பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்: தமிழின் ஐவகை இலக்கணம் உணர்த்தும் சூட்சுமம்

மொழி மந்திரமாவது எப்போது? வீரகேசரி நாளேட்டில் இவ்வாரம் வெளியாகியிருக்கும் கட்டுரை

“செம்மைப்பட்ட மனம், மொழியைத் தோற்றுவிக்கிறது. செம்மைப்பட்ட மொழி, மனத்தை உயர் நிலைக்கு இட்டுச்சென்று உய்விக்கிறது: அதன் தாழ்விலிருந்து விடுவிக்கிறது.”

செழும்பொருளும் பெருஞ்சுவையும் நிரம்பிய இராம காதையை – ‘தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதையை’த் தந்த கம்பன், தான் பாடிப் பரவும் பரம்பொருளான திருமாலை, ‘நடையில் நின்று உயர் நாயகன்’ என்று பாயிரப் பாடலில் போற்றுகிறான்.

இங்கே நடை என்றால் ஒழுக்கம் என்று பொருள். ஆங்கிலத்திலே அதற்கு அணுக்கமான சொல்: discipline என்பதாகும்.

மனிதரை, மற்றை உயிர்களை, எண்ணில்லா உலகங்களை – இந்தப் பேரண்டத்தைப் – படைத்தான் என்பதற்காக இறைவனை வணங்குகிறோம். தொழுது போற்றுகிறோம்.

அந்த இறைவனை மனிதனாகத் தனது காவியத்துள் படைத்தான் என்பதற்காகக் கம்பனை இற்றை நாள் மட்டும் கனிந்து உவந்து ஏத்தி மகிழ்கிறோம்.

நடையில் நின்று உயர்தலை – ஒழுக்கத்தால் உயர்ந்து சிறப்பதைக் கடவுளின் பண்பாகக் காட்டுகிறான் கம்பன்.

அந்தக் கம்பனை நடையில் நின்று உயர்ந்த நாயகனாகக் காண்பது – காண்பிப்பது –  இக்கட்டுரையின் நோக்கம். காரணங்களை அடுத்து அடுக்குகிறேன்.

கம்பன் கையாண்ட தந்திரம்

நமது தமிழ்மொழி ஒப்பற்ற பல காப்பியங்களைக் கொண்ட தொன்மொழி, வியன்மொழி.

இளங்கோ அடிகளின் சிலம்பும் சீத்தலைச்சாத்தனாரின் மணிமேகலையும் சேக்கிழாரின் பெரிய புராணமும் வில்லி பாரதமும் நளவெண்பாவும் சீவக சிந்தாமணியும் தத்தம் அளவில் தனித்து ஒளிர்வன.

கவித்திறத்தில் இவர்களுக்கு எவ்வகையிலும் சளைக்காத கம்பன், பாடல் எண்ணிக்கையில் பலபடி மேலே நிற்கிறான். கம்பன் அளவுக்குச் சொற்பெருக்கு நிறையப்பெற்ற இன்னொரு கவிஞனை இன்றுவரை தமிழுலகு காணவில்லை.

இத்துணை சிறப்புக் கொண்ட காவியத்தைப் பாடிய அவன்,

முத்தமிழ்த்துறையின் முறை நோக்கிய உத்தமக் கவிஞன்’ என்று தன்னைத் தானே கொள்ள வேண்டும்?

ஆனால், தன் காலத்தில் தன்னைச்சூழ்ந்திருந்த பிற கவிஞர்களை அவ்வாறு விளித்து, அவர்களிடம் பணிவான விண்ணப்பம் ஒன்றையும் தனது காவியத் தொடக்கத்தில் முன் வைக்கிறான்:

‘பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்

பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ?’

சொன்னயமும் பொருட்சுவையும் நன்னெறிக்கு உய்க்கும் நடைஉயர்வும் துலங்கப் பன்னீராயிரம் பாடல்களைப் பாடப்போகும் கம்பன்,

தனது பாயிரப் பாடலில் நின்று கொண்டு – தனது காவிய வாயிலில் நின்று கொண்டு – தொடக்கத்திலேயே தன்னைப் பித்தன் என்றும் பேதையரை ஒத்தவன் என்றும் பத்தரைப் போல உலகுடனான புலனுறவு துறந்து விட்டவன் என்றும் பணிவோடு சொல்கிறான். தனது சொற்களைப் பொருட்படுத்தி ஆராய்ந்து பார்க்க வேண்டாம் என்று ‘உத்தமக் கவிஞ’ரிடத்தில்கோருகிறான்.

