வீரகேசரி வாரவெளியீட்டில் புதிய தொடர்: காலம் தோறும் வாழும் கம்பன்

வீரகேசரி – இலங்கையின் பழம்பெருஞ் செய்தி நாளேடு. மகாகவி பாரதியார் தனது உரைநடை வாரிசு என்று பாராட்டிய வ.ரா முதலானோரை ஆரம்பகால ஆசிரியன்மாரில் ஒருவராகக் கொண்ட சிறப்பை உடையது.

வீரகேசரி வாரவெளியீட்டில் ‘காலம் தோறும் வாழும் கம்பன்‘ என்ற தலைப்பில் ஒரு புதிய தொடர் எழுத ஆரம்பித்திருக்கிறேன். கம்பன் திருவுளப்படி தொடர் நடைபயிலும். இவ்வாரப் பத்தி – மதுரன் தமிழவேள் இலண்டனில் கம்பனைக் கண்ட கதை:

  1. கம்பனடி காப்பாம்

‘கம்பனடி காப்பாம்’ என்று எழுதிவிட்டு மனம் சிலிர்த்தபடி விழிகளை மூடிச் சாய்ந்தார் மதுரன் தமிழவேள். எவ்வளவு பொருட்பொலிவோடு வந்து விழுந்திருக்கின்றன இந்தச் சொற்கள் என்று தன்னைத்தானே மெச்சிக்கொண்டார். அருகில் தேம்ஸ் நதி சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது.

ஏதோ ஓர் உருவம் முன்னால் அசையும் உணர்வு மூடிக்கிடந்த விழிகளைத் தாண்டி நினைவைத் தொட, திடுக்கிட்டுக் கண்விழித்தார். தான் கண்ட காட்சியைத் தமிழவேளால் நம்ப முடியவில்லை!

தன்னேர் இல்லாத தமிழன்னைக்குப் பன்னீராயிரம் பாடல்களால் மாலை புனைந்து அணி செய்த கவிதைப்பேரரசர் கம்பர் அங்கே நின்று கொண்டிருந்தார்!

ஆம்! காலம், தேசம் எல்லாம் கடந்து இலண்டனில் நின்று கொண்டிருந்தார் கம்பர் பெருமான்!

கல்வியிற் பெரியோன்; காலத்தை வென்றவன்; கவிஞர்க்கு அரசன் ஐயன் கம்பனுக்கு இயலாதது எதுவுமில்லை என்று மனம் உரைத்தாலும் இப்படியும் நிகழுமா என்ற திகைப்பை மதுரன் தமிழவேளால் தவிர்க்க முடியவில்லை.

களிகூர்ந்த அகமும் ஒளிசேர்ந்த முகமுமாக நின்று கொண்டிருந்தார் கம்பர். தொலைதூரம் கடந்து வந்த களைப்பென்று எதுவும் அவர் முகத்தில் தெரியவில்லை. மோனமாகப் புன்னகைத்துக்கொண்டிருந்தார் .

நம்ப முடியாமல் கண்களைக் கசக்கிக்கொண்டார் மதுரன் தமிழவேள். மறுகணம் தன்னுணர்வு பெற்றவராக நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கி “ஐயனே! தாங்கள் எப்படி இங்கே?” என்று வியப்பு மாறாமல் கம்பர் பெருமானை நோக்கிக் கேட்டார்.

“ஏனப்பா! யாம் இங்கே வரலாகாதா? *உலகம் யாவையும் தாம் உளவாக்கும் தலைவர் இடத்தில் சரண் புகுந்தவர் அல்லரோ யாம் ?” என்று சிரித்தபடியே மறுகேள்வி கேட்டார் கம்பர் பெருமான்.

“ஐயையோ! அப்படிச் சொல்ல வரவில்லை ஐயனே! புவியாண்ட வேந்தரெல்லாம் புகழ் மங்கிப் போயொழிந்து விட, கவியாண்ட காரணத்தால் காலத்தை வென்று இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் தாங்கள். உங்கள் காவியத்தைப் படித்துவரும் பொழுதெல்லாம் எங்கும் எதிலும் உங்களையே காண்கிறேன்” என்று நெகிழ்ச்சி பெருக நெஞ்சாரச் சொன்னார் மதுரன் தமிழவேள்.

