கிளம்பிட்டாய்ங்கய்யா.. கிளம்பிட்டாய்ங்க: பழைய பிணக்கு, புதிய கணக்கு

கொஞ்சம் பழைய பிணக்குத்தான். சொற்கடலில் சுழியோடிக் கொண்டிருந்த வேளை தோன்றி மின்னித் தெறித்திருப்பது புதிய பொறியென்பதால் பகிர்கிறேன்.

இதன் மூலவராக இருந்த கவிஞர் மகுடேசுவரன் பெயரெச்சம் தொடர்பாக இரண்டொரு நாள்களுக்கு முன்னர் நடந்துகொண்டிருந்த முகநூல் உரையாடலில் முன்வைத்த கேள்விகளைப் பொறுக்கமாட்டாமல் என்னை நட்பு நீக்கம் செய்துவிட்டுச் சென்று விட்டார். இங்கு முன்மொழியும் புதிய தீர்வை அவர் படிக்க மாட்டார் என்பது சோகம்.

பழைய பிணக்கு இதுதான்: கிளப்ஹவுஸ் (Clubhouse) செயலியின் வரவு பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் வழமை போலவே கவிஞர் மகுடேசுவரன் தன்பணியில் தவறாமல் செயலிக்குச் ‘சொல்லகம்‘ என்று தமிழ்ப்பெயர் சூட்டினார்.

எவனோ கண்டு பிடித்த செயலிக்கு இவர்கள் வாகாகப் பெயர் மட்டும் வைத்து மகிழ்ந்து கொள்கிறார்கள் என்று வழமை போலவே ஒருசாரார் இணையத்தில் வறுத்தெடுக்கத் தொடங்கினார்கள்.

வையந் தழுவிய வணிகக் குறியீடுகளைத் தமிழாக்கிச் சிந்திப்பதில் தவறில்லை என்பதை விளக்கிக் கவிஞருக்கு ஆதரவாக நானும் பதிவெழுதியிருந்தேன். அறிவியற் கண்டுபிடிப்புகளும் மொழியியற் பெயரிடலும் வெவ்வேறு அறிவுப்புலங்கள் – ஒன்றுடன் இன்னொன்றை ஒப்பிடுவது பொருத்தம் ஆகாது என்றும் குறித்திருந்தேன்.

இன்னொரு சாராரின் எரிச்சல் வேறு விதமாக இருந்தது: ‘Facebook ஐ முகநூல் என்று சொல்வதையாவது பொறுத்துக்கொள்ளலாம். பொருளாவது பொருந்தி வருகிறது. twitter – கீச்சகமும் அப்படியே. ஆனால் இஃதென்ன clubhouseக்குப் போய் அகராதிக்குத் தலைப்பிடுவது போலச் ‘சொல்லகம்’ என்று பெயர்சூட்டுவது. தொடர்பேச்சு இடம்பெறும் தளம் அல்லவா அது…? பிறகேன் ‘வார்த்தை வீடு’ என்றவாறு பொருள் தரும் ‘சொல்லகம்’ என்ற பெயரொட்டு?’
என்பது அந்தத் தரப்பாரது கேள்வி.

அவர்களுக்குச் ‘சொல்லக’த்தில் உள்ள ‘சொல்’ அங்கே பெயர்ச்சொல்லாகத் தொழிற்படவில்லை; பலரும் பலதையும் சொன்ன – சொல்கின்ற – சொல்லும் அகம் என்றவாறு முக்காலத்தையும் தொகுத்துணர்த்தும் வினைத்தொகையாக உள்ளது என்பதை விளக்க வேண்டி வந்தது. (வினைத்தொகைக்கான காட்டுகள்: எழு-கதிர், வரு-மொழி, ஊறு-காய்). இப்படி ‘அரட்டையகம்’ என்ற பொருள் ஒருவாறாகச் சொல்லகம் என்பதில் வந்து விடுகிறது.

சற்று முன்னம் சிந்தித்துக்கொண்டிருந்தபோதுதான் திடீரெனத் தோன்றியது: கிளப் ஹவுசுக்குக் கவிஞர் பேசாமல்

‘கிளப்பகம்’

என்றே பெயர் வைத்திருக்கலாம்!

ஒலித்தொடர்பைத் தேடுவோரும் ஒப்பியிருப்பர். பொருள் தொடர்பை வேண்டுவோரும் பொந்திகையுற்றிருப்பர். (பொந்திகை = திருப்தி)

விளக்கம் இதுதான்:

வினைச்சொல் என்ற அளவில்

சொல் – மொழி – கிள

ஆகிய மூன்று பதங்களும் ஒருபொருள் கொண்டவை.

சொல்லுதல் வழி உருவாகுவது சொல்

மொழிதல் வழி உருவாகுவது மொழி

கிளத்தல் வழி உருவாகுவது கிளவி

சொல் – மொழி – கிளவி மூன்றும் பெயர்ச்சொல்லாக ஒத்த பொருள் கொண்டவை.

