(வீரகேசரி நாளிதழில் வாரந்தோறும் வெளியாகும் தொடர்)
சில மாதங்கள் முன்பு எமது கார் (Car) களவு போனது. நள்ளிரவு நேரம் வந்த கள்வர்கள் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தின் காலதர்க் கண்ணாடியை உடைத்து, உள் நுழைந்து, அதை ஓட்டிச் சென்றிருக்கிறார்கள்.
காருக்குத் தமிழிலே ‘மகிழுந்து’ என்று பெயர்.
‘வினைத்தொகை’ என்ற அருமையான இலக்கணக் கருத்துருவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கலைச்சொல் அது. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களையும் உணர்த்த்த வல்லது வினைத்தொகை (மகிழ்ந்த, மகிழ்கின்ற, மகிழும் ஆகிய மூன்று காலங்களையும் ‘மகிழுந்’தில் உள்ள ‘மகிழ்’ என்ற முன்னொட்டு உள்ளடக்கியிருக்கிறது).
களவு போன கார், எக்காலத்திலும் துன்பத்தையே தந்து போனதால் அதனை ‘மகிழுந்து’ என்று அழைக்க எனக்கு மனம் வரவில்லை. எனவே கார் என்றே தொடர்கிறேன் – ஆங்கிலம் தவிர்க்கும் தனித்தமிழ் முனைப்பின்பால் எனக்கு நாட்டமுண்டு என்ற போதிலும் கூட.
இங்கே இங்கிலாந்திலே கார் வைத்திருப்பது ஆடம்பரத்தின் குறியீடு கிடையாது; வளர்ச்சியடைந்த நாடுகளில், வறியவர்களுக்கும் கூட இன்றியமையாத் தேவையாக மாற்றப்பட்ட ஒன்று அது. நியூயார்க் முதலான பெருநகரங்களில் மக்கள் தொகையைவிட எந்திர வண்டிகளின் தொகை அதிகமாக இருப்பதைச் சொல்லி வியப்பார் இடதுசாரி அறிஞரான எடுவார்டோ கலியானோ.
கார் களவு போனால் முதல் வேலையாக நீங்கள் காவல் துறைக்கு அறிவிக்க வேண்டும். அடுத்து உங்கள் காப்புறுதி நிறுவனத்துக்குத் (Insurance company) தெரியப்படுத்த வேண்டும். இந்தப் புள்ளியில்தான் நீங்கள் நினைத்தும் பாராத மன உளைச்சல்கள் எல்லாம் வரத்தொடங்கும்.
தொடக்கத்தில் ‘உங்களைக் காக்க நாம் இருக்கிறோம்’ என்ற உறுதி மொழியோடு தேவ தூதர்கள் போலத் தோன்றித் தேனொழுகப் பேசித் தமது பண்டத்தை விற்கும் காப்புறுதி நிறுவனக்காரர்கள், கார் காணாமல்போய் இழப்பீட்டுத்தொகை கோரும்போது யமதூதர்களாக மாறி நிற்பார்கள்.
களவு போன காரை மீட்பதற்குக் காவல் துறை தகுந்த விசாரணைகளை மேற்கொள்கிறதோ இல்லையோ, நீங்கள் தான் குற்றவாளி என்பது போல, காரைப் பறிகொடுத்த உங்களிடம் காப்புறுதி நிறுவனம் குறுக்கு விசாரணை செய்யத் தொடங்கும்.
இந்த அனுபவம் இங்கிலாந்திலே இன்சூரன்ஸ் துறை பற்றிக் கொஞ்சம் தேடி ஆராயுமாறு என்னை உந்தியது.
இங்கிலாந்திலே காப்புறுதி வணிகம் கொழுத்த வருமானம் தரும் ஒரு துறையாகவே இனங்காணப்படுகிறது. பென்னம் பெரிய அசுர நிறுவனங்கள் இந்தத் துறையை ஆள்கின்றன . வாகனக் காப்புறுதித் துறையின் கடந்த ஆண்டுக்கான சந்தைப் பெறுமதி £19.9 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது; ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இது £23.6 பில்லியனாக இருந்தது.
