1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான The Progressive இதழிலும் அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு வெளியான Louder than Bombs: Interviews from the Progressive Magazine நூலிலும் இடம்பெற்ற நேர்காணலின் தமிழ் வடிவம்
ஆங்கிலம் வழி தமிழில்: மதுரன் தமிழவேள் (2013 பெப்ரவரி காலச்சுவடு இதழில் மொழிபெயர்ப்பாளரின் இயற்பெயரோடு வெளியானது)
யூகோஸ்லாவியா, ஈராக், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் போர்களைப் பற்றிக் கேள்விப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விடை கிட்டாத அதே கேள்வியை நான் எப்போதும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொள்கிறேன். ‘யார் ஆயுதங்களை விற்கிறார்கள்? இந்த மனித அவலத்திலிருந்து ஆதாயம் ஈட்டிக்கொள்வது யார்?’. இதற்கான பதிலை ஒருபோதும் ஊடகங்களில் கண்டடைந்ததில்லை. ஒரு யுத்தம் குறித்துக் கேள்விப்படும்போது நீங்கள் கேட்க வேண்டிய முதன்மையான கேள்விகள் இவைதாம்.
– எடுவார்டோ கலியானோ
இலத்தீன் அமெரிக்காவின் எழுத்தாளர்கள், கதைசொல்லிகள், இதழியலாளர்கள், வரலாற்றியலாளர்கள் வரிசையில் மிகச் சிறப்பானவர் எடுவார்டோ கலியானோ. இலத்தீன் அமெரிக்காவின் திறந்த நரம்புகள்: ஒரு கண்டத்தின் ஐந்து நூற்றாண்டுக் காலக் கொள்ளை (Open Veins of Latin America: Five Centuries of the Pillage of a Continent, Monthly Review Press, 1973) என்பது அவரது செவ்வியல் படைப்பு. தழுவுதல்களின் புத்தகம் (Book of Embraces, Norton, 1992), நாம் மாட்டோம் என்கிறோம்: கால வரிசை ஆவணம் (We Say No: Chronicles 1963-1991, Norton, 1992), நோர்டனால் கடந்த வருடம் மீள வெளியிடப்பட்ட, விருது வென்ற மூன்றன் தொகுதியான நெருப்பின் நினைவு (Memory of Fire) ஆகியவை அவரது ஏனைய நூல்களில் அடங்குகின்றன. கடந்த வருடம் வேர்சோவால் பதிப்பிக்கப்பட்ட, அவரது மிகச் சமீபத்திய புத்தகம் சூரியனிலும் நிழலிலும் கால்பந்தாட்டம் (Soccer in Sun and Shadow) என்பதாகும்.
கவித்துவ உணர்வாற்றலும் உறுத்தும் விகடமும் சமூக நீதிக்கான பற்றுறுதியும் மிக்க, கத்திமுனைக் கூர்மை கொண்ட மதியுரம்தான் கலியானோவின் உருகுவிய பேச்சின் மென்மையான, தளர்ந்த தொனிக்குக் கீழே இருக்கிறது. தனது ஆங்கிலத்துக்காக ஷேக்ஸ்பியரிடமும் ஆங்கிலத்தைப் பேசுவோரிடமும் அவர் மன்னிப்புக் கோருகிறார். ஆனால் அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, ஆக்கத்திறமும் அசையழுத்தமும் கொண்ட அவரது உச்சரிப்பு முறை உண்மையில் என்னை இன்னமும் அதிகமாக அவர் பேச்சைக் கேட்கச் செய்ததை அறிந்தேன்.
மொன்டெவீடியோவில் 1940இல் பிறந்த இவர் இளம் மேதை. தனது பதின்மூன்றாம் வயதிலேயே உள்ளூர் சோஷலிச வார இதழுக்கு அரசியல் கட்டுரைகளையும் கேலிச்சித்திரங்களையும் உருவாக்கித் தந்தார். பின்னர், எபோகா என்னும் நாளிதழ் உள்ளிட்ட பல்வேறு இதழ்களினதும் செய்திப் பத்திரிகைகளினதும் ஆசிரியராக இருந்தார். 1973ஆம் ஆண்டு அரசியல் தஞ்சம் கோரி அர்ஜெண்டினா சென்ற அவர், அங்கு நெருக்கடி (Crisis) என்னும் சஞ்சிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியரானார். ஸ்பெயினில் 1976ஆம் ஆண்டிலிருந்து 1984ஆம் ஆண்டுவரை வாழ்ந்த அவர் அதன் பிறகு உருகுவே திரும்பினார்.
ஊடக நுகர்வியத்தின் கடும் விமர்சகரான கலியானோ, ‘நாம் மாட்டோம் என்கிறோம்’ நூலில் இப்படி எழுதுகிறார்: ‘வெகுசன ஊடகம் மெய்நிலவரத்தை வெளிப்படுத்தாமல் மறைக்கிறது. அது மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு உதவாமல், மாற்றத்தைத் தவிர்க்க உதவுகிறது. அது சனநாயகப் பங்கேற்பை ஊக்குவிப்பதில்லை; அது செயலற்ற தன்மையை, எதிர்ப்பின்றி ஒப்பும் தன்மையை, சுயநலத்தைப் புகுத்துகிறது. அது ஆக்கத்திறனைத் தோற்றுவிப்பதில்லை. அது நுகர்வாளர்களை உருவாக்குகிறது.’
காதலினதும் போரினதும் பகல்களும் இரவுகளும் என்னும் அவரது புத்தகத்தில் அவர் தான் செய்வதை ஏன் செய்கிறார் என்பதை இவ்வாறு விளக்குகிறார்: ‘ஒருவர் எழுதுவது மற்றவர்களுடன் தொடர்புகொள்வதற்கான, நெருங்கியிருப்பதற்கான – வலி தருபவற்றை நிராகரிப்பதற்கும் மகிழ்ச்சி தருபவற்றைப் பகிர்ந்துகொள்வதற்குமான-தேவையின் பொருட்டாகும். ஒருவர் தனது தனிமைக்கெதிராகவும் மற்றவர்களின் தனிமைக்கெதிராகவும் எழுதுகிறார் – பிரக்ஞையை விழித்தெழச்செய்வதற்காக, அடையாளத்தை வெளிப்படுத்துவதற்காக! இந்தக் காலத்தில் இதைவிடவும் மேலான செயல்பாடுகளைப் புனைவு (தனதாக) உரிமை கோர முடியுமா?”
இலத்தீன் அமெரிக்காவுக்கான – இசபல் அல்லெண்டே விபரிப்பதைப் போல, ‘வரைபடத்தில் நோயுறும் இதயத்தின் வடிவில் தோன்றும் கண்ட’த்துக்கான – பயணத்திற்கு கலியானோ தனது வாசகர்களை அழைத்துச் செல்கிறார். அவரது கற்பனாபூர்வமான எழுத்துப் பாணி பூகோளத்தின் அனைத்துப் பகுதிகளிலுமிருக்கும் நோயாளிகளுக்கும் ஆக்சிஜன் வழங்குகிறது. ‘நெருப்பின் நினைவி’ன் இரண்டாம் பகுதியான ‘முகங்களும் முகமூடிகளும்’ நூலின் புராணீகத்தன்மை கொண்ட தொடக்கம் இதோ:
‘நீலப்புலி இந்த உலகை நொறுக்கிவிடும். தீதற்ற, மரணமற்ற இன்னோர் உலகு இதன் அழிவிலிருந்து தோன்றும். இந்த நிலத்துக்கு இது வேண்டியிருக்கிறது. பழையதும் தாக்கப்பட்டதுமான இந்த நிலம் இறக்கவும் பின்னர் பிறக்கவும் வேண்டி நிற்கிறது. மூடப்பட்ட கண்ணிமைகளுக்குப் பின்னால் எவ்வளவோ அழுதுதீர்த்ததில் அது களைப்புற்றும் குருடாகியும் இருக்கிறது. மரணத்தின் புள்ளியில், நேரத்தின் குப்பைக் குவியலாய் இருக்கும் பகல்களில் அது நீளமான அடிவைத்து நடக்கிறது; இரவுகளில் நட்சத்திரங்களிலிருந்து இரக்கத்தைத் தூண்டிக்கொள்கிறது. இன்னொன்றாக மாற விரும்பும் இந்த நிலத்தினது விண்ணப்பங்களை முதல் தந்தை வெகுவிரைவில் கேட்பார்; அதன் பிறகு தனது வலைக்குக் கீழ் உறங்கியிருக்கும் நீலப்புலி பாய்ந்தெழும்.’
