பொறுப்புத் துறப்பு: ஆங்கில வார்த்தைகளை அள்ளித் தூவித் திரைபாடல்கள் எழுதுவதை வரவேற்பவன் அல்லன் நான். என்றாலும் அப்படியான பாடல்களே அளவு கணக்கற்று வெளியாகின்றன – அவைதாம் இளையோரை ஈர்க்கின்றன என்ற வாதத்தோடு. சரி, அப்படி ஈர்க்கப்படுபவர்களிடத்தில் அஃதை வைத்தே தமிழ் பேசலாம் என்ற நினைப்பில் முகநூலில் எழுதிய பதிவு இது:
சிலம்பரசன் ‘புல்லட்டு சாங் (bullet song)’ பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பாடியிருக்கிறார். அது பற்றி வேடிக்கையான ஓர் அறிவிப்புக் காணொளியையும் வெளியிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர் (பதிவின் முடிவில் காண்க). இன்று காலை வலையுலாவலின் போது கண்ணில் பட்டது.
அண்மையில் குற்றியல் உகரம் பற்றி ஒரு பதிவெழுதியிருந்தேன். தமிழ் நாவுக்குக் குற்றியலுகரம் எவ்வளவு இயல்பானது என்பதை இந்தப் பாட்டின் தமிழ் வடிவத்தையும் தெலுங்கு வடிவத்தையும் கேட்டு ஒப்பிட்டு உணர்ந்து கொள்ளலாம்.
தமிழ்ச்சொற்கள் க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய வல்லின மெய்யொலிகளில் முடிவதில்லை. அப்படி முடிகின்ற பிறமொழிச் சொல் நுழையப் பார்த்தால் ஈற்றில் உகர ஒலி சேர்த்துத் தமிழ் உள்வாங்கிக்கொள்ளும்.
வட நாட்டவரின் ‘தீபக்’ தமிழுக்கு தீபக்கு தான்.
அதேபோல ஆங்கிலத்தின் ‘புல்லட்’ இயல்பான தமிழுக்கு ‘புல்லட்டு’ தான்.
ஆனால் அப்படி(த் தனிக்குறில் தவிர்ந்த ஏனைய எழுத்துகளை அடுத்து) வல்லின மெய்யில் உகரம் ஏறி நின்று ஒலிக்கும்போது முற்றியலுகரமாக ஒலிப்பதில்லை. அஃதாவது அங்கு வரும் ‘உ’ ஒலி முழுமையாக ஒலிக்காது. தனக்கு வழமையாக விதிக்கப்பட்ட கால அளவில் இருந்து குறைந்தே ஒலிக்கும். இஃதே குற்றியலுகரம்.
தெலுங்கில் முற்றியலுகரமாகத்தான் ஒலிக்கிறார்கள். சிலம்பரசன் தமிழில் பாடும்போது குற்றியலுகரமாகவும் தெலுங்கில் பாடும்போது புல்லட்டூ என்பது போல முற்றியலுகரமாகவும் உச்சரிக்கிறார். இதை கீழுள்ள காணொளியில் சொல்லிச் சிலாகிக்கவும் செய்கிறார்.
இரண்டு பாட்டுகளையும் கேட்டுவிட்டுப் குற்றியலுகரம் பற்றிய விளக்கப்பதிவைப் படித்துப் பாருங்கள், புரியும்