கார்ட்டீசிய மெய்யியலில் இருந்து பௌத்தப்பள்ளி நோக்கி – ராவணன் தர்ஷனின் ‘நினைவோ ஒரு பறவை’ கவிதைத்தொகுப்பை முன்வைத்துச் சில சிந்தனைகள்
“தர்க்கத்தை மீறிய மீ உணர்வு சொல்லப்படும்போது தர்க்கத்தின் உடன் பிறப்பான ஒழுங்கு சீர்குலைந்து பிறழ்வு நேர்ந்துவிடக்கூடாது என்பது கருதி ஆதி காலத்தில் கவிதை தனக்கான வாகனமாகச் செய்யுளை ஏற்றுக்கொண்டது”
நினைவுப் பறவை என்பது – நினைவை ஒரு பறவையாகச் சொல்வது – கச்சிதமான உருவகம். கடந்த காலம், எதிர்காலம் என்ற இரண்டு கோடுகளுக்கிடையில் தத்தித் தாவியபடி இருக்கும் பறவை அது. ராவணன் தர்ஷனைப் பொறுத்த மட்டில் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கடல்களையும் கானகங்களையும் தாண்டி விடுகிற அசுரப் பறவையாக அது இருக்கிறது.
இந்தத் தொகுப்பில் நினைவுகளுக்கூடாகக் கவிதை மொழியில் அவர் கதை பின்னும் முறை அப்பேர்ப்பட்டது. ஆக்கிமிடிசையும் அபிமன்யுவையும், கார்ள் மார்க்சையும் கந்தக் கடவுளையும், வான்கோவையும் வைகைப்புயல் வடிவேலுவையும், மோனா லிசாவையும் மரியா மக்தலேனாவையும், அலாவுதீனையும் அஞ்சலினா ஜூலியையும், ஹிட்லரையும் புத்தரையும் எத்தித் திரியுமந்தக் காக்கையையும் இன்னும் பலரையும் காலத்தின் வெவ்வேறு துண்டங்களில் இருந்து தனது கதைக்குள் அழைத்து வந்து தனது புனைவின் தர்க்கத்துக்குள் உலவ விடுகிறார். அங்கே ஆச்சரியம் தரும் உலகங்கள் பல உருக்கொள்கின்றன.
**
நினைவு என்னும் வார்த்தை, நிகழ்கணத்தில் தோன்றும் எண்ணத்தையும் – the act of thinking (“நான் நினைக்கிறேன்”), கடந்த கால அனுபவங்களின் சேகரங்களையும் – ஞாபகங்களையும் (memories) குறிக்கக் கூடியது.
மேலைத் தத்துவத்தினதும் – அதன் விளைவாக மேலை அறிவியல் மற்றும் வாழ்முறை ஆகியவற்றினதும் – அடித்தளமாக அமைந்து விட்ட கார்டீசியச் சிந்தனை, நினைக்கும் ஆற்றலை மனித இருப்பின் நிரூபணமாக வரையறுத்தது. I think, therefore I am – Cogito, ergo sum – சிந்திக்கிறேன், அதனால் இருக்கிறேன் என்ற ரெனே டேகார்ட்சின் புகழ்பெற்ற மெய்யியல் முன்மொழிவு, மாயை என்று சந்தேகிக்கப்படும் அனைத்தையும் தாண்டி மனிதன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரம் அவன் சிந்திக்கிறான் என்பதே என்று பகர்ந்தது.
தொடுகை, காட்சி, கேள்வி, முகர்ச்சி, சுவை என்று மனதின் நினைவுகளுக்கு ஊட்டம் தருகிற ஐம்புலன் அனுபவங்களை மனிதனிடத்தில் இருந்து அகற்றிவிட்டால் கூட, மனம் என்ற கருவியைக் கொண்டு மனிதனால் நினைவுகளை உருவாக்க முடியும்; எனவே அவளது இருப்பின் ஆதாரம் அவளால் நினைக்க முடிகிறது – சிந்திக்க முடிகிறது – என்பதே என்றது. இது தன்முனைப்பான மனித மையப் பார்வை.
ஆனால், நினைவை ஒரு பறவையாகச் சொல்வது அல்லது கொள்வது, கார்டீசிய சிந்தனையிலிருந்து விலகி, பிறவித் தளையறுக்கும் பெருமான் புத்தனின் போதத்துக்குள் நுழையும் தடயம் என்று எனக்குத் தோன்றுகிறது.