ஏப்ரலின் இறுதிப் பகுதியில் இலன்னான் அறக் கட்டளை வழங்கிய பண்பாட்டுச் சுதந்திரத்துக்கான 250, 000 டாலர் பரிசைப் பெறுவதற்காகக் கலியானோ சன்டா ஃபேயில் இருந்தார். கலியானோவால் பரிந்துரைக்கப்பட்ட உருகுவேயிலுள்ள மூன்று மாற்றுப் பண்பாட்டு நிறுவனங்களுக்கு மேலதிகமாக 100,000 டாலர் வழங்கப்பட்டது. அறக்கட்டளை உலகில் புதிய எழுச்சி பெற்றிருக்கும் இலன்னான் – அதன் நிதிச்செல்வம் பல்தேசிய நிறுவனமான ஐஐடியின் முன்னாள் இயக்குநர் ஒருவரிடமிருந்து வருகிறது என்ற போதிலும்கூட – முற்போக்கான அரசியலைக் கொண்டுள்ளது. சப்கொமாண்டன்டே மார்கோஸ் எழுதிய ஹிஸ்டோரியா தெ லொஸ் கொலோர்ஸ்: நிறங்களின் கதை (Historia de los Colores: The Story of Colors,Cinco Puntos Press), என்னும் இருமொழி நூலின் அச்சாக்கச் செலவுகளை ஏற்றுக்கொள்ள முன்வந்ததன் மூலம் கடந்த மார்ச் மாதம் இலன்னான் செய்திகளில் பரவலாகப் பேசப்பட்டது. முன்னதாக அதற்கு நிதியளிப்பதாக இருந்த கலைகளுக்கான தேசிய அறக்கொடை, அந்தப் புத்தகத்தின் ஆசிரியரின் அடையாளத்தை அறிந்துகொண்டபோது அந்தத் திட்டம் திடீரென நிறுத்தப்பட்டது.
அவரது பரிசளிப்பு வைபவத்துக்குப் பின்னதாக இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலியானோ தி ப்ரோக்ரசிவ் (The Progressive) இதழுக்காக நேர்காணப்பட்டார்.
இலத்தீன் அமெரிக்காவின் திறந்த நரம்புகள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளது. அது பல மொழிபெயர்ப்புகளைக் கண்டுள்ளது. நீங்கள் அதை மூன்று மாதங்களில் எழுதியிருந்தீர்கள். இது வியப்பூட்டக்கூடிய அளவு குறுகிய காலம். வீரியமிக்க இத்தகைய பாய்ச்சலை நீங்கள் எவ்வாறு பெற்றீர்கள்?
எடுவார்டோ கலியானோ: இந்தப் புத்தகத்தின் உண்மையான ஆசிரியர் காப்பிதான். நான் அவற்றைச் சமுத்திரங்களின் அளவுக்குப் பருகினேன். ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் – 1970 – காலைப்பொழுதுகளில் மொன்டெவீடியோ பல்கலைக்கழகத்தில் அதன் பிரசுரங்களின் ஆசிரியராக இருந்தேன். மதியத்துக்குப் பிறகு தனியார் பதிப்பகங்களில் ஆசிரியராக வேலைசெய்தேன். ஒரு நுளம்பின் பாலியல் வாழ்க்கை என்பது போன்ற நீங்கள் கற்பனையில் மட்டுமே பார்க்கக்கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பான புத்தகங்களையும் மீளெழுதுவதும் திருத்துவதும் எனக்கான வேலைகளாக இருந்தன. பின்னேரத்தில் 7 அல்லது 8 மணியிலிருந்து காலையில் 5 அல்லது 6 மணிவரை திறந்த நரம்புகளை எழுதிக்கொண்டிருந்தேன். நான் மூன்று மாதங்களாக உறங்கவில்லை. ஆனால் அது காப்பியின் மேன்மைக்கான ஒரு விளம்பரமாக இருந்தது. எனவே ஓர் இடதுசாரியாக வருவதற்கு உங்களுக்கு விருப்பமில்லை என்றால் காப்பி குறித்துக் கவனமாயிருங்கள்.
இந்தப் புத்தகத்தின் நிலைத்து நிற்கும் சக்திக்குக் காரணமாக இருப்பது யாது?
சுயவதையில் இதம் காணலாக (masochism) இருக்கலாம். என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சிறப்புத் தேர்ச்சியற்ற வாசகருக்கு இந்தப் புத்தகம் அனேகமான வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுவருகிறது. திறந்த நரம்புகளில் தந்திருக்கும் உண்மைத் தரவுகளை நான் கண்டறியவில்லை. எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மொழியில் நான் வரலாற்றை மீள எழுத முயன்றேன். இந்தப் புத்தகம் இவ்வளவு தூரம் வெற்றி கண்டிருப்பதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். தொடக்கத்தில் அதற்கு எந்த வெற்றியும் இருக்கவில்லை. ஆனால் பிறகு அது தனக்கான பாதையைத் தானே திறந்துகொண்டு நடக்கத் தொடங்கியது; இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது.
ஒரு குள்ளனைக் குழந்தையாக எண்ணி நீங்கள் குழம்பிவிடக்கூடும் என்பது இந்தப் புத்தகத்தின் முதுகெலும்பாக இயங்கக்கூடிய மைய எண்ணக்கருவாக இருக்கலாம். அவர்கள் இருவரும் ஒரே அளவானவர்கள், ஆனால் வேறுபட்டவர்கள். அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பற்றித் தொழில்நுட்ப வல்லுநர்கள் பேசும்போது, நாங்கள் முதலாளித்துவத்தின் மழலை நிலையில் வாழ்வதைப் போல அவர்கள் அர்த்தம் கற்பிக்கிறார்கள்; அது எந்த விதத்திலும் உண்மை அன்று. இலத்தீன் அமெரிக்கா அபிவிருத்தியை நோக்கி நகரும் அரங்கு அல்ல. அபிவிருத்தியின் விளைவே அது; ஐந்து நூற்றாண்டுக் கால வரலாற்றின் விளைவே அது.
சஞ்சிகைகளுக்கு எழுதிக்கொண்டு அல்லது பல்கலைக் கழகங்களில் போதித்துக்கொண்டு நீங்கள் வசதியான வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்க முடியும். ஆனால் நீண்ட காலத்துக்கு முன்னமே நீங்கள் குரலற்றவர்கள் சார்பில் உழைக்கத் தீர்மானித்தீர்கள் அல்லவா?