“சரி, ஏதோ எழுதியிருக்கிறாயே! என்னவென்று சொல் பார்க்கலாம்” என்றார் கம்பர்.

தமிழவேள் கூச்ச உணர்வடைந்தார்.

“அது ஒன்றுமில்லை ஐயனே..” என்று இழுத்தார்.

 “கூச்சப்படாதே! என்னவென்று சொல்”

“கம்பனடி காப்பாம் என்று எழுதியிருக்கிறேன்” என்று தயங்கியபடி கூறினார் மதுரன் தமிழவேள்.

“ஓ! ஏன் அப்படி எழுதினாய்?” மெய்யாகவே ஐயவயப்பட்டவர் போலக் கேட்டார் கம்பர்.

“கம்பன் அடி காப்பு ஆகும் – தங்களின் பீடு மிக்க திருவடிகள் – பாத மலர்கள் – எம்மை என்றும் காத்து நிற்கும் என்பது அதன் முதன்மையான பொருள்”

“அது முதன்மையான பொருள் என்றால் வேறொரு பொருளும் உள்ளது போலும்” இம்முறை கம்பரின் குரலில் கேலித்தொனி சற்றுத் தெளிவாகவே தெரிந்தது.

மிகுந்த பொறுப்புடன் விடை தந்தார் மதுரன் தமிழவேள்:

“பைந்தமிழ்ப் பாவுக்கரசரே.! இரண்டாம் பொருள் தங்கள் காவியத்தைக் குறித்து நிற்கிறது. இங்கே கம்பன் அடி என்பது தங்கள் கவிதை அடி! தங்கள் கவிதை அடியினை – தாங்கள் புனைந்தளித்த காவியத்தை – எந்நாளும் பேணிக்காப்போம் என்று உறுதி ஏற்கும் மொழி அது: கம்பனடி காப்பாம்”

சொல்லேர் உழவர் தொழுது போற்றும் புலவர்கோனான கம்பர் புன்னகைத்தார்.

 “காலத்துக்கு எது தேவையோ அதைத் தமிழின் பேராற்றல் காத்து நிற்குமப்பா!  தெய்வப்புலவன் தந்த திருக்குறளை வையம் தொழுது, வறிஞன் ஓம்புமோர் செய் எனக்காத்து** வரவில்லையா! அப்படித்தான் யாம் பாடிய இராம மாக்கதை இன்றளவும் நிலைத்து நிற்பதும்!”

இப்படிச் சொன்ன கம்பர் பெருமான் சற்றுச் சிந்தையில் ஆழ்ந்தார். பிறகு சொன்னார்:

“ஆனால் அந்தப் பேராற்றல் மனித மனங்களின் வழியேதான் செயலாற்றிக்கொண்டிருக்கிறது. தக்கோரின் சிந்தையைத் தூண்டி தனக்கு வேண்டியதை நிகழ்த்திக்கொள்கிறது. எனது காவியத்தைக் காப்பதாக உறுதி பூண வேண்டும் என்ற இந்த எண்ணமும் அப்படி நிகழ்வதே” என்றார்.

“நன்று சொன்னீர் ஐயன்மீர்” என்று கூறிய மதுரன் தமிழவேள், “தமிழ் நிலத்தின் தலைமைப் புலவர் தாங்கள் இங்கே இங்கிலாந்துக்கு வந்த காரணம் யாதோ?” என்று கேட்டார்.

“உன் முன்னே தோன்றி உரையாடிக்கொண்டிருக்கும் இதே கணத்தில் என்னைப் படித்துக்கொண்டிரும் இன்னும் பல நூறுபேரோடும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேனப்பா! பற்பல தேசங்களில் வாழ்பவன் நான். என்னை ஏற்றுக்கொள்ளாத ஒரு தேசம் உண்டா?” என்று புன்னகைத்தார் கம்பர்.

“அது சரி!”

“ மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ

உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் – என்னை

விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ

குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?

என்று சோழனைப் பார்த்து வெகுண்டுரைத்தவர் ஆயிற்றே தாங்கள்” என்று கூறிய தமிழவேள் கொஞ்சம் குறும்புத்தனத்தோடு தொடர்ந்து சொன்னார்:

“என்றாலும் இந்த நாட்டு இமிகிரேஷன் கெடுபிடிகள் பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால் இப்படிப் பேசியிருக்க மாட்டீர்கள்”

“இமிகிரேஷனா?” பல நூறு வடசொற்களைத் தமிழாக்கித் தனது காவியத்துள் கையாண்ட கம்பர் கொஞ்சம் குழப்பத்தோடு கேட்டார்.

