் திணிந்த துன்பவுலகமாகிய நரகத்துட் புகுதல்; அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை – அருள் நிறைந்த நெஞ்சையுடைய துறவியருக் கில்லை.

தீயுழியும் அளறும் போல இருளுலகமும் நரக வகையாம்.

**

கலைஞர் உரை

அருள்   நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த

துன்ப உலகில் உழலமாட்டார்.

**

Rev. Dr. G.U.Pope Translation

They in whose breast a ‘ gracious kindliness ‘ resides,

See not the gruesome world, where darkness drear abides.

**

Yogi Shuddhananda Translation

The hearts of mercy shall not go

Into dark worlds of gruesome woe.

**

244      

மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப

தன்னுயி ரஞ்சும் வினை.

பரிமேலழகர் உரை

மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு – நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு, தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப – தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர். (உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், ‘மன் உயிர்’ என்றார். அஞ்சுதல்- துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.)

**

மு.வரதராசனார் உரை

தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

**

மணக்குடவர் உரை

நிலைபெற்ற உயிரை ஓம்பி அருளை ஆள்வானுக்குத் தன்னுயிரஞ்ச வரும் வினை வருவ தில்லையென்று சொல்லுவார்.

இது தீமை வாராதென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு – மற்ற உயிர்களையெல்லாம் பேணி அவற்றினிடத்து அருள் பூண்பவனுக்கு; தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப – தன்னுயிர் அஞ்சுவதற் கேதுவான தீவினைகள் இரா என்று கூறுவர் அறிந்தோர்.

“தன்னுயிர் போல் மன்னுயிரையும் எண்ண வேண்டும்” . என்னும் பழமொழியில், மன் என்னுஞ் சொல் மற்ற என்று பொருள் படுதலால், அதை யொத்த இவ்விடத்தும் அப்பொருள் உரைக்கப்பட்டது. அஞ்சும் வினை தன்னதாகவும் பிறரதாகவுமிருக்கலாம். தன் வினையாயின் மறுமைத் துன்பமும் பிறர் வினையாயின் இம்மைத் துன்பமும் நோக்கிய அச்சமாகும். உயர்ந்த அருளறம் பூண்டோன் தீவினை செய்யான் என்பதும், அவனால் அருள் செய்யப் பெற்றவனும் நன்மைக்குத் தீமை செய்யான் என்பதும், கருத்து.

**

கலைஞர் உரை

எல்லா  உயிர்களிடத்தும்  கருணைகொண்டு அவற்றைக் காத்திடுவதைக்

கடமையாகக்   கொண்ட  சான்றோர்கள்   தமது உயிரைக் பற்றிக் கவலை

அடைய மாட்டார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who for undying souls of men provides with gracious zeal.

In his own soul the dreaded guilt of sin shall never feel.

**

Yogi Shuddhananda Translation

His soul is free from dread of sins

Whose mercy serveth all beings.

**

245      

அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு

மல்லன்மா ஞாலம் கரி.

பரிமேலழகர் உரை

அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை – அருளுடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது, வளி வழங்கும் மல்லல்மா ஞாலம் கரி – அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று. ( சான்று ஆவார் தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார். ‘வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி’ என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். ‘ஞாலம்’ ஆகு பெயர். இவை மூன்று பாட்டானும் அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

அருளுடையவராக வாழ்கின்றவர்க்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.

**

மணக்குடவர் உரை

அருளுடையார்க்கு அல்லலில்லை: அதற்குச் சான்று காற்றியங்குகின்ற வளப்பத்தினை யுடைய பெரிய வுலகம்.

இஃது அருளுடையார்க்கு அல்லலின்மை உலகத்தார்மாட்டே காணப்படுமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை – அருள் பூண்டவர்க்கு இம்மையிலும் ஒரு துன்பமுமில்லை; வளி வழங்கும் மல்லல் மா ஞாலம் கரி – இதற்குக் காற்று இயங்குகின்ற வளமுள்ள பெரிய மாநிலத்திலுள்ள மக்களெல்லாரும் சான்றாளராவர்.

