- 3 நிமிட வாசிப்பு –\
– டாக்டர் மு. வரதராசன், ‘மொழியியற் கட்டுரைகள்’ நூலில் இருந்து
எதற்கோ தொடங்கிய முயற்சி வேறு எதற்கோ பயன்படுவது உலகியற்கை. வெண்கதிரைக் குறிக்க ஏற்பட்ட ‘திங்கள்’ என்னுஞ் சொல் இன்று அப்பொருளை அவ்வளவாக உணர்த்தாமற் கிழமையையும் மாதத்தையும் உணர்த்தப் பயன்படவில்லையா? அதுபோல் அஃறிணையாகிய குழந்தைகளை உணர்த்த ஏற்பட்ட ‘மக்கள்’ என்னும் சொல் காலப்போக்கில் உயர்திணையாகிய மனிதரை உணர்த்துவதாயிற்று.
‘கள்’ மிகப் பழையது; நெடுங்காலத்திற்கு முன்பே இருந்தது. ‘மக்கள்’ தோன்றிய பழங்காலத்திலேயே ‘கள்’ இருந்தது.
ஆனால் பழங்காலத்தில் அதற்கு ஒரு வரையறை இருந்தது. இக்காலத்தில் அந்த வரையறை இல்லாமற் போய்விட்டமை வருந்தத்தக்கது.
உயர்திணைக்குக் ‘கள்’ ஆகாது என்றும், அது அஃறிணைக்கே உரியது என்றும் அஃறிணையிலும் சில இடங்களிலேயே உள்ளது என்றும் தொல்காப்பியனார் வகுத்திருக்கிறார். இக்காலத்திலோ அஃறிணை, உயர்திணை என்ற வேறுபாடு இல்லாமல் ‘கள்’ இடம் பெற்றுவிட்டது. அஃறிணையைவிட உயர்திணையிலேயே ‘கள்’ மிகுதியாகப் பயன்படுவது போலத் தோன்றுகிறது.
கள்ளோடு சிவணும் அவ்வியற் பெயரே
கொள்வழி உடைய பலவறி சொற்கே
(தொல்காப்பியம், சொல்லதிகாரம் , சூத். 171)
என்பது தொல்காப்பியம். இதனால், உயர்திணையில் ‘கள்’ இடம் பெறாது என்றும் அஃறிணையிலுஞ் சில இடங்களிலேயே அது உள்ளது என்றுந் தொல்காப்பியனார் கருதியது தெளிவாகிறது.
ஆனால், தொல்காப்பியத்திலேயே ‘மக்கள்’ என்னும் சொல் உள்ளது. அது உயர்திணையை விளக்கும் இடத்திலேயே அமைந்துள்ளது என்றது பின்வருஞ் சூத்திரத்திலிருந்து புலப்படும்:
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே.
(தொல்காப்பியம், சொல்லதிகாரம் , சூத். 1)
மக்கள் என்று கூறியதோடு அல்லாமல் சுட்டிக் கூறும்போது ‘அவர்’ என்ற உயர்திணைப் பலர்பாற் சொல்லாலேயே சுட்டியுள்ளார். ஆகவே ‘அவர்’ என்பதற்கு ஈடான உயர்திணைச் சொல்லாக ‘மக்கள்’ வழங்கியது என்பது தெளிவு.
மக்கள் பன்மையாயின் அதற்கு ஒருமை ‘மக’ என்பதே (மகவு – குழந்தை). இது தொடக்கத்திற் குழந்தைகளையுஞ் சிறுவர்களையும் குறிக்க வழங்கிய சொல்லாக இருந்து, காலப்போக்கில் மற்ற மனிதர்களையுங் குறிக்க வழங்கியதுபோலும். இன்றும் ‘மக்கள்’ என்னும் சொல்லுக்குக் கிராமங்களில் ‘வயிற்றில் பிறந்தவர்கள்’ (அஃதாவது பிள்ளைகள்) என்னும் பொருளே உள்ளது. இலக்கியத்தில், வயிற்றில் பிறந்தவர்கள் என்னும் பொருளோடு மனிதர்கள் என்ற பொருளும் உள்ளது.
‘அவர்’ என்னும் சொல்லில் உள்ள உயர்திணைப் பலர்பால் விகுதி ‘அன்’, ‘மக’ என்ற சொல்லோடு அஃறிணைக்கு உரிய ‘கள்’ விகுதி சேராமல் ‘அர்’ என்ற விகுதிசேர்ந்து உயர்திணையை உணர்த்தியிருக்க வேண்டும். அவ்வாறு சேர்ந்தமைந்த சொல் தமிழிலக்கியத்தில் இல்லாமற் போகவில்லை. மகார் என்ற ஒரு பழைய சொல் உள்ளது. மக + அர் = மகார் என உயர்திணைக்கு உரிய ‘அர்’ விகுதி அதில் அமைந்துள்ளது. ஆயின், மகார் (மகா அர்) என்னும் அச் சொல் சிறுவர்களைக் குறிக்கின்றதே அல்லாமல் மனிதர் என்னும் பொருள் தரவில்லை.