குரலற்றவர்கள் என்று யாரும் இருப்பதாக நான் எண்ணவில்லை. ஒவ்வொருவரிடமும் சொல்வதற்கு ஏதோ ஒன்று – மற்றவர்களால் கேட்கப்படக்கூடிய தகைமை வாய்ந்த ஏதோ ஒன்று – இருக்கிறது. எனவே குரலற்றவர்களின் குரலாக இருப்பது என்னும் இந்த எண்ணப்போக்கை ஒருபோதும் நான் கொண்டிருந்ததில்லை. பிரச்சனை என்னவென்றால் ஒருசிலர் மட்டுமே கேட்கக்கூடிய சிறப்புரிமையைக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு தியாகி அல்ல, வீரன் அல்ல.
அறிந்துகொள்வதற்கும் தமது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்குமான உரிமை எங்கள் அனைவருக்கும் இருக்கிறது; இந்த நாள்களில் கட்புலனாகாத ஒரு சர்வாதிகாரத்தின் கட்டளைகளுக்கு நாம் பணிந்துகொண்டிருக்கும்வரை இது கடினமான ஒன்றாக இருக்கிறது. ஒற்றை உலகத்தின், ஒற்றை உருவத்தின், ஒற்றைத் தொனியின் சர்வாதிகாரமே அது. அத்தோடு ஏனைய சர்வாதிகாரங்களைவிட இது அதிக ஆபத்தானதாக இருக்கலாம்; ஏனென்றால் இது உலகளாவிய அளவில் செயல்புரிகிறது. நுகர்விலும் வன்முறையிலும் மையம்கொண்டிருக்கும் பிரபஞ்சரீதியான விழுமியங்களை விதிக்கும் அனைத்துலக அதிகாரக் கட்டமைப்பாக அது இருக்கிறது. அதன் பொருள் என்னவென்றால் உங்களிடம் என்ன இருக்கிறதோ அதுதான் நீங்கள். உங்களிடம் எதுவும் இல்லை என்றால் நீங்கள் எதுவும் இல்லை. இருப்புக்கான உங்கள் உரிமை பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான உங்கள் ஆற்றலில் தங்கியிருக்கிறது. உங்களிடம் இருக்கும் பொருட்களைக் கொண்டு நீங்கள் வரைவிலக்கணப்படுத்தப்படுகிறீர்கள். உங்கள் மகிழூந்தால் நீங்கள் செலுத்தப்படுவதைப் போன்றது இது. உங்களது பேரங்காடியால் நீங்கள் வாங்கப்படுகிறீர்கள். உங்கள் தொலைக்காட்சித் திரையால் நீங்கள் பார்க்கப்படுகிறீர்கள். உங்கள் கணினியால் நீங்கள் திட்டநிரல்படுத்தப்படுகிறீர்கள். நாம் அனைவரும் நமது கருவிகளின் கருவிகளாக ஆகிவிட்டோம்.
இந்த வட்டத்துக்கு ஏதாவது ஒரு முடிவு இருக்கிறதா?
நுகர்வுச் சமூகம் தனது விழுமியங்களை உலகம் முழுவதும் விதிக்குமானால், பின்னர் இந்தக் கிரகம் மறைந்துவிடும். எம்மால் அந்தச் செலவீனத்தைத் தாங்க முடியாது. அப்படியோர் அழிவுக்கான விலையைச் செலுத்துவதற்கு எம்மிடம் போதுமான காற்றோ நிலமோ நீரோ கிடையாது.
இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் விதிக்கப்பட்டுள்ள வகைமாதிரி, அம்ஸ்டெர்டாம் அல்லது ஃப்லோரென்ஸ் அல்லது பொலொக்னாபோல் கிடையாது. இவை ஈருளிகளையும் பொதுப்போக்குவரத்தையும் நடந்து செல்லும் மனிதர்களையும் கொண்ட நகரங்கள். நகரைத் தமக்கு உரித்தாக உணரும் மக்கள் வாழும் நகரங்கள். ஒரு பொது இடப்பரப்பைத் தரும் நகரங்கள். எதிர்கொள்ளுதல் என்ற மனிதத் தேவையின் பொருட்டே நகரங்கள் தோற்றம் பெற்றன. “நான் நண்பர்களைச் சந்திக்க வேண்டும். நான் மற்ற மனிதர்களுடன் இருக்க வேண்டும்” என்பதன் விளைவாக நகரங்கள் தோற்றம் பெற்றன. இன்று யந்திரங்களை யந்திரங்கள் எதிர்கொள்ளும் இடங்களாக நகரங்கள் இருக்கின்றன. மனிதர்களான நாங்கள் ஊடுருவிகளாக ஆகிவிட்டோம்.
நாம் எதைப் போல வர விரும்புகிறோம்? மக்களைவிட மகிழூந்துகள் அதிக வெளியைச் சொந்தமாகக் கொண்டுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்போலவா? இது அசாத்தியமான கனவு. நாம் அவையாக வர முடியாது. ஒருவருக்கு ஒரு மகிழூந்து என்றமைந்துள்ள அமெரிக்காவில் உள்ளதைப் போன்ற அளவு மகிழூந்துகள் உலகம் முழுவதும் இருந்தால், இந்தக் கிரகம் வெடித்துச் சிதறிவிடும். நாம் காற்றை நச்சுப்படுத்திவிட்டோம். நிலத்தை நச்சுப்படுத்திவிட்டோம். நீரை நச்சுப்படுத்திவிட்டோம். மனித ஆன்மாக்களை நச்சுப்படுத்திவிட்டோம். அனைத்தும் நச்சுப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இலத்தீன் அமெரிக்காவின் அதிபர் ஒருவர் தனது உரையில் “நாங்கள் முதலாம் உலகின் ஒரு பகுதியாக வந்துகொண்டிருக்கிறோம்” என்று சொல்லும்போது, முதலாவதாக அவர் பொய் கூறுகிறார். இரண்டாவ தாக, இது நடைமுறையில் சாத்தியமற்றது. மூன்றாவதாக அவர் சிறையில் இடப்பட வேண்டியவர்; ஏனென்றால் இது குற்றம் செய்யத் தூண்டும் செயல். நீங்கள் “மொன்டெவீடியோ லாஸ் ஏஞ்சல்ஸாக வர வேண்டும்” என்று கூறினால், நீங்கள் மொன்டெவீடியோவின் அழிவை அழைக்கிறீர்கள்.
அமெரிக்க ஐக்கிய அரசுகளில் (USA) இருக்கும் அநேகர் இலத்தீன் அமெரிக்கா குறித்து எண்ணும்போது, கன்கூனிலிருந்தும் அகபல்கோவிலிருந்தும் கொபகாபனா மற்றும் மார் டெல் ப்லாடாவரை ஒரு விசாலமான கடற்கரையை, ஒரு மைதானத்தை – இப்படித்தான் காண்கிறார்கள். அல்லது அவர்கள் அச்சுறுத்தும் அபாயகரமான முகங்களைக் காண்கிறார்கள்: போதைப்பொருள் கடத்தல்காரர்கள், இடதுசாரி கெரில்லாக்கள், விருத்தி அடையாத ஒதுக்குப்புற நகரங்கள். இலத்தீன் அமெரிக்கா தொடர்பான அமெரிக்காவின் எண்ணப்போக்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ஒவ்வொருமுறை நான் அமெரிக்கா வரும்போதும் லத்தீன் அமெரிக்கா குறித்தோ உலகம் குறித்தோ ஏறத்தாழ எதுவும் அறியாத உயர்சதவிகிதத்திலுள்ள மக்கள்தொகையின் அறியாமை காரணமாகத் திகைப்பிலாழ்கிறேன். அமெரிக்காவின் எல்லைகளுக்கு வெளியே நடக்கக்கூடிய எதைப் பற்றியும் பார்க்க முடியாததாகக் கேட்க முடியாததாக (இந்த மக்கள் கூட்டம்) இருக்கிறது.
