பாரதியின் ஊழிக்கூத்து

  • 3 நிமிட வாசிப்பு \

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்

வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின்

அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக்-களித்

தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ!

அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை

நாடச் செய்தாய் என்னை

ஆசன விளிம்பில் உங்களைக் கொண்டு வந்து வைக்கின்ற ஓர் investigative crime thriller; அடுக்குகள் நிறைந்த ஆழமான கவிதை; ஞானத்தை நோக்கிய மானச யோகம் – இவை மூன்றிலும் பொதுவாகக் கிடைக்கக் கூடிய அனுபவம் என்ன?

இதோ – அறுதியான முடிவை, எல்லாவற்றுக்கும் சாரமான மூல உண்மையை அடைந்து விட்டோம் என்று மனம் நிம்மதி கொள்கிற தருணம் ஒரு மாயைக் குலைவு நிகழும்; புதிதாய் ஒரு திரை விலகும். கண்டடைந்தது இறுதி இலக்கு அல்ல என்ற பிரக்ஞை உதிக்க அதை விட ஆழமான உண்மையை நோக்கிய பயணம் தொடரும்.

பாரதியின் ‘ஊழிக்கூத்து’ அப்படியானதொரு கவிதை.

அதன் சந்த ஒழுங்குக்குள் – வார்த்தைகள் வந்து விழும் தாளக்கட்டுக்குள் – நுழைந்து விட்டாலே எல்லாவற்றையும் அடைந்து விட்டதைப்போன்ற திருப்தி முதலில் தோன்றும். அந்த ஒலிச் சன்னதத்தை மீறிய இன்னுமோர் அற்புதத்தை அடைய முடியாது என்று தோன்றும்.

ஆனால் அந்தப் பாட்டின் ஓசை வீச்சு அதன் முதற் கவர்ச்சி மட்டுமே. பொருள் தராத ஓசைகளைக் கோத்துக்கூட அந்த அனுபவத்தை எய்திவிட முடியும். அந்தத் தாளக்கட்டுக்குள் வார்த்தைகள் வழியே கவிஞன் கொண்டு வந்து வைக்கின்ற காட்சிகள் அடுத்த கட்ட மாயாஜாலம். ஒருபோது ஒரு பொருளையும் இன்னொரு பொழுதில் சிந்திக்க வேறொரு விந்தையையும் காட்டுகின்ற மந்திரக் கற்கள், கவிதையில் கையாளப்படுகின்ற சொற்கள்.

உதாரணமாக இந்த வரி: ‘பாட்டின் அடிபடு பொருள் உன் அடிபடும் ஒலியிற் கூட’

அண்டங்கள் சிதறும் நேரம் எழுகிற இடியோசை அவள் ஊழித் தாண்டவத்துக்கான தாளம் (வெடிபடும் அண்டத்து இடி பல தாளம் போட). குருதி வெறியோடு களிகொண்டு பெருவெளி அலைகின்ற பூதங்கள் தாண்டவத்துக்குப் பாட்டிசைக்கின்றன (பெரும் வெளியில் இரத்தக் களியொடு பூதம் பாட).

அந்தப் பாட்டின் அடிபடு பொருள் பற்றி அடுத்ததாக வருகிறது – முதலாவது சிந்தனையில் அடி என்பது பாட்டு வரி என்று பொருள் தருகிறது. கொஞ்சம் லயித்தால், பாட்டின் ஆழத்தில் இருக்கும் அர்த்தம் – அடியிற் படும் பொருள் – என்றும் புலனாகிறது; அது இசைவு கொள்வது எதனோடு? பாட்டின் அடிபடும் பொருள் இசைவு கொள்வது எதனோடு? பேய்த்தாண்டவமாடுகின்ற தாயின் பாதம் – திருவடி – எழுப்புகின்ற ஒலியோடு..

பாட்டின் அடிபடு பொருள் உன் அடிபடும் ஒலியிற் கூட..

(25 ஏப்ரல் 2020)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×