மொழிக்கல்வி: இன்றைய தேவை

வைதீக மேலாதிக்க மரபு போலப் புலவர்/பண்டிதர் மேலாதிக்க மரபு என்ற ஒன்றும் நம்மிடையே உண்டு.

ஞானத்துக்கான முற்றதிகாரம் கொண்டவன் நானே – கடவுளை அடைவதற்கும் கருவறைக்குள் நுழைவதற்குமான உரித்து எனக்கு மட்டுமே உளது என்று எப்படி வைதீக மரபின் பூசாரி வாயிலை அடைத்துக்கொண்டு நிற்பாரோ, அப்படியே ‘மொழி நுணுக்கங்கள் பற்றிச் சிந்திக்கவும் பேசவும் உனக்கென்ன அருகதை இருக்கிறது?’ என்று கேட்டபடி தமிழ் மரபின் இலக்கணப் புலவரும் உங்களிடத்துத் தாழ்வுணர்ச்சியை உண்டு பண்ணவும் ஏளனம் செய்யவும் முனைந்து கொண்டே இருப்பார்.

நவீன காலத்தில் காலனித்துவ மேற்குலக நாடுகள் தமது “தொண்டு நிறுவனங்கள்” வாயிலாக மூன்றாம் உலக நாட்டுக் குடிமக்களிடம் ஏற்படுத்த விழையும் தாழ்வுணர்ச்சியும் இத்தகையதுதான். தொண்டு செய்து தாழ்வுற்ற நிலையில் உள்ளவர்களை மீட்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம் கிடையாது. மாறாகத் தாம் “தொண்டு” செய்துகொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே மக்களைத் தாழ் நிலையில் வைத்திருக்க உழைப்பவர்கள் இவர்கள்.

குற்றஞ் சொல்லித் தாம் பெயர் வாங்கி எளியோரைத் தாழ்வுச்சிக்கலில் சிக்க வைக்கும் புலவர்களை விடக் குற்றங் களைந்து மற்றவர்களை ஏற்றி விடும் ஆசு இரியர்களே இப்போதைய தேவை.

‘ஞானத்தை நீயாகக் கண்டடையலாம்’ என்று முழங்கிய புத்தனைப் போலவும் தமிழ் மரபின் சித்தர்களைப் போலவும் வெளிச்சம் தரவல்லவர்களே மொழிக்கும் தேவை. ‘மொழி என்பது உன்னோடு இரண்டறக் கலந்திருப்பது; அதன் நுண்மைகள் உனக்குள்ளேதாம் உள’ என்ற உண்மையை ஒவ்வொருவரிடத்தும் உரக்கக் கூறக்கூடிய மொழிவாணர்களே தேவை.

1 thought on “மொழிக்கல்வி: இன்றைய தேவை”

  1. நல்ல பதிவு. தங்கள் கம்பீரக் குரலில் (ஏற்கனவே பலமுறை ஐபிசி தமிழில் கேட்டுள்ளேன்) உண்மையும் உரிமையும் ஓங்கி ஒலிக்கின்றன.

Leave a Reply to Tholkappiyan Vembian Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

×