வள்ளுவர், வைரமுத்து, வாலி, ரஹ்மான், ராஜா

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை தமிழுக்கு என்ன தந்தது?

எனக்கு இசை நுணுக்கங்கள் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் இசை என்ன செய்யக் கூடுமென்று உணர்ந்திருக்கிறேன்.

‘அலை பாயுதே’ படத்தில் வரும் ‘ஸ்நேகிதனே’ பாடலை எத்தனையோ தடவை கேட்டிருக்கிறேன். அதன் ஆரம்பத்தில் வரும் ‘கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் கருவம் அழிந்ததடி’ என்ற வரி தமிழின் மிகப்பழம்பெரும் பா வடிவமான குறள் வெண்பாவின் இலக்கண அமைப்புக்குள் அடங்கக் கூடியதாய் இருப்பதை நேற்றுத்தான் எதேச்சையாகக் கவனித்தேன்.

கவிஞர் வைரமுத்து அதை வெண்பாவாக அமைக்க எண்ணியே எழுதினாரா, அல்லது இலாவகமாக எழுதிக் கொண்டுபோன போக்கில் அப்படி வந்து விழுந்ததா என்பதை ஊகிப்பது கடினம். வெண்டளை விரவிய சிந்துப்பாடலாக எழுதிக்கொண்டு போனபோது இப்படி வரிகள் வந்து விழுந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

வைரமுத்து வெண்பா வடிவத்தில் மூழ்கித் திளைத்தவர் என்பதற்கு அவரது ‘பழைய பனை ஓலைகள்’ தொகுப்பு சான்று.

ஆனால் ரஹ்மான் இசைத்ததைப் போல ஒரு வெண்பாவை வேறு எவரும் இசைத்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. தமிழ்ச்செவிக்கு அந்த இசை புதிது. நாம் முன்னம் மாந்தியிராத மலைத்தேன்.

இனி, ஸ்நேகிதனே பாட்டில் வரும்

‘கூந்தல் நெளிவில்எழில் கோலச் சரிவில்

கருவம் அழிந்த தடி’

என்பதன் மெட்டில்

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு’

என்று பாடிப் பாருங்கள் 😍

(உலகு என்பதில் குற்றியலுகரமாக வரும் ஈற்றசைக்கு இசைமெட்டு இடம் தராது. வள்ளுவரது குறள் வைரமுத்துவினதில் இருந்து சற்றே மாறுபட்ட சீர்ப்பிரிப்பு / அமைப்புக் கொண்டது:

கூந்தல் நெளிவில்எழில் கோலச் சரிவில் – தேமா கருவிளங்காய் தேமா புளிமா

கருவம் அழிந்த தடி – புளிமா புளிமா மலர்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி – புளிமா புளிமா புளிமாங்காய் தேமா

பகவன் முதற்றே உலகு – புளிமா புளிமா பிறப்பு )

ரஹ்மானின் இசையில் கவிஞர் வைரமுத்துவின் இப்படியான வரிகள் பிணைவது இரவும் பகலும் கலக்கும் மைம்மல் பொழுதை ஒத்ததொரு தருணம்; தமிழின் மரபும் இசையில் புதிதும் கலக்கும் அற்புதச் சந்தி. நறுமுகையே இன்னொரு நல்ல உதாரணம்.

(18 ஜூன் 2019 முக நூலில் எழுதியது)

இன்னொரு பதிவு:

‘பேரு வச்சாலும் வைக்காம போனாலும்…’ பாட்டின் மீள்கலவை வடிவம் (remix) அண்மையில் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜா அவர்கள் வெளியிட்ட காணொளியில் ஒரு தகவல் கூறியிருந்தார். பாட்டின் மெட்டைக் கேட்டுவிட்டு இந்தச் சந்தத்துக்கு ஏற்கனவே வள்ளுவர் வரிகள் எழுதி விட்டாரே என்று சிலாகித்துச் சொன்னாராம் கவிஞர் வாலி.

வச்சாலும் வைக்காம போனாலும் – துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி (வான் சிறப்பு): இரண்டும் ஒரே சந்தக் கட்டமைப்பு. இப்படி மேலும் பல சுவாரசியமான எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக பாரதியாரின் இந்த வரிகளைச் சொல்லிப் பாருங்கள்:

அச்ச மில்லை அச்ச மில்லை

அச்ச மென்ப தில்லையே

எவ்வளவு ஆக்ரோஷமான, உக்கிரமான வரிகள்.இப்போது எஸ்பிபி பாடிய புகழ் பெற்ற இந்தப் பாடலைப் பாடிப் பாருங்கள்:

மண்ணில் இந்த காத லன்றி

யாரும் வாழ்தல் கூடுமோ

காற்று வருடுவது போன்ற உணர்வைத் தரும் வரிகள்.இரண்டுக்கும் கட்டமைப்பு ஒன்றுதான் (யாப்பின் சீர் வாய்ப்பாட்டைப் பயன்படுத்திச் சொல்வதென்றால், தேமா, தேமா, தேமா, தேமா// தேமா தேமா கூவிளம்// என்ற வாய்ப்பாடு. இருந்தாலும் இசைமை வேறு.

(01 அக்டோபர் 2021 முக நூலில் எழுதியது)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×