கொரோனா கால உள்ளிருப்பு – சில மனப்பதிவுகள்

  • 6 நிமிட வாசிப்பு

இயற்கை என்ற பிரபஞ்சப் பேராற்றலின் ஒரு பகுதியாகத் தன்னை மனிதன் உணரத் தொடங்கி, அக அச்சத்தைக் கடந்து வந்தால் கொரொனா சூழல் தோற்றுவித்திருக்கும் சிக்கல்களை அவனால் / அவளால் கையாளக்கூடியதாயிருக்கும் என்று நினைக்கிறேன். 

(2020 அக்டோபரில் எழுதியது )

இன்றைய விடியல் கொழும்பில். 

தேவையின் நிமித்தம் வெளியே சென்று வர வேண்டியிருந்தது. 

ஊர் அடங்கி உள்ளிருப்பில் இருக்கும் கொழும்பு அழகாகத் தெரிந்தது.

வழமையில் பெரு நகரங்கள் சித்தப் பிரமையில் சிதறி உழல்பவை. ஏற்கனவே வெறி பிடித்தலையும் நாய்க்கு வலிந்து மதுவையும் புகட்டி விட்டால் எப்படி இருக்குமோ அப்படி. 

வாழும் மனிதர்களின் எண்ணிக்கையை விட வண்டிகள் அதிகமாகி விட்ட நியூயார்க்கையா வளர்ச்சியின் அடையாளம் என்கிறீர்கள் என்பார் எடுவார்டோ கலியானோ. 

கொழும்பின் பேரமைதி பிடித்திருந்தது. தேவை உள்ளவர்கள் மட்டும் வெளியே சென்று வர அனுமதிக்கும் வகையிலான நடைமுறை. தெருவில் சொற்ப எண்ணிக்கையில் வாகனங்கள். வேலைப் பிராக்கு இல்லாமல் சலித்திருக்கும் ஒருவர் சாலையோரமாக இருந்து எண்ணத்தொடங்கினால் கடந்து போகும் வாகனங்களின் மொத்த எண்ணிக்கையைப் பரபரப்பு இல்லாமலே கணித்து விட முடியும். அவ்வளவு சொற்பம்.

ஊரடங்கு நடைமுறையின் காரணமாக அன்றாடத் தேவைகளுக்காக மக்கள் படும் அவதி நிச்சயம் ஏராளம் இருக்கும். ஆனால் இந்தப் பொழுது, இன்றைய சூழல், நமது வாழ்க்கை என்ற தன்னுணர்விலிருந்து விடுபட்டுக் கொஞ்சம் பொதுப்படையாக யோசித்துப் பார்த்தால் அகன்ற நோக்கில் இந்த கொரொனா தோற்றுவித்திருக்கும் சூழ்நிலை உலகுக்கு வரம் என்று எண்ணத் தோன்றியது. 

*

இன்று நான் வெளியே சென்றது என் உடன் பிறந்த இளவலுடன் – அவனது உந்துருளியில் (motorbike). Pulsar RS 200 மாடல். பார்ப்பதற்குப் பிடரியைச் சிலிர்த்துக்கொண்டிருக்கும் சிங்கம் போல மஞ்சள் நிறத்தில் கம்பீரமாக இருக்கும். 

தரிப்பில் இருந்து விசையை முடுக்கி முன்னகரும்போது அது வேகமெடுக்கும் விதம் சீறிப் பாயும் சிறுத்தைப்புலியை ஒத்தது. வேகத்தைக் கூட்டக் கூட்ட நெஞ்சில் கிளைக்கும் மிதப்புணர்வு உலகமே உங்கள் காலடியின் கீழ் வந்து விட்டது என்று எண்ணச் செய்யும். அந்தச் சிங்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க மட்டும் தெரிந்தால் போதும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அதிவேக கார்களையும் முந்திப்போகும் விதமாக உங்களைக் கொண்டு செல்லும். 

Base line வீதியில் நாற்சந்தி ஒன்றில் சிவப்பு நிற சமிக்ஞைக்காகக் காத்திருந்து மஞ்சள் சமிக்ஞை விழுந்ததும் சிங்கத்தின் பிடரியை இழுத்து முறுக்கி வேகமெடுக்கத் தொடங்கினான் இளவல். மின்வெளிச்சம் பொழியும் வேட்டைப்பல் வெளித்தெரிய அது முன்னோக்கிப் பாய்ந்தது. நான் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்தேன். 

இலக்கு வைத்த இரையை இன்னும் சில நொடிகளுக்குள் கவ்வி விடும் என்பதுபோல அதன் வேகம். ஆனால் சில நொடிகளுக்குள் அடுத்த சந்தி வந்துவிட, நிறுத்தென்று வீதி விளக்கு முகம் சிவந்து ஒளிர்ந்தெரிய மறுபடி பிடரியை அழுத்திச் சிங்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சிவப்பு விளக்கின் முன்னான ஒன்றரை நிமிடக் காத்திருப்பின்போது, ‘மனிதனுக்கு இயற்கை போட்ட சிவப்பு சமிக்ஞை தான் கொரொனா’ என்று தம்பியிடம் சிலாகித்துச் சொன்னேன் நான்.