மனிதர்க்கு உரிய பகுத்தறிவு இல்லாத உயிர்களும் உயிரில்லாப் பொருள்களும் அஃறிணை என்பது இலக்கணம். பகுத்தறிவே மனிதரின் சிறப்பியல்பாகச் சுட்டப்படுவது (‘மக்கட் சுட்டு’). குழந்தைகள் போதிய பகுத்தறிவு வளர்ச்சி பெறாத நிலையில் இருத்தலால் அஃறிணையாகக் கருத இடம் உண்டு. இன்னும் “குழந்தைகள் தூங்குகின்றன” என்றும் “குழந்தை தூங்குகின்றது” என்றும் எழுத்திலும் பேச்சிலுங் குழந்தை அஃறிணையாக வழங்குதலைக் காணலாம். தொடக்கத்தில் மக என்னும் ஒருமைப் பெயரும் மக்கள் (மக + கள்) என்னும் பன்மைப் பெயரும் அஃறிணையாக வழங்கியிருக்க வேண்டும். அதனாலேதான் ‘கள்’ விகுதி (இது அஃறிணைக்கே உரிய விகுதி) இந்தச் சொல்லில் இடம்பெற்றது. இவ்வாறு தொடங்கிய சொல், தன் தொடக்கப் பொருளைக் கடந்து, உயர்திணையாகிய மனிதரைக் குறிக்கலாயிற்று. எதற்கோ தொடங்கிய முயற்சி வேறு எதற்கோ பயன்படுவது உலகியற்கை. வெண்கதிரைக் குறிக்க ஏற்பட்ட ‘திங்கள்’ என்னுஞ் சொல் இன்று அப்பொருளை அவ்வளவாக உணர்த்தாமற் கிழமையையும் மாதத்தையும் உணர்த்தப் பயன்படவில்லையா? அதுபோல் அஃறிணையாகிய குழந்தைகளை உணர்த்த ஏற்பட்ட ‘மக்கள்’ என்னும் சொல் காலப்போக்கில் உயர்திணையாகிய மனிதரை உணர்த்துவதாயிற்று.
குழந்தைகள் வளர்ந்த பின் பகுத்தறிவு பெற்ற இளஞ் சிறுவர்களாகின்றனர். பழங்காலத்தில் அவர்களைக் குறிக்க உயர்திணைச்சொல் வேண்டியிருந்தது. அப்போது ‘மக’ என்னும் அடிச் சொல்லோடு ‘அர்’ என்னும் உயர்த்திணை விகுதி சேர்ந்த, மகார் (மகா + அர்) என்னும் உயர்திணைச் சொல்லைப் பெற்றனர். இவ்வாறு நோக்கின் அக்காலத்திற் குழந்தைகளைக் குறிக்க ‘மக்கள்’ என்னும் சொல்லும் இளஞ் சிறுவர்களைக் குறிக்க ‘மகார்’ என்னுஞ் சொல்லும் பயன்பட்டிருக்கும் என்று உணரலாம். இது தொல்காப்பியனாருக்கும் மிக முற்பட்ட காலத்தில் இருந்த நிலையாகும். தொல்காப்பியனார் காலத்தில் – அதற்குச்சிறிது முற்பட்ட காலத்தில் – வளர்ந்த மனிதரைக் குறிக்க ஒரு சொல் தேவையாயிற்று. அப்போது ‘மக்கள்’, ‘மகார்’ என்னும் இரு சொற்களில் ஒன்றைத் தேடலாயினர். மகார் என்னுஞ் சொல்லையே தேர்ந்தெடுத்திருப்பின் மிகப் பொருத்தமான உயர்திணைச் சொல்லாக அமைந்திருக்கும். உயர்திணை ஆண்பாலுக்குச் சொல் அமைத்தபோது ஆண்பால் விகுதியாகிய ‘அன்’ சேர்த்து, மக + அன் = மகன் என்று ஆக்கினர். உயர்த்திணைப் பெண்பாலுக்குச் சொல் அமைத்தபோது பெண்பால் விகுதியாகிய ‘அள்’ சேர்த்து, மக + அள் = மகள் என்று ஆக்கினர். இவை இப்போது வயிற்றில் பிறந்த ஆணையும் பெண்ணையும் குறிக்க வழங்கினும், தொடக்கத்திற் பொதுவாக ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் குறிக்க வழங்கிய சொற்களே ஆகும். ‘அவன் ஓர் ஆண்மகன்’, ‘அவன் ஒரு வீரமகன்’ என்று இக்காலத்தில் வழங்குந் தொடர்களிலும் பொதுவாக மனிதருள் ஆணையும் பெண்ணையுங் குறிப்பதைக் காணலாம். உயர்திணை ஆண்பாலுக்கு மகன் என்பதும் பெண்பாலுக்கு மகள் என்பதுங் கொள்ளப்பட்டது போல பலர்பாலுக்கு மகார் என்பதே கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அதுதான் ஒழுங்கான முறை.