மூன்று வருடங்களுக்கு முன்னர் ஸ்டாண்ட்ஃ போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தேன். ஒருமுறை வயது முதிர்ந்த பேராசிரியர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். முக்கியமான பண்புமிக்க மனிதர். திடீரென அவர் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” எனக் கேட்டார்.
“உருகுவே” என்றேன்.
“உருகுவே?” அவர் கேட்டார்.
உருகுவே எங்கு இருக்கிறது என்று எவரும் அறிந்திருக்கவில்லை என்று எனக்குத் தெரிந்திருந்ததால், துரிதமாக நான் பேசிக்கொண்டிருந்த விடயத்தை மாற்றி வேறொன்றைப் பற்றி உரையாட முயன்றேன்.
ஆனால் அவர் “நாங்கள் அங்குப் பயங்கரமான விடயங்களைப் புரிந்துவருகிறோம்” என்று கூறுமளவுக்குத் தாட்சண்யம் கொண்டிருந்தார்.
அவர் குவாத்தமாலா பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார் என்று திடீரென்று நான் உணர்ந்துகொண்டேன். ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில்தான் குவாத்தமாலாவில் சிஐஏயின் தொடர்புகள் பற்றிய சில கட்டுரைகளை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருந்தது.
நான் கூறினேன்: “இல்லை, அது குவாத்தமாலா.”
“ஓ, குவாத்தமாலா?”
“ஆம், குவாத்தமாலா.”
அமெரிக்காவிற்கு வெளியே என்ன நடக்கிறது என்பது குறித்த இந்த அறியாமை, உயர் அளவிலான, தண்டனையற்றுக் குற்றம் புரியக்கூடிய தன்மையைக் குறிகாட்டுகிறது. இராணுவம் தனக்கு வேண்டிய எதையும் செய்துகொள்ளலாம், ஏனென்றால் மக்களுக்குக் கொசோவோ எங்கிருக்கிறது என்றோ ஈராக் அல்லது குவாத்தமாலா அல்லது எல் சல்வடோர் எங்கிருக்கிறது என்றோ தெரியாது. அத்தோடு, எடுத்துக்காட்டாக, நியூயார்க் உருவாக்கப்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாக்தாத்தில் ஒரு மில்லியன் பேர் இருந்தார்கள் என்றோ உலகின் உயர்பண்பாடு இருந்ததென்றோ இவர்களுக்குத் தெரியாது.
இதே விடயம் “எங்கள்” அமெரிக்கா – மற்றைய அமெரிக்கா – தொடர்பிலும் உண்மையானது — நாங்கள் வெறுமனே எசமானின் குரல்களின் எதிரொலிகள் அல்ல.
அல்லது அவர் உடலின் நிழல் அல்ல…
இலத்தீன் அமெரிக்காவில் இருக்கும் ஆளும்வர்க்கங்கள்கூட நிழல்களாகவும் எதிரொலிகளாகவும் வருவதற்குக் கனவுகாண்கின்றன. நான் எப்போதும் சொல்வது என்னவென்றால், இலத்தீன் அமெரிக்காவில் (உள்ள) எமது மிக மோசமான பாவம் முட்டாள் தனமென்னும் பாவமேயாகும்; ஏனென்றால் நாங்கள் எங்களது கேலிச்சித்திரங்களையே பார்த்து மகிழ்பவர்களாக இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, நான் அமெரிக்காவில் லத்தீன் அமெரிக்கர்களைச் சந்திக்கும் வேளைகளில் அவர்கள் சொல்கிறார்கள், “நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன்.” ஆஹ், நீங்கள் இப்போது அமெரிக்காவில் இருக்கிறீர்கள் – ஏனென்றால் நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்கள். முன்னர் நீங்கள் எங்கு இருந்தீர்கள்? கிரீன்லாந்து? ஆசியா? ஜப்பான்? கண்ணாடியில் தோன்றும், எம்மை வெறுக்கும், ஏளனம் செய்யும் எங்களது இந்தத் திரிபுபடுத்தப்பட்ட தோற்றத்தை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம்.
நீங்கள் வறுமையின் அநீதி பற்றி எழுதுகிறீர்கள்...
இந்த உலகில், பாரிய அளவில் அநீதி நிகழ்கிறது. நான் திறந்த நரம்புகள் எழுதி முப்பது வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், பொருண்மிய அர்த்தத்தில் செல்வந்தனுக்கும் ஏழைக்குமான வித்தியாசம், இடைவெளி பன்மடங்காகியுள்ளது.
1999இல் மனித வர்க்கத்தின் அரைப்பகுதி சம்பாதிக்கும் மொத்தத் தொகையின் அரைமடங்குக்குச் சமமான அளவு அதிர்ஷ்டத்தை 225 நபர்கள் தங்களுக்கு உரித்ததாகக்கொண்டிருந்ததாகக் கடைசியாக வந்த ஐநா அறிக்கை சொல்கிறது. இது உரொட்டிகளினதும் மீன்களினதும் மிக அநீதியான பங்கீடாகும்.
ஆனால் இதேவேளை, தான் விதிக்கும் பழக்க வழக்கங்களில் இந்த உலகு சமத்தன்மையை ஏற்படுத்துகிறது. பூகோளம் தழுவிய ஒற்றைநெறிப்படுத்தலை, முழு உலகினதும் ஒருவித மக்டொனால்ட்மயமாதலை ஏற்றுக்கொள்ளுமாறு நாம் சபிக்கப்பட்டிருக்கிறோம். இது உலகம் கொண்டுள்ள அனைத்து உலகங்களுக்கும் எதிரான ஒரு வன்முறை வடிவமாகும். இரண்டு சாத்தியங்களில் ஒன்றைத் தேர்ந்து கொள்ளுமாறு கட்டுப்படுத்தப்படுவது என்னும் எண்ணத்தை நான் நிராகரிக்கிறேன் என்று நான் வழமையாகக் கூறுவதுண்டு: அதாவது ஒன்று நீங்கள் பசியால் இறப்பீர்கள் அல்லது சலிப்பின் காரணமாக இறப்பீர்கள். இதை நாம் ஒவ்வொரு நாளும் கடைப்பிடித்துவருகிறோம்: ஆனால் நாம் அதைக் கவனிப்பதில்லை ஏனென்றால் அது கட்புலனாகாமல் இருக்கிறது; அது இரகசியமானது: நாம் பல்வகைமையாய் இருப்பதற்கான, வாழ்க்கையைப் பல்வேறு வழிகளில் வாழ்வதற்கான, கொண்டாடுவதற்கான, உண்பதற்கான, ஆடுவதற்கான, கனாக்காண்பதற்கான, குடிப்பதற்கான, சிந்திப்பதற்கான, உணர்வதற்கான எமது கொள்தகைமையைக் கொன்றொழிக்கும் ஒருவகைச் செயல்பாடு அது. தடைசெய்யப்பட்ட வானவில்லைப் போன்றது அது. ஒற்றை வழியொன்றை ஏற்றுக்கொள்ளுமாறு நாம் மேலும் மேலும் நிர்ப்பந்திக்கப்படுகிறோம். இந்த ஒற்றை வழி முதன்மையாக அமெரிக்கத் தொழிற்சாலைகளில் உற்பத்திசெய்யப்படுகிறது.
நீங்கள் மிக இளம் வயதிலேயே தீவிர அரசியலுக்குள் பிரவேசித்துவிட்டீர்கள். குடும்பச் செல்வாக்குதான் காரணமா?
