சொல்லும் பொருளும்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 18)

சொல்லுதல் என்பது சொல்லப்படுவதன் தேய்வு. 

ஆயிரம் ஆண்டு காலம் ஆழ வேரூன்றிக் கிளை பரப்பி நிற்கும் ஒன்றை ‘மரம்’ என்று அழைக்கிறேன்.

சிலமுறை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஒலித்து முடிந்து விடுகிறது அந்தச் சொல். 

அதன் ஆயிரம் ஆண்டு கால இருப்பையும் மாட்சியையும் அக்குறுஞ்சொல்லால் தனக்குள் அடக்கிவிட முடியுமா என்ன?

ஆனாலும் அப்படியான ஒரு பாவனையோடு – உரிமை கோரலோடு தான் – மரம் என்று சொல்கிறேன்.

மரம் என்ற சொல்லால் அதன் பேரிருப்பைக் குறிக்க முடியாது. அதற்கு அந்த வல்லமை கிடையாது.

மரத்துக்கே இந்த நிலை என்றால் பரத்தைப்பற்றிச் சொல் கொண்டு மொழிய முனைவதை என்னவென்பது?

‘சொல்லற்கரியானைச் சொல்லி..’ என்று இந்த முரண் நிலையைக் குறிப்பார் மணிவாசகர்.

போன பாடலின் முடிவில் அரன் என்று அழைத்தவனை, முயன்று வேறு பலவாறு அழைத்தாலும் தீராது என்று திகைக்கிறார் அம்மை.

சொல்லுக்குள் அடக்க வல்லோன் அல்லன் அவன் என்பதை எண்ணித் திளைக்கிறார்.

முரண்அழியத் தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானை – 

அகந்தை மிகுதியால், தான் வழிபடும் தெய்வத்தின் உறைவிடம் என்றும் பாராமல் கயிலை மலையைப் பெயெர்த்தெடுத்து வர முனைந்தான் இராவணன். அவனது வலிமை அழியுமாறு ஒற்றை விரலால் அவனை அடக்கினார் எம்பெருமான். அச்சிவனை (தானவன் – இராவணன், முரண் – வலிமை)

எம்மானை – எமது கடவுளை

இன்று யானவனை – இந்நாள் யான் அவனை

அரன் என்கோ? – அழித்தல் தொழிலுக்கு உரியவனாகிய அரன் என்று அழைப்பதா?

நான் முகன் என்கோ? – படைத்தல் தொழில் செய்யும் நான் முகன் என்பதா?

அரிய பரன் என்கோ? – அரிய பரனாகிய மால் என்பதா (அரியாம் பரன் என்றும் ஒரு பாட பேதம் உண்டு)

பண்புணர மாட்டேன் – எப்படிச் சிந்தித்தாலும் அவனது பண்பை உணர இயலாதபடி இருக்கிறேன்

எல்லாவற்றையும் உள்ளடக்கி, உள்ளடங்கிய எல்லாவற்றுக்கும் மேலானவனாக அவன் உள்ளான்; அதனால் அவன் பண்பை உணர்தல் அரிது என்பது உட்பொருளாம் (The whole is greater than the sum of its parts என்பார் அரிஸ்டாட்டில். பூர்ணம் அதஹ், பூர்ணம் இதம், பூர்ணாத் பூர்ணம் உதச்யத | பூர்ணஸ்ய பூர்ணாம் ஆதாய பூர்ணாம் ஏவா அவஷிஸ்யதே என்ற வேத சுலோகத்தையும் எண்ணிக்கொள்க) 

பாடல் 18

அரனென்கோ! நான்முகன் என்கோ! அரிய
பரனென்கோ! பண்புணர மாட்டேன் – முரண்அழியத்
தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானை,
யானவனை, எம்மானை இன்று

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×