சொல் தந்தால் குறள் தருவேன்: முதல் 50 பாக்கள்

முக நூலில் நேற்று விளையாட்டாக ஒரு குறள்வெண்பாத் தொடர் தொடங்கியிருந்தேன். தமிழ் ஒலிப்புள்ள ஒரு சொல் தந்தால் – அது ஒருவருடைய பெயராகக்கூட இருக்கலாம் – உடனே ஒரு குறள் வெண்பா எழுதித் தருவேன். இது தான் நான் வெளியிட்ட அறிவிப்பு. ஒரு நாள் இடைவெளியில் 50 குறட்பாக்கள் யாக்கப் பெற்றிருக்கின்றன!

பலர் தம் மக்கள் பெயரைத் தந்திருந்தனர். குழந்தைகளை வாழ்த்தி ஆசியளிப்பதை விடப் பேரின்பம் வேறேது? எனவே இவற்றில் உள்ளவை பலவும் வாழ்த்துப் பாக்களே! பொருளில்லாமல் தரப்பட்ட சிலவற்றையும் பொருள்கூடும்படிக்குப் பாட்டில் அமைத்திருக்கிறேன். முற்றுமுடுகு குறட்பா, முற்றுமோனை வரும் இதழகல் குறட்பா – இப்படி வித்தகக் கவிகளையும் வேண்டியிருந்தனர் சிலர்.

சிலர் சொற்றொடர் தந்திருந்தனர். வெண்டளை பிறழா வகையில் வரும் வரையில் சிக்கலில்லை.

ஒவ்வொரு நாளும் தொடரலாம் என்றிருக்கிறேன். நீங்களும் சொல் தரலாம். இதுவரை யாக்கப்பெற்றுள்ள 50 குறள்களும் உங்கள் துய்ப்புக்கு:

குமுகாயம்

குமுகாய மேம்பாட்டைக் கொள்க குறியாய்

நமதார்ந்த நெஞ்சிலிந் நாள்! (1)

*

கொசு

(கொசு என்னை தொடர்ந்து துன்புறுத்துகிறது. கொசுவினைப்படைத்து மனிதனையும் படைத்த இறைவன் கொடியவனே எனவும் நொந்துள்ளேன். இக்கருவில் ஒரு குறள் இயற்றித்தர வேண்டும்.)

எவ்வுயிர்க்குங் கோவான எம்பெரும! ஏன்கொசுவாம்

வெவ்வுயிர்க்கும் வைத்தாய் விதி? (2)

*

முத்தையா

முத்தையார் வைத்தார் முதுசிப்பிக் கூட்டுக்குள்

முத்தையர் மொய்ம்புமொழி ஒத்து (3)

*

முகுந்தன்

நகுந்தெளி நெஞ்சும் நலனும் பெறுக

முகுந்த, நீ வாழ்வில் முயன்று (4)

*

கொற்கை

கொற்கை நிலத்தே கொழிப்பன மாக்கடலின்

பொற்கை நிறைத்த பொருள் (5)

*

காயத்திரி

நேயம் பெருந்துணிவு நெஞ்சிலொளி கொண்டுயர்க

காயத் திரி, அம்ம நீ! (6)

மாயத் திரையாம் மருளறுந் தேயுயர்க

காயத் திரி, அம்ம நீ! (7)

*

அறம்

அறமென்ப தெவ்வுயிர்க்கும் அல்லலின்றி வாழும்

திறமென்று தேர்தல் தெளிவு (8)

*

கற்பனை

கற்பனைக் கெட்டாக் கருணைப்பே ராறேயிவ்

அற்பனைக் காக்கும் அணை (9)

*

வாலறிவன்

வாலறிவன் நற்றாள் வணங்குங்கால் மற்றெல்லாம்

சாலவர மாட்டாதோ சாற்று (10)

*

(நாத்திகர்) நாத்தழும்பு

நாத்தழும் பேறி நறுக்கலும்,உள் நாதனை

ஏத்தலும் வேறோ? இலை (11)

*

ஓர்மம்

ஓர்மம் எதுவெனில் ஓதக்கேள் நண்ப,அஃ(து)

ஆர்மனமும் தீய்க்கா அறன் (12)

*

அமிழ்து

தமிழ்தரு தீஞ்சுவை தாழச் செயும்பேர்

அமிழ்தெனவே றுண்டோ அறை (13)