அருளுடையார் துன்பப் பட்டதை ஒருவரும் கண்டறியாமையின், எல்லாருஞ் சான்றாளராவர் என்றார். ஞாலத்தார் சான்றாளரெனவே, இம்மையி லென்பது பெறப்பட்டது. ‘ஞாலம்’ இடவாகுபெயர். ஞாலத்தின் மேற்பரப்பிற் காற்று வழங்காத இடமேயின்மையால், ஞாலம் முழுவதையுங் குறிக்க ‘வளி வழங்கும்’ என்னும் அடை கொடுத்தார் என்று கொள்ளலாம்.

இனி, அனந்தநாத நயினார் சமணச்சார்பாக இக் குறட்குக் கூறும் உரை வருமாறு :-

அருளாள்வார்க்கு – அருளையுடையவருக்கு, அல்லல் – துன்பம், இல்லை – எப்போதுமில்லை, (அதற்கு) வளி – (கனோகதி, கனவாத, தனுவாத மென்னும் மூன்று) மகா காற்றுக்களால் சூழப்பெற்று, மல்லல் – வலிபொருந்தி, வழங்கும் – நிலை பெற்றிருக்கும், மா – பெரிய, ஞாலம் – உலகம், கரி – சாக்ஷி என்பதாம்.

“இதன் கருத்து: வலிபொருந்திய மூன்று மகா காற்றுகளின் ஆதாரங்களால் நிலை பெற்றிருக்கும் உலகத்திற்கு அபாய மில்லாதது போல, அருளை ஆளுகின்றவருக்கு யாதொரு துன்பமில்லை என்பதாம்;” – திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைந சமய சித்தாந்த விளக்கமும், பக். 43 – 4.

“வளிமிகின் வலியு மில்லை” (புறம். 51) என்று ஐயூர் முடவனார் பாடியிருப்பதனால், சமணச் சார்பின்றியும் இத்தகையவுரை கூறலாமென அறிக.

**

கலைஞர் உரை

உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை  உணராமல்

கடமையாற்றலாம்  என்பதற்கு,  காற்றின்    இயக்கத்தினால் வலிமையுடன்

திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.

**

Rev. Dr. G.U.Pope Translation

The teeming earth’s vast realm, round which the wild winds blow,

In witness, men of ‘grace’ no woeful want shall know.

**

Yogi Shuddhananda Translation

The wide wind-fed world witness bears:

Men of mercy meet not sorrows.

**

246      

பொருணீங்கிப் பொச்சாந்தார் ரென்ப ரருணீங்கி

யல்லவை செய்தொழுகு வார்.

பரிமேலழகர் உரை

அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் – உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை, பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் – முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர். (உறுதிப்பொருள்: அறம், ‘துன்புறுதல்’ – பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.)

**

மு.வரதராசனார் உரை

அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பர்.

**

மணக்குடவர் உரை

முற்பிறப்பின்கண் அருளினின்று நீங்கி அல்லாதவற்றைச் செய்தொழுகினவர் இப்பிறப்பின்கண் பொருளினின்று நீங்கி மறவியுமுடையவரென்று சொல்லுவர்.

இது பொருளில்லையாமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார்-உயிர்களிடத்து அருள் செய்யாது அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து ஒழுகுவார்; பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர்-முற்பிறப்பில் அறமாகிய உறுதிப்பொருளைத் தேடாது இப்பிறப்பிலும் அதை மறந்தவர் என்பர் அறிவுடையோர்.

**

கலைஞர் உரை

அருளற்றவர்களாய்த்      தீமைகளைச்    செய்து      வாழ்பவர்கள்,

பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Gain of true wealth oblivious they eschew,

Who ‘grace’ forsake, and graceless actions do.

**

Yogi Shuddhananda Translation

Who grace forsake and graceless act

The former loss and woes forget.

**

247      

அருளிலார்க் கவ்வுலக மில்லை பொருளிலார்க்

கிவ்வுலக மில்லாகி யாங்கு.