ஆனால், மொழியிற் காரணப் பொருத்தமும் நியாயமும் முற்றிலும் எதிர்பார்க்க முடிவதில்லை. மனிதன் குறையுடையவன்; ஆதலின் அவனுடைய படைப்பாக உள்ள மொழியும் குறையுடையதே என அமைய வேண்டியுள்ளது. அதனாலே சில இடங்களில் எதிர்பாராத தவறுகள் வேரூன்றி மரபு எனப் போற்றப்படுகின்றன. இம்முறையில் பழங்கால மக்கள் மனிதரைக் குறிக்கச் சொல் தேடியபோது (தேடுவதும் இல்லை. கிடைத்ததை எடுத்துப் பயன்படுத்தும் வழக்கம் பேசுவோரிடங் காணப்படுவது) ‘மகார்’ என்பதை விட்டு ‘மக்கள்’ என்பதையே எடுத்துக் கொண்டனர். பெரும்பாலோர் செய்யுந் தவறு வாழ்க்கையிலே சடங்கு ஆகிவிடுவதும் உண்டு அன்றோ? அதுபோல மக்கள் என்ற தவறான சொல் அனைவரும் போற்றும் நிலை அடைந்தது; இலக்கியத்திலும் இடம்பெற்றுவிட்டது. இந்நிலையிலே தொல்காப்பியனார் வந்தார். அவர் என்ன செய்ய முடியும்? கள் விகுதி அஃறிணைக்கு உரியது என்ற விதியை எழுதிய கையாலேயே, உயர்திணைக்கு உரியதாக ‘மக்கள்’ என்னும் சொல்லை எடுத்தாள நேர்ந்தது. கடலையெண்ணெயில் ‘எள்’ சேர்ப்பது தவறு என்று தெரிந்திருந்தும் ‘கடலையெண்ணெய்’ என்ற சொல்லைத் தானே வழங்குகிறோம்? ‘கடலை நெய்’ என்று பேசுவோமாயின், நம் தமிழுக்கும் நம் வாழ்வுக்கும் மதிப்பு இல்லாமற் போய்விடும் போல் உள்ளதே! ஆகவே, மொழியில் உயர்திணைச் சொல்லாக வேரூன்றிவிட்ட ‘மக்கள்’ என்னும் சொல்லைத் தொல்காப்பியனாரும் அவ்வாறே போற்றினார்.
உழவரும் புலவருமே மொழியின் வாழ்விலும் வளர்ச்சியிலுஞ் செல்வாக்கு உள்ளவர்கள் என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து. உழவரே நாட்டு மக்களுட் பெரும்பாலோர். ஆதலின் அவர்கள் செய்யும் தவறுகள் வெரூன்றி மொழி வழக்கு ஆகின்றன. ‘மக்கள்’ என்ற சொல் உயர்திணையில் இடம்பெற்றது அவர்களாலேயே எனலாம். இதுபோலப் புலவர்கள் செய்யுந் தவறுகளும் வேரூன்றி வாழ்வு பெறுகின்றன.
நக்கீரனார், மாமூலனார், நல்லந்துவனார், அம்மூவனார், மாங்குடிமருதனார், மருதனிளநாகனார் முதலான புலவர்களின் பெயர்களில் ‘அன்’ விகுதியும் உள்ளது; அதன்மேல் ‘ஆர்’ விகுதியுஞ் சேர்ந்துள்ளது. நக்கீரன், மாமூலன், நல்லந்துவன் முதலிய பெயர்களே இயல்பானவை; ஆண்பால் விகுதியாகிய ‘அன்’ இவற்றில் இலக்கணப்படி அமைத்துள்ளது. அதன்மேல் பலர் பால் விகுதியாகிய ‘ஆர்’ சேர்த்தது செயற்கைமுறை. புலவர்களை மற்றவர்களைப் போலக் கருதாமல் வேறுபடுத்திச் சிறப்பிக்க முயன்றவர்கள் ஆண்பால் விகுதியுடன் பலர்பால் விகுதியைச் சேர்த்துள்ளனர். அவ்வாறு முயன்றவர்கள் யார்? புலவரல்லாத ஏனையோர் அவ்வாறு ஒருமை விகுதிக்குமேற் பன்மை விகுதி சேர்த்திருப்பின், இலக்கணக் குற்றங் கூறிப் புலவர்களே தடுத்திருப்பார்கள். ‘செய்தான்’ என்பதைச் ‘செய்தானார்’ என்று கூறின் எவ்வாறு இலக்கண வழு ஆகுமோ அவ்வாறே நக்கீரனார் முதலியனவும் இலக்கண வழு எனப் புலவர்களே குற்றங் கூறியிருப்பார்கள். ஆனால் ஒரு புலவர் மற்றப் புலவரை உயர்த்திச் சிறப்பிப்பதற்காகச் செய்த முயற்சி இது. இவர் அவரை ‘ஆர்’ விகுதியால் உயர்த்த அவர் இவரை அவ்வாறே உயர்த்த, இறுதியிற் புலவர் அனைவரும் போற்றும் மரபாக முடிந்தது. பழங் காலத்திற் புலவர் பலர் வேந்தர்களுக்கு ஆசிரியராக இருந்து கற்பித்து வந்தமையால், புலவர்களை, அவ்வாறே ‘ஆர்’ விகுதி சேர்த்து உயர்த்திக் கூறலாயினர். அச்சிறப்பு வேந்தர்க்கு அமையவில்லை; புலவர்களுக்கு மட்டுமே அமைவதாயிற்று. ‘பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது’, ‘அவனை அவர் பாடியது’ என்று வேந்தன் ‘அன்’ விகுதியோடு நிற்க, புலவர் ‘ஆர்’ விகுதியும் பெற்று உயர்ந்தார்.