இல்லை, அது (தீவிர அரசியல்) எனது சுவாசம் போல இருந்தது. சிலவேளை, நான் இன்னமும் அறச்சீற்றத்தை ஒழுங்கமைத்துக்கொள்ள முயல்கிறேனாயிருக்கலாம். திறம்மிக்கதென்று சிறப்பித்துச் சொல்ல முடியாததான எனது மனம், எனது உணர்வுகளை ஒழுங்கமைப்பதற்கு, அவற்றை அர்த்தப்படுத்திக்கொள்வதற்கு உபயோகமாயிருக்கிறது. எனினும் உணர்விலிருந்து சிந்தனைக்கு என்ற விதத்திலேயே இந்தச் செயல்பாங்கு அமைகிறது. மறுதலையாக அல்ல. வேறு அனைத்திலும் போலவே, அரசியலிலும் நான் நினைப்பதற்கும் நான் உணர்வதற்குமிடையிலான, சிலவேளைகளில் அசாத்தியமான – எனினும் விரும்பத்தக்க – சங்கமிப்பை எப்போதும் நாடுகிறேன். அது, ஒரே தருணத்தில் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட, கரீபியக் கரையோரச் சிறு நகரங்களில் இருக்கும் கொலம்பியர்களால் ‘உணர்-சிந்தித்தல் மொழி’ என்று கூறப்படும் மொழியை விருத்தி செய்வதற்கான, வெல்வதற்கான, கைக்கொள்வதற்கான, கண்டடைவதற்கான ஓர் எத்தனமாகவும் அமைகிறது. தான் தொடும் அனைத்தையும் துண்டங்களாகச் சிதைக்கும் ஆதிக்கப் பண்பாட்டால் விலக்கிவைக்கப்பட்டவற்றை மீள இணைக்கக் கூடியதாகவும் அந்த மொழி இருக்கிறது. (ஆதிக்கப் பண்பாட்டில்) உங்களது எண்ணங்களுக்கென்று ஒரு மொழியும் உணர்ச்சிகளுக்கென்று வேறொரு மொழியும் இருக்கிறது. இருதயமும் மனமும் பிரிந்திருக்கின்றன. பொதுப்பேச்சு என்றொன்று, தனிப்பட்ட வாழ்க்கையென்று ஒன்று. வரலாறும் தற்காலமும்கூடப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
வரலாறு என்பது அருங்காட்சியகத்தில் இருக்கும் உறங்கும் அழகி அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள்..
அதிகாரபூர்வமான வரலாறென்பது அருங்காட்சியகங்களில் இருக்கும் உறங்கும் அழகியாக, சிலவேளை பூதமாக இருக்கிறது. எனினும், நினைவு என்பதை வந்திறங்கும் ஓர் இடமாகவல்லாது, புறப்பட்டுச் செல்லும் ஒரு புள்ளியாக – எதிர்காலத்தை ஏற்றுக் கொள்ளுதல் என்பதல்லாது அதைக் கற்பனைப்படுத்தும், உங்களை நிகழ்காலத்துக்குள் எறியும், கவண்பொறியாகக் காண்பதிலேயே நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அவ்வாறல்லாது, இறந்த மனிதர்களின், இறந்த பெயர்களின், இறந்த தரவுகளின் தொகுப்பாக வரலாறென்பது இருக்குமானால், அதனுடன் எந்த விதமான தொடர்பையேனும் கொண்டிருப்பது எனக்கு அறவே அசாத்தியமான ஒன்றாக இருந்திருக்கும். அதனால்தான், நடந்த அனைத்தையும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் முயற்சியாக, அதை வாசகர் வாசிக்கும்போது அது மீளநிகழ்வதை அனுமதிக்கும் விதமாக, நெருப்பின் நினைவை நான் நிகழ்கால வடிவில் எழுதினேன்.
உங்களது மூன்றன் தொகுதியான நெருப்பின் நினைவு, பாரம்பரிய வரலாற்றிலிருந்து நாடகீயமான முறையில் விலகலைக் கொண்டுள்ளது. கவிதை, செய்தி விடயங்கள், புலமைத்துவம் ஆகியவற்றின் கலவையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். உங்களை அவ்விதம் செய்ய உந்தியது எது?
நான் ஆன்மாவின் எல்லைகளை எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை; எழுத்தென்ற கலையில் எல்லைகளையும் ஏற்றுக்கொண்டதில்லை. நான் சிறுவனாக இருந்தபோது, எனக்குக் கத்தோலிக்க போதனை கிட்டியது. உடலும் ஆன்மாவும் எதிரிகள் என்றும் பாவம், குற்றப்பழி, இன்பம் என்பவற்றின் மூலாதாரம் உடலே – பியூட்டி அண்ட் த பீஸ்ட் போல அவை ஆன்மாவைப் பீடிக்கும் என்றும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் நான் பயிற்றுவிக்கப்பட்டிருந்தேன்.
இந்த எண்ணத்தை, (உடலுக்கும் ஆன்மாவுக்குமிடையிலான) பிரிவை, உள்ளகப்படுத்துவதென்பது எனக்கு மிகக் கடினமாயிருந்தது. எனக்கு உள்ளே உண்மையாக நான் உணர்ந்ததற்கும் கடவுளிடமிருந்து வரும், வெளிப்படுத்தப்பட்ட உண்மையாக எனக்குத் தரப்பட்டதற்கும் இடையிலான முரண்பாடுகளை நான் எப்போதும் கவனித்தபடியிருந்தேன். அதேவேளை, நான் கடவுளில் நம்பிக்கை கொண்டிருந்ததோடு அவர் என்னில் நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்றும் நம்பியிருந்தேன். எனவே இந்த முரண்பாட்டில் வாழ்வதென்பது இலகுவாக இருக்கவில்லை. நான் பத்து அல்லது பதினொரு வயதாக இருந்தபோது, எனக்கு இந்தப் பயங்கரமான நெருக்கடி ஏற்பட்டது. எனது உடல் குறித்துக் குற்றவுணர்வு கொள்ளும் இந்தத் திகிலானது, நான் பாலுணர்வுறுவதுடன் தொடர்புபட்டது என்று எண்ணத் தலைப்பட்டேன். என்னை நரகத்துக்குச் செல்லச் சபிக்கும், ஆன்மச் சிதைவின் மூலாதாரம் போன்றதாக எனது உடல் இருந்தது.
தற்போது நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். நான் நரகத்துக்கே செல்கிறேன் என்பதையும் (நரகப்) பிழம்பை ஏற்றுக்கொள்வதற்காக சூடான வெப்ப மண்டல நாடுகளில் பயிற்றுவிக்கப்படுகிறேன் என்பதையும் மிக முழுமையாக அறிந்துகொண்டுள்ளேன். அது அந்த அளவுக்குப் பயங்கரமானதாயிருக்காது.
நான் எழுத ஆரம்பித்தபோது, கட்டுரை, அல்புனைவு முதலானவற்றுக்கும் கவிதை, சிறுகதை அல்லது புதினம் முதலான வகைமைகளுக்கும் இடையிலிருக்கும் எல்லைகளை மதித்தாக வேண்டுமென்று எண்ணியிருந்தேன்.
வகைப்படுத்தப்படுவதை நான் வெறுக்கிறேன். வகைப்படுத்துவது தொடர்பில் இந்த உலகு ஓர் அடர்த்தாட்சி கொண்டிருக்கிறது. நாங்கள் அனைவரும் புழு பூச்சிகள் போல் நடத்தப்படுகிறோம். முன்புறத்தில் நாம் குறிப்பேடு ஒன்றைச் சுமந்துகொள்ள வேண்டியிருக்கிறது. எத்தனையோ இதழியலாளர்கள் கேட்டிருக்கிறார்கள்: “நீங்கள் ஓர் அரசியல் எழுத்தாளர், அப்படித்தானே?”. மனித வரலாற்றில் அரசியல் சாராத ஓர் எழுத்தாளரின் பெயரை எனக்குத் தாருங்கள் பார்க்கலாம். நாம் அனைவருமே அரசியல் சார்ந்தவர்கள் – நாம் அரசியல் சார்ந்தவர்கள் என்று நாம் நினைக்காவிட்டாலும்கூட.
நான் எல்லைகளை மீறுவதாக உணர்கிறேன், அத்துடன் ஒவ்வொரு முறை அப்படிச் செய்யும்போதும் நான் மகிழ்கிறேன். நான் ஒரு எழுத்தாளராக வேலைசெய்வதைவிட ஒரு கடத்தல்காரனாக இருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது – ஏனென்றால் எல்லைகளை மீறுவதில் இருக்கும் இந்த இன்பம் உண்மையிலேயே எனக்குள் இருக்கும் கடத்தல்காரனை, அடாத்து மிக்கவனை வெளிப்படுத்துகிறது.
இண்டர்நேஷனல் டெலிஃபோன் அண்ட் டெலிக்ராஃப் (ஐடிடி) என்ற பல்தேசிய நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஒருவரிடமிருந்து வந்த நிதிமூலம் நிறுவப்பட்ட இலன்னான் அறக்கட்டளையிடமிருந்து ஒரு பரிசை நீங்கள் அண்மையில் பெற்றுள்ளீர்கள். ஐடிடி உங்களால் வெகுவாக விமர்சித்து எழுதப்பட்ட நிறுவனம் என்பதோடு சிலியில் சல்வடோர் அல்லெண்டேயின் ஆட்சிக் கவிழ்ப்பில் முனைப்பாகத் தொடர்புற்ற ஒன்றுமாகும்.
நான் ஐடிடியிடமிருந்து பரிசைப் பெறவில்லை. இலன்னான் அறக்கட்டளையிடமிருந்தே பெற்றேன்.
ஆனால் மூலநிதி அங்கிருந்துதான் வந்தது.
நரகத்திலிருந்து சொர்க்கத்துக்கான நல்லதொரு பயணம் அது.
அமெரிக்கா அத்தனை தூரம் வன்முறையான சமூகம் என்று ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்.
அமெரிக்கா வன்முறையான சமூகம் என்று நான் சொல்லமாட்டேன். அழகினதும் சனநாயகத்தினதும் சக்திகளையும் அது கொண்டிருக்கிறது. “உலகின் ஆகப் பெரிய கொடூரசக்தி அமெரிக்காதான்” என்று சொல்லி எனது சொந்தப் பொறியிலேயே நான் வீழமாட்டேன். அது ஆகலும் எளிதானதொன்று. ஆனால் யதார்த்தம் அதனிலும் மிகுந்த சிக்கலுடையது. தான் தொடும் அனைத்திலும் பரவும், ஊடுபுகும், வியாபிக்கும் இராணுவப் பண்பாடு, வன்முறைப் பண்பாடு அங்கு உள்ளது. எடுத்துக்காட்டாக, அதன் பொழுது போக்குத் தொழில்துறை, வன்முறையால் தடிப்புற்றதாக, தொலைக்காட்சிகளில் அல்லது பெருந்திரைகளில் இருந்து கடல்கள் அளவு குருதியைக் கொட்டும் ஒன்றாக இருக்கிறது. எல்லாத் தருணங்களிலும் ஒவ்வொன்றும் வெடித்தபடியே இருக்கிறது– வாகனங்கள், மக்கள். ஒவ்வொன் மீதுமான தொடர் குண்டுத் தாக்குதல் போன்றது இது. கோழி, முட்டை இவற்றில் எது முதலில் வந்தது என்னும் அதே பழைய கதைதான் இது. பொழுதுபோக்குத் துறை சொல்கிறது: “நாங்கள் அப்பாவிகள். வன்முறை மிக்க யதார்த்தமே திரைப் படத்தின் அல்லது தொலைக்காட்சியின் கண்ணாடியூடாகப் பிரதிபலிக்கப்படுகிறது. நாங்கள் வன்முறையைப் புதிதாக உருவாக்குவதில்லை. வன்முறை தெருக்களில் இருந்துவருகிறது.” ஆனால் இந்தச் சுழற்சியில் ஊடகங்கள் செல்வாக்கைக் கொண்டிருக்கின்றன.
எனவே யூகோஸ்லாவியாவுக்கும் லிட்டில்டன், கொலராடோவுக்குமிடையில் கட்புலனாகாத தொடர்பொன்று இருக்கக்கூடும். இரண்டும் ஒரே வன்முறைப் பண்பாட்டின் வெளிப்பாடுகள். அமைதியின் பெயரில் யுத்தங்கள் செய்யப்படுகின்றன; அத்துடன், இராணுவ நடவடிக்கைகள் எப்போதும் மனிதாபிமானக் களப்பணி என்றே அழைக்கப்படுகின்றன. செய்திகள் மற்றும் திரைப்படங்கள் ஊடாகவும் தெருக்களிலும் அன்றாடம் நமக்கு வன்முறை உட்கொள்ளத் தரப்படுகிறது.
இந்த உலகம் வன்முறையான இடம். அத்துடன், திருடும் அல்லது கடத்தும் அல்லது கொலைபுரியும் வறிய மக்களைப் பழித்துரைப்பது வெகு எளிதானது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் பழித்துரைப்பது போன்றது அது. ஆனால் இதன் வேர்களையும் குற்றத்தையும் போதைப்பொருள் பயன்பாட்டையும் உருவாக்கும் ஒழுங்குமுறைமையையும் கண்டடைவது எளிது அல்ல. இங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் ஏக்கத்தையும் கடுந்துயரையும் பருகியபடியும் புசித்தபடியும் இருக்கிறார்கள்.
பெண்டகனின் வகிபாகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
அமெரிக்காவின் பாரிய இராணுவ நிதி ஒதுக்கீடு ஒவ்வா அபத்தம் கொண்டது. யார் பகைவர்? இதுவொரு மேலைத்தேயத் திரைப்படம் போன்றது. உங்களுக்கு ஒரு கெட்ட மனிதர் தேவைப்படுகிறார். அப்படி ஒருவர் இல்லாத பட்சத்தில், பிறகு நீங்கள் புதிதாக உருவாக்குவீர்கள். அமெரிக்காவில், வில்லன்கள் தேவைப்படுகிறார்கள். இன்று காலை சதாம் ஹுசைன் என்றால் மாலை மிலோசேவிக். ஆனால் உங்களுக்கு ஒரு கெட்ட மனிதர் தேவைப்பட்டுக்கொண்டேயிருப்பார். எதிர்த்து மோதுவதற்கு ஒரு சாத்தான் இல்லாத கடவுள் எவ்வளவு பாவப்பட்டவர்!
இந்தத் தலைகீழ் உலகின் மிகப் பெரிய முரண்புதிர்களில் ஒன்று என்னவென்றால், அமைதி பேணுவதற்கு வல்லமை அளிக்கப்பட்டுள்ள ஐந்து நாடுகள்தாம் மிகப் பெரிய ஆயுத உற்பத்தியாளர்களாகவும் இருக்கின்றன. உலகில் உள்ள ஆயுதங்களில் ஏறத்தாழ அரைப் பகுதி அமெரிக்காவால் உற்பத்தி செய்யப்படுவதோடு அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகியவை இருக்கின்றன. ஐநா பாதுகாப்புப் பேரவையில் வீட்டோ உரிமையைக் கொண்டிருக்கும் நாடுகள் இவைதாம். உலகுக்கு அமைதியைக் கொண்டு வருவதற்கு ஐநா பிறப்பெடுத்தது. ஆனால் இந்தப் புனிதமான, எழிலார்ந்த, கவித்துவமான அமைதிக் களப்பணியை மேற்கொண்டிருக்கும் ஐந்து நாடுகள்தாம் போர் வணிகத்தை நடத்தும் நாடுகளாகவும் இருக்கின்றன.