பரிமேலழகர் உரை

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை – உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு – பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல. ( ‘அவ்வுலகம், இவ்வுலகம்’ என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.)

**

மு.வரதராசனார் உரை

பொருள் இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.

**

மணக்குடவர் உரை

அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல.

இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல் ஆகிய ஆங்கு-பொருட் செல்வம் இல்லாதவர்க்கு இவ்வுலக வின்பம் இல்லாததுபோல; அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை-அருட் செல்வம் இல்லாதவர்க்கு வீட்டுலக இன்ப மில்லை .

அவ்வுலகம் இவ்வுலகம் என்பன சேய்மையும் அண்மையும் என்று வந்த பெயர்கள். உலகம் என்பது ஈரிடத்தும் ஆகுபெயர்.

**

கலைஞர் உரை

பொருள்    இல்லாதவர்களுக்கு   இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது.

அதுபோலவே கருணை  உள்ளம்  இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும்

சிறப்பாக அமையாது.

**

Rev. Dr. G.U.Pope Translation

As to impoverished men this present world is not;

The ‘graceless’ in you world have neither part nor lot.

**

Yogi Shuddhananda Translation

This world is not for weathless ones

That world is not for graceless swines.

**

248      

பொருளற்றார் பூப்ப ரொருகா லருளற்றா

ரற்றார்மற் றாத லரிது.

பரிமேலழகர் உரை

பொருள் அற்றார் ஒருகால்பூப்பர்- ஊழான் வறியராயினார் அது நீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தால் பொலிவர், அருள் அற்றார் அற்றார் மற்று ஆதல் அரிது – அவ்வாறு அன்றி அருளிலாதார் பாவம் அறாமையின் அழிந்தாரே; பின் ஒருகாலத்தும் ஆதல் இல்லை. ( ‘மற்று’ வினைமாற்றின்கண் வந்தது, மேல் பொருள் இன்மையொடு ஒருவாற்றான் ஒப்புமை கூறினார் ஆகலின், அது மறுத்து, பிற ஆற்றான் அதனினும் கொடியது என்பது கூறியவாறு.)

**

மு.வரதராசனார் உரை

பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்; அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயன் அற்றவரே; அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

**

மணக்குடவர் உரை

பொருளில்லாதார் ஒருகாலத்தே பொருளுடையராதலும் கூடும்; அருளில்லாதார் கெட்டார், பின்பு ஆக்கமுண்டாகாது.

இது பொருளின்மையேயன்றி எல்லாக் கேடு முண்டாமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பொருள் அற்றார் ஒருகால் பூப்பர்-ஏதேனும் ஒரு வகையிற் செல்வத்தை யிழந்தவர், முயற்சியால் மீண்டும் ஒருகால் அதைப் பெற்றுப் பொலிவடைவர்; அருள் அற்றார் மற்று ஆதல் அரிது-ஆயின், அருட் பண்பை யிழந்தவரோ ஒரேயடியாய் அழிந்தவராவர்; பின்பு ஒருகாலும் ஆக்கம் பெறார்.

செல்வத்தை யிழந்தவர் மீண்டும் செல்வம் பெற்று இவ்வுலக இன்பத்தை நுகரலாம்; ஆயின் அருளைக் கைவிட்டவர் மறுமையில் வீட்டின்பம் நுகர்தற்கு மீண்டும் இம்மையில் முயற்சி செய்ய முடியாது என்பது கருத்து. ‘மற்று’ பின்மைப் பொருளது.

**

கலைஞர் உரை

பொருளை   இழந்தவர்  அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை

இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who lose the flower of wealth, when seasons change, again may bloom;

Who lose, ‘benevolence,’ lose all ; nothing can change their doom.

**

Yogi Shuddhananda Translation

The wealthless may prosper one day;

The graceless never bloom agay.

**

249      

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேறி

னருளாதான் செய்யு மறம்.

பரிமேலழகர் உரை

அருளாதான் செய்யும் அறம் தேரின் – உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின், தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்று – ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும். (மெய்ப்பொருள் – மெய்ந்நூலில் சொல்லும் பொருள். நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப்பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்துவிடும் : அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்து விடும் என்பது ஆயிற்று: ஆகவே, பிற அறங்கட்கெல்லாம் அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும் அத்துணை இல்லாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.