பெண்பாற் புலவர்களின் பெயருடனும் இவ்வாறே ‘ஆர்’ விகுதி சேர்க்கலாயினர். அவ்வையார், வெள்ளி ஆதியார், ஆதி மருதியார், காக்கைபாடினியார் முதலிய வழக்குகள் ஏற்பட்டன. பெண்பால் உணர்த்தும் இகர விகுதியோடு பலர்பால் உணர்த்தும் ‘ஆர்’ விகுதி சேர்த்து அமைவதும் வழக்கமாயிற்று.
ஆயினும், தனியே குறிக்கும்போது இவ்வழக்குகள் இடம்பெற்றனவே தவிர, செந்தமிழ் மொழியிற் செய்யுள் இயற்றும் போது, செந்தமிழ் இலக்கணம் வழுவாமற் பழைய முறைப்படியே ஆர்’ விகுதி இன்றியே பெயர்களைக் குறித்தனர்.
‘மாங்குடி மருதன் தலைவனாக’ (புறநானூறு 72)
‘பாடினன் மற்கொல்’ (புறநானூறு 99)
‘விளங்குபுகழ்க் கபிலன்’ (புறநானூறு 53)
என்றே பழங்காலச் செய்யுட்களில் உள்ளன. செய்யுள் வழக்கு எளிதில் மாறாதது. ஆதலின் அங்கு ‘ஆர்’ விகுதி சேர்ந்த புதிய வழக்கு இடம்பெறவில்லை.
இத்தகைய மாறுதலுக்கு இணங்காத சில பெயர்களும் உள்ளன. கபிலனார், பரணனார் என்று எவரும் குறிக்கவில்லை; கபிலர், பரணர் என்றே குறித்துள்ளனர்.
உரையாசிரியர்களும் செந்தமிழ்ச் செய்யுள்போல் மாறுதலுக்கு எளிதில் இடந்தராதவர்கள். அவர்களின் பெயர்களிலும் ‘அன்’ விகுதியுடன் ‘ஆர்’ விகுதி சேர்க்கும் வழக்கும் காணோம். இளம்பூரணனார், சேனாவரையனார், அடியார்க்கு நல்லனார், நச்சினார்க்கினியனார், பரிமேலழகனார் என்று எவரும் எழுத முற்படவில்லை. கபிலர், பரணர் என்பவற்றில் உள்ளவாறு ‘அன்’ விகுதியை நீக்கி, ‘ஆர்’ அல்லது ‘அர்’ விகுதியைச் சேர்த்து இளம்பூரணர், சேனாவரையர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலிய பெயர்களால் வழங்கினர்.
இவ்வாறு ‘அன்’ விகுதியை நீக்கி ‘ஆர்’ விகுதி சேர்க்குஞ் சிறப்பும் முடியுடை வேந்தர்க்கு அமையவில்லை. பாண்டியர், நெடுஞ்செழியர் என்று வழங்காமல் பாண்டியன், நெடுஞ்செழியன் என்றே வழங்கினர்.
கபிலன், பரணன் முதலிய சொற்களைக் கபிலர், பரணர் என உயர்வு கருதித் திரித்ததும் ஒருவகையில் இடையூறு ஆயிற்று. பன்மைக்கு உரிய ‘அர்’ விகுதி ஒருமைக்கு வழங்கவே, அதன் பன்மைப் பொருள் குன்றிவிட்டது. பலரைப் பார்த்து ‘அவர் நிற்கிறார்’ என்று சொல்லும் நிலையிலிருந்தது பழங்காலத் தமிழ். இன்று, ‘அவர் நிற்கிறார்’ என்று சொன்னால், அந்த வாக்கியம் ஒருவரையே குறிக்கின்றது. எனவே, பலரைக் குறிப்பதற்கு வேறொரு வாக்கியந் தேவையாயிற்று.
இவரியார் என்குவை ஆயின், இவரே…
நெடுமாப் பாரி மகளிர்; யானே
தந்தை தோழன்; இவர் என் மகளிர்…
என்னும் பாட்டிடற் கபிலர், பாரிமகளிர் இருவரையும் இளங்கோ வேளுக்கு அறிமுகப்படுத்தியபோது ‘இவர்கள்’ என்று கூறாமல், ‘இவர்’ என்றே கூறினர். இக்காலத்தில் ‘இவர்’ எனின் ஒருவரைக் குறிக்குஞ் சொல்லாகவே உள்ளது.
