புறப்பொருளையும் புகழையும் நாடும் மனம் பகடு மிக்கவனாகவே இறைவனைக் காணும்.
‘நான் வேண்டி நிற்பது இத்துணை பெரிய செல்வம், இத்துணை மாட்சியுடைய புகழ் – இவற்றை அருள வல்ல இறைவன் எவ்வளவு சீர்த்தியும் சிறப்பும் கொண்டவனாக இருப்பான்!’ என்பதவர் எண்ணம்.
கண் காணாத வான வெளியில் உறைபவனாகவே அத்தகையோரால் இறைவன் கருதப்படுவான். இன்ப வளங்கள் நிறைந்த இந்திரர் உலகத்து அரசனாக எண்ணப்படுவான்.
ஆனால் ஞானத்தை வேண்டுவோர்க்குத் தம் மனமே அவனுறையும் கோவில். அக உலகே அவன் ஆளும் அரசு. உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம் என்பார் திருமூலர்.
வானத்தவன், தேவர்கோன் இடத்தவன் என்றெல்லாம் கூறிக்கொண்டிருப்போர் அவ்வாறே தொடர்க! இறைவனோ என் அகத்தை உடையவன் – என் நெஞ்சத்தே வாழ்கிறான் – என்கிறார் அம்மை.
வானத்தான் என்பாரும் என்க – இறைவன் வான்வெளியை இடமாகக் கொண்டவன் என்பார் அவ்வண்ணமே சொல்க!
மற்று உம்பர் கோன் தானத்தான் என்பாரும் தாம் என்க – தேவர் அரசனான இந்திரன் அவையில் வீற்றிருப்பான் என்று சொல்வோர் அவ்வாறே சொல்க!
ஞானத்தான் – ஆனால் அவன் ஞானத்தால் அடையப்பட வேண்டியவன்
முன்நஞ்சத்தால் இருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான் – முன்னொருபோது நஞ்சுண்ட காரணத்தால் அவன் கழுத்தில் காரிருளின் பேரொளி சேரப் பெற்றவன்
என்நெஞ்சத்தான் என்பன் யான் – என் நெஞ்சை உடையவன் அவன் என்பேன் நான்.
அற்புதத் திருவந்தாதி – பாடல் 6
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க – ஞானத்தான்
முன்நஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தானென்பன் யான்.
வானத்தான் என்பாரும் என்க. தேவர் தலைவன் அவையத்தவன் என்பாரும் என்க. ஆனால் உண்மையில் அவன் ஞானமாக – மெய்யறிவாக – உறைபவன். நஞ்சுண்ட கண்டத்தில் இருட்கருமையின் பேரொளி சூழப்பெற்றவன். மருளுடையார் என் சொலினும் அருளுடைய நானோ அவன் என் நெஞ்சத்தவன் என்பேன்.
முரண் களைந்து மருள் தீர்ந்தார்க்கு முடிவே முதல், முதலே முடிவு என்று போன பாடலிற் சொன்னோம். இருளே ஒளியென்னும் விந்தையை இப்பாடலில் காணலாம்.