இது இந்த நூலின் தலைப்பின் மீது நானாக ஏற்றிக்கொள்ளும் வாசிப்பு – நூல் ஆசிரியர் அத்தகைய நோக்கை வெளிப்படையாக முன்வைக்கவில்லை என்றாலும் கூட அசையும் மேகங்களை எதேச்சையாக நோக்கும்போது அங்கே ஓடிக்கொண்டிருக்கும் ஒரு புரவியின் தோற்றம் தெரிவதுபோல ‘நினைவோ ஒரு பறவை’ என்ற நூல் தலைப்பு சுட்டும் உருவகத்துக்குள் இவ்வுண்மை எனக்குப் புலப்படுகிறது. (The mind sees what it chooses to see!).
இங்கே நினைவு என்பது ‘நான்’ என்ற இல்லாத் தன்னிலையில் இருந்து வேறான ஒன்று. தன்பாட்டில் சிறகடித்துக் கொண்டிருக்கும் பறவை அது. புற உலகில் இருந்து புலன்கள் வழி வாய்க்கும் அனுபவங்களைக்கொண்டு அப்பறவை தன்னை உருவாக்கிக் கொள்கிறது; உருமாற்றிக் கொள்கிறது.
பறவையைக் கூண்டில் அடைத்துவிட்டு, அது ‘எனது பறவை’ என்று கூறும் குழந்தைத்தனம் எப்படிப் பறவையின் சுயாதீனத்தைப் பறிக்காதோ, அப்படியே மனம் என்ற கணத்துக்குக் கணம் நிறம் மாறும் பறவையைச் சுயம் என்ற கற்பிதத்தோடு அடையாளப்படுத்துவதும் சரியாகாது. மாறாகத், தான் என்ற அகங்கார உணர்வு இப்படியான நினைவுகளோடு தன்னைப் பிணைத்துக்கொள்வதும் – அதன் விளைவாக உருவாகும் மன மாயையுமே – துன்பத்தின் ஊற்றுக்கண் என்று சொல்லும் பௌத்த போதம். (கூண்டுப் பறவை உண்மையில் தன்னதில்லை என்று உணரும்போது குழந்தை அடையும் துன்பம்).
**

காலக்கோட்டில் ஒன்றாயில்லாத கதை மாந்தர்களைத் தனது புனைவுக்குள் ராவணன் தர்ஷன் உலவ விடும் விதம் வியப்பூட்டுகிறது என்று மேலே சொன்னேன். இப்படிப் புதுக்கிச் சொல்வதற்கு அவர் கவிதை மொழியைக் கைக்கொள்கிறார் என்பதும் தனது மொழிதல் முறைக்குக் கவிஞர் வாலியை ஆதர்சமாகக் கொள்கிறார் என்பதும் அடுத்துக் குறிக்கப்பட வேண்டியன.
கதை என்பதைத் தாண்டி இங்கே கவிதையைப் பற்றிப் பேசியாக வேண்டியிருக்கிறது. கடவுளை வரையறுப்பதைப் போலவே கவிதையை வரையறுப்பதும் சிக்கலான ஒன்று. வேழந்தடவிய விழியிலார் போலத் தத்தமது தரிசனங்களின் வழி வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து நின்றவர்கள், தாம் கண்டதொன்றே உண்மை என்று கடவுளையும் கவிதையையும் காலாதி காலமாகப் பந்தாடி வந்திருக்கிறார்கள். கவிதையை அதிக பட்ச ஜனநாயக உணர்வோடு அணுகுவது தவறில்லை என்பது மட்டுமல்ல, அவசியமும் கூட என்பது எனது கட்சி (எனதான அகவயப்பட்ட கவிதை உலகத்துக்குத் திட்டவட்டமான அளவுகோல்கள் உள்ளன என்றாலும் கூட).
தொன்மையும் பன்முகச் செழிப்பும் சுழிப்பும் மிக்கது தமிழ்க்கவிதை. எதுகை மோனைக்கு அழுத்தம் தராத காட்சி விபரிப்பும் செழுமிய ஓசையும் சங்கக் கவிதையின் சிறப்பு என்றால், சந்தப் பித்து மிகுந்து சண்டமாருதம் போலக் கவிதை பொழியப்பட்ட காலங்களையும் காண்கிறோம். நமது பார்வைப்பரப்புக்குத் துலக்கமாகத் தென்படும் கடந்த எழுபதாண்டு காலக் கவிதை வரலாற்றில் எக்கச்செக்கமான சச்சரவுகள் நிகழ்ந்துள்ளன. பாரதி என்ற ஆதார நதியில் இருந்து கிளைத்த வெவ்வேறு மரபுகளுக்கிடையில் நிகழ்ந்து வரும் மோதல் என்று அதனைச் சாரப்படுத்துவது தவறாகாது.