“ஆம், இமிகிரேஷன் என்பது ஆங்கிலச் சொல். குடிவரவு என்று பொருள். இங்கே உள்ள குடிவரவுச் சட்டங்கள் கடுமையானவை. நீங்கள் சோழ நாட்டை விட்டுச் சீற்றத்தோடு வேற்று நாட்டுக்குக் குடிபெயர்ந்தீர்கள் இல்லையா… அப்படிப் பல ஆயிரம் மக்கள் தமது தாயகத்தை விட்டு வந்து இங்கே குடியேறிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு வருவோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த நாட்டு அரசு கடுமையான சட்டங்களை இயற்றி வருகிறது” என்றார் மதுரன் தமிழவேள்.

“ஓ! அப்படியா செய்தி” என்றார் கம்பர்.

“ஐயன்மீர் நீவிர் இன்று இங்கே வந்தது எனது முன்னைத் தவப்பயன். நும் காவியத்தைக் கற்றுவரும் சிறியேனுக்கு அகத்தில் அவ்வப்போது எழும் வினாக்களுக்கு விடை தந்து உதவ வேண்டும். இது தொடர்பாக ஒரு கால வரன்முறையும் திட்டமும் கூட வகுத்து வைத்திருக்கிறேன்” என்றார் தமிழவேள்.

“அது என்ன திட்டம்?” கம்பர் கேட்டார்.

“வாரமொன்றுக்கு இருநூறு பாடல்கள் என்ற கணக்கில் நும் தம் காவியத்தில் உள்ள பன்னீராயிரம் பாடல்களையும் அறுபது வாரங்கள் செலவிட்டு ஆழ்ந்து கற்க எண்ணியிருக்கிறேன். அதன்போது மனத்தில் எழும் கேள்விகளுக்கு நீவிர்தாம் விடையிறுத்தி அருள வேண்டும்” என்று பணிந்து நின்றார் மதுரன் தமிழவேள்.   

“நன்று! அப்படியே ஆகட்டும்! எப்போது வினா எழுகிறதோ அப்போது மனத்தில் என்னை நினைத்து அழைப்பாயாக. உள்ளொளி பெருக்கி உனக்கு வேண்டிய விளக்கம் புகல்வேன்” என்று ஒரு தாயின் பரிவோடு கூறினார் கம்பர்.

 உள்ளத்தில் புளகம் ஊற்றெடுக்க, அளவில்லா நன்றியுணர்வோடு கம்பரை வணங்கிய மதுரன் தமிழவேள் புதிதாக ஒரு பாடல் புனைந்து கவிச்சக்கரவர்த்தியைப் போற்றினார்:

சொல்லெனுங் கூழாங் கல்லைச்

சுடர்பெறு வைர மாக்கித்

தொல்லறி வால றத்தைத்

துகளற ஊட்டி எண்ணில்

எல்லையில் லாத காதை

எமக்களித் துயர்ந்த கம்பன்

வல்லமை நல்கும் பாதம்

வழுத்துவம் வாரீர் வாரீர்!

துகள் – குற்றம்/மாசு

அடிபணிந்து நின்ற தமிழவேளின் தலையில் கைவைத்து வாழ்த்திய கம்பர் புன்னகைத்தபடி மறைந்தார். மதுரன் தமிழவேள் தன்னிடமிருந்த கையேட்டில் ‘காலந்தோறும் வாழுங்கம்பன்’ என்று தனது கற்கைக்குறிப்புகளுக்குத் தலைப்பிட்டுக் கொண்டார்.

அடிக்குறிப்புகள்:

* “உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் அவர் தலைவர்” கம்பராமாயணம், கடவுள் வணக்கம்

**“வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் செய் எனக் காத்து, இனிது அரசு செய்கின்றான் – கம்பராமாயணம், அரசியற் படலம். செய் – வயல். ஓர் ஏழை தன்னிடத்துள்ள ஒரே வயலை எப்படி மிகுந்த பொறுப்போடு பேணிக் காப்பானோ அப்படி தயரதன் தனது அரசினை ஆண்டு வந்தான் என்கிறார் கம்பர்

அடுத்த வாரம்: “பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×