காக்கும் தமிழ்

எச்செயல் முயன்றாலும் தண்ணார் தமிழணங்கின் தாள் மலர்களைத் தலைமிசைச் சூடிப் பணிந்து தொடங்குவது என் வழக்கம்.

காரைக்கால் அம்மையின் அற்புதத் திருவந்தாதிச் சொற்களைத் தேனிக்கத் (தியானித்தல் = தேனித்தல், மணிவாசகர் சொல்) தொடங்கியிருக்கிறேன்.

தமிழே காக்கும் என்று உறுதி கூறி இன்று காலை நெஞ்சில் எழுந்த வெண்பா – காப்புச்செய்யுள்:

—-

ஆரைக்கா என்றாலும் ஐயாகி ஆர்ந்தருளும்!
காரைக்கால் அம்மை கனிந்தளித்த – சீரைக்கா
அந்தாதிச் செம்பொருளை ஆய்தற்கு
மெய்யறிவு
தந்தோதிக் காக்கும் தமிழ்


—–

பொருள்:

ஆரைக்கா என்றாலும்: யாரைக் காக்குமாறு வேண்டினாலும்

ஐயாகி: ஐ = இறை/கடவுள். இறை ஆகி

ஆர்ந்தருளும்: ஆர்ந்து அருளும்; நிறைந்து அருளும்

அப்படி அருளுகின்ற தமிழ் –

காரைக்கால் அம்மை கனிந்து அளித்த

சீரைக்கா அந்தாதி – சீரைக் காக்கும் அந்தாதி; சீரைக் காவும் எனிலும் ஒக்கும்.

சீர் என்றால் செல்வம்; நிறைவு. அந்தாதி என்னும் அருந்தொடை அமைந்து ஓசைச்செம்மை மிகுந்த வெண்பாக்களால் ஆய பனுவல் என்பதால் யாப்புறுப்பாகிய சீரைக் காக்கும் அந்தாதி எனலும் பொருந்தும். பாடற் செழுமை தருதலால் அவ்வுறுப்புக்குச் சீர் என்று பேர்.

கா – காக்கும், (கா-வலர் – காப்பதில் வல்லவர்).

அவ்வந்தாதியின் செம்பொருளை / உண்மைப்பொருளை

ஆய்தற்கு: ஆய்வு செய்து உணர்வதற்கு, மனமொன்றித் தேனித்து உணர்வதற்கு

மெய்யறிவு தந்து ஓதிக் காக்கும் தமிழ்.

முன்னம் சொன்ன தமிழ் இறை மெய்யறிவு தந்து, என் உள்ளத்திருந்து மேலெழும் சொல்லை ஓதிக் காக்கும்.

திரண்ட பொருள்:

யாரைக் காக்க வேண்டினாலும் இறையென ஆகி நிறைந்தருள் செய்வது தமிழ். காரைக்கால் அம்மை கனிந்து அளித்த, சீரைக்காக்கும் அந்தாதியின் உண்மைப்பொருளை மனமொன்றி உணர்வதற்கான மெய்யறிவைத் தந்து என் சொல்லாகவே இருந்து காக்கும் அத்தமிழ்.

‘அற்புதத் திருவந்தாதியில் அம்மை சொல்’ தொடரைப் படிக்க: இங்கே செல்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×