வேற்றுமை உருபுகளைப் போல் விகுதிகள் ஒரு மொழிக்கு அடிப்படையானவை. அடிப்படையில் மாறுதல் ஏற்பட்டால், அது பலவற்றைக் கலக்கிவிடும்; குழப்பம் தெளிவதற்கு நெடுங்காலம் ஆகும். ஒரு விகுதியில் மாறுதல் ஏற்பட்டாலும் அது மற்ற விகுதிகளின் வாழ்வையெல்லாந் தாக்கும். தமிழில் ‘அர்’. ஆர் விகுதிகளில் ஏற்பட்ட மாறுதல் இவ்வாறு பலவற்றைத் தாக்கியுள்ளது. அதனாற் பல மாறுதல்கள் தொடர்ந்து ஏற்பட்டுள்ளன. அவையாவன:-
(1) அவன், அவர் இரண்டும் முறையே உயர்வற்ற ஒருமைக்கும் உயர்வான ஒருமைக்கும் பயன்படவே, பன்மைக்கு வேறொரு சொல் தேவையாயிற்று. உயர்திணையிற் பன்மை உணர்த்தும் ‘அர்’, ‘ஆர்’ விகுதிகள் பயன்படாமற் போகவே அஃறிணையிற் பன்மை உணர்த்தும் ‘கள்’ விகுதி இங்கு வரத் தொடங்கியது. ‘அவர்கள்’ என்னும் புதிய சொல் அமைந்து உயர்திணைப் பன்மையை உணர்த்தலாயிற்று. அதுபோலவே இவர்கள், எவர்கள் முதலிய சொற்களும் அமைந்தன. (தொல்காப்பியனார் காலத்தே தோன்றின், உயர்த்திணை விகுதியாகிய ‘அர்’ என்பதும் அஃறிணை விகுதியாகிய ‘கள்’ என்பதும் ஒரு சொல்லிலே சேர்ந்து இரண்டு விகுதிகளாக அமைதலை எவ்வளவு வெறுப்பாரோ?)
(2) படர்க்கை இடப் பெயர்களாகத் தான், தாம் இரண்டும் முறையே ஒருமைக்கும் பன்மைக்குமாக இருந்தன. உயர்வு தாழ்வு மனப்பான்மை இவ்வாறு சில சொற்களில் வளர்ந்தவுடன் இடப்பெயர்களிலும் அது வரலாயிற்று. தான் என்பது உயர்வற்ற ஒருமைக்கும் தாம் என்பது உயர்வான ஒருமைக்கும் வழங்கலாயின. பன்மை அமைக்கக் ‘கள்’ விகுதி சேர்ந்து ‘தாங்கள்’ என்னுஞ் சொல் ஏற்படலாயிற்று.
(3) படர்க்கைப் பெயர்களில் ஏற்பட்ட மாறுதல் போலவே, முன்னிலை, தன்மைப் பெயர்களிலும் ஏற்படலாயிற்று. நீ என்பது உயர்வற்ற முன்னிலையை உணர்த்த, நீர் என்பது தனக்கு உரிய பன்மைப் பொருளை இழந்து உயர்வான முன்னிலை ஒருமையை உணர்த்தலாயிற்று. ‘கள்’ விகுதி சேர்ந்த ‘நீங்கள்’ முன்னிலைப் பன்மைக்கு அமைந்தது. ‘யாங்கள்’, ‘நாங்கள்’ என்பன இவ்வாறே தன்மைக்கு அமைந்தன. தமிழில் இல்லாத புதிய சில வேறுபாடுகளும் அவற்றை உணர்த்தப் புதிய பல சொற்களுங் கிளைத்துள்ளமை வருந்தத்தக்கதே.
(4) புலவரின் உயர்வு குறிப்பதற்காகத் தொடங்கிய இம்முயற்சி படிப்படியாக வேந்தர், அமைச்சர் முதலானவர்களின் உயர்வுங் குறிக்க வளர்ந்தது. மன்னர், வேந்தர், அமைச்சர் முதலிய சொற்கள் உயர்வான ஒருமைக்குப் பயன்படவே, தெளிவான பன்மைக்குக் ‘கள்’ விகுதியின் துணை தேவையாயிற்று. மன்னர்கள், வேந்தர்கள், அமைச்சர்கள் முதலாகப் பல்வேறு சொற்களிலும் ‘கள்’ விகுதி சேரத் தொடங்கியது. பொருள், இடம், குணம், தொழில் முதலியவைகளால் அமைந்த பல்வேறு பெயர்களிலும் இவ்வாறு புதியவை கிளைத்தன. செல்வர்கள், நாட்டார்கள், நல்லவர்கள், வேடர்கள் முதலிய சொற்கள் அத்தகையன.
(5) மூவிடப் பெயர்களில் ஏற்பட்ட மாறுதல், மூவிடப் பெயர்களின் வேற்றுமைத் திரிபுகளிலும் ஏற்படலாயிற்று. தங்கள், உங்கள், எங்கள் என்னும் புதிய வடிவங்கள் ஏற்பட்டன. ‘அவர் தம் வீட்டில் இல்லை’ என்பது பலரைக் குறிக்கும் பழைய வாக்கியம். இப்போது அது ஒருவரையே குறித்தலால், ‘அவர்கள் தங்கள் வீடுகளில் இல்லை’ என்று பலரைக் குறிக்கும் வாக்கியம் அமைகிறது. நான்கு சொற்கள் கொண்ட இச்சிறு வாக்கியத்தில் மூன்றுமுறை ‘கள்’ விகுதி வருதலால் இனிமை குறைகிறது. ‘நீங்கள் உங்கள் வீடுகளில் இல்லை; நாங்கள் எங்கள் வீடுகளில் இல்லை’என்பன போன்ற வாக்கியங்களையும் ஒலித்து இனிமை குறைதலை உணரலாம்.