இந்தத் துறையின் விற்பனைச் சரக்கு என்ன? உங்களுக்கு எப்போதாவது ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கான காப்பினை (risk protection) வழங்குவோம் என்று அவர்கள் உறுதி தருகிறார்கள் (Insurance: காப்பு-உறுதி). பதிலாக, மாதாமாதம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட ஒருதொகையை நீங்கள் செலுத்த வேண்டும். இது ப்ரீமியம் (premium – காப்பீட்டுக் கட்டணம்) என்று அழைக்கப்படுகிறது. காப்பீட்டுக் கட்டணத்தொகை வழியாக ஈட்டும் வருமானத்தை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இலாபம் தரக்கூடிய பல்வேறு துறைகளில் முதலீடு செய்கின்றன. காப்புறுதிக் காலத்தில் உங்களுக்கு ஆபத்து எதுவும் நேரா விட்டால் நீங்கள் செலுத்திய தொகை திரும்பத் தரப்படுவதில்லை. இங்கிலாந்திலே இதுவே நடைமுறை.
நீங்கள் செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணம் எவ்வளவு என்பதைப் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன: எடுத்துக்காட்டாக, நீங்கள் வாழும் பகுதி கார் திருட்டு முதலான குற்றச்செயல்கள் மலிந்து போன இடமாக அடையாளம் காணப்பட்டால், ப்ரீமியம் தொகை மளமளவென்று உயர்ந்து விடும். இப்படியான சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் உங்கள் வாகனப் பெறுமதியின் 20% இற்கு நிகரான தொகையை ஆண்டொன்றில் ப்ரீமியமாகச் செலுத்தி இருப்பீர்கள்.
நடைமுறைசார் பொருளியலில் Demand vs Supply பொறிமுறையே சந்தை விலையைத் தீர்மானிக்கிறது என்பது அரிச்சுவடிப் பாடம். அதாவது ஒரு பொருளுக்கு அல்லது சேவைக்கு எவ்வளவு தேவை / கோரிக்கை (Demand) இருக்கிறதோ அதற்கேற்ப அதன் வழங்கல் (Supply) கூடிக்குறையும். கோரிக்கை அதிகமாக இருந்து வழங்கல் குறைவாக இருந்தால் அந்தப் பொருளின் விலை தானாகக் கூடத் தொடங்கும். மாம்பழத்தை அதிகம்பேர் விரும்புகிறார்கள் – ஆனால் மாம்பழம் சந்தையில் அதிகமாகக் கிடைப்பதில்லை. இப்படியொரு நிலை இருந்தால் மாம்பழத்தின் விலை கூடத் தொடங்கிவிடும். சந்தையில் யாரிடம் மாம்பழம் உள்ளதோ அவர்கள் அதிக இலாபம் ஈட்டுவார்கள்.
இந்தக் கோட்பாட்டை இன்சூரன்ஸ் முதலான துறைகளுக்குப் பொருத்திப் பார்க்கும்போது விபரீதமான ஒரு தோற்றம் எழுகிறது. எங்கே பாதுகாப்புக் குறைவாக இருக்கிறதோ – திருட்டுப் பயம் அதிகமாக இருக்கிறதோ – அங்கே காப்பீட்டுக் கட்டணம் அதிகமாக இருக்கும். இதன் வழியாகக் காப்புறுதி நிறுவனங்கள் அதிக இலாபம் பார்க்கும். இதுவொரு முரண் நகை. காப்புறுதி நிறுவனங்களின் கடமை, ‘பாதுகாப்பு வழங்குவது’ என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இலாப நோக்கம் கொண்டு இயங்கும் இந்த நிறுவனங்கள் பாதுகாப்பின்மையை – அல்லது அது குறித்த அச்சத்தை – வைத்தே தமது இலாபத்தை ஈட்டிக்கொள்கின்றன.
எடுத்துக்காட்டாக, 10,000 கார்கள் உள்ள இலண்டனின் ஒரு பகுதி, கார் திருட்டுக்குப் பேர் போன இடமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். வழமையான காப்பீட்டுக் கட்டணம் சராசரியாக மாதத்துக்கு 100 பவுண் என்றால், இப்படியான ஓர் இடத்தில் உள்ளவர்களுக்கு மாதக்கட்டணம் 180 பவுண் வரைக்கும் உயர்த்தப்படலாம் – ஆபத்து அதிகம் என்ற காரணத்தை முன்வைத்து.
இதன்படி, ஆண்டொன்றில் காப்புறுதி நிறுவனங்கள் இந்தப்பகுதியில் காப்பீட்டுக்கட்டணத்தின் மூலம் ஈட்டும் மொத்தத்தொகை 10,000 x 180 x 12 = 21.6 மில்லியன் பவுண்சாக இருக்கும்.
இங்கிலாந்தில் ஆண்டு தோறும் களவுபோகும் கார்களின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு சராசரி கணித்தால், இந்தப் பகுதியில் ஓராண்டில் 23 கார்கள் களவு போவதாகக் கணக்கிடலாம்.
களவுபோகும் காரொன்றுக்கு இழப்பீடாக வழங்கும் சராசரித் தொகை 10,000 என்று கொண்டால், ஆண்டொன்றில் காப்புறுதி நிறுவனங்கள் வழங்கும் தொகை 23 x 10,000 = 230, 000 பவுண்சாக இருக்கும். இது அண்ணளவாக காப்புறுதி நிறுவனங்களின் மொத்த வருமானமாக மேலே கணக்கிடப்பட்ட தொகையின் 10.6% ஆகும்.
இதுவொரு தோராயமான – எளிமைப்படுத்தப்பட்ட – கணக்கு மட்டுமே. வாகன விபத்து முதலானவற்றுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையும் கணிசமானது. தவிரவும், காப்புறுதிப் பண்டங்கள் சிக்கலான கட்டமைப்புக் கொண்டவை. அவற்றின் முழு நுட்பங்களைத் துறைசார் நிபுணர் ஒருவரே விளக்கிச்சொல்ல முடியும்.
எனினும், கொஞ்சம் நுணுகிப் பார்த்தால் இந்தப் பொறிமுறையை விளங்கிக்கொள்வதில் சிரமம் இருக்காது. இங்கிலாந்திலே இலவசப் பொதுமருத்துவச் சேவைக்கான நிதியினை அரசாங்கம் குறைக்கக் குறைக்க, மருத்துவக் காப்புறுதியை விற்கும் தனியார் நிறுவனங்களின் வருவாய் பெருகிச் செல்கிறது என்பது தரவுகள் வழியாக நிறுவப்படக்கூடிய ஓர் உண்மை. ‘ஆபத்து நேரலாம்’ என்ற அச்சம் இங்கே பண்டமாக்கப்படுகிறது (commodification). அதன் வழியாக இலாபம் ஈட்டப்படுகிறது.
Demand vs Supply மாற்றங்களுக்கு ஏற்ப விலைகள் கூடிக் குறைவது இயல்பான ஒரு போக்கில் நிகழ்வது என்றே மரபான பொருளியல் போதித்து வந்தது.
மக்களிடையே நிலவும் தேவையை நிறைவேற்றுவதற்காக ஒரு பண்டம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் விற்கப்படும் பண்டத்தின் உண்மையான பெறுமதியை அதன் விலை குறிக்கிறது என்பதும் மரபான நம்பிக்கைகளாக இருந்து வந்தன.
உண்மையில், முதலீட்டுப் பொருளாதாரத்தில் பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுவதன் முதன்மை நோக்கம், சந்தைப் பரிவர்த்தனையும் அதன் வழியாக உபரிப் பெறுமதியை (surplus value) – இலாபத்தை (profit) – உருவாக்குவதுமே என்பதை முதன்முதலாக விரிவாக ஆய்வு செய்து வெளிப்படுத்தியவர் ஜெர்மனியத் தத்துவ ஞானியும் கம்யூனிச மூலவருமான கார்ல் மார்க்ஸ் ஆவார்.
இப்படியான ஒரு பொறிமுறையில், ஒரு பண்டத்தின் விலை, அதன் உண்மைப் பெறுமதியைக் காட்டிலும் உபரிப் பெறுமதியை நோக்கி – இலாபத்தை நோக்கி – மையங்கொள்ளத் தொடங்குகிறது.
மருத்துவம், பாதுகாப்பு முதலான இன்றியமையா மனிதத் தேவைகள் இவ்வாறு பண்டமாக்கப்படும்போது அது சமூகங்களுக்குள் உள்ளார்ந்த முரணை உருவாக்குகிறது.
மனிதர்களுக்குத் தேவை உண்டு. தேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இயங்குவதற்கு பணம் – மூலதனம் (capital) – கருவியாகிறது. ஆனால் அது உபரி நோக்கிய உந்துதலால் முரண்பாடுகளுக்கு இட்டுச் செல்கிறது. இந்த மாயச் சுழலில் இருந்து மானுடக்குலம் விடுபடுவது எப்படி?