*

யாழினி

யாழினி நங்காய்நின் இன்சொலால் ஆமின்றே

பாழெனத் துன்பமெலாம் பார் (14)

*

ஆதினி

ஆதினிப் பெண்ணாள் அறிவால் உயர்கவே

மேதினிப் பந்ததன் மீது (15)

*


வெண்பா முதலான பல்வகைப் பாக்களின் இலக்கணத்தைப் பயின்று பாட்டெழுத விரும்புவோர் ‘உச்சி’ வலைத்தளத்தின் கற்கை நெறியில் இணைந்து கொள்ளலாம்:


திகழ்

ஆரென்ன சொன்னாலென் அஞ்சாதே!! செம்மையுறு

தீரம் வளர்த்தே திகழ் (16)

*

ஒற்றை

ஒற்றை நினைப்பை உருப்போட்(டு) உறுதிசெய்க

பற்றும் நெருப்பாய்ப் படர்ந்து (17)

*

கண்ணீர்

எண்ணீர் அகத்தென்றும் இல்லார் உகுத்ததுளிக்

கண்ணீரால் வற்றும் கடல் (18)

*

திருவாதிரன்

பெருவாழ்வும் பீடும் பெருக்குமெஞ் ஞான்றும்

திருவா திரன்றன் திறன் (19)

*

ஆதிரை

ஆதிரைச் செல்வீ! அறன்,அறிவோ டாகுக

மாதருள்ஒப் பில்லா மணி (20)

*

ஒரு சொல் கேட்டேன். ‘இது வீண்வேலை – சொல் தரப் பொழுதில்லை; நேரத்தை வேறு வழிகளில் செலவிடலாம்’ என்று பல சொற்களில் மறுப்புரைத்தார் ஒருவர். அவருக்கு அன்பாய் அளித்த பாட்டு:

பொழுதில்லாப் போதும் பொறுத்தொருசொல் இங்கே

எழுதி மகிழ்வளித் தீர்! (21)

*

அமிர்தா

நிமிர்தானை ஒத்தே நிலன்மீது வாழ்க

அமிர்தாநீ வெற்றி அணிந்து! (22)

*

அனன்யா

தனம்யா தெனின்நின் தமிழ்என் றறிக

அனன்யாநின் சொல்லே அரண் (23)

(அனன்யா தமிழ்வன்மை மிக்க சிறுமி. இங்கிலாந்தில் வாழ்கிறார். இளம் அகவையிலேயே இலக்கியச் செழுமையுடன் வீச்சாக உரையாடும் திறன் கொண்டவர். அவரது அன்னை இச்சொல்லைத் தந்திருந்தார். அனன்யாவின் காணொளியொன்று இங்கே: https://www.youtube.com/watch?v=xBOR0hTvvTM)

*

சதுக்கோணிச் சங்கதிகள்

சதுக்கோணிச் சங்கதிகள் சாற்றும் புலவீர்!

புதுக்கோணம் கண்டால் புகழ்! (24)

*

புன்னகை

உன்னுக நன்றினை உன்னிடுங் கால்பூக்கும்

புன்னகை என்னும்நற் பூ (25)

*

மலை

மலைத்தாய் மடியை மறுத்தாய் அழித்தாய்

மலைத்தாய் மனிதா! மடம்! (26)

*

ஞஞ்சை

ஞஞ்சைப் பிணியண்டா ஞானத் தெளிவென்றும்

நெஞ்சைச் சுடர்த்தும் நெருப்பு (27)

*

படவரவல்குல்

படவர வல்குல்கொள் பாவைநல்லார் பேற்றால்

புடவியில் வாழ்க்கை புதிது (28)

(படவரவல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்தொலி போய்.. – பெரிய திருமொழி)

*

முடியரசன்

நெடியதமிழ்ப் பாட்டரசன் நேர்மைச்சொல் வேந்தன்

முடியரசன் என்றே முழங்கு (29)

வெளிவரவிருக்கும் நூலொன்றில் வீறுகவியரசர் முடியரசனார் பற்றி நான் எழுதிய இன்னொரு வெண்பா:

இடியுரசப் பெய்மழை இம்பரிடர் தீர்க்கும்

முடியரசர் சொல்லொன்றே முன்னைக் – குடிதன்

பிணிமுடிக்கும் என்றுணரீர் பீடுடைய பாவார்

மணிமுடிக்கும் ஈங்கவரே மாண்பு

*

தலைவர்

தொலைவின் இருளைத் துடைக்குமொளி ஆனார்

தலைவரவர்க் கேநாம் சரண் (30)

*

துறவு

துறவென்ப தென்ன?இந்நாள் தோன்றும் பொழுதில்

உறவோ டிருக்கும் உளம் (31)

(போன பொழுதையும் வரவிருக்கும் பொழுதையும் பற்றிப் பிடித்திருக்கும் இயல்புடையது மனம். அப்பற்றைத் துறந்து இக்கணத்தில் வாழும் இயல்பே உண்மையான துறவு)

*

அகவன்

அகவன்சொல் நாடலேன்? ஆழ்மனத்தே ஆதி

பகவன் பதம்பணிந்தால் பார் (32)

*

கேசவன்

மாசறு நெஞ்சம் மதியில் தெளிவுடன்

கேசவ, வாழ்க கிளைத்து! (33)

*

காலதர்

காலதர் தாண்டியென் கைதீண்டும் காற்றினைப்

போலெதிர் வந்தாள் பொலிந்து (34)

*

ஆரோக்கியம்

நேராக்கும் வாழ்வை; நிலைத்தூக்கம் நல்குமுடல்

ஆரோக் கியமென் றறை (35)

ஆரோக்கியம் – நலவாழ்வு நல்ல தமிழ்ச்சொல்

*

கற்றல்

ஏமம் எதுவெனில் இன்கிள்ளாய் நீகேளாய்

காமமுறக் கற்றலே காண் (36)

(காமம் – விருப்பம், கற்றாரைக் கற்றாரே காமுறுவர்)

*

பாராட்டுக்கள்

உள்ளத் துவகை தருவதுண்டோ பாராட்டுக்

கள்ளினைப்போல் வேறேதும், காட்டு (37)

*

சேரர்

பாண்டியர் சேரர் படையுடை சோழரொளிர்ந்(து)

ஆண்டநிலம் வாழ்க அகன்று (38)

*

கவிதை

செவி,தன் பிறவிச் சிறப்படையத் தீஞ்சொற்

கவி,தை இலக்கணங் கற்று (39)

*

“எளிது” என முடியும் முற்றுமுடுகுக் குறள்

நுணுகி ஒலியை அணுகி லினிய

கவிதை புனைத லெளிது (40)

*

முற்று மோனையுடன் ஓர் இதழகல் குறட்பா

தேயாத திங்களொளிற் றேசனையாய் தீரைநீ

தீயாகச் சேர்ந்தசெந் தேன் (41)

*

ஆருதி

ஆருதிப் பெண்ணே அவையத்து முந்திநின்று

தேருதி செம்மைமிகுஞ் சீர் (42)

*

ஆசை

அலைகடற் குண்டெல்லை ஆசைக்கோ இல்லை

மலைகளையும் பேர்க்கும் மனம் (43)

*

எல்

எல்விழி கொண்டே எழுவார் ஒளிர்ந்திடுவார்

கல்வியை நற்றுணைகொண் டார் (44)

*

மாண்பு

அறியாதார் துன்பிழைத்த போதுமவர் அன்பில்

வறியாரென் றேயுணர்தல் மாண்பு (45)

*

சமிகா

நெஞ்சமிகா தோநின் நிறையன்பால் ஈங்கிவற்குத்

தஞ்சமினி நின்னரிய தாள் (46)

*

ழகரன்

நந்த மிழகரனை நாத முதல்வனைச்

சிந்தனை எந்நாளும் செய் (47)

(ழகரம் மொழி முதல் எழுத்தாக வருவதில்லை)

 நந்தமிழ் அகரன், நாத முதல்வன் – சிவன்

*

ஆரினி

காரனையன் பாரதியைக் காலனழைத் தான்பாவில்

ஆரினிப் பெய்வார் அழல் (48)

*

பூரணம்

ஏரணத்துள் எய்தி இறாத இறைநிலையே

பூரணம் என்க புரிந்து (49)

ஏரணம் – தர்க்கம்

*

காஞ்சிரங்காய்

தீஞ்சுவைகொள் சொல்லிருக்கத் தீயமொழி கொள்ளற்க

காஞ்சிரங்காய் ஊணாமோ காண் (50)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×