எனது தாய்மாமனும் கம்யூனிச இயக்கச் செயற்பாட்டாளராக இருந்தவரும் சிந்தனையாளருமான குணேந்திரதாசன் கந்தையா (தொல்புரம், கந்தர்மடம், இடைக்காடு) காலமானார். இறந்தபோது அவருக்கு 77 வயது.
அரசியலில் முனைப்புடன் ஈடுபட்ட அக்காலத்தைய இளைஞர்களில் பலரைப் போலவே தனது வாழ்வின் இளமைக்காலத்தைச் சமூகப்பணிக்காகத் தந்திருந்தவர் சின்ன மாமா.
சோஷலிசக் கற்கைக்காகக் கட்சியால் தெரிவு செய்யப்பட்டு எழுபதுகளில் (24ம் அகவையில்) சோவியத் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டவர். மாஸ்கோ, லெனின் கிராட், ஜார்ஜியாவில் உள்ள காக்ரா, சைபீரியாவில் உள்ள நொவோசிபேர்ஸ்க் என்று பல இடங்களுக்கும் சென்று உலக அனுபவம் பெற்றவர்.
இனம், மதம், மொழி, சாதி முதலான அடையாளங்களைக் கடந்து மானுடம் முழுமையும் ஒரு நாள் ஒன்றுபட்டுப் புத்துலகம் படைக்கும் என்ற மகத்தான கனவொன்றைச் சுமந்து திரிந்த தலைமுறையைச் சேர்ந்தவர்.
பொறுப்பும் சிரத்தையும் நிதானமும் மிக்க மாமாவாக எனது சிறு வயது நினைவுகளில் பதிந்து போனவர்.
கொழும்பு சண்டே ஆப்சேவர் இதழில் 2005ம் ஆண்டு நான் இணைந்தபோது அப்போது அதன் தலைமை ஆசிரியராக இருந்த திரு ஜயதிலக டீ சில்வா, எனது சின்னமாமா, பெரியமாமா இருவரதும் கட்சித் தோழர்.
‘குணே’ என்று வாஞ்சையுடன் சின்னமாமாவைப் பற்றி வினவி உரையாடும்போதுதான், அவர் மீதும் அவரது பணி மீதும் சக செயற்பாட்டாளர்கள் வைத்திருந்த மதிப்பை உணர்ந்தேன்.
பூபாலசிங்கம் புத்தக நிலைய உரிமையாளர் ஸ்ரீதரசிங் அவர்கள் எப்போதும் எனது மாமாமாரின் அரசியல் செயற்பாடுகளைப் பற்றி வியந்து பேசுவார்.
அவர்களால் உந்தப்பட்டுத்தான் தீரம் மிக்க பெண்மணியும் பள்ளி ஆசிரியையுமான எனது பாட்டி திருமதி தங்கரத்தினம் கந்தையா இடதுசாரி அரசியலில் முனைப்புடன் செயற்பட்டார். அது அக்காலத்தில் அரியதொரு நிகழ்வு.
சோவியத் யூனியன் சரிந்து இடதுசாரிக் கட்சி அரசியல் நீர்த்துப்போன காலங்களிலும் அவர் சோர்வுற்றிருக்கவில்லை. தொண்டு நிறுவனங்கள் வழியாக எண்ணற்ற பணிகளை முன்னெடுத்தார். இன்றும் அவரை அன்புடன் நினைவுகூரும் – அவரது பணிகளால் பலனடைந்த – பலபேர் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ளனர்.
சின்னமாமா தனக்கென்று சொத்து, செல்வங்களைச் சேர்த்துக்கொள்வதில் அக்கறை காட்டியவர் அல்லர். நாற்பது வயதுக்குப் பிறகே தனக்கென்று ஒரு குடும்ப வாழ்வைச் சரிவர அமைத்துக்கொண்டார்.
பிறந்த பெண்பிள்ளைகள் இருவருக்கும் சரிவரக் கல்வி புகட்டினார். எனது அம்மா உள்ளிட்ட தன் உடன் பிறந்தோருக்கு தன்னால் இயன்ற எல்லா வழிகளிலும் உதவினார்.
அவருடன் எப்போதும் எதையும் உரையாடலாம் என்ற நிலை இருந்தது. மாற்றுக் கருத்தைச் சொன்னாலும் பொறுமையுடன் கேட்டு பதில் அளிக்கும் பண்பு இருந்தது.
அரசியல், தத்துவம் என்று எமது உரையாடல்கள் நீண்டிருந்திருக்கின்றன. இறுதிவரை கூர்மையாகச் சிந்தித்துக்கொண்டிருந்த மனிதராக இருந்தார்.
மார்க்சையும் மாணிக்கவாசகரையும் ஒரே உரையில் சுட்டிப்பேசுவார். கோட்பாட்டுத் தெளிவு, கொள்கைப்பற்று, களப்பணி அனுபவம் அனைத்தும் அவரிடம் இருந்தன – இத்தனை இருந்தும் தன்னைப் பற்றிப் பெரிதாகப் பேசும் பழக்கம் அவருக்கு இருக்கவில்லை. பாராட்டிச் சொன்னாலும் கூச்சப்படுவது அவரது பழக்கமாக இருந்தது.
ஒரு மனிதனின் காலக் கடப்புக்குள் எப்போதும் சொல்லி முடிக்க முடியாத ஒரு வரலாறும் கரைந்து போகிறது.
மாறும் நியதியில் சுழல்வது ஞாலம்
மாற்றம் உணர்வது மறைதரும் ஞானம்
காலம் முழுதையும் கைகளில் வாரும்
காற்று நிலம்புனல் வான் நெருப்பாகும்
அமைதியாக உறங்குங்கள் மாமா!