உருகுவே ஐநா பொதுமன்றத்தில் இருக்கிறது. ஆனால் அது முற்றிலும் குறியீட்டுத் தன்மையானது. இந்த மன்றத்தால் முன்மொழிவுகளைச் செய்ய முடியும். ஆனால் உலகை உடமைகொண்டு கட்டுப்படுத்தும் ஐந்து நாடுகளால்தாம் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.
இருபதாம் நூற்றாண்டு யுத்தங்களின் நூற்றாண்டாக இருந்தது – 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இது மிகப் பெரிய எண்ணிக்கை – ஓர் எண்ணிறந்த நிலை. யூகோஸ்லாவியா, ஈராக், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் யுத்தங்களைப் பற்றிக் கேள்விப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விடை கிட்டாத அதே கேள்வியை நான் எப்போதும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொள்கிறேன். “யார் ஆயுதங்களை விற்கிறார்கள்? இந்த மனித அவலத்திலிருந்து ஆதாயம் ஈட்டிக்கொள்வது யார்?” இதற்கான பதிலை ஒருபோதும் ஊடகங்களில் கண்டடைந்ததில்லை. ஒரு யுத்தம் குறித்துக் கேள்விப்படும்போது நீங்கள் கேட்க வேண்டிய பிரதானமான கேள்விகள் இவைதாம். யார் ஆயுதங்களை விற்கிறார்கள்? அமைதி பேணும் பொறுப்பைக் கொண்டுள்ள அந்த ஐந்து ஆதிக்க நாடுகள்(தாம்). இது பயங்கரமானது. ஆனால் இதுதான் யதார்த்தம்.
பூர்வகுடி மக்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியது என்ன?
நிறைய இருக்கின்றன. முதலாவதாக, இயற்கையுடனான சங்கமிப்பு என்ற உறுதிப்பாடு. அல்லாத பட்சத்தில், சுற்றுச்சூழலியலை நாம் பூந்தோட்டம் வைப்பதோடு குழப்பிக்கொள்வோம். நாம் இயற்கையின் ஒரு பகுதி, எனவே இயற்கைக்கு எதிராக இழைக்கப்படும் எந்தவொரு குற்றமும் மானுடத்துக்கு எதிரான குற்றமே. ஆனால் ஒருவர் தற்கொலை புரிந்துகொள்ளவில்லை என்பதால் நாம் தற்கொலை புரிந்துகொள்ளவில்லை என்ற பார்வையை நான் கொண்டிருப்பது கிடையாது. மனித சனத்தொகையில் வெறும் 20 சதவீதம்பேர் இயற்கை வளங்களை விரயமாக்கிப் பூமியை நச்சுப்படுத்துகின்றனர். விளைவுகளை 80 சதவீதம்பேர் அனுபவிக்கின்றனர்.
அரசியல் தலைவர்கள் சிலவேளை, தமது இதயத்தில் கையை வைத்தபடி, “நாம் தற்கொலை புரிந்துகொண்டிருக்கிறோம்” என்று கூறும்போது, அவர்கள் உலகின் அதிக இலாபகரமான தொழில்துறைகள் இழைத்த குற்றங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். யார் அதிகம் சேதம் விளைவிக்கிறார்களோ அவர்களே அதிகம் பயன்பெறுகிறார்கள். அவர்கள் எல்லோரும் பசுமையாகக் காட்சியளிக்கிறார்கள். எனது இளமைக் காலத்தில், பள்ளத்தாக்குகள் பசுமையாக இருந்தன, பகடிகள் பசுமையாக இருந்தன, இளம்பெண்களைத் தொடரும் மூத்த ஆண்கள் பசுமையாக இருந்தார்கள். இப்போது ஒவ்வொருவரும் பசுமையாயிருக்கிறார்கள். உலக வங்கி பசுமையானது. அனைத்துலக நாணய நிதியம் பசுமையானது. வேதியியல் தொழில்துறை பசுமையானது. வாகன உற்பத்தித் தொழில்துறை பசுமையானது. இராணுவத் தொழில்துறைகூடப் பசுமையானது. ஒவ்வொருவரும் பசுமையாயிருக்கிறார்கள்.
இது சுவாரசியமானது. ஏனென்றால், பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா, அமெரிக்காவை ஆக்கிரமித்தபோது பெருந்தொகையான செவ்விந்தியர்கள் (பூர்வகுடி அமெரிக்கர்கள்), உருவ வழிபாடு என்ற பாவத்தை இழைத்தமைக்காகத் தண்டிக்கப்பட்டார்கள் – அல்லது உயிருடன் எரிக்கப்பட்டார்கள். அவர்கள் இயற்கையைப் போற்றி வந்தார்கள். இந்நாளில், அதிகார ஒழுங்குமுறை ஆதாயம் பெறும்பொருட்டு வெற்றிகொள்ளப்பட வேண்டிய தடைக்கல்லாக இயற்கையைப் பற்றிப் பேசுவதில்லை. இயற்கையை ஆட்கொள்ளல், இயற்கை வென்றெடுக்கப்பட வேண்டிய ஒன்று – இதுவே பழைய மொழியாகவிருந்தது. தற்போதைய புதிய மொழி இயற்கையைப் பாதுகாப்பது பற்றியது. ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும், மொழி (இதில் நிலவும்) பிளவை வெளிப்படுத்துகிறது. மனிதர்களாகிய நாமும் இயற்கையும் வேறானவர்கள்.
செவ்விந்தியப் (அமெரிக்கப் பூர்வகுடிப்) பண்பாட்டிலிருந்து நாம், ஆழ்ந்த சங்கமிப்பின் உணர்வைக் கற்றுக்கொள்ள வேண்டும். இது கடவுளின் பத்துக் கட்டளைகளில் உள்ளடக்குவதற்கான ஒன்று. இதுவே பதினோராவது கட்டளையாக இருக்கும்: “இயற்கைக்கு உரியதாயிருக்கும் நீ, அதை நேசிக்க வேண்டும்.”
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு நீங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றினீர்கள்?
சோவியத் யூனியனின் சோஷலிசம் என்று சொல்லப்படும் ஒன்றோடு என்னை அடையாளப்படுத்திக்கொண்டதாக ஒருபோதும் உணர்ந்ததில்லை. அது சோஷலிசமே அல்ல என்று எப்போதும் உணர்ந்திருந்தேன். மக்களுடன் தொடர்பற்ற ஆட்சி அதிகாரத்தின் பிரயோகமாக அது இருந்தது. அவர்கள் மக்களின் பெயரால் இயங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களை மக்கள் வெறுத்தார்கள். தங்களது உரைகளிலும் எல்லா அதிகாரபூர்வ மொழிகளிலும் அவர்கள் (மக்களைப்) போற்றிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் மக்களைச் சிறுபான்மையினராக, சிறுவர்களாக அல்லது மந்தைகளாக நடத்தினார்கள்.
எனவே சோவியத் யூனியன் வீழ்ந்தபோது, சோஷலிசம் இறந்துவிட்டதாக நான் உணரவில்லை. அவ்வளவு எளிதான விதத்தில் அது வீழ்ந்ததென்பதே, போதிய அளவு பட்டவர்த்தனமானது: அங்கு ஏறத்தாழ எந்தக் குருதியும் சிந்தப்படவில்லை, எந்தக் கண்ணீரும் இல்லை, எதுவுமில்லை. ஆனால் சோஷலிசம் இறக்கவில்லை. ஏனென்றால் அது இன்னும் பிறக்கவில்லை. மானுடம் சிலவேளைகளில் கண்டடையக்கூடியது என்று நான் நம்பும் ஒன்றாக அது இருக்கிறது.
