28ஆம் அதிகாரம் (கூடா ஒழுக்கம்)

அதிகாரம் 28.

கூடா ஒழுக்கம்

271      

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க

ளைந்து மகத்தே நகும்.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, தாம் விட்ட காம இன்பத்தை உரன் இன்மையின் பின்னும் விரும்புமாறு தோன்ற , அவ்வாறே கொண்டு நின்று தவத்தோடு பொருந்தாததாய தீய ஒழுக்கம் . அது விலக்குதற்கு , இது தவத்தின்பின் வைக்கப்பட்டது.)

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் – வஞ்சம் பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை; பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் – உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும். (காமம் தன் கண்ணே தோன்றி நலியா நிற்கவும், அதனது இன்மை கூறிப் புறத்தாரை வஞ்சித்தலின் வஞ்சமனம் என்றும், அந்நலிவு பொறுக்கமாட்டாது ஒழுகும் களவு ஒழுக்கத்தைப் ‘படிற்று ஒழுக்கம்’ என்றும் உலகத்துக் களவு உடையார் பிறர் அறியாமல் செய்வனவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள் சான்றாகலின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றையும் அறிந்து, அவனறியாமல் தம்முள்ளே நகுதலின், ‘அகத்தே நகும்’ என்றும் கூறினார். செய்த குற்றம் மறையாது ஆகலின், அவ்வொழுக்கம் ஆகாது என்பது கருத்து.)

**

மு.வரதராசனார் உரை

வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

**

மணக்குடவர் உரை

கள்ள மனத்தை யுடையானது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தைப் பிறரறியாராயினும், தன்னுடம்பி னுண்டான பூதங்களைந்தும் அறிந்து தம்முள்ளே நகாநிற்கும்.

பூதங்களைந்தும் அவையிற்றின் காரியமாகிய பொறிகளை.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் – பிறரை வஞ்சிக்கும் மனத்தை யுடையவனின் பொய் யொழுக்கத்தை; பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்-அவனுடம்பாய்க் கலந்துள்ள ஐம்பூதங்களும் கண்டு தம்முள்ளே எள்ளிச் சிரிக்கும்.

படிறு பொய். பிறர் காணவில்லை யென்று மறைவாகத் திருடும் திருடனின் திருட்டை, குறைந்த பக்கம் எங்கும் நிலைத்துள்ள நிலம் வளி வெளி என்னும் மூன்று பூதங்களேனும் தப்பாமற் காணும். ஆயின், கூடா வொழுக்கத்ததானது மனத்தின் பொய்த் தன்மையையும் மறைந்த காமவொழுக்கத்தையும் அவனுடற் கூறாகவும் ஐம் பொறிகளாகவுமுள்ள ஐம்பூதங்களும் காணுவதால், ‘பூதங்களைந்தும்’ என்றும், அவை அவனுக்கும் பிறர்க்கும் தெரியாமல் நகுவதால் ‘அகத்தே நகும்’ என்றும் கூறினார். இது மறை வொழுக்கத்திற்குத் தெய்வச்சான்றும் மனச்சான்றும் மட்டுமன்றிப் பூதச் சான்றும் உள்ள தெனக் கூறியவாறு. பிறரை ஏமாற்றுவதால் ‘வஞ்சமனம்’ என்றார்.

**

கலைஞர் உரை

ஒழுக்க   சீலரைப்  போல்  உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து

அவரது உடலில் கலந்துள்ள  நிலம்,  நீர்,  தீ,  காற்று, வெளி  எனப்படும்

பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who with deceitful mind in false way walks of covert sin,

The five-fold elements his frame compose, deride within.

**

Yogi Shuddhananda Translation

Elements five of feigned life

Of a sly hypocrite within laugh.

**

272      

வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந்

தானறி குற்றம் படின்.

