இலண்டன் கம்பன் விழா: உலகம் யாவையும் உள்ளீர்க்கும் கம்பன்

ஜுலை 13, 14ம் தேதிகளில் அல்பேர்ட்டன் பள்ளி வளாகத்தில் அரங்கம் கொள்ளா மக்கள் வெள்ளத்தோடு இலண்டன் கம்பன் விழா நடைபெற்று முடிந்தது. இரு நாளும் தமிழின் பேரொளி தழைத்துத் துலங்கியது. அறிவு அறக்கட்டளை நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.

ஐயா கம்பவாரிதி இ ஜெயராஜ் அவர்களால் இலண்டன் கம்பன் கழகமும் தொடக்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து, புகழ்பெற்ற பட்டிமண்டபப் பேச்சாளர் பாரதி பாஸ்கர், இயக்குநரும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார், இலங்கையில் இருந்து பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சிறி பிரசாந்தன், தமிழருவி சிவகுமாரன், மலேசியாவில் இருந்து மேனாள் அமைச்சர் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நான் (மதுரன் தமிழவேள்) “நடையில் நின்றுயர் நாயகன்” என்னும் தலைப்பில் உரையாற்றினேன். நிகழ்வின் படங்களும் எனது உரையின் முதற்பகுதியும் கீழே தரப்பட்டுள்ளன. வாய்ப்புள்ளபோது விரிவான பதிவு பகிரப்படும்.

எனது உரையின் முதற்பகுதி (செப்பனிடப்படாத வடிவம்):

அரும்பொருளும் பெருஞ்சுவையும் நிரம்பிய இராம காதையை – ‘தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதையை’த் தந்த கம்பன், தான் பாடிப் பரவும் பரம்பொருளான கொண்டல் வண்ணனை – கார்மேக நிறத்துத்

 திருமாலை,

‘நடையில் நின்று உயர் நாயகன்’ என்று போற்றுகிறான்.

இங்கே நடை என்றால் ஒழுக்கம் என்று பொருள். ஆங்கிலத்திலே அதற்கு அணுக்கமான சொல்: discipline என்பது.

பரம்பொருளை நாம் ஏன் பணிந்து போற்றுகிறோம்?

கம்பரே சொல்கிறார்: அலகிலா விளையாட்டு உடையவர் அவர் தலைவர்.

உலகம் யாவையும் அவர் தாம் உளவாக்குகிறார் , நிலைபெறச் செய்கிறார், நீக்குகிறார் – 

இப்படி எண்ணில்லாத விளையாட்டை நிகழ்த்துகிற இறைவன், ஊன் இடர் பட்டும் உளம்குலைவுற்றும் உழலும் மானுடர் வாழும் பூவுலகுக்கு வந்தால் எப்பேர்ப்பட்ட வாழ்க்கையை வாழ்வான் – அவன் எப்படிப்பட்ட பண்பு கொண்டவனாக விளங்குவான் – துலங்குவான் – என்பதைக் கம்பனின் காவியம் விரித்துரைக்கிறது.

ஆக, மனிதரை, மற்றை உயிர்களை, எண்ணில்லா உலகங்களை – இந்தப் பேரண்டத்தைப் படைத்தான் என்பதற்காக இறைவனை வணங்குகிறோம். தொழுது போற்றுகிறோம்.

அந்த இறைவனை மனிதனாகத் தனது காவியத்துள் படைத்தான் என்பதற்காக க் கம்பனை இன்றைய கலைத்திரு நாளில் கனிந்து உவந்து ஏத்தி மகிழ்கிறோம்.

நடையில் நின்று உயர்தலை – ஒழுக்கத்தால் உயர்ந்து சிறப்பதைக் கடவுளின் பண்பாக க் காட்டுகிறான் கம்பன்.

அந்தக் கம்பனை நடையில் நின்று உயர்ந்த நாயகனாக க் காண்பது – காண்பிப்பது –

எனது இன்றைய இச்சிற்றுரையின் நோக்கம். காரணங்களை அடுத்து அடுக்குகிறேன்.

கம்பன் படைத்த காவியத்தின் பெருமைகளை, மாட்சியை இந்த இரண்டு நாளும் அவன் கவிதைக்கடலுள் மூழ்கி முத்தெடுத்த துறைபோகிய அறிஞர்கள் பலர் விரித்துரைக்கப்போகிறார்கள்.

இரண்டு நாள் அல்ல – ஆண்டு முழுதும் பேசினாலும் தீர்ந்து போகாமல் மூண்டு கனலும் பெரு நெருப்பு அது.

நமது தமிழ்மொழி ஒப்பற்ற பல காப்பியங்களைக் கொண்ட தொன்மொழி, செழுமொழி.

ஆனால் பன்னீராயிரம் பாடல்களால் அமைந்த பெருமை கம்பராமாயணக் காப்பியத்துக்கே உண்டு.

இளங்கோ அடிகளின் சிலம்பும் சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையும் சேக்கிழாரின் பெரிய புராணமும் வில்லி பாரதமும் நளவெண்பாவும் சீவக சிந்தாமணியும் தத்தம் அளவில் தனித்து ஒளிர்வன.

கவித்திறத்தில் இவர்களுக்கு எவ்வகையிலும் சளைக்காத கம்பன், பாடல் எண்ணிக்கையில் பலபடி மேலே நிற்கிறான்.

இத்துணை சிறப்புக் கொண்ட காவியத்தைப் பாடிய அவன்,

‘முத்தமிழ்த்துறையின் முறை நோக்கிய உத்தமக் கவிஞன்’ என்று தன்னைத் தானே கொள்ள வேண்டும்?

ஆனால், தன் காலத்தில் தன்னைச்சூழ்ந்திருந்த பிற கவிஞர்களை அவ்வாறு விளித்து, அவர்களிடம் பணிவான விண்ணப்பம் ஒன்றையும் முன் வைக்கிறான்:

பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்

பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ?

சொன்னயமும் பொருட்சுவையும் நன்னெறிக்கு உய்க்கும் நடைஉயர்வும் துலங்கப் பன்னீராயிரம் பாடல்களைப் பாடப்போகும் கம்பன்,

தனது பாயிரப் பாடலில் நின்று கொண்டு, தனது காவிய வாயிலில் நின்று கொண்டு, தொடக்கத் திலேயே தன்னைப் பித்தன் என்றும் – அதாவது பைத்தியம் என்றும் – பேதையரை ஒத்தவன் என்றும் பத்தரைப் போல உலகுடனான புலனுறவு துறந்து விட்டவன் என்றும் பணிவோடு சொல்கிறான்.

ஏன் அவன் அப்படிச் சொல்ல வேண்டும்?

ஒப்பில்லாத காப்பியம் புனையும் உயர்தனி ஆற்றல் தன்னிட த்தில் உள்ளதென்பது கம்பனுக்குத் தெரியாதா என்ன?

தெரியும் – காப்பியத்தைப் பாட முன்பே தன்னிட த்தே உள்ள கவிதைத்திறனும் கற்பனை ஆற்றலும் சொற்குவையும் கம்பனுக்குத் தெரியும்.

ஆனால் அதனை மற்றவர்களும் உணர்வதற்கு கம்பன் முதலில் காப்பியத்தைப் பாடி முடித்தாக வேண்டும். அப்படிப் பாடி முடித்தால் மட்டும்போதாது, அதனை மற்றவர்கள் படித்தாக வேண்டும் –

இங்கே தான் எழுகிறது சிக்கல் – கம்பனுக்கு பன்னீராயிரம் பாடல்கள் பாடி முடிப்பதன்று சிரமமான செயல் – அப்படித் தான் பாடி முடித்த பெருங்காப்பியத்தை மற்றவர்களைப் படிக்கச் செய்வது தான் கடினமான செயல்.

ஏனென்றால் கம்பனுக்குத் தெரியும் – தன்னைப் பைத்தியம் என்று சொல்லிக்கொள்கிற தந்திரத்தை அவன் கையாண்டாலும், உண்மையில் தன்னைச் சூழ்ந்திருக்கிற மற்றையவர்களே பித்தர்கள் – பைத்தியங்கள் என்று –

காரணம், மனிதனின் மிக அடிப்படையான, இயல்பான, அப்பட்டமான பண்பு நிலை – பைத்திய நிலை தான் –

நான் இப்படிச் சொல்வது உங்களுக்கு விந்தையாக இருக்க க் கூடும் – இங்கே இருக்கிற நான் – நீங்கள் எல்லோரும் அடிப்படையில் பைத்தியங்கள் என்று சொன்னால் நீங்கள் கோபப்படுவீர்கள் – பலர் சண்டைக்குக்கூட வருவீர்கள்.

கோபத்தை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டுக் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்போம்:

நான் என்ற உணர்வை, அடையாளத்தை மனம் தான் உருவாக்குகிறது. நான் தமிழன், நான் தமிழ் மாணவன், நான் ஒரு புலவன் –

இப்படியான அடையாளங்களை, எம்மைப் பற்றி நாமே எழுப்பிக்கொள்ளும் பிம்பங்களை மனத்திலே எழும் எண்ணக்குவியல் தான் உருவாக்குகிறது.

இப்படி எண்ணங்களை எழுப்பி நான் என்ற உணர்வை உருவாக்குகிற மனம் என்ற மாயக்கருவியின் இயல்பு என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் அது தர்க்க ஒழுங்கற்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எண்ணங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது தெரிய வரும்.

ஓர் அறையில் தனியாக அமர்ந்திருந்து கண்களை மூடிக்கொண்டு மனத்தின் எண்ண ஓட்டத்தைக் கவனித்துப் பாருங்கள் –

நேற்று உண்ட உணவு சுவையாக இருந்தது என்று மனம் ஒருகணம் நினைக்கும். வருகிற வாரம் கோவிலுக்குப் போக வேண்டும் என்று மறுகணம் எண்ணும். அடுத்த நொடி, அட இந்த மாதம் வாடகை கட்ட மறந்து விட்டோமே என்று திகைக்கும்.

இப்படி எழுகின்ற – ஒன்றுக்கொன்று தொடர்பற்ற எண்ணங்களை – அவை எழுந்த மாத்திரத்திலேயே செயலாக்குபவர்களைத்தாம் நாம் பைத்தியம் என்று அழைக்கிறோம்.

பசிக்கிறது என்று உணவிலே கை வைக்கிறார் ஒருவர்… அட இன்றைக்கு இன்னமும் குளிக்கவில்லையே என்ற எண்ணம் தோன்றியதும் சோற்றிலே நனைத்த கையைக் கழுவாமல் அப்படியேபோய்க் குளிக்கத் தொடங்குகிறார் – பிறகு திடீரென்று நேற்றுப் பார்த்த தொலைக்காட்சித் தொடரின் மீதியைப் பார்த்து முடிக்க வேண்டுமே என்ற நினைவு தோன்ற ஈர உடம்போடு போயிருந்து தொலைக்காட்சி பார்க்கத் தொடங்குகிறார்.

அகத்திலே எழும் எண்ணங்களை அப்படியே செயல்படுத்தினால் இப்படித்தான் நிகழும். இப்படியானவரைத்தான் பைத்தியம் என்று அழைக்கிறார்கள்.

ஆனால் தன்பாட்டில் இயங்கும் மனம் இப்படித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

இப்படிக் குலைவுற்று, தர்க்க ஒழுங்கற்று இயங்கும் மனத்தை, தெளிவு நிலை நோக்கி நகர்த்துகிற – செம்மையை நோக்கி நகர்த்துகிற – மனிதர்க்கு வாய்த்த மந்திரக் கருவி ஒன்று உண்டு. மனிதன் கண்டு பிடித்ததிலேயே மகத்தான கருவி அது தான் –

அந்தக் கருவியைத்தான் மொழி என்று அழைக்கிறோம்.

ஒன்றைப்பற்றிச் சீராக – பொருள் விளங்கும்படியாக நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றால் சிதறிக்கிடக்கும் எனது மன எண்ணங்களை நான் ஒழுங்கு படுத்தியாக வேண்டும். அகத்தை ஒருமுகப்படுத்தியாக வேண்டும்.

(தொடரும்)

1 thought on “இலண்டன் கம்பன் விழா: உலகம் யாவையும் உள்ளீர்க்கும் கம்பன்”

  1. Great service to Tamil world with Great courage entusiasm dedication Happiness hardwork Devotion Vision etc! God is with u all always my friends! Greetings from Sivan Tamil Temple/ Sivayogi Ashram/ Sivan Tamil Sculpture Park Korslundvegen 45,2092 Minnesund Norway!
    WA gps: World Harmony Forum/ United Gandhiyan Nations/ World Tamils Assembly +4791784271 WorldTamilRefugeesForum.blogspot.com Sarvadesatamilercenter.blogspot.com
    shan-nalliah-biography.blogspot.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×