**

18ம் நூற்றாண்டில் மேற்குலகில் நிகழ்ந்த தொழிற்புரட்சியில் ஆரம்பித்து இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் கண்டு பிடிப்புகளையும் சாதனைகளையும் கடந்து, இன்றைய தேதியில் ஒட்டு மொத்த உலகின் இயக்கத்தையும் மனித எண்ணங்களின் இயக்கத்தையும் தொகுத்து ஒற்றை அமைப்பாக்க முயன்று கொண்டிருக்கும் மனிதன், accelerator (உந்த மிதியடி) இல் வைத்த காலை இப்போதுவரை எடுக்கவே இல்லை. 

தனது வேகத்தின் விசையும் சுமையும் தன்னைத் தாங்கிக்கொண்டிருக்கும் இயற்கையை எப்படி இன்னல் படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை நின்று நிதானமாக யோசிப்பதற்கு அவனுக்கு வேளை வாய்க்கவே இல்லை. 

ஓசோன் படல ஓட்டை, பருவ நிலை மாற்றம், வளி மாசு முதலான இன்னோரன்ன பலவற்றையும் ஆய்ந்து பேச எத்தனையோ அனைத்துலக மாநாடுகள் கூட்டப்பட்டபோதும் அவை எதுவும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாதத் தெரியவில்லை. 

தான், தனது என்ற மாயத் தன்னுணர்வை (ego) மீறி இயற்கையோடும் பிரபஞ்சத்தோடும் இயைந்த கூட்டு மனமாகத் தன்னை ஆக்கிக்கொள்ள மனிதனால் இதுவரை இயலவில்லை. 

இந்தப் பித்து நிலைக்கு கொரொனா ஓர் இடைக்காலத் தடையுத்தரவைக் கொண்டு வந்திருக்கிறது. இலட்சோப இலட்சம் விமானப் பயணங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. வாகனப் புகை முதலான மாசுகளால் வடுப்பட்டிருந்த இயற்கை கொஞ்சம் அமைதி அடைவதற்கு நேரம் வாய்த்திருக்கிறது.

**

இயற்கை என்ற பிரபஞ்சப் பேராற்றலின் ஒரு பகுதியாகத் தன்னை மனிதன் உணரத் தொடங்கி, அக அச்சத்தைக் கடந்து வந்தால் கொரொனா சூழல் தோற்றுவித்திருக்கும் சிக்கல்களை அவனால் / அவளால் கையாளக்கூடியதாயிருக்கும் என்று நினைக்கிறேன். 

கொரொனா பரவல் ஆரம்பித்த நாளில் இருந்து அது பற்றி அவ்வப்போது வந்து கொண்டிருக்கும் பரபரப்பான செய்திகளை நானாகத் தேடிச் சென்று படித்ததில்லை. பதற்றத்துக்குத் தீனி செய்திகள் தாம்.

இப்படியான ஓர் ஆபத்தில் இருந்து ஒருவன் தற்காத்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது சார்ந்த – உடல் நலன் சார்ந்த -தரவுகளையும் இவை சார்ந்த சட்ட நடைமுறை, நெறிமுறை ஆகியவற்றையும் தேடிப் படித்துத் தெரிந்து வைத்துக்கொள்கிறேன். இயன்ற வரை கடைப்பிடிக்க முயல்கிறேன். ஆனால் இதைக் கலக்கத்துக்குரிய ஒரு விஷயமாக இது நாள் வரை எடுத்துக்கொண்டதில்லை.

கொரொனா ஆரம்பமானதில் இருந்து, மனப்பாடுகள் இல்லாமல் முழுமையான உள்ளிருப்பில் இருந்த வெகுசிலரில் ஒருவனாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்தக் காலத்தில் மனதுக்குப் பிடித்த பல விஷயங்களைச் செய்திருக்கிறேன். பணம் என்பதன் தேவையை உணராமல் எந்த வித கவலையும் இல்லாமல் இருக்க இயன்ற நாள்கள் இவை.

பிரபஞ்சத்தின் கற்ப காலப் பேராயுளில் நான் என்ற தூசித்துகள் முப்பத்து ஏழு ஆண்டுகள் வாழ்ந்தேன் என்பதோ அறுபதில் மடிந்தேன் என்பதோ தொண்ணூறு வரை ஆயுள் நீண்டது என்பதோ எந்தவித முக்கியத்துவமும் இல்லாத அற்பத் தகவல் என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது. அதை அற்பத்தினும் அற்பமாக்கக் கூடியது மன அச்சம். 

இருக்கும் வரை இன்பமாகவும் இன்னொருவருக்குக் கெடுதல் செய்யாமலும் முடிந்தவரை உதவியாகவும் வாழ முடிந்தால் பிரபஞ்சத்தைக் கொஞ்சமாக அழகு படுத்தி விட்டதைப் போன்ற பூரிப்பு. அவ்வளவே.

எல்லோருக்கும் இப்படி இருக்கும், இருக்க வேண்டும் என்பதல்ல நான் சொல்ல வருவது.  இந்த மன நிலை எவருக்காவது உந்துணர்வு தரும் என்றால் நல்லது தானே என்பது தான் எனது எண்ணம்.

இன்பமே சூழ்க. எல்லோரும் வாழ்க. பவது சப்ப மங்களம்.

1 thought on “கொரோனா கால உள்ளிருப்பு – சில மனப்பதிவுகள்”

  1. செல்வி

    *பவது சப்ப மங்களம்* இந்தத் தொடரின் பொருள் யாது ஐயா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×