தற்கால நிலைமை – உலகின் புறநகர்ப்பகுதிகளாக விளங்கும் வறிய நாடுகளின் பார்வைப் புள்ளியிலிருந்து நோக்கினால் – முன்னிலும் பார்க்க மேலும் மோசமாகியிருக்கிறது. ஏனென்றால் சோவியத் யூனியன் இருந்தபோது, குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட அளவு அதிகாரச் சமநிலை இருந்தது. தற்போது அந்த அதிகாரச் சமநிலை மறைந்துபோனதில், நம் வசம் ஒரு தெரிவும் இல்லை. சுயாதீன உணர்வுடன் செயலாற்றக்கூடிய சாத்தியங்கள் குறுகிவிட்டன.
நம்பிக்கையூட்டும் சமிக்ஞைகள் என்று நீங்கள் குறிகாட்டக்கூடியவை எவையும் உள்ளனவா?
அமெரிக்காவிலும் மெக்சிகோவிலும் ஏனைய நாடுகளிலும் நம்பிக்கை தரக்கூடிய சமிக்ஞைகள் ஏராளம் உள்ளன. ஏராளமான இயக்கங்கள் இருக்கின்றன. எனினும் அவற்றில் மிகப் பெரும்பாலானவை ஊடகங்களில் எதிரொலிகளைக் கொண்டிருப்பதில்லை. அவை கிட்டத்தட்ட ரகசியமாகவே இருக்கின்றன – ஏனென்றால் அவை உள்ளூர் மட்டத்திலேயே இயங்குகின்றன. சில வேளைகளில் அவை மிகவும் சிறிய அளவில் இருக்கின்றன.
ஆனால் அவர்கள் தீர்வொன்றின் உருவடிவமாக இருக்கிறார்கள் – வேறுபட்டவோர் உலகை எதிர் பார்த்தபடி, தற்போதைய உலகை விதிமுடிவாக ஏற்றுக்கொள்ளாமல் அதைச் சவாலாக எடுத்துக் கொண்டு வசிப்பவர்களாக இருக்கிறார்கள். உலகெங்கும் ஏராளமான இயக்கங்கள் மனித உரிமைகளுக்காகவும் பாலியல் பாகுபாடுகளுக்கு எதிராகவும் அநீதிக்கு எதிராகவும் சிறுவர்களின் சுரண்டலுக்கு எதிராகவும் பூமிக்குச் சேதம் விளைவிக்காத விவசாய வடிவங்களைப் பாதுகாத்து விருத்தி செய்யவும் இயங்குகின்றன.
மெக்சிகோவில் எல் பர்சோன் என்னும் பிரசித்தமான இயக்கம் உள்ளது. மெக்சிகோவுக்கு வெளியே அதை எவரும் அறிந்ததில்லை. எனினும் அது முக்கியமான இயக்கம். மெக்சிகன் வங்கிகளின் அழுத்தங்களை எதிர்க்க வேண்டிய தேவையின் நிமித்தம் தன்னியல்பாகப் பிறந்த இயக்கம் அது. தொடக்கத்தில், தீராப்பசி கொண்ட நிதிச் சக்திகளிடமிருந்து தம்மிடமிருந்தவற்றை – தமது வீடுகள், தமது வியாபாரங்கள், தமது பண்ணைகள் முதலானவற்றைக் – காத்துக்கொள்வதற்காக நூறு பேரால் தொடங்கப்பட்ட இயக்கமாக அது இருந்தது. அது வளர்ந்து வளர்ந்து தற்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ளது. எல் பர்சோன் குழுவொன்று வாஷிங்டன் சென்றிருந்தபோது அனைத்துலக நாணய நிதியத்தின் உபதலைவர் (அவர்களை) எதிர்கொண்டு வரவேற்கும் அளவுக்கு அது முக்கியமானதாக வந்துள்ளது. இந்த மனிதர் தன் மனைவியுடன்கூடப் பேச நேரம் கிட்டாத அளவு முக்கியமானவர். ஆனால் எல் பர்சோன் குழுவை அவர் வரவேற்றார்.
ஏராளமான இயக்கங்கள் நம்பிக்கைச் சாத்தியம் என்பதையும் நாளை என்பது வெறுமனே இன்று என்பதன் மற்றொரு பெயர் அல்ல என்பதையும் நமக்குச் சொல்கின்றன.
நீங்கள் ஈகைக்கும் (Charity) கூட்டொருமைப்பாட்டுக்கும் (Solidarity) இடையிலான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறீர்கள்.
நான் ஈகையில் நம்பிக்கை கொண்டதில்லை. நான் கூட்டொருமைப்பாட்டிலேயே நம்பிக்கை கொண்டுள்ளேன். ஈகை நிலைக்குத்தானது. எனவே அது தாழ்வுபடுத்துவது. அது மேலிருந்து கீழாகச் செல்கிறது. கூட்டொருமைப்பாடு கிடையானது. அது மற்றமையை மதிப்பதோடு மற்றமையிடமிருந்து கற்றுக்கொள்கிறது. மற்ற மனிதர்களிடமிருந்து நான் கற்றுக்கொள்வதற்கு ஏராளம் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். நாளும் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். நான் அறிவார்வமுடைய ஒரு மனிதன் – எப்போதும் மற்றைய மனிதர்களை, அவர்களின் குரல்களை, அவர்களின் ரகசியங்களை, அவர்களது கதைகளை, அவர்களது வண்ணங்களை விழுங்கிக்கொண்டிருக்கும் ஒருவன். நான் அவர்களது வார்த்தைகளைத் திருடிக்கொள்கிறேன். நான் கைதுசெய்யப்பட வேண்டியவனாயிருக்கலாம்.
abrigar esperanzas என்ற சொற்றொடரை விளக்குங்கள்
ஓர் அழகிய ஸ்பானிஷ் வெளிப்பாடு – abrigar esperanzas – நம்பிக்கையைப் பாதுகாத்தல். நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டியது.
அது பலவீனமானது என்ற காரணத்தினாலா?
அவள் பலவீனமானவள், சற்றே மென்மையானவள். ஆனால் அவள் உயிர்ப்புடன் இருக்கிறாள். “நான் அறவே நம்பிக்கையற்றிருக்கிறேன். நான் எதிலும் நம்பிக்கை கொள்வதில்லை” என்று கூறும் நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். ஆனால், (அப்படிக் கூறிக்கொண்டே), நீங்கள் தொடர்ந்து வாழ்கிறீர்கள். அது எப்படி? நான் எப்போதும் நம்பிக்கை இழக்க மாட்டேன் என்று நம்புகிறேன் – ஆனால் அப்படி யொரு நாள் வருமானால், நான் எதிர்பார்ப்பதற்கு எதுவுமில்லை, நம்பிக்கைகொள்வதற்கு எதுவுமில்லை, மனிதச் சூழல் முட்டாள்தனத்துக்குள்ளும் குற்றத்துக் குள்ளும் தள்ளப்படும் என்றெல்லாம் நிச்சயமானால், அதன்பின் என்னை நானே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு நேர்மையானவனாக இருப்பேன் என்று நம்புகிறேன். ஆம், மனிதச் சூழல் ஒரே சமயத்தில் பயங்கரமானதும் அற்புதமானதும் என்பதை நான் அறிவேன். நாங்கள் மிக மோசமாகச் சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்னமும் முடிக்கப்படவில்லை.