(6) எழுவாய்களாக அமையும் பெயர்களில் ஏற்பட்ட மாறுதல்களுக்கு ஏற்ப, அவற்றின் பயனிலைகளாக அமையும்வினை முற்றுக்களிலும் மாறுதல்கள் ஏற்பட்டன.
பழைய பன்மை புதிய பன்மை
அவர் வந்தார். அவர்கள் வந்தார்கள்.
இவர் வருகிறார். இவர்கள் வருகிறார்கள்.
எவர் வருவார்? எவர்கள் வருவார்கள்?
நீர் வந்தீர். நீங்கள் வந்தீர்கள்.
நீர் சொல்லும். நீங்கள் சொல்லுங்கள்.
இயல்பாகப் பன்மை விகுதி ஏற்ற பலர்பால் வினைமுற்றுக்கள் பல, உயர்வுணர்த்தும் ஒருமைக்கு உரிய வினைமுற்றுக்களாக வழங்கலாயின. ஆகவே உண்மையாகப் பன்மை உணர்த்துவதற்குக் ‘கள்’ விகுதி சேர்ந்த வினைமுற்றுக்கள் தேவையாயின.
அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள்;
நீங்கள் உங்கள் வீடுகளுக்குச் சென்றீர்கள்;
நீங்கள் உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள்;
முதலான வாக்கியங்களிலே சொல் தோறும் ‘கள்’ விகுதி ஒலிப்பது இனிமையாக இல்லை.
(7) தாயும் தந்தையும் உயர்வற்ற ஒருமையாக நிற்க, தாயார் தந்தையார் என்பன உயர்வான ஒருமை வடிவங்களாயின. தாயார்கள் தந்தையார்கள் என்பன செவிக்கு இனியனவாக ஒலிக்காமற் போகவே, தாயர், தந்தையர் என்பன பன்மை வடிவங்களாக நின்றன. ‘கள்’ அமைதியாக இராமல் மீண்டும் மீண்டும் தன் செல்வாக்கைச் செலுத்தவே, தாய்கள், தந்தைகள் என்னுஞ் சொற்கள் அமைந்தன. அவையும் இனிமையாக ஒலிக்காமையால், தாய்மார், தந்தைமார் என்னும் சொற்கள் ஏற்பட்டன. பல வடிவங்களாய் உயர்வு தாழ்வு மனப்பான்மைகளை வளர்ப்பதோடு இவை நினைவிலிருத்துவதற்கு வீண் சுமையாகவும் உள்ளன.
தம்பியார் என்பது உயர்வான ஒருமையை உணர்த்த, தம்பியர், தம்பிகள், தம்பிமார் என்பன பன்மை வடிவங்களாக உள்ளன.
‘அண்ணன்’ என்னும் உயர்வற்ற ஒருமைக்கு ஏற்ற வகையில் உயர்வான ஒருமை அமையவில்லை. ‘அண்ணா’ என்ற விளி வேற்றுமையைச் சிலர் உயர்வுக்குப் பயன்படுத்துகின்றனர். வேறு சிலர் அண்ணர் என்ற தவறான வடிவத்தைப் பயன்படுத்துகின்றனர். ‘அண்ணன்மார்’ என்னும் வடிவம் பன்மையை உணர்த்துகிறது. ‘அண்ணன்கள்’ என்னும் தவறான வடிவம் பேச்சில் உள்ளது.
‘மனைவி’ உயர்வற்ற ஒருமையை உணர்த்த, ‘மனைவியார்’ உயர்வான ஒருமையை உணர்த்த மனைவியர், மனைவிகள், மனைவிமார் என்பன பன்மையை உணர்த்துகின்றன.
‘கணவன்’ உயர்வற்ற ஒருமையைக் குறிக்க, ‘கணவர்’ உயர்வான ஒருமையைக் குறிக்க, ‘கணவன்மார்’ பன்மையைக் குறிக்க, ‘கணவர்மார்’ பன்மையைக் குறிக்கிறது. ‘கணவர்கள்’ என்பதைச் செவி ஏற்கவில்லை.
அண்ணி, அத்தை, தங்கை முதலான பல பெயர்ச்சொற்களையும் இவ்வாறே ஆராய்ந்து பார்க்கலாம். ஒவ்வொன்றிலும் மேற்கண்டவாறு குழப்பம் இருத்தலையும் உணரலாம்.
இவற்றுள் ‘அண்ணன்மார்’, ‘கணவன்மார்’ முதலிய சொற்களில் ஒருமை உணர்த்தும் ‘அன்’ விகுதியுடன் பன்மை குறிக்கும் ‘மார்’ விகுதி சேர்ந்தது பொருத்தமாக இல்லை. நக்கீரனார், அம்மூவனார் முதலிய சொற்களில் உள்ளவாறுபோல ஒருமை விகுதியும் பன்மை விகுதியும் இயைந்தன போலும்!
