முதலில் ஐயன் அருள் கிட்டுமோ என்று ஐயுற்றுக் கலங்கினார். பிறகு அவ்வுணர்வினின்று வெளியேறி எது நடந்தாலும் அவனுக்கே ஆளாவோம் என்று உறுதிபட உரைத்தார்.
மருளும் எண்ணம் விடுத்து ஒன்றை நினைத்திருத்தலே பிரானை அடைவதற்கான வழி; அவனாகவே ஆவதற்கான வழியும் அதுவே என்று தெளிந்தார்.
பரவு நீர் இறுகித் திரண்டு படிகமாவது போல அன்பின் படி நிலைகள் கெட்டித்தன அம்மை அகத்தில்.
ஈறின்றி இணக்கமுற்ற பிறகு அடுத்து மலரும் அன்பின் வண்ணம் குறும்பும் பிணக்கமும் அன்றோ!
பெம்மானுக்கே ஆளாவோம் என்ற பேருறுதி வாய்த்தபின் பெம்மானை ஆளும் பிராட்டி மீது கண் வைக்கிறார் அம்மை.
சிவபெருமானின் தகவு எது என்று வியந்து பேசி விளக்கினார் போன பாடலில்.
இந்தப் பாடலில் ஈசனை நோக்கிக் கேட்கிறார்:
“ஐயா, உம் பெருமையை எப்படியெல்லாம் புகழ்ந்து பேசியிருக்கிறேன். ஆனால் நீர் என்ன செய்கிறீர் என்று பாரும். கொன்றை மாலை சூடுபவராகிய நீர், அகன்றிருக்கும் அந்த மார்பில் கூடவே ஒரு கொடு நாகத்தையும் அணிந்திருக்கிறீர். அந்த நெஞ்சம் இமவான் மகளாகிய உமையாள் குடியிருக்கும் இடம் அன்றோ! பெருந்தீங்கு செய்ய வல்லதாகிய அந்த நாகம் ஒரு நாள் அவள் மீது தாவி விட்டால் என் செய்வீர்? இந்தப் பழி உமக்குத் தேவையா?” என்கிறார்.
இது இகழ்வது போற் புகழும் வஞ்சப்புகழ்ச்சியாம்.
தகவுடையார் தாம் உளரேல் – பெரிய தகவு உடையவர் என்று இந்தச் சிவனார் சொல்லப்படுகிறார் (அதைச் சொன்னவரும் அம்மையே!). அப்படியெல்லாம் தகவு கொண்டவர் என்றால்
மிகவடர ஊர்ந்திடுமா நாகம் – பெருந்தீங்கு செய்யும் வண்ணம் ஊர்ந்திடும் நாகம். அடர்தல் – தீங்கிழைத்தல்
தார் அகலஞ் சாரப் புகவிடுதல் பொல்லாது கண்டீர் – கொன்றை மாலை சூடிய அகன்ற மார்பைச் சேரும் வண்ணம் (அந்நாகத்தைப்) புக விடுவது பொல்லாது; தீங்கானது கண்டீர்! தார் – மாலை, இங்கு கொன்றை மாலையைக் குறித்தது.
ஒருநாள் மலைமகளைச் சார்ந்திடுமேலே பாவந்தான் – ( நான் சொல்லியும் கேளாமல் நீர் அதனைப் புகவிட்டு) அது மட்டும் ஒரு நாள் மலைமகளாகிய பார்வதி மீது தாவி விட்டால், அது பாவம். (அப்பழி உம்மையே சாரும் என்பதாம்)
அன்பு சொரியும் ஈசன் நெஞ்சத்தை அரவம் தீண்டினால் அது அவன் அன்புக்கு ஆளானோர்க்கு அன்றோ தீங்கு என்றார்.
பாடல் 13
தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டீர்; – மிகவடர
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமே லே;பாவந் தான்.