பரிமேலழகர் உரை

வான் உயர் தோற்றம் எவன் செய்யும் – ஒருவனுக்கு வான் போல உயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும்; தான் அறி குற்றம் தன் நெஞ்சம் படின் – தான் குற்றம் என்று அறிந்த அதன் கண்ணே தன் நெஞ்சு தாழும் ஆயின். ( ‘வான் உயர் தோற்றம்’ என்பது ‘வான் தோய்குடி’ (நாலடி 142) என்றாற்போல இலக்கணை வழக்கு. அறியாது செய்த குற்றமல்லது அறிந்து வைத்துச் செய்த குற்றம் கழுவப்படாமையின், நெஞ்சு குற்றத்ததாயேவிடும்; விடவே நின்ற வேடமாத்திரத்துக்குப் புறத்தாரை வெருட்டுதலே அல்லது வேறு பயன் இல்லை என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப்போல் உயர்ந்துள்ள தவக்கோலம், ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?

**

மணக்குடவர் உரை

வானளவும் உயர்ந்த பெருமையுண்டாயினும் அஃதியாதினைச் செய்யவற்று; தன்னெஞ்சறியக் குற்ற முண்டாயின்.

தான்- அசை. இஃது இக்கூடா ஒழுக்கத்தானைப் பிறரறிந்து இகழாராயினும் அவன் செய்கின்ற தவத்தினாற் பயனுண்டாகாது என்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தன் நெஞ்சம் அறிகுற்றம் தான் படின்-தன் நெஞ்சமே குற்றமென்றறிந்ததை ஒருவன் செய்வானாயின்; வான் உயர் தோற்றம் எவன் செய்யும்-அவனது வானளாவ வுயர்ந்த தவக் கோலம் பிறரை அச்சுறுத்துவதன்றி வேறு என்ன பயன்படுவதாம்?

வானுயர்வு என்றது காட்சிப் பொருளைக் கருத்துப்பொருளாக மாற்றிய பொருள்வகை மாற்று. தனக்கு நன்மையே செய்யும் தன் சொந்த வுறுப்பு என்பது படத் ‘தன்னெஞ்சம்’ என்றும், நெஞ்சம் குற்ற மென்றறிந்ததை நெஞ்சமே காணச் செய்வதால் ‘தானறி குற்றம்’ என்றும், நெஞ்சறக் குற்றஞ் செய்யும் துணிவுக்கடுமையும் அதற்குக் கழுவாயின்மையும் நோக்கிக் குற்றப்படின் என்றுங் கூறினார்.

**

கலைஞர் உரை

தன் மனத்திற்குக் குற்றம் என்று   தெரிந்தும்கூட  அதைச்  செய்பவர்,

துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

**

Rev. Dr. G.U.Pope Translation

What gain, thought virtues’ semblance high as heaven his fame exalt,

If heart dies down through sense of self-detected fault?

**

Yogi Shuddhananda Translation

Of what avail are sky-high shows

When guild the conscience gnaws and knows.

**

273      

வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்றோல் பேர்த்துமேய்ந் தற்று.

பரிமேலழகர் உரை

வலி இல் நிலைமையான் வல் உருவம்- மனத்தைத் தன் வழிப்படுத்தும் வலி இல்லாத இயல்பினை உடையான் வலியுடையார் வேடத்தைக் கொண்டு தான் அதன்வழிப்படுதல்; பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று – பசு ‘காவலர் கடியாமல்’ புலியின் தோலைப் போர்த்துப் பைங்கூழை மேய்ந்தாற் போலும். (இல்பொருள் உவமை. ‘வலிஇல் நிலைமையான்’ என்ற அடையானும், மேய்ந்தற்று என்னும் தொழில் உவமையானும் வல் உருவத்தோடு மனவழிப்படுதல் என்பது பெற்றாம். காவலர் கடியாமை ‘புலி புல் தின்னாது’ என்பதனாலும் அச்சத்தானும் ஆம். ஆகவே, வல்உருவங் கோடற்குப் பயன் அன்ன காரணங்களான் உலகத்தார் அயிராமை ஆயிற்று. இவ்வாறு தனக்குரிய இல்லாளையும் துறந்து வலியும் இன்றிப் பிறர் அயிராத வல்உருவமுங் கொண்டு நின்றவன் மனவழிப்படுதலாவது, தன் மனம் ஓடிய வழியே ஓடிமறைந்து பிறர்க்கு உரிய மகளிரை விழைதலாம். அவ்வாறாதல், பெற்றம் தனக்கு உரிய புல்லைவிட்டுப் பிறர்க்குரிய பைங்கூழை மேய்ந்தாற்போலும் என்ற உவமையான் அறிக.)