இதற்குத் தீர்வாக, தேவையும் (Demand) வழங்கலும் (Supply) சம நிலையில் உள்ள – உபரியை நோக்கி உற்பத்தியை உந்தித் தள்ளாத – ஓர் இலட்சியவாதச் சமூகத்தை கார்ல் மார்க்ஸ் கனவு கண்டார். அதனை அவர் கம்யூனிசம் என்று அழைத்தார். கார்ல் மார்க்சின் கம்யூனிச ச் சமூகத்தில் எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கும் என்பதால் அங்கே தனிச்சொத்து என்று எதுவும் இருக்காது.
இத்தகைய கற்பனைச் சமூகத்தை – நடைமுறையில் இல்லாத, இலட்சிய உயர்ச்சி கொண்ட சமூகத்தை – ஆங்கிலத்தில் utopia என்று அழைக்கிறார்கள்.
தமிழில் உள்ள ஓர் இலக்கிய உத்தியைப் பயன்படுத்திச் சொல்வதென்றால், utopia உயர்வு நவிற்சி சார்ந்தது. நம்புவதற்குக் கடினம் – ஆனால் நடந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணச் செய்வது உயர்வு நவிற்சி.செய்யுட் கவிதைகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது.
இப்படி demand உம் supply உம் சம நிலையில் இருக்கும் ஒரு சமூகத்தை – மனிதரிடத்தே தேவைகள் தீர்ந்துபோய், அதன் காரணமாக முரண்பாடுகள் ஒழிந்து, மகிழ்ச்சி மட்டுமே குடிகொண்டிருக்கும் சமூகத்தைப் – பண்டைய தமிழ்ப்புலவர்கள் யாராவது கற்பனை செய்து பார்த்திருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தால் அங்கும் நமது கம்பரே முன்னே வந்து நிற்கிறார்.
கம்பன் படைக்கும் அயோத்தி நகரில் நான் வாழ்ந்திருந்தால், அங்கே இன்சூரன்ஸ் கம்பனிகளை நாட வேண்டிய தேவை இருந்திருக்காது. நகரப் படலத்தில் கம்பன் பாடுகிறான்:
“.. மாநகர் வாழு மாக்கள்
கள்வார் இலாமைப் பொருட் காவலும் இல்லை யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ”
அந்த நகரத்தில் கள்வர்கள் இல்லை. அதனால் காவலும் இல்லை. ஏன் கள்வர்கள் இல்லை? அங்கே வாழ்வோரது தேவைகள் யாவும் நிறைவு செய்யப்பட்டுவிட்டன. எனவே களவுக்கான வாய்ப்பு எழாது. இதன் காரணத்தால் அங்கே பொருட்களை விற்பவர்களும் இல்லை. கொள்வனவு செய்பவர்களும் இல்லை.
ஒப்பவே, அங்கே கல்வியிற் சிறந்தவர்கள் என்று சொல்வதற்கும் எவரும் இல்லை. எல்லோருக்கும் சமமான கல்வி கிடைத்துவிட்ட காரணத்தால் – அங்கே வழங்கல் (supply) நெருக்கடி இல்லை என்பதால் – அறிவிலே ஏற்றத் தாழ்வு கிடையாது. எல்லோரிடத்திலும் எல்லாச் செலவமும் இருப்பதாலே அங்கே இல்லாதவர் என்றும் எவரும் இல்லை. சொத்துக்களை உடையவர்களும் இல்லை:
கல்லாது நிற்பார் பிறரின்மையிற் கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை
எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ
‘இல்லாரும் இல்லை, உடையார்களும் இல்லை’ என்ற அந்தப் புள்ளியில் கம்பரும் கார்ள் மார்க்சும் காலம் விட்டுக் காலம் தாவிச் சந்தித்துக் கொள்கின்றனர்.
கம்பன் துதி:
எந்தை ஏந்தல் இறைவ எனவுனைச்
சந்தம் முந்தும் தமிழ்கொடு பாடுவென்
சிந்தை எங்குந் தெளிவும் அருளுமே
தந்து காத்தல் நின் தண்ணளி செய்கவே
அடுத்த வாரம்: கம்பன் என்னும் காட்சிக் கலைஞன்