ஓசைக்கு முதலிடம் தந்து கவிதை சொல்லும் வானம்பாடி மரபை ஒட்டியே இந்தத் தொகுப்பில் கவி பாடுகிறார் ராவணன் தர்ஷன். யாப்பின் கறாரான விதிகளுக்குக் கட்டுப்பட்டு நிற்காமல் அடி முடிவில் ஒத்த சந்தம் பயின்று வரும் இயைபுத் தொடையுடன் வாக்கியங்களை அடுக்கும் கவிஞர் வாலியின் வெகுஜனக் கவிதை சொல்லல் உத்தி இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ராவணனின் சொல்வளம் இங்கே அவரது பலம். எத்தனித்தால், இதிலிருந்து முற்றும் மாறுபட்ட இன்னொரு மொழிதலை உருவாக்கிக்கொள்ளும் நுண்மதி வாய்க்கப் பெற்றவர் ராவணன் என்பதில் எனக்கு ஐயமில்லை.
மொழி மனித வாழ்க்கையின் – மனித அறிவின் – தர்க்கங்களை ஒட்டியது. ஆனால் பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த ஒழுங்கையும் தனக்குள் தாங்கிச் சுமக்கும் திராணி இன்னமும் அதற்கு வாய்க்கவில்லை. நமது புலன் அனுபவங்களைத் தாண்டிய, அவற்றுக்கு அப்பாலான மெய்மைகள் உண்டென்று கண்ட, நிஷ்டை சித்தித்த கணங்களில், மொழியின் தர்க்கத்தை மீறி மொழிவதற்கான தேவை – கவிதைக்கான தேவை – உணரப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். மொழிக்குள்ளே இயங்குகிற, ஆனால் மொழியைத் தாண்டிய இன்னொரு தனிமொழி, மொழிக்குள் இருக்கும் உபமொழி கவிதை. A language within a language – a sub-language.
தர்க்கத்தை மீறிய மீ உணர்வு சொல்லப்படும்போது தர்க்கத்தின் உடன்பிறப்பான ஒழுங்கு சீர்குலைந்து பிறழ்வு நேர்ந்துவிடக் கூடாது என்பது கருதி ஆதி காலத்தில் கவிதை தனக்கான வாகனமாகச் செய்யுளை ஏற்றுக்கொண்டது. அச்சு நூல்களும் ஏட்டு ஓலைகளும் இல்லாத ஆதி காலத்தில் நினைவை மொழி வழி வரவிருக்கும் தலைமுறைகளுக்குக் கடத்துவதற்கு ஓசை அமைதி பிறழாத செய்யுள்கள் உதவின. அசையும் சீரும் அடியும் தளையும் சந்தத்தொடையும் ஆறு பிசகாமல் உணர்வை நடத்திச் சென்றன.
ஆனால் இவையெல்லாம் கவிதைக்கான ஆடைகளும் அணிகளும் மட்டுமேயன்றி இவற்றுக்காகக் கவிதை என்பதாகக் கொள்ள முடியாது. ஒரு சந்தம் இந்த இடத்தில் வர வேண்டும் என்பதற்காக எண்ணம் மடைமாறுகிறது என்றால் கவிதையின் ஆன்மா கைவிடப்படுகிறது என்று பொருள். கவிதையின் ஆன்மா சிதையாமல் சந்தத்தைப் பயன்படுத்தியவர்களில் பாரதி உச்சமானவன். சந்தம் அழைக்கிறது என்பதற்காக அதன் பின்னே அவன் செல்வதில்லை. அவன் சொல்ல விழையும் உணர்வைச் சொல்வதற்கு “என்னை ஏந்திக்கொள்” என்று சந்தம் அவனிடம் வந்து யாசகம் கேட்டு நிற்கும். ராவணனின் கவிதையோட்டம் ஆற்றொழுக்கு மிக்கது. என்றாலும் சந்தத்துக்காக அங்கங்கே மடைமாறுகிறது.
**
மூன்று வகையான அனுபவங்களைப் பற்றியும் அவற்றின் வழி வாய்க்கும் ஞானத்தைப் பற்றியும் பேசுகிறது பௌத்த உளவியல்.
சுத்தமய பஞ்ஞ (கேள்வி அறிவு), சிந்தனாமய பஞ்ஞ (பகுத்தறிவு), பாவனாமய பஞ்ஞ (அனுபவிக்கும் அறிவு – பட்டறிவு) என்பன அம்மூன்றும். ராவணன் தர்ஷன் தான் கற்றவற்றையும் கேட்டவற்றையும் பகுத்து அறிந்தவற்றையும் கவிதையாக்கியிருக்கிறார். பாவனாமய பஞ்ஞவில் நிலைகொண்டும் அவர் கவிதைகள் யாக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
(04.01.2020 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்ற ‘நினைவோ ஒரு பறவை’ நூல் அறிமுக விழாவில் நிகழ்த்திய உரையின் சுருக்கம்)