அந்தம் – ஆதி: இவை ஒன்றுக்கொன்று எதிர் நிலையில் இருக்குமாப்போல் தோன்றுபவை.
மொழியென்னும் முடிவறு உணர்வுச் சுழியத்தில் இவை இரண்டும் ஒன்றே. ஒன்று இன்னொன்றின் பிறழ்தோற்றம் – தொடக்கம் போல் தோன்றுவது முடிவாக இருக்கும். முடிவெனக் கருதப்பட்டது தொடக்கமாக இருக்கும். மொழி எந்தப் பேரண்டத்தின் புலன்வழித் துய்ப்பைச் சொல்லுவதற்கான கருவியாக உள்ளதோ அவ்வண்டமும் இத்தகையதே.
ஒரு பாடலில் முறையிட்டு மருளும் மனமாக இருந்து பேசும் காரைக்கால் அம்மை, அந்தாதியின் அடுத்த பாடலில் மறுமுனை தாவி மருளறுந்த தெளிமனத்துடன் கலக்கத்துக்கு விடையும் சொல்கிறார். துன்பத்தின் தோற்றம், துன்பத்தின் இறக்கம் இரண்டும் அடுத்தடுத்து நிகழ்கின்றன.
ஐந்தாம் பாடல் முரண் நிலையிலிருந்து உரன் நிலை அடைவதற்கான பாலம்:
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் – எல்லா உயிர்களையும் தோற்றுவிப்பவன் இறைவனே
தோற்றி இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் – அப்படித் தோற்றிய பிறகு உடற்கூண்டிலிருந்து அவ்வுயிர்களை அவனே இறக்கி விடுவிப்பான்
எந்தாய் என இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம் வந்தால் இறைவனே அதுமாற்றுவான் –
எம் தந்தையே என்று அன்புகூர வேண்டித்தொழும் எங்கள் மீது வெவ்விய துன்பம் வரப்பெற்றால் அதை இறைவனே மாற்றுவான்.
அற்புத த் திருவந்தாதி – பாடல் 5
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் – இறைவனே
எந்தாய் என இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அதுமாற்று வான்.
ஈண்டு – இங்கே
இறக்கம் – மறைவு, இறக்குதல், இல்லாமற் செய்தல்