இவ்வாறு ‘கள்’ விகுதியும் ‘மார்’ விகுதியுஞ் சேர்ந்த சொற்கள் பல இன்று செவிக்கு இனிமை பயக்கவில்லை. காலப்போக்கிற் குழப்பந்தெளியும்போது, மற்றச் சொற்கள் மறைந்து இவை மட்டும் வாழ நேர்ந்தால் இவற்றின் கடுமை குறையக்கூடும். பழகப்பழக வேம்பும் இனிக்கும்போலும்!
(8) படர்க்கைப் பலர்பால் வினைமுற்றுக்களில் எல்லாச் சொற்களும் ‘கள்’ விகுதி ஏற்றால் ஒருவகை ஒழுங்காவது ஏற்படும். அதுவுமில்லை. ‘ஆர்’ விகுதி உடையவை மட்டும் ‘கள்’ விகுதி ஏற்கின்றன (வந்தார்கள் முதலியன). ‘அர்’ விகுதி உடையவை ‘கள்’ விகுதி ஏற்பதில்லை. வந்தனர்கள், செல்கின்றனர்கள் என்பவை வழக்கில் இல்லை. ஆகவே, வந்தனர், செல்கின்றனர், உறங்குவர் முதலிய ‘அர்’ ஈற்றுச் சொற்கள் மாறுதல் இன்றியே நிற்கின்றன. இவை இன்று பெரும்பாலும் பன்மை உணர்த்தவே வழங்குகின்றன. ஆகவே,
அவர்கள் வந்தார்கள்;
அவர்கள் வந்தனர்;
என்ற இருவகை வாக்கியங்கள் மொழியில் உள்ளன. மக்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்து ஏற்பட்ட விகுதிகளின் விளைவு, இத்தகைய வாக்கியங்களிலேயே உயர்வு தாழ்வு ஏற்பட இடங் கொடுத்துள்ளது. முதல் வாக்கியம் எளிய நடை போலவும், இரண்டாம் வாக்கியம் உயர்வான நடை போலவுந் தோன்றுகின்றன.
இதுவும் சிறு குழப்பத்திற்கு வித்து இடவல்லது.
(9) வருகின்றனர் முதலிய ‘அர்’ ஈற்று வினைமுற்றுக்களோடு ‘கள்’ விகுதி சேர்ந்து (வருகின்றனர்கள் முதலியனவாக) அமையாதது போலவே, தன்மைப் பன்மை வினைமுற்றுக்களோடும் (வந்தோம் முதலியவை) கள் விகுதி சேர்வதில்லை. யாம் வந்தோம், யாங்கள் வந்தோம் எனச் சொல்வது உண்டே தவிர, யாங்கள் வந்தோங்கள் என்பதில்லை.
யார், சிலர், பலர், உளர், உண்டு, இலர், இல்லை முதலிய சில சொற்களும் ‘கள்’ விகுதிக்கு இடந் தவருதில்லை.
ஆகவே, ‘கள்’ விகுதி சேருஞ் சொற்கள் இவை, சேராச் சொற்கள் இவை எனப் பிரித்தறிய வேண்டியுள்ளது. இவ்வகையிற் காரணப் பொருத்தம் ஒன்றும் இல்லாமையால் இது செயற்கையாக உள்ளது.
இவை அனைத்தையும் எண்ணிப் பார்க்கும்போது ஒன்று விளங்குகின்றது. மக்கள் மனத்திலே தோன்றிய உயர்வு தாழ்வு மனப்பான்மை சொற்களில் புகுந்து சொற்களின் விகுதிகளில் முதலில் ஒன்றை மாற்ற, அது மற்றொன்றை மாற்ற, அது இன்னொன்றை மாற்ற, இவ்வாறே மாறுதல்கள் பல பெருகிவிட்டன. இவ்வாறு விகுதிகளில் ஏற்பட்ட குழப்பத்திற்கு இடையே, ஒன்று பெருநலம் பெற்றது. ஊர் இரண்டுபட்டாற் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல், இருக்க இடம் இல்லாது திகைத்துக்கொண்டிருந்த ‘கள்’ விகுதி செல்வாக்குப் பெற்றுவிட்டது.
உண்மையாகவே, ‘கள்’ விகுதி இருக்க இடம் இல்லாமல் ஒதுங்கி வாழ்ந்து வந்தது. தொல்காப்பியனார் ‘கொள்வழி உடைய’ என்று சொன்னதன் காரணம் அதுவேயாகும். அஃறிணைச் சொற்களுள், ஒருமையைப் பன்மையாக்க அக்காலத்திற் ‘கள்’ விகுதி தேவைப்படவில்லை.