**

மு.வரதராசனார் உரை

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்ந்தாற் போன்றது.

**

மணக்குடவர் உரை

வலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகிய தவவுருவங் கோடல், பெற்றமானது பிறர் பயப்படும்படி புலியினது தோலைப் போர்த்துப் பைங்கூழ் மேய்ந்த தன்மைத்து.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

வலி இல் நிலைமையான் வல் உருவம்-மனத்தை யடக்கும் வலிமையில்லாத இயல்பினன் வலிமை மிக்க துறவியரின் தவக் கோலத்தைப் பூண்டு கூடாவொழுக்கம் ஒழுகுதல்; பெற்றம் புலியின தோல் போர்த்து மேய்ந்த அற்று-ஆவு கொல்லைக் காவலர் துரத்தா வண்ணம் புலியின் தோலைப் போர்த்துப் பயிரை மேய்ந்தாற் போலும்.

அதிகாரத்தாலும் உவமையாலும் கூடாவொழுக்கம் என்பது வருவித்துரைக்கப்பட்டது. ஆவையுடையார் அதற்குப் புலியின்தோலைப் போர்த்துப் பிறர் கொல்லையில் மேய விடுதலுங் கூடுமாதலின், இவ்வுவமை இல்பொருளுவமை யாகாது. புலி பசித்தாலும் புல் தின்னாது. என்னுங் கருத்தினாலும், புலியடிக்கு முன் கிலியடிக்கும். ஆதலாலும், புனங்காப்போர் புலியை அண்டுவதில்லை. அங்ஙனமே, தவத்தோர் தவறு செய்யார் என்னும் நம்பிக்கையினாலும், தவத் தோரை அணுகின் சாவித்து விடுவர் என்னும் அச்சத்தாலும், மக்கள் தவக்கோலத்தாரிடம் நெருங்குவதில்லை. புலித்தோற் போர்த்த பெற்றம் பிறர் புலங்களில் மறைவாக மேய்வது போல, கூடாவொழுக்கத்தானும் பிறர்க்குரிய பெண்டிரொடு கூடிக் களவாகவும் கள்ளத்தனமாகவும் இன்பம் நுகர்வான் என்பது பெறப்பட்டது.

**

கலைஞர் உரை

மனத்தை  அடக்க   முடியாதவர்  துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று

புலித் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

As if a steer should graze wrapped round with tiger’s skin,

Is show of virtuous might when weakness lurks within.

**

Yogi Shuddhananda Translation

Vaunting sainthood while weak within

Seems a grazer with tiger skin.

**

274      

தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து

வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று.

பரிமேலழகர் உரை

தவம் மறைந்து அல்லவை செய்தல் – அவ் வலிஇல் நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல், வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று – வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிணித்தாற்போலும். ( ‘தவம்’ ஆகுபெயர்.தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தன்வயத்தாக்குதல், இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.)

**

மு.வரதராசனார் உரை

தவக்கோலத்தில் மறைந்துகொண்டு தவம் அல்லாத தீய செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

**

மணக்குடவர் உரை

தவத்திலே மறைந்து தவ மல்லாதவற்றைச் செய்தல் வேட்டுவன் தூற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தாற் போலும்.

