குற்றியல் உகரம் என்றால் என்ன?

குறில், நெடில் நமக்குத் தெரியும்.

அ – குறில்

ஆ – நெடில்

இ – குறில்

ஈ – நெடில்

உ – குறில்

ஊ – நெடில்

குறில் என்ற அளவில் உகரம் (‘உ’ என்ற எழுத்தொலி) ஏனைய குற்றெழுத்துகள் போலவே ஒரு மாத்திரை அளவு காலம் ஒலிக்கும். செக்கன், நிமிடம் முதலானவை போல மாத்திரை என்பதும் ஒரு நேர அலகு (unit of time).

ஒரு மாத்திரை = கண்ணிமைக்கும் நொடிப்பொழுது. குறில் = ஒரு மாத்திரை. நெடில் = இரண்டு மாத்திரை

சிலநேரம், தனக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத்திரை அளவு காலத்திலும் பார்க்கக் குறைந்து ஒலிக்கும் பண்பு உகரத்துக்கு உண்டு. அத்தகைய உகரம் குற்றியலுகரம் எனப்படுகிறது.

குற்றியலுகரத்தை ‘உக்குறள்’ என்றழைக்கிறார் நன்னூலார். அஃதாவது குள்ள வடிவம் கொண்ட உகரம். ஊரில் குறள் கத்தரிக்காய் என்றெல்லாம் சொல்வார்கள், இல்லையா? வழமையான கத்தரியை விடச் சிறுத்திருப்பது குறள் கத்தரி. வழமையான உகரத்தை விடச் சிறுத்திருப்பது உக்குறள். குழப்பமாக இருந்தால் அஞ்சாதீர்கள். எடுத்துக்காட்டோடு சிந்தித்தால் இலகுவாகப் புரியும்.

1: நகு, பசு, விடு, பொது, பொறு

2: திக்கு, பேசு, பாடு, கூத்து, தப்பு, நேற்று, வண்டு, பத்து, மெச்சு, கட்டு.

மேலுள்ள சொற்கள் எல்லாவற்றிலும் முடிவில் வரும் எழுத்தொலி உகரம்தான்

கு = க் +

சு = ச் +

டு = ட் +

து = த் +

பு = ப் +

று = ற் +

ஆனால் முதலாம் தொகுதிச் சொற்களை ஒலிக்கும் முறைக்கும் இரண்டாம் தொகுதிச் சொற்களை ஒலிக்கும் முறைக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது. வாய்விட்டுச் சொல்லிப்பார்க்கும்போது கூர்ந்து கவனியுங்கள்.

நகு, பசு, விடு, பொது, பொறு என்றெல்லாம் சொல்லும்போது உதடுகள் குவிகின்றன.

தப்பு, திக்கு, பேசு, கூத்து, முழங்கு, விலங்கு, குத்து முதலான சொற்களைச் சொல்லும்போது உகர ஒலியில் உதடுகள் விரிகின்றன. உகரம் தனக்கான அளவில் இருந்து குறைந்து ஒலிக்கிறது.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இஃது இயல்பாக வரும். இதே சொல்லை நீங்கள் ஆங்கிலத்தில் ஒலிபெயர்த்து எழுதி வேற்று மொழிக்காரரைப் படிக்கச் சொன்னால் அவர் ஈற்றில் வரும் உகரத்தை நீட்டி ஒலிப்பார்: thappu என்பதைத் தப்பூ என்பது போலவும் vilangu என்பதை விலங்கூ என்பது போலவும்….

இந்த உகரம் இப்படிக் குறுகி ஒலிப்பதற்கு என்ன காரணம்?

சேர்க்கைதான் காரணம். நாம் யாரோடு பழகுகிறோமோ – யாரை நண்பராகக் கொண்டிருக்கிறோமோ – அதற்கேற்றவாறு நமது பண்புகளும் மாறுவதுண்டு, இல்லையா? அதுபோலவே சொல்லின் முடிவில் வரும்போது உகரம் எந்த எழுத்துக்குப் பக்கமாக இருக்கிறதோ அதனைப் பொறுத்து மாறுபட்டு ஒலிக்கும்.

க், ச், ட், த், ப், ற் ஆகிய வல்லின மெய்கள் மீது உகரம் ஏறும்போது – கு, சு, டு, து, பு, று ஆகிய வடிவங்களை எடுக்கும்போது – தனிக்குறில் எழுத்தை அடுத்து வந்தால் மட்டுமே தனக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத்திரை அளவு காலம் ஒலிக்கும்.

பொது, து, து, டு, தொடு, கு, று – இப்படியான சொற்களில் வல்லின உகரங்கள் தனிக்குறில் எழுத்தை அடுத்து வருகின்றன (பொ, ம, இ, ப, தொ, வ, அ).

இப்படி அல்லாத எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வல்லின உகரம் குறுகி ஒலிக்கும் – உக்குறளாகும். இஃதே குற்றியலுகரம்.

