மூன்றாம் பாடல் படிக்க (பாகாப்போழ்): இங்கே செல்க
மனக்கடலின் அலைகள் தாழ்ந்தும் உயர்ந்தும் தடம் புரள்வன. நான்காம் பாடலில் அம்மையின் மனம் மீண்டும் முறையிடத் தொடங்குகிறது.
எரியாடும் எம்மானாரான சிவபிரான் மேனி சிவந்திருக்கிறது.
அச்செவ்வண்ண மேனியில் அவரது நஞ்சுண்ட கண்டம் மட்டும் கரு நீல நிறத்ததாய் இருக்கிறது.
நீள் ஆகம் செம்மையான் ஆகி – நீண்ட உடலில் செந்நிறம் கொண்டவன் ஆகி (ஆகம் = மேனி, உடல்)
திருமிடறு மற்றொன்று ஆம் – திருவுடைய கண்டம் மட்டும் வேறொரு நிறம் ஆகும்
எம்மை ஆட்கொண்ட இறை – எம்மை ஆட்கொண்ட இறைவன்.
ஆளானோம் – இத்தகைய இறைவனுக்கு யாம் ஆளானோம்.
அல்லல் அறிய முறையிட்டால் – அவரிடம் எமது துன்பங்களை அறிந்துகொள்வாயாக என்று முறையிட்டால்
கேளாதது என் கொலோ? – அவர் கேட்காமல் இருப்பதென்ன?
கேளாமை என் கொலோ? – கேள் ஆகாமை என்பது கேள் ஆமை என்று மருவியது. கேள் – உறவு. கேள் ஆகாமை – உறவு ஆகாமை.
கேள் ஆகினால் அல்லவோ கேளாமை தவிர்ப்பான்? இது முறையோ?
கேளாது இருக்கும் அவன் செயலே அவன் கேள் ஆகாதிருத்தலை – உறவு ஆகாதிருத்தலை – உணர்த்துகிறது என்னும் முறைப்பாடாம்.
‘கேளாததும் கேள்ஆகாமையும் என் கொலோ?’ என்பதில் உம்மை மறைந்து நின்றது.
அற்புதத் திருவந்தாதி – பாடல் 4
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்
கேளாத தென்கொலோ கேள்ஆமை – நீள்ஆகம்
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மையாட் கொண்ட இறை.
முழு உடலும் செவ்வண்ணம் உடையவனாகி திருவுடைய மிடறு மட்டும் வேறொரு நிறங்கொண்ட, எம்மை ஆட்கொண்ட இறைவனுக்கு ஆளானோம். அவனிடத்தில் துன்பத்தைச் சொல்லி முறையிட்டால் அவன் கேளாமல் இருப்பதும் எமக்கு உறவாகாமல் இருப்பதும் என்னவோ? (இது தகுமோ என்பது உட்பொருளாம்). கொல் – அசைச்சொல்