ஓர் எருது வந்தது;
பல எருது வந்தன;
என்று முன்னுள்ள அடைகளாலோ, பின்னுள்ள பயனிலைகளாலோ அஃறிணைப் பெயர்ச் சொற்கள் ஒருமையா, பன்மையா என்று உணர முடிந்ததே தவிர, எருது ஒருமை என்றும், எருதுகள் பன்மை என்றும் சொல் வடிவில் வேறுபாடு செய்யப்படவில்லை. இன்னும் பேச்சு வழக்கில் உள்ள தமிழில், ஒரு கோழி, பத்துக் கோழி, என்று ‘கள்’ விகுதி இல்லாமலே பன்மை உணர்த்துதல் காண்க.
அஃறிணைப் பெயர்ச் சொற்களில் இவ்வாறு ஒதுங்கி வாழும் வாழ்வாவது ‘கள்’ விகுதிக்கு உள்ளது. அஃறிணை வினைமுற்றுக்களிலோ அதற்கு இடமே இல்லை.
இருந்தது, இருக்கிறது, இருக்கும் – ஒருமை
இருந்தன, இருக்கின்றன, இருக்கும் – பன்மை
இருந்தனகள், இருக்கின்றனகள், இருக்குங்கள் என்று இனி எக்காரணத்தாலும் ஏற்படப்போவதில்லை. உயர்திணையில் ‘அர்’, ‘ஆர்’ விகுதிகள் இடந் தத்துள்ளது போல், அஃறிணை வினை முற்றுக்களிற் பன்மை உணர்த்தும் அகர விகுதி ஒரு சிறிதுங் ‘கள்’ விகுதிக்கு இடந்தருவதில்லை.
இவ்வாறு அஃறிணை வினை முற்றுக்களில் இடமே இல்லாமலும் அஃறிணைப் பெயர்ச் சொற்களில் ஒதுக்கிடம் பெற்று, ஒருவகைச் சிறப்பும் இல்லாமல் மூலையிற் கிடந்த ‘கள்’ விகுதி, உயர்திணை விகுதிகள் கலங்கியபோது பெற்ற புதுவாழ்வு வியக்கத்தக்கதாக உள்ளது. உயர்திணைப் பலர்பாலாக அமையும் பலவகைப் பெயர்ச் சொற்களிலும் முறைப் பெயர்களிலும் மூவிடப் பெயர்களிலும் அவற்றின் வேற்றுமைத் திரிபுகளிலும் பெரும்பான்மையான பலர்பால் வினைமுற்றுக்களிலும் இது இன்று செல்வாக்கான இடம்பெற்று விளங்குகின்றது. ‘இதுவும் வரலாம், இதையும் கொள்ளலாம்’ என்பவர் போல் ‘கொள்வழி உடைய’ என்று தொல்காப்பியனாரால் ஒதுக்கப்பட்ட ‘கள்’ விகுதி – தனக்கு உரிய இடமாகிய அஃறிணையில் இன்னும் வேரூன்ற முடியாத ‘கள்’ விகுதி – தான் புகுந்த இடமாகிய உயர்திணையிற் பலவும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கின்றது.
டாக்டர் மு. வரதராசனாரின் ‘மொழியியற் கட்டுரைகள்’ நூலில் இடம்பெற்ற கட்டுரை நன்றியுடன் இங்கு மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது
வணக்கம் ஐயா.
கள் பெற்ற பெருவாழ்வு
தங்கள் கட்டுரையைப்
படித்ததில்
அன்- சாரியை பெறும் சொற்கள் கள் விகுதிபெறுவதில்லை
என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
மேலும்
தற்காலத்தில்
எழுவாய் கள் விகுதிபெற்றால்
பயனிலையில் வரும் சொல்லும் கள் விகுதி பெறுதலே சரி என்று பாடநூல்கள் சொல்கின்றன.
சான்று:
மாணவர் வந்தார்கள் (தவறு)
மாணவர்கள் வந்தார்கள் (சரி)
மாணவர் வந்தனர் (சரி)
அன் விகுதி சேர்த்து கள்விகுதி நீக்கி எழுதுவது சரி என்றாகிறது.
நன்றி ஐயா,
தங்களின் இலக்கணம் சார்ந்த கட்டுரைகளை படிக்க விழைகிறேன்.
நன்றியுடன்
‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் பாலையா தன்னிடம் வேலை பார்க்கும் ரவிச்சந்திரன் பணக்கார வேடத்தில் வந்த முத்துராமனின் மகன் என்று தெரிந்து கொண்டதும், ‘அசோகர் உங்க மகருங்களா?’ என்று சொல்வது தொல்காப்பிய இலக்கணப்படி சரியாகும் (மகார் என்பதை மகர் என்று கொண்டால்) என்பதை இக்கட்டுரையில் புரிந்து கொள்ளலாம்!
மக + அர் = மகர் என்று தான் இருந்திருக்க வேண்டும். மு.வ. ஏன் அதை மகார் என்று பயன்பட்டிருக்கும் என்று சொல்கிறார் என்பது என் அரைகுறை இலக்கண அறிவுக்குப் புலப்படவில்லை. மக + அன் = மகன். மக + அள் = மகள். கன்னடத்தில் மகவு என்ற சொல் குழந்தையைக் குறிக்க இன்றும் பயன்பாட்டில் உள்ளது.