**

மணக்குடவர் உரை

தெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற்போலும்: ஆராயின்அருளில்லாதான் செய்யும் அறமும்.

இஃது அறஞ் செய்யவும் மாட்டாரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அருளாதான் செய்யும் அறம் தேரின்-உயிர்களிடத்து அருள் செய்யாதவன் செய்யும் அறத்தின் தன்மையை ஆராயின்; தெருளாதான் மெய்ப்பொருள் கண்ட அற்று-தெளிந்த அறிவில்லாதவன் மெய்ப்பொருள் உணர்ந்தாற்போலும்.

தெளிந்த அறிவில்லாதவன் மெய்ப்பொருளுணர முடியாது, அதுபோல் அருளில்லாதவன் அறஞ் செய்ய முடியாது என்பது கருத்து. மெய்ப்பொருள் (தத்துவம்) என்பது. என்றும் நுண்வடி வாகவேனும் பருவடிவாகவேனும் மறைந்தோ வெளிப்பட்டோ அழியாதிருக்கும் தனிப் பொருள் அல்லது அத்தகைய பொருட்டொகுதி. இல்லறங்கட்கு அன்பு போல் துறவறங்கட்கு அருள் மூலம் என்பது கூறப்பட்டது. ‘ஆல்’ அசைநிலை.

**

கலைஞர் உரை

அறிவுத்   தெளிவு   இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக்

கண்டறிய   முடியுமா?   அது  போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும்

அறச்செயலும் இருக்கும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

When souls un wise true wisdom’s mystic vision see,

The ‘graceless’ man may work true work of charity.

**

Yogi Shuddhananda Translation

Like Truth twisted by confused mind

Wisdom is vain in hearts unkind.

**

250      

வலியார்முற் றம்மை நினைக்கதாந் தம்மின்

மெலியார்மேற் செல்லு மிடத்து.

பரிமேலழகர் உரை

வலியார் முன் தன்னை நினைக்க – தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சிநிற்கும் நிலையினை நினைக்க, தான் தன்னின்மெலியார்மேல் செல்லுமிடத்து – அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது. (‘மெலியார்’ எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறிணையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம் என்று அறிந்து, அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

(அருள் இல்லாதவன்) தன்னைவிட மெலிந்தவர்மேல் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.

**

மணக்குடவர் உரை

தாம் தம்மின் மெலியார்மேல் வெகுண்டெழுமிடத்துத் தம்மின் வலியார் முன் தாம் நிற்கும் நிலையை நினைக்க.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தான் தன்னின் மெலியார்மேல் செல்லுமிடத்து-ஒருவன் அருளில்லாமையால் தன்னினும் எளியவரை வருத்துமாறு அவர்மேற் செல்லும் பொழுது; வலியார் முன் தன்னை நினைக்க-தன்னினும் வலியவர் தன்னை வருத்தவரும்போது தான் அவர் முன் அஞ்சி நிற்கும் நிலையை நினைக்க.

தலைமை பற்றி ‘வலியார்’ ‘மெலியார்’ என உயர்திணை மேல்வைத்துக் கூறியது அஃறிணையையுந் தழுவும். தன்குற்றந் தனக்குத் தோன்றாதாகலின், அது தோன்றுமாறும் அதனால் அருள் பிறக்குமாறும் ஒரு வழி சொல்லப்பட்டது.

**

கலைஞர் உரை

தன்னைவிட    மெலிந்தவர்களைத்   துன்புறுத்த   நினைக்கும் போது,

தன்னைவிட    வலியவர்    முன்னால்  அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு

இருப்பதை மறந்துவிடக் கூடாது.

**

Rev. Dr. G.U.Pope Translation

When weaker men you front with threat’ning brow,

Think how you felt in presence of some stronger foe.

**

Yogi Shuddhananda Translation

Think how you feel before the strong

When to the feeble you do wrong.

**

×