முன்னொரு பொழுது
உலகம் கொந்தளிப்பில்லாமல்
இயங்கிக் கொண்டிருந்தது
ஆயிரம் கோடிக் கால்கள் கொண்டு
ஆல்கோரிதங்களின் ஆக்டோபஸ் அகிலத்தை ஆள வந்த வேளை
மனம்சிலிர்த்து,
மண்டியிட்டு
மனிதர்கள் தம்மை ஒப்புக்கொடுத்த பொழுது வரை
உலகம் கொந்தளிப்பில்லாமல் தான்
இயங்கிக் கொண்டிருந்தது (ஒப்பீட்டளவில்)
தாம் அணிந்திருந்த முகமூடிகளுக்கு ஏற்ப
ஒவ்வொருவரும் நல்லவர்களாக நடந்து கொண்டிருந்தார்கள்
திருட்டு மதபோதகர்களின் சந்தை
திடீரென்று ஒரு நாளில் சரியும் வாய்ப்பில்லாமல் இருந்தது
சமூக நீதியும் சமத்துவமும் பேசும்
புரட்சியாளர்களால்
அந்தரங்கத்தில் சுதந்திரமாகக் கெட்டவார்த்தை பேச முடிந்திருந்தது
திரைக்கு வெளியில்
சாகசப்பிம்பம்
தகர்ந்து விடாமல் காத்துக்கொள்ள
நாயகர்களுக்கு இயன்றிருந்தது
தற்காதல் நிரம்பிய மனிதர்களிடத்தில்
ஆல்கோரிதங்களின் ஆக்டோபஸ்
தலையைச் சொறிந்து கொண்டு
அமைதிப்படை அமாவாசை போலத்
தன்னடக்கத்துடன் கைகட்டிக் கொண்டு நின்றது தொடக்கத்தில்
‘உள்ளத்தில் உள்ளதைச் சொல்லுங்கள்,
இல்லையென்றாலும் பரவாயில்லை
நாள் முழுதும் என்னோடு ஒட்டியிருங்கள்,
உங்களை ஓரிரவில் புகழ் பெறச் செய்கிறேன்’ என்றது ஆக்டோபஸ்
தற்காதல் மனிதர்களுக்கு
அந்த ஒப்பந்தம் பிடித்திருந்தது
ஆக்டோபசின் அசுரச் சக்கரங்கள் இயங்குவதற்கு
எண்ணத்தைக் கொட்டி எண்ணெய் ஊற்றத் தொடங்கினார்கள்
அதன் அகோரப் பசிக்குச்
சொற்களால் தீனியிட்டுக் கொண்டிருந்தார்கள்
சில நூறு ‘லைக்’ குகளைத் தந்து
பதிலாகப் பல ஆயிரம் மனங்களைப் படித்துக் கொண்டிருந்தது ஆக்டோபஸ்
மனிதர்களின்
ஒவ்வொரு வகை உணர்ச்சித் தெறிப்பையும்
சலனமில்லாமல் கவனித்து
அறிந்தும் பகுத்தும் தொகுத்தும்
தன்னேர் இலாத ஞானியாகத் தன்னை மாற்றிக்கொண்டது
ஒன்றை ‘வைரலா’க்கி
ஒருகோடிப் பேரின்
உள்ளத்தை அது படித்துக் கொள்ளும்
அழச் செய்தும்
சிரிக்கச் செய்தும்
சினக்கச் செய்தும்
மனித உலகை அது அறிந்து கொள்ளும்
அமாவாசை இப்போது
நாகராஜசோழன் எம் எல் ஏ
வரம் தந்த சிவன் தலையிலேயே கைவைக்கத் துணியும் பசுமாசுரன் ஆகுமா
இல்லை அலாவுதீன் கண்டெடுத்த அற்புதப் பூதமாகத் தொடர்ந்தும் அடங்கிச் சேவகம் செய்யுமா
இந்த ஆக்டோபஸ்..
தெரியவில்லை..
இப்போதைக்கு முகநூல் புலவர்களின் கவலை
தமக்கு லைக்குகள் குறைந்து போகின்றன என்பது மட்டும் தான்
–
—
குறிப்புகள்:
‘அமைதிப்படை’ – மணிவண்ணன் இயக்கத்தில் சத்தியராஜ் நடித்த ஒரு திரைப்படம்
–
பயன்படுத்தப்பட்டுள்ள சில ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள்:
ஆல்கோரிதம் – படிமுறைத்தீர்வு
லைக் – விருப்பு
ஆக்டோபஸ் – எண்காலி, கவிதையில் ஆயிரம் கோடிக் கால்கள் கொண்ட உயிரியாகச் சித்தரிக்கப்படுகிறது, செயற்கை நுண்ணறிவுக் காலத்துச் சமூக வலைத்தளங்களுக்கான உருவகம்