கூண்டுக்கிளி

வெண்பா: கூண்டில் உழலும் கிள்ளை, வேண்டும் இடமெலாம் திரியும் காக்கை

காகாவென் றேகரையும் காக்கைக்குத் துன்பில்லை
வாகாஞ்சொல் பேசும் மடக்கிளியோ – நாகாவாக்
குற்றத்தால் கூண்டடையும்! கூர்மதியால் ஓர்ந்தாய்ந்தே
உற்றுத்தேர் இஃதே உலகு

– மதுரன் தமிழவேள்

கவிஞர் சூழ் புலனக் குழுமமொன்றில் நாசாவில் பணிபுரியும் தமிழ்வல்ல நல்லறிஞர் முனைவர் நா. கணேசனார் மேலேயுள்ள படம் தந்து வெண்பா எழுத வேண்டினார். அப்போது யாத்த வெண்பா இது.

முனைவர் மயில்சாமி மோகனசுந்தரம் அவர்கள் எழுதிய வெண்பாவுக்கும் (கீழே உள்ளது) என்னதுக்குமான மறுமொழியாக “இந்தியாவில் நிகழ்ந்த மொழியியற் புரட்சியின் சூக்குமம் சொல்லியுள்ளீர்கள். இரு செம்மொழி இலக்கியங்களும் பேசுவது” என்றும் அவர் குறிப்பிட்டார். முழுவதுமாகப் புரியவில்லை.

தூண்டப்பெறவும் துலங்கப்பெறவும் வழியின்றி மாண்ட மொழி பலவிருக்க, யாண்டும் உயிர்ப்புடனும் வனப்புடனும் இருக்கும் தமிழின் தற்கால நிலைக்கான உருவகம் போலும் கூண்டிலுற்ற இக்கிள்ளை.

விளக்கக்குறிப்பு:

மடக்கிளி:

அழகும் மென்மையும் கொண்டிருப்பதால் அது மடக்கிளி –

அழகுமொழி பேசி கூண்டுக்குள் அடைபடப் போவதை அறியாதிருப்பதாலும் அது மடக்கிளி!

கா, கா என்று கரைவதை ‘என்னைக் காப்பாற்று’ என்று மதிக்கூர்மையோடு காக்கை கரைவதாகத் தற்குறிப்பேற்றியும் கூறலாம்.


மேலுள்ள வெண்பாவைப் படித்த பிறகு புலன உரையாடலில் முனைவர் நா கணேசன் அவர்கள் குறிப்பிட்டது:

கிளி பற்றிய ஔவை வெண்பா நினைவுக்கு வருகிறது.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
.

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

இக்குறளுக்கு உறவான வெண்பா.

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி.

பேசக் கற்றுக்கொண்ட கிளி தொடர்ந்து பேசிக்கொண்டும், பிதற்றிக்கொண்டும் இருக்கும். ஆனால் பூனையைக் கண்டவுடன் பேசுவதை மறந்து அலற ஆரம்பித்துவிடும். பூனைகளிடம் இருந்து காக்கவும், கூண்டுக் கிளியாக மாற்றுவர்.

(ஈற்றில் காக பிக நியாயம் பற்றிய நா.க அவர்களது குறிப்பைக் காண்க)


முனைவர் மயில்சாமி மோகனசுந்தரம் அவர்களது வெண்பா:

காக்கா எனவேதான் கர்ண கடூரமாய்

தாக்கும் குரலினிற் சத்தமிடேன் – வாக்கது

நோக்கியே மூக்கதில் நானும் உரைத்ததனால்

போக்குகிறேன் கூண்டிற் பொழுது.


காக பிக நியாயம் – முனைவர் நா கணேசன்

காக சுக நியாயம் என கோதைமோகன், மதுரன் வெண்பாக்கள் அமைகின்றன. Cf. காக பிக நியாயம்.

இந்தியாவிலே நெடுங்காலமாக காக பிக நியாயம் உண்டு. பிகம் = குயில்.
பிகம் என்ற சொல்லின் ஆராய்ச்சி: Sanskrit word, pika “Asian Koel” – its etymology

காக பிக நியாயம்:

kākaḥ kr̥ṣṇaḥ pikaḥ kr̥ṣṇaḥ kō bhēda pikakākayōḥ
vasanta samayē prāptē kākaḥ kākaḥ pikaḥ pikaḥ

பொருள்: காகமும் குயிலும் பார்ப்பதற்கு கருப்பாகவே இருக்கும். அவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? வசந்த காலம் வந்தால் காக்கைக்கும் குயிலுக்கும் உள்ள வேறுபாடு புரிந்து போகும்.

காக பிக  நியாயம்:

வெண்பா

காகம் குயில்இரண்டும் கார்நிறத்தால் தம்முள்ஒப்பே
ஆகும் எனினும் அணிவசந்தம் மோகஞ்செய்
வேகமுறும் காலத்து வேறுவே றாம்அவைதாம்
காகம்கா கம்பிகம்பி கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×