‘அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்’ என்பார் திருமூலர்.
‘காதல் சிறந்து’ சிவன் திருவடி சேர்ந்த தன்னைச் சிவமாகவே உணர்ந்து அம்மை பாடும் பாடல் அடுத்து வருவது.
ஆயினேன் ஆள்வானுக்கு அன்றே – ஆள்வானாகிய சிவனுக்கு அன்றே ஆளாகினேன். (சென்ற பாடலை ஆளாயினேன் என்றே முடித்தார்)
பெறற்கு அரியன் ஆயினேன் – பெறற்கரியன் – பிறவி அற்றவன் – சிவன். சிவன் மீது அன்பு பூண்டு அவன் திருவடி சார்ந்ததால் நானும் சிவனாயினேன். அவனைப்போலவே பிறவா நிலை பெற்றேன்.
தூய புனற்கங்கை ஏற்றான் – தூய்மையான நீர் பெருகும் கங்கையை (முடியில்) ஏற்றவன்
ஓர் பொன்வரையே போல்வான் – பொன்னாலான ஒரு மலையைப் போல ஒளிர்பவன்
அனற்கு அங்கை ஏற்றான் – அங்கைக்கு அனல் ஏற்றான் என்பது உருபு மயங்கி, அனலுக்கு அங்கை ஏற்றான் என வந்தது. உள்ளங்கையில் தீயினை ஏற்றவன். சிவனுக்காக யாம் உளோம் என்று எண்ணியிருக்க எமக்காக அவனிருக்கும் நிலையுணர்ந்த சிலிர்ப்பில் உண்டான மொழி மயக்கம் என்றும் கொளலாம்.
அஃது அன்றே அருள் ஆம் ஆறு – அது அன்றோ அவனது அருள் ஆகும் வழி. சிவ நிலை எய்தும் வழி இவ்வாறு ஒன்றிக் கலத்தல் அன்றோ என்றார்.
அற்புத த் திருவந்தாதி பாடல் 8
ஆயினே னாள்வானுக் கன்றே பெறற்கரியன்
ஆயினே னஃதன்றே யாமாறு – தூய
புனற்கங்கை யேற்றானோர் பொன்வரையே போல்வான்
அனற்கங்கை யேற்றா னருள்.