ஏன் அவன் அப்படிச் சொல்ல வேண்டும்?

ஒப்பில்லாத காப்பியம் புனையும் உயர்தனி ஆற்றல் தன்னிடத்தில் உள்ளதென்பது கம்பனுக்குத் தெரியாதா என்ன?

தெரியும் – காப்பியத்தைப் பாட முன்பே தன்னிடத்தே உள்ள கவிதைத்திறனும் கற்பனை ஆற்றலும் சொற்குவையும் கம்பனுக்குத் தெரியும்.

ஆனால் அதனை மற்றவர்களும் உணர்வதற்கு கம்பன் முதலில் காப்பியத்தைப் பாடி முடித்தாக வேண்டும். அப்படிப் பாடி முடித்தால் மட்டும்போதாது: அதனை மற்றவர்கள் படித்தாக வேண்டும் –

இங்கே தான் எழுகிறது சிக்கல் – கம்பனுக்கு பல்லாயிரம் பாடல்கள் பாடி முடிப்பதன்று சிரமமான செயல். அப்படித் தான் பாடி முடித்த பெருங்காப்பியத்தை மற்றவர்களைப் படிக்கச் செய்வது தான் கடினமான செயல்!

ஏனென்றால் தன்னைப் பைத்தியம் என்று சொல்லிக்கொள்கிற தந்திரத்தைக் கம்பன் கையாண்டாலும், உண்மையில் தன்னைச் சூழ்ந்திருக்கிற மற்றையவர்களே பித்தர்கள் – பைத்தியங்கள் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது!

காரணம், மனிதனின் மிக அடிப்படையான, இயல்பான, அப்பட்டமான பண்பு நிலை – பைத்திய நிலை தான் –

நான் இப்படிச் சொல்வது உங்களுக்கு விந்தையாக இருக்கக் கூடும் – இதை எழுதுகிற நான், படிக்கிற நீங்கள் எல்லோரும் அடிப்படையில் பைத்தியங்கள் என்று சொன்னால் நீங்கள் கோபப்படுவீர்கள் – பலர் சண்டைக்குக்கூட வருவீர்கள்.

கோபத்தை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டுக் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்போம்:

நான் என்ற உணர்வை, அடையாளத்தை மனம் தான் உருவாக்குகிறது. நான் தமிழன், நான் தமிழ் மாணவன், நான் ஒரு புலவன் –

இப்படியான அடையாளங்களையும் எம்மைப் பற்றி நாமே எழுப்பிக்கொள்ளும் பிம்பங்களையும் மனத்திலே எழும் எண்ணக்குவியல் தான் உருவாக்குகிறது.

இப்படி எண்ணங்களை எழுப்பி, ‘நான்’ என்ற உணர்வை உருவாக்குகிற மனம் என்ற மாயக்கருவியின் இயல்பு என்ன என்று ஆராய்ந்து பார்த்தால், அது தர்க்க ஒழுங்கற்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எண்ணங்களை எல்லா நேரமும் உருவாக்கிக் கொண்டிருப்பது தெரிய வரும்.

ஓர் அறையில் தனியாக அமர்ந்திருந்து கண்களை மூடிக்கொண்டு மனத்தின் எண்ண ஓட்டத்தைக் கவனித்துப் பாருங்கள் –

மனம் ஒருகணம் நேற்று உண்ட உணவின் சுவையை நினைக்கும். மறுகணம், வருகிற வாரம் கோவிலுக்குப் போக வேண்டும் என்று எண்ணும். அடுத்த நொடி, அட! இந்த மாதம் வாடகை செலுத்த மறந்து விட்டோமே என்று திகைக்கும்.

இப்படி எழுகின்ற – ஒன்றுக்கொன்று தொடர்பற்ற – எண்ணங்களை, அவை எழுந்த மாத்திரத்திலேயே செயலாக்குபவர்களைத்தாம் நாம் பைத்தியம் என்று அழைக்கிறோம்.

பசிக்கிறது என்று உணவிலே கை வைக்கிறார் ஒருவர்… அட இன்றைக்கு இன்னமும் குளிக்கவில்லையே என்ற எண்ணம் தோன்றியதும் சோற்றிலே நனைத்த கையைக் கழுவாமல் அப்படியேபோய்க் குளிக்கத் தொடங்குகிறார் – பிறகு திடீரