ஐயம் களைந்து அறுதி நிலை எய்துவதற்கான கருவியாக – மனத்தின் மருள் நீக்கும் மாமருந்தாக – மொழி பயன்பட முடியும் என்பதை இன்றைய நவீன உளவியலும் கண்டறிந்துள்ளது.
Cognitive Psychology, Behavioral Psychology, Psychotherapy
Neuro-Linguistic Programming (NLP) முதலானவை auto-suggestion பற்றிப்பேசுகின்றன.
நான் என்னவாக விரும்புகிறேனோ – எந்த நிலையை அடைய விரும்புகிறேனோ – அதற்கான எண்ணத்தைச் சீருற ஒழுங்கமைத்து, அவ்வாறு ஒழுங்குபட்ட எண்ணத்துக்கு மொழி வடிவம் தந்து அம்மொழித் தொடர்களைத் தொடர்ந்து மனத்துக்குப் புகட்டியபடியிருப்பது. எண்ணம் ஆழம் பெற்றால் மொழி சிறக்கும் (‘பிறந்து மொழி பயின்ற பின் எல்லாம் காதல் சிறந்து..’ என்று முதற்பாடலில் பாடுவார் அம்மை).
அவ்வாறு ஆழங்கண்ட மொழிக்குச் செயலுருப் பெறும் வலிமையுண்டு.
செயலைக்காட்டிலும் செயலுக்கு விதையாகும் மொழியையும் மொழி புலப்படுத்தி நிற்கும் எண்ணத்தையும் பேணிக் காக்க வேண்டும் என்ற அறிவு பாரத மரபில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்துச் செழித்துளது. செயல் விளைவு மட்டுமே. எண்ணமும் மொழியும் ஒழுங்கானால் செயல் தானாக நிகழும்.
மொழியுரங் கொண்டு வெளியுலகைக் கட்டமைக்கும் இந்த உத்தியை நவீன காலத்தில் நன்கு பயன்படுத்திக்கொண்ட கவிஞன் பாரதி. உயர்ச்சி நோக்கி மட்டுமே தனது சொற்கள் உருப்பெறுமாறு பார்த்துக்கொண்டவன். தான் வாழ்ந்த காலத்தில் தன்னைக் கொண்டாடியோர் எண்ணிக்கையிற் சிறிது என்றபோதிலும் தனது சிந்தனை தீர்க்கமானது – வரப்போகும் காலத்தை வலிமையுடன் ஆளப்போவது – என்பதில் அவனுக்கு ஐயமிருந்ததில்லை.
அச்ச மில்லை அமுங்குத லில்லை.
நடுங்குத லில்லை நாணுத லில்லை,
பாவ மில்லை பதுங்குத லில்லை
ஏது நேரினும் இடர்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்
என்பான் அவன்.
இறைவனை நோக்கித் திரும்பும் மனம், ஆரம்ப நிலையில் எப்படியெல்லாம் மருளக்கூடும் என்பதை முதற்சில பாடல் வழியாக உணர்த்தினார் காரைக்கால் அம்மை.
போன பாடலின் ஈற்றடியில் இறைவனை ‘என் நெஞ்சத்தான் என்பேன் யான்’ என்றார் உறுதியுடன்.
இனிவரும் பாடல்கள் பெரிதும் திடம் பெற்ற நெஞ்சின் மொழியாகத் திகழ்வன. ஈசனை அடைந்துவிட்டதாகப் புளகிப்பன.
கைம்மா உரிபோர்த்த கண்ணுதலான், வெண்ணீற்ற
அம்மானுக்கு ஆளாயினேன் – யானைத்தோல் அணிந்த நெற்றிக்கண்ணன், வெண்ணீறு பூசிக்கொண்ட அம்மான் சிவனுக்கு ஆளாகினேன்.
அக்காரணத்தால்,
யானே தவமுடையேன் – நானே தவம் உடையேன்
என் நெஞ்சே நன் நெஞ்சம் – இறைவனை உடைய என் நெஞ்சே நல்ல நெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் – இறைவன் பிறவித்தொடரை அறுப்பான் என்பதை உறுதியுறச் சிந்தை செய்தேன்
முதலிரண்டு அடியிலும் பன்முறை வரும் தேற்றேகாரம் (யானே, நெஞ்சே..) உள்ளத்தின் உறுதியைச் சொல்லுவது.
அற்புதத் திருவந்தாதி – பாடல் 7
யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் – யானேஅக்
கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன்.
ஊனை உருக்கிடும், உருக்கி நெறிப் படுத்திடும் தங்களது எழுத்துகள், கருத்துகள் ….. நிறைய எழுதுங்கள் ஐயா…
கண்கள் பனித்திட
நன்றியுடன்
கோம்ஸ் பாரதி கணபதி