பாகாப்போழ்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 3)


இரண்டாம் பாடல் படிக்க: இங்கே செல்க


சிவனவன் சடைமுடி கொடிபோலத் திரண்டிருக்கிறது.

அதன் மீதிருக்கும் பிறை நிலவு ஒரு கீறல் துண்டமாகத் தெரிகிறது.

பிறையாகச் சிறுத்திருக்கும் நிலவு பிறகொரு நாள் வளர்வதையும் கண்டிருக்கிறோம்.

சிவன் சடைமுடியில் இருக்கும் அப்பிறையைப் பகாப்போழ் என்கிறார் காரைக்கால் அம்மை..

பகா – பகுக்கப்படாத

போழ் – துண்டம்

இப்போது தெரியும் நிலாக்கீறல் – பிறை நிலவு – முழுமதியில் இருந்து பகுத்துப் பிரிக்கப்பட்டுவிட்ட துண்டமா?

இல்லை. முழுமதி ஒளிபொருதச் சுழலும் கோளம். இப்போது தெரியும் அதனொரு பகுதியான பிறைக்கீறலும் முழுமையில் இருந்து பிரிக்கப்படாத ஒரு துண்டமே. எம்மால் காண இயல்வது அதனொரு பகுதியை மட்டுமே என்றாலும் முழுமதி இருந்து கொண்டேதான் இருக்கிறது.

இறைவன் உறுதுணையாய் உள்ளான்; இடர் களைவான் என்ற உண்மை உள்ளத்துக்கு முழுமையாகப் புலப்படாமல் குழம்பினாலும், அது இன்மையைக் குறிக்காது. புலப்படவில்லை என்பது இன்மைக்கான சான்று அன்று. எனது தவிப்பும் அதனின்று நீங்கிப் பெறும் தெளிவும் முழுமையான பேருணர்விற் கலந்தனவே. அவையும் பகாப்போழே!

குழப்பத்தில் இருந்து முற்றொருமை கொண்ட தெளிவு நோக்கி மனம் நகர்கிறது.

பகாப்போழ் அந்த ஒருமைப்பாட்டின் குறியீடு.

இடர்களையார் எனினும் இரங்கார் எனினும் அவரிடத்து வைத்த அன்பு குறையாது என்று ஐயுணர்வில் தொடங்கி மெய்யுணர்வில் இரண்டாம் பாடலை முடித்தார். புதுக்கப்பெற்ற உரத்துடன் தனது உறுதியை மூன்றாம் பாடலில் மீளவும் அழுத்தி உரைக்கிறார் அம்மை.

கொடிச்சடை மேல் பிறைசூடிய பெருமானுக்கு அல்லால் வேறு ஒருவருக்கு நாம் ஒரு நாளும் ஆளாக மாட்டோம்:

மற்றொருவர்க்கு ஆகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.

ஏழு பிறப்பும் அவர்க்கே ஆளாவோம்; அன்பாவோம்.

அற்புதத் திருவந்தாதி – பாடல் 3:

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்

அவர்க்கேநாம் அன்பாவ தன்றிப் – பவர்ச்சடைமேற்

பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்(கு)

ஆகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.

பகாப்போழ் – பகுதி முதல் நீண்டு செய்யுளில் பாகாப்போழ் ஆனது. சொல்லின் முதல் (பகுதி) இவ்வாறு நீள்வதை ‘ஆதி நீடல்’ என்பர் இலக்கணிகள்.

பவர்ச்சடை: பவர் – கொடி

ஆகாப்போம் – ஆக மாட்டோம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *