வினை, பெயர், வேற்றுமை – சிறு விளக்கம்

புலனக்குழுமம் ஒன்றில் ஒருவர் கேட்ட கேள்விக்கு விடையாக விரைந்தெழுதிய விளக்கக் குறிப்பு –

கேள்வி:

வெற்றி என்பது எவ்வகைச்சொல்?

பதில்:

வெற்றி என்பது பெயர்ச்சொல். ‘வெல்’ என்ற வினையை அடியாகக் கொண்டு பிறப்பது. ஆதலால் இது தொழிற்பெயர்.

இச்சொல்லினைக் காட்டாகக்கொண்டு பெயர்ச்சொல், வினைச்சொல் முதலானவற்றை விளங்கிக்கொள்ள முயல்வோம்.

வெற்றி’யை‘ அடைய முடியும்.

இங்கே வெற்றி என்ற பெயர்ச்சொல்லின் இறுதியில் ‘‘ என்ற உருபு ஒட்டி நின்று அப்பெயரின் பொருளை வேறுபடுத்துகின்றது.

அதன் காரணத்தால் ‘ஐ’ வேற்றுமை உருபு என்று அழைக்கப்படுகிறது. அதனை வேற்றுமைச்சொல் எனலும் தகும்.

‘ஐ’உருபின் பொருள்கள் ‘செயப்படுபொருளில்’ அடங்கும்:

ஆக்கல் (வெற்றியை ஆக்க முடியும்), அழித்தல் (வெற்றியை அழிக்க முடியும்), அடைதல் (வெற்றியை அடைய முடியும்), நீத்தல் (வெற்றியை நீங்க முடியும்), ஒத்தல் (வெற்றியை ஒத்திருக்க முடியும்), கொள்ளல் (வெற்றியைக் கொண்டிருக்க முடியும்) முதலான பல பொருள்களை உருபு உணர்த்தும்.

வெற்றி என்ற பெயர்ச்சொல் பிற வேற்றுமை உருபுகளை ஏற்று வேறு பொருள்களையும் உணர்த்தும்.

வெற்றி’யால்‘ மகிழ முடியும் (‘ஆல்‘ உருபு). இங்கே வெற்றி காரணப்பொருளாகிறது. (மகிழ்ச்சிக்கான காரணம்).

வெற்றிக்’கு‘ உழைக்க முடியும் (‘கு‘ உருபு). வெற்றியின் பொருட்டு உழைத்தலைக் குறிக்கிறது.

வெற்றி’யின்‘ மிக்கது இவ்வுலகில் வேறொன்றில்லை. (‘இன்‘ உருபு). ஒப்புப் பொருளில் வந்தது.

வேறு வேற்றுமை உருபுகளை ஏற்றலும் உண்டு.

—-

வினைச்சொற்கள் வேற்றுமை உருபு ஏலா!

—-

பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையிலான முதன்மையான வேறுபாடு அதுவே.

‘வெல்’ என்னும் வினையுடன் ஐ, ஆல், கு, இன், அது, கண் முதலான வேற்றுமை உருபுகளைச் சேர்த்துப்பாருங்கள். பொருள் தராது. (வினையாலணையும் பெயர் நீங்கலாக)

—-

பல வேளைகளில் ஒரு தொடரில் வேற்றுமை உருபு தோன்ற வேண்டிய இடத்தில் தோன்றாதிருந்து அதே பொருளை உணர்த்துவதுண்டு.

‘வெற்றி கொண்டான்’ என்பது ‘வெற்றியைக் கொண்டான்’ என்ற அதே பொருளை உணர்த்துகிறது (கொள்ளல்). அங்கே ஐயுருபு தொக்கி நிற்கிறது. (‘கடாரம் கொண்டான்’ என்று மதுராந்தகனை அழைக்கிறோம்).

‘வெற்றிச்செல்வி’ – வெற்றியை உடைய செல்வி. வெற்றிக்கு உரிய செல்வி.

இரண்டு சொற்கள் சேரும்போது வலி மிகுமா இல்லையா என்பது அப்புணர்ச்சியில் நிலைமொழியும் வருமொழியும் எவ்வகைச் சொற்களாக உள்ளன என்பதைப் பொறுத்து அமையும்.


இந்தப் பதிவை உங்கள் நண்பர் ஐவருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நல்ல தமிழ் பரவ நாளும் வகை செய்வீர்!


‘மதுரமொழி’ வலைப்பதிவுகளைத் தொடர்ந்து பெற: எமது புலனக்குழுமத்தில் (WhatsApp) இணைந்து கொள்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×