அர்ச்சுனன் தவமறைந்தல்லவை செய்தான்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தவம் மறைந்து அல்லவை செய்தல்-மனத்தை யடக்கும் வலிமையில்லாதவன் தவக்கோலத்தின்கண் மறைந்து நின்று கூடா வொழுக்கம் ஒழுகுதல்; வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்த அற்று-வேடன் புதரின்கண் மறைந்து நின்று பறவைகளை வலையாற் பிணித்தாற் போலும்.

‘தவம் ‘ ஆகு பொருளது.

**

கலைஞர் உரை

புதரில்   மறைந்து  கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப்

பிடிப்பதற்கும்,    தவக்கோலத்தில்    இருப்பவர்கள்  தகாத  செயல்களில்

ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.

**

Rev. Dr. G.U.Pope Translation

‘Tis as a fowler, silly birds to snare, in thicket lurks,

When, clad in stern ascetic garb, one secret evil works.

**

Yogi Shuddhananda Translation

Sinning in saintly show is like

Fowlers in ambush birds to strike.

**

275      

பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்

றேதம் பலவுந் தரும்..

பரிமேலழகர் உரை

பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் – தம்மைப் பிறர் நன்கு மதித்தற்பொருட்டு யாம் பற்று அற்றேம் என்று சொல்வாரது மறைந்த ஒழுக்கம், எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும் – அப்பொழுது இனிதுபோலத் தோன்றும் ஆயினும், பின் என் செய்தோம் என்று தாமே இரங்கும்வகை, அவர்க்குப் பல துன்பங்களையும் கொடுக்கும். (சொல் அளவல்லது பற்று அறாமையின் ‘பற்று அற்றேம் என்பார்’ என்றும், சிறிதாய்க் கணத்துள்ளே அழிவதாய் இன்பத்தின் பொருட்டுப் பெரிதாய் நெடுங்காலம் நிற்பதாய பாவத்தைச் செய்தார், அதன் விளைவின் கண் ‘அந்தோ வினையே என்றழுவர்’ (சீவக.முத்தி,27) ஆகலின் ‘எற்று எற்று’ என்னும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் கூடா ஒழுக்கத்தின் இழுக்கம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

‘பற்றுக்களைத் துறந்தோம்’ என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம், என்ன செய்தோம் என்ன செய்தோம்’ என்று வருந்தும்படியான துன்பம் பலவும் தரும்.

**

மணக்குடவர் உரை

பற்றினை யற்றேமென்பாரது குற்றத்தினை யுடைய ஒழுக்கம் எல்லாரும் எற்றெற்

றென்று சொல்லும்படி பல குற்றமும் உண்டாக்கும்.

எற்றென்பது திசைச்சொல். இது தீமைபயக்கு மென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம்- பிறர் தம்மைப் பெரிதும் மதிக்குமாறு யாம் இருவகைப் பற்றும் துறந்தேம் என்று சொல்வாரின் மறைவொழுக்கம்; எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும்-பின்புதம் தீவினைப் பயனை நுகரும்போது, அந்தோ என் செய்தேன் என் செய்தேன் என்று தனித்தனியே வருந்திப் புலம்புமாறு, அவருக்குப் பல்வகைத் துன்பங்களையும் உண்டாக்கும்.

சொல்லளவிலன்றிச் செயலளவிற் பற்றறாமையின் ‘பற்றறே மென்பார்’ என்றும் தீவினைப்பயன் கடுமை நோக்கி ‘எற்றெற்று’ என்றும், கூறினார். தவவடிவில் மறைந்து பிறர் மகளிரொடு கூடுதல் இருமடித் தீவினையாதலின், அதன் விளைவும் மிகக் கொடிதாயிற்று. எற்று என்பது கடந்த நிலைமை நோக்கி வருந்துவதைக் குறிக்கும் இடைச் சொல்.

என்னது-எற்று(என்+து)=எத்தன்மைத்து.