தொல்காப்பியம், சொல்லதிகாரத்தின் முதலாம் இயல் கிளவியாக்கம் என்ற பெயர் கொண்டது. பள்ளிப் பாடங்களில் இரட்டைக்கிளவி பற்றியெல்லாம் படித்திருப்போம். ழகரக் கிழவியோடு சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

கிள – கிளத்தல் – கிளவி

கேள் – கேட்டல் – கேள்வி

‘கீரன் அஞ்சாது நானே கிளத்தினேன் என்றான்’ – திருவிளையாடற்புராணம்.

எமது பாட்டிலே குற்றம் கண்டவர் யார்’ என்று சிவனார் கேட்கும் முன்னதாகவே நானே சொன்னேன் (கிளத்தினேன்) என்று அஞ்சாமற் சொன்னாராம் நக்கீரர்.

கிளப்பு என்றால் பேச்சு, சொல்லுகை என்றே பொருள்.

தெளிவான எடுத்துச்சொல்லுகைக்கான தளம் – கிளப்புகைக்கான தளம் – என்ற பொருளில் கிளப்ஹவுசைக் கிளப்பகம் என்றே கிளத்தியிருக்கலாம் 😃

எத்தனையோ எரிகிற பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த ஆராய்ச்சி தேவையா என்று வெகுண்டெழுவோர் நெஞ்சை நெகிழ்த்தி இதை ‘எண்டர்டெயின்மெண்டா’க எடுத்துக் கொள்ளவும் – இயலாமற் போனால் விலகிச் செல்லவும் 😃

2 thoughts on “கிளம்பிட்டாய்ங்கய்யா.. கிளம்பிட்டாய்ங்க: பழைய பிணக்கு, புதிய கணக்கு”

  1. முகநூலில் நடந்த உரையாடல் விவரம் தெரியவில்லை. ஆனால் ‘நடபு நீக்கம்’ செய்யுமளவுக்குத் தரம் தாழ்ந்த அடிதடி நடந்திருக்குமா, அதுவும் தமிழ் இலக்கணம் குறித்த விவாதத்தில்?

    இது போன்ற பொறுமைப் பண்புக் குறைவு நான் இருக்கும் சில வாட்ஸப் குழுவிலும் நிகழ்ந்துள்ளது. குழுவில் பலர் இருக்க, இருவரிடம் நடக்கும் கருத்து வேறுபாடு, விவாதத்தால் ஒருவர் குழுவிலிருந்தே விலகி விடுகிறார்.

    ஒரு குழுவில் எனக்கும் மற்றொருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் (விவாதம் என்ற அளவுக்குக் கூடச் செல்லவில்லை; நான் அனுப்பிய தமிழ் இலக்கியம் பற்றிய‌ பதிவில் அவருக்குப் பிடிக்காத ஒருவரின் பெயர் இருந்ததே அவருக்குப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.) தான் அந்த குழுவிலிருந்தே விலகிக் கொள்வதாக மறுமொழி போட்டிருந்தார். அவர் எனக்கு முன்பே அக்குழுவில் சேர்ந்தவர். நான் உடனே அப்படியான பதிவுகளைப் போட மாட்டேன் என்று மறுமொழி இருத்து, குழுவில் இருந்து அவர் விலகுவதைத் தவிர்த்தேன்.

    அறிவும் வேண்டும். பண்பும் வேண்டும். ‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்ற திருவள்ளுவர், ‘பண்புடையார் பட்டுண்டு’ உலகம் என்றார்.

    ஒட்டு மொத்தத் தமிழர் (மனிதர்) அனைவரும் சராசரியாகப் பின்பற்றும் விழுமியங்கள், பண்புகளுக்கு அப்பால் தமிழ்ப்பண்பாடு (மனிதப்பண்பாடு) என்று தனியாக எதுவும் இல்லை.

    மனிதர்கள்!

    அது போகட்டும். கட்டுரை, தமிழின் வேர் சொல் வளத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு, படித்து இன்புற்றேன்!

  2. K. Ramesh Babu

    மிகச்சிறந்த விளக்கமாக இருக்கிறது

    நல்ல முறையில் விளக்கமாக விளக்கி இருக்கிறீர்கள்.

    சொல்லகம் என்பதை விட கிளப்பகம் என்பதே சரியாக இருக்கிறது.

    நீ என்ன சொல் சொன்னாலும் எங்கள் சொல் அங்கே இருக்கும் என்பதைப் போல் இது இருக்கிறது. அருமையான பெயர் கிளப்பகம் என்பதே

    முதன்முதலில் கம்ப்யூட்டருக்கு காண்பியூட்டி என்று பெயரிட்டனர்.

    காண்பியூட்டி என்பதும் சரியாகத்தான் உள்ளது கணினி வழக்கத்திற்கு வந்துவிட்டது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×