இப்படி வல்லின மெய்யோடு சேர்ந்து உகரம் குறுகி ஒலிக்கும் சந்தர்ப்பங்கள் ஆறு வகையாக வரலாம்:

1. நெடில் எழுத்தை அடுத்து வல்லின உகரம் வரும் இரண்டெழுத்துச் சொற்கள்: ஆடு, பாடு, கூடு, யாது, ஆறு, பாகு, ஏசு

2. ஆய்த எழுத்தை அடுத்து வல்லின உகரம் வருவது: அஃது, இஃது

3. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குறில், நெடில்களை அடுத்து வல்லின உகரம் வருவது (உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்பர் இலக்கணிகள்): பரிசு, முகடு, விழாது, தவறு, விலகு, பலது

4. வல்லின மெய்யை அடுத்து வல்லின உகரம் வருவது: பாக்கு, முத்து, பட்டு, அச்சு, பூத்து

5. மெல்லின மெய்யை அடுத்து வல்லின உகரம் வருவது: வண்டு, பொங்கு, அஞ்சு, அன்று, முந்து, பந்து

6. இடையின மெய்யை அடுத்து வல்லின உகரம் வருவது: எய்து, பெய்து, மல்கு, மார்பு, சார்பு

இப்படியான சொற்களை அடுத்து வருஞ்சொல் உயிரெழுத்தில் தொடங்கினால், தான் ஏறி நின்ற மெய்யெழுத்தை விட்டு உகரம் ஓடி விடும் என்கிறார் நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர். அஃதாவது உகரம் மறைந்து விடும்.

நாடு + அறிந்த

டு = ட் + உ

நா(ட்+ உ) + அறிந்த

இதில் உள்ள குற்றுகரம் (உ), ‘ட்’ என்ற மெய்யை விட்டு ஓட, ட் ஒலி அ ஓடு சேரும். ட் + அ= ட ஆகும்

நா (ட்+அ) றிந்த

நாடு + அறிந்த = நாடறிந்த

ஏசு + அப்பா என்று யேசு பிரானைத் தந்தையாக விளிக்க நெஞ்சம் விழைந்தால் அப்படி விளிக்கும் தமிழ் நாவை விட்டு உகரம் அனிச்சையாக ஓடி விடும்: ஏசப்பா / யேசப்பா என்று தான் அழைக்கும். பேசப்பா என்று தான் சொல்லும். வாக்களித்தார் (வாக்கு + அளித்தார்) என்று தான் தமிழ் மனம் எழுதும்.

உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்;

யவ்வரின் இய்யாம் முற்றும்அற் றொரோவழி.

(நன்னூல் – 164)

குற்றியலுகரத்தின் முன் யாது, யாவர் முதலான யகர வரிசைச்சொற்கள் வந்தால் உகரம் இகரமாகும் என்பதும் விதி:

குழலினிது + யாழினிது = குழலினிதியாழினிது

குற்றியலுகரம் அல்லாத உகரம் முற்றியலுகரம் என்றழைக்கப்படுகிறது. உகரம் கெடும் விதி சில முற்றியலுகரச் சொற்களுக்கும் பொருந்தும்:

செலவு + இல்லை = செலவில்லை

கதவு + எங்கே = கதவெங்கே

5 thoughts on “குற்றியல் உகரம் என்றால் என்ன?”

  1. பயனுள்ள கட்டுரை. எளிமையான விளக்கங்கள்.
    கட்டுரைகளை உங்கள் குரலில் ஒலிப்பதிவு செய்து அக்கட்டுரைகளோடு கொடுக்கலாம்.

  2. முத்தையா சுப்பிரமணியம்

    அருமை. அழகு. ஒரு சிறிய ஐயம்.
    உனக்குள் என்பது வடிவம் சார்ந்ததன்று; ஒலிசார்ந்தது. அன்றோ?உக்குறள், ஒலியில் குறுகியவுகரம்.

    குறள்கத்திரிக்காய் என்பது வடிவம் சார்ந்த ஒப்பீடு. இஃது எளியனின் கருத்து,

    1. குறுகுதல் எனுமியல்பே இவ்வொப்புமையில் கருதப்பட வேண்டும். குறளன் என்றால் குள்ளன் என்று பொருள். உருவம் சார்ந்த அளவீடு. குறள் என்ற அதே அடிச்சொல் எழுத்திலக்கணத்திலும் யாப்பிலக்கணத்திலும் (குறளடி, குறள் வெண்பா, குறள் வெண்செந்துறை) காலம் சார்ந்து ஆளப்படுகிறது. எழுத்தை வரிவடிவமாகக் கருதினீர்கள் என்றால் அதுவே நீளம் சார்ந்ததாகும்.

      1. முத்தையா சுப்பிரமணியம்

        நல்லது ஐயா. நன்றி. உமது தமிழ்நடை செறிவானது. வாழிய பல்லாண்டு.

Leave a Reply to முத்தையா சுப்பிரமணியம் Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

×