எற்றென் கிளவி இறந்த பொருட்டே.

என்பது தொல்காப்பியம் (இடையியல் , 15).

**

கலைஞர் உரை

எத்தகைய   செயல்  புரிந்துவிட்டோம்  என்று தமக்குத் தாமே வருந்த

வேண்டிய    துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி,  உலகை

ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

‘Our souls are free,’ who say, yet practise evil secretly,

‘What folly have we wrought!’ by many shames o’erwhelmed, shall cry.

**

Yogi Shuddhananda Translation

Who false within but freedom feign

Shall moan “What have we done” with pain.

**

276      

நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணா ரில்.

பரிமேலழகர் உரை

நெஞ்சின் துறவார் – நெஞ்சால் பற்று அறாது வைத்து, துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் – பற்று அற்றார் போன்று தானம் செய்வாரை வஞ்சித்து வாழுபவர் போல், வன்கணார் இல் – வன்கண்மையையுடையார் உலகத்து இல்லை. (தானம் செய்வாரை வஞ்சித்தலாவது, ‘யாம் மறுமைக்கண் தேவராற்பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது ஈதும்’ என்று அறியாது ஈந்தாரை, அதுகொண்டு இழிபிறப்பினராக்குதல். ‘அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால் அலறும் முந்நீர்த் – தடங்கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி உடம்போடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வர் – மடங்கலஞ் சீற்றத்துப் பின் மானவேல் மன்னர் ஏறே’ (சீவக. முத்தி – 244) என்பதனால் அறிக. தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன விளைத்தலின் ‘வன்கணார் இல்’ என்றார்.)

**

மு.வரதராசனார் உரை

மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவர் போல் இரக்கமற்றவர் வேறு எவரும் இல்லை.

**

மணக்குடவர் உரை

நெஞ்சிற் றுறவாராய்த் துறந்தாரைப் போல வஞ்சனை செய்து வாழுமவர்களைப் போலக் கொடியா ரில்லை யுலகத்து.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் – உள்ளத்திற் பற்றாது பற்றற்றவர்போல் நடித்துப் பிறரை யேமாற்றி வாழும் பொய்த் துறவியரைப்போல; வன்கணார் இல் – கொடியவர் இவ்வுலகத்தில் இல்லை.

கன்னியரையும் பிறர் மனைவியரையுங் கற்பழித்தலும், அடைக்கலப் பொருளைக் கவர்தலும், உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்தலும்,கொள்ளை யடித்தலும் ,தம் விருப்பம் நிறைவேறும் பொருட்டு எத்துணை நல்லவரையுங் கொல்லுதலும் ,ஆகிய தீவினைகளிலெல்லாம் வல்லவரும் ,கடுகளவும் மனச்சான்று இல்லவருமாதலின் கூடாவொழுக்கத்தினர் போற் கொடியர் பிறரில்லையென்றார்.பற்றற்றவர் போல் நடிப்பவரும் நடியாதவருமாகிய இருவகைக்கொடியோருள், நடிப்பவர் மிகக் கொடியவர் என்பது கருத்து.

**

கலைஞர் உரை

உண்மையிலேயே   மனதாரப்  பற்றுகளைத்  துறக்காமல், துறந்தவரைப்

போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை.

**

Rev. Dr. G.U.Pope Translation

In mind renouncing nought, in speech renouncing every tie,

Who guileful live, -no men are found than these of ‘harder eye.’

**

Yogi Shuddhananda Translation

Vilest is he who seems a saint

Cheating the world without restraint.

**

277      

புறங்குன்றி கண்டனைய ரேனு மகம்குன்றி

மூக்கிற் கரியா ருடைத்து.

பரிமேலழகர் உரை

குன்றிப் புறம் கண்டு அனையரேனும் – குன்றியின் புறம் போல வேடத்தாற் செம்மையுடையராயினும், குன்றி மூக்கின் அகம் கரியார் உடைத்து – அதன் மூக்குப் போல மனம் இருண்டு இருப்பாரை உடைத்து உலகம் (‘குன்றி’ ஆகுபெயர். செம்மை கருமை என்பன பொருள்களின் நிறத்தை விட்டுச் செப்பத்தினும் அறியாமையினும் சென்றன. ஆயினும், பண்பால் ஒத்தலின் இவை பண்பு உவமை. ஊழின் மலிமனம் போன்று இருளாநின்ற கோகிலமே. (திருக்கோவை 322) என்பதும் அது.)

**

மு.வரதராசனார் உரை

புறத்தில் குன்றிமணிபோல் செம்மையானவராய்க் காணப்பட்டாராயினும், அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உண்டு.

**

மணக்குடவர் உரை

புறத்தே குன்றி நிறம்போன்ற தூய வேடத்தாராயிருப்பினும், அகத்தே குன்றி மூக்குப் போலக் கரியராயிருப்பாரை உடைத்து இவ்வுலகம்.

இஃது அறிஞர் தவத்தவரை வடிவு கண்டு நேர்படாரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

குன்றிப் புறம் கண்ட அனையரேனும் – வெளிக் கோலத்தில் குன்றிமணியின் பின்புறம் கண்டாற் போலச் செம்மை யுடையவரேனும்; அகம் குன்றி மூக்கின் கரியார் உடைத்து – உள்ளத்தில் அதன் மூக்குப்போல இருண்டிருப்பவரை உடையது இவ்வுலகம்.

செம்மை கருமை என்பன குன்றிமணியை நோக்கின் நிறப்பண்பும், கூடா வொழுக்கத்தினரை நோக்கின் குணப்பண்பும் , ஆகும். புறம் என்னுஞ் சொல் குன்றிக்கும் கூடாவொழுக்கத்தினர்க்கும் பொதுவாக முன்நின்றது . இங்ஙனம் நில்லாக்கால் பின்னர் வரும் அகம் என்னுஞ் சொற்கு முரணின்மை காண்க. ‘குன்றி’ ஆகு பெயர்.

**

கலைஞர் உரை

வெளித் தோற்றத்துக்குத்  குன்றிமணி  போல்  சிவப்பாக  இருந்தாலும்,

குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம்  படைத்தவர்களும்   உலகில்

உண்டு.

**

Rev. Dr. G.U.Pope Translation

Outward, they shine as ‘kunri’ berry’s scarlet bright;

Inward, like tip of ‘kunri’ bead, as black as night.

**

Yogi Shuddhananda Translation

Berry-red is his outward view,

Black like its nose his inward hue.

**

278      

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர்.

பரிமேலழகர் உரை

மாசு மனத்தது ஆக – மாசு தம் மனத்தின் கண்ணதாக, மாண்டார் நீர் ஆடி – பிறர்க்குத் தவத்தான் மாட்சிமையுயராய் நீரின் மூழ்கிக் காட்டி, மறைந்து செல்லும் மாந்தர் உலகத்துப் பலர். (மாசு: காம வெகுளி மயக்கங்கள். அவை போதற்கு அன்றி மாண்டார் என்று பிறர் கருதுதற்கு நீராடுதலான், அத்தொழிலை அவர் மறைதற்கு இடனாக்கினார். இனி ‘மாண்டார் நீராடி’ என்பதற்கு ‘மாட்சிமைப்பட்டாரது நீர்மையை உடையராய்’ என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்வொழுக்கமுடையாரது குற்றமும், அவரை அறிந்து நீக்கல் வேண்டும் என்பதும் கூறப்பட்டன.)

**

மு.வரதராசனார் உரை

மனத்தில் மாசு இருக்கத் தவத்தால் மாண்பு பெற்றவரைப் போல நீரில் மூழ்கி மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.

**

மணக்குடவர் உரை

மாசு மனத்தின்கண் உண்டாக வைத்து மாட்சிமைப் பட்டாரது நீர்மையைப் பூண்டு, பொருந்தாத விடத்திலே மறைந்தொழுகு மாந்தர் பலர்.

இது பலர்க்குக் கூடாவொழுக்க முண்டாகு மென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

மனத்தது மாசு ஆக – தம் மனத்தின்கண் குற்றமிருக்கவும் ; மாண்டார் நீராடி – தவத்தால் மாட்சிமைப் பட்டவர் போற் பலகால் குளிர்ந்த நீரில் மூழ்கி ; மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் – அதன்கண்ணே மறைந்தொழுகும் மாந்தர் உலகத்துப்பலர்.

‘மாசு’ காம வெகுளி மயக்கங்கள். நீராடியதால் உடம்பழுக்கேயன்றி உள்ளத்தழுக்கு நீங்கிற்றிலர் என்பதை யுணர்த்த ‘மனத்தது மாசாக’ என்றார். மாண்டார் நீராடி’ என்பதற்கு மாட்சிமைப் பட்டாரது நீர்மையை யுடையராய் என்று மணக்குடவர் உரைத்ததும் ஓரளவு பொருத்த முடையதே. ‘நீராடி’ இரட்டுறல்.

**

கலைஞர் உரை

நீருக்குள்   மூழ்கியோர்  தம்மை    மறைத்துக்    கொள்வது  போல,

மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில்

மாசுடையோர் பலர் உலவுகின்றனர்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Many wash in hallowed waters, living lives of hidden shame;

Foul in heart, yet high upraised of men in virtuous fame.

**

Yogi Shuddhananda Translation

Filthy in mind some bathe in streams

Hiding sins in showy extremes.

**

279      

கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன

வினைபடு பாலாற் கொளல்.

பரிமேலழகர் உரை

கணை கொடிது யாழ் கோடு செவ்விது – அம்பு வடிவால் செவ்விதாயினும், செயலால் கொடிது, யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலால் செவ்விது. ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல் – அவ்வகையே தவம் செய்வோரையும் கொடியர் செவ்வியர் என்பது வடிவால் கொள்ளாது அவர்செயல்பட்ட கூற்றானே அறிந்து கொள்க. (கணைக்குச்செயல் கொலை, யாழுக்குச் செயல் இசையால் இன்பம் பயத்தல். அவ்வகையே செயல் பாவமாயின் கொடியர் எனவும், அறமாயின் செவ்வியர் எனவுங் கொள்க என்பதாம். இதனால் அவரை அறியும் ஆறு கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது; மக்களின் பண்புகளையும் செயல் வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.

**

மணக்குடவர் உரை

செவ்விய கணை கொடுமையைச் செய்யும்; கோடியயாழ் செவ்வையைச் செய்யும்; அதுபோல யாவரையும் வடிவுகண்டறியாது; அவரவர் செய்யும் வினையின் பகுதியாலே யறிந்துகொள்க.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

கணை கொடிது – அம்பு வடிவில் நேராயிருந்தாலும் செயலிற் கொடியது; யாழ் கோடு செவ்விது – யாழ் தண்டால் வளைந்ததேனும் செயலால் இனியது; ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல் – அங்ஙனமே தவஞ்செய்வாருள்ளும் யார் கொடியர் யார் நேர்மையர் என்பதை , அவரவர் கோலத்தாற் கொள்ளாது செயல்வகையாலேயே அறிந்துகொள்க.

கொல்லும் அம்பு கொடியது; இசையால் இன்புறத்தும் யாழ் இனியது. அங்ஙனமே தீயவொழுக்கமுள்ளவர் கொடியவர்; நல்லொழுக்க முள்ளவர் நேர்மையர். ‘யாழ் கோடு’ என்பதால் அம்பின் வடிவு நேர்மை வருவித்துரைக்கப்பட்டது. ‘கொளல்’ வியங்கோள்.

‘யாழ் கோடு செவ்விது’ என்றதை ஆராய்ச்சியில்லாரும் ஆரியப் பார்ப்பனரும் பிறழ வுணர்ந்து , இன்றுள்ள வீணை ஆரியர் கண்டதென்றும் , நால் வகை யாழுட் சிறந்த செங்கோட்டியாழும் வில்யாழ் வகையைச் சேர்ந்ததே யென்றும், உரைப்பாராயினர். யாழ்க் கோட்டின் வளைவு முழுவளைவும் கடைவளைவும் என இரு திறப்படும். வில் யாழ் முழு வளைவும் செங்கோட்டியாழ் கடைவளைவும் உடையன. கடை வளைவு வணர் எனப் பெயர் பெறும். அதையே வளைவெனக் குறித்தார் திருவள்ளுவர் என அறிக.

**

கலைஞர் உரை

நேராகத் தோன்றும் அம்பு,  கொலைச்   செயல்    புரியும். வளைந்து

தோன்றும்    யாழ்,   இசை  இன்பம் பயக்கும். அது போலவே மக்களின்

பண்புகளையும்   அவர்களது   செயலால்    மட்டுமே உணர்ந்து கொள்ள

வேண்டும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Cruel is the arrow straight, the crooked lute is sweet,

Judge by their deeds the many forms of men you meet.

**

Yogi Shuddhananda Translation

Know men by acts and not by forms

Strait arrow kills, bent lute but charms.

**

280      

மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம்

பழித்த தொழித்து விடின்.

பரிமேலழகர் உரை

மழித்தலும் நீட்டலும் வேண்டா – தவம் செய்வோர்க்கு தலை மயிரை மழித்தலும் சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா. உலகம் பழித்தது ஒழித்து விடின் – உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்து விடின். (பறித்தலும் மழித்தலுள் அடங்கும், மழித்தல் என்பதே தலைமயிரை உணர்த்தலின் அது கூறார் ஆயினார். இதனால் கூடா ஒழுக்கம் இல்லாதார்க்கு வேடமும் வேண்டா என அவரது சிறப்புக் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டுவிட்டால், மொட்டை அடித்தலும் சடைவளர்த்தலுமாகிய புறக் கோலங்களும் வேண்டா.

**

மணக்குடவர் உரை

தவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவாராயின்.

இது வேடத்தாற் பயனில்லை: நல்லொழுக்கமே வேண்டுமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

உலகம் பழித்தது ஒழித்து விடின் – உயர்ந்தோர் தவத்திற்காகாதென்று தள்ளிய ஒழுக்கத்தை விட்டுவிடின்; மழித்தலும் நீட்டலும் வேண்டா – தலைமயிரை வறண்டலும் சடையாக்கலும் வேண்டியதில்லை.

சமணர் கையாளும் பறித்தல் முறையும் மழித்தலுள் அடங்கும். மழித்தல் என்னும் வினையினால் தலைமயிர் என்னும் செயப்படுபொருள் உணரப்படும்.

“மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன்

ஆகுல நீர பிற”.

என்றதற் கேற்ப , கூடா வொழுக்க மில்லார்க்கு எவ்வகைப் புறக்கோலமும் வேண்டியதில்லை யென்பது இக்குறளாற் கூறப்பட்டது.

**

கலைஞர் உரை

உலகத்தாரின்  பழிப்புக்கு  உள்ளாகும்  செயல்களைத் துறக்காமல் ஒரு

துறவி,   தனது   தலையை    மொட்டையடித்துக்   கொண்டோ, சடாமுடி

வளர்த்துக்    கொண்டோ   கோலத்தை  மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு

ஏமாற்று வித்தையே ஆகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

What’s the worth of shaven head or tresses long,

If you shun what all the world condemns as wrong?

**

Yogi Shuddhananda Translation

No balding nor tangling the hair!

Abstain from condemned acts with care.

**

×