அஞ்சலி (13), சித்தார்த் (9) இருவரும் போன ஆண்டு கோவையில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து சென்ற குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள். ஆங்கில வழியில் கல்வி கற்பவர்கள். ஆங்கிலத்தில் கல்வி கற்றாலும் குழந்தைகள் தாய்மொழியை மறந்துவிடக் கூடாது என்பது தமிழார்வம் மிக்க அவர்தம் தந்தையாரது பெருவிருப்பு.
பேரா மயில்சாமி மோகனசுந்தரம் ஐயா அவர்கள் அறிமுகப்படுத்தியதன் பேரில் குழந்தைகள் இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களாக இணையம் வழியாகத் தமிழ் சொல்லித் தருகிறேன். எழுத்திலக்கண அடிப்படைகளோடு சேர்த்து யாப்பிலக்கணமும் கற்பித்து வருகிறேன்.
வளர்ந்தவர்களே உள்வாங்கத் திணறும் யாப்பிலக்கணத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவது மலைப்பான வேலை என்று பலர் நினைக்கக்கூடும். ஆனால் உரிய வகையில் சொல்லித் தந்தால் எவரும் உள்வாங்கிக்கொள்வர் என்பதே எனது அனுபவமாய் இருக்கிறது. அத்தோடு வளர்ந்தவர்களிடம் இருக்கும் மனக்குழப்பமும் தடைகளும் கவனச்சிதறலும் குழந்தைகளிடம் இல்லை. யாப்பைக் கற்பதற்கு அக ஒருமைப்பாடு இன்றியமையாதது. சரியான முறையில் சொல்லித்தந்தால், வளமான மண்ணில் ஊன்றப்பட்ட விதை போல அக்கல்வி பயன் தரும்.
எழுத்தைப் பற்றி நன்கு விளங்கிக்கொண்டு பயிற்சி செய்த பிற்பாடு, அசை பற்றிக் கடந்த இரண்டு வகுப்புகளில் பாடம் கேட்டு வந்தார்கள் இருவரும்.
ஈரசைச் சொற்களைக் கண்டறிந்து எழுத வேண்டும் என்பதும் ஆத்திசூடி அடிகளை அசை பிரிக்க வேண்டும் என்பதும் கடந்த வகுப்பில் இருவருக்கும் தரப்பட்ட வீட்டுப்பாடம்.
பெரும்பிழைகள் இன்றி – அசை பற்றிய கருத்துருவத்தை விளங்கிக்கொண்டு – தரப்பட்ட பயிற்சிகளை இருவரும் செய்திருப்பதைக் கண்டபோது மன நிறைவாக இருந்தது. தம்மிடமுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் இருந்து ஈரசைச் சொற்களைத் தேடி எழுதியிருந்தார்கள். அவர்கள் இழைத்திருக்கும் சிறுபிழைகள் திருத்தப்படக்கூடியனவே.
அசைப்பயிற்சிக்காக அவர்கள் எழுதிய சொற்களை அடிப்படையாக வைத்து, இன்றைய வகுப்பில் அறுசீர் விருத்த அடிகள் இரண்டு எழுதிப் பார்த்தோம். சொற்களை இணைத்ததில் பெரும்பங்கு அவர்களுடையது (குறிப்பாக, முதல் ஐந்து சீர்களும் முழுவதுமாக அவர்களுடையவை). பயிற்சி நிறைவில் பின்வரும் பாடல் கிடைத்தது (தாழிசை எனலாம்):
மாளிகை இழந்த சோழன்
மாதமி ரண்டு தீர
ஆளவே வந்தான் மீண்டும்
அரசருள் ஒப்பி லாதான்
ஆர்வத்தோடு கற்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் அவர்களாகவே விருத்தம் முதலான எளிமையான வடிவங்களில் பாப்புனையுமாறு பயிற்றுவித்து விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இப்படியான இளையோர் ஒரு நூறு பேரையாவது உருவாக்கி விட வேண்டும் என்பது கனவு. நப்பாசையாக இருக்கலாம். பலித்தால் தமிழுக்கு நன்மை.
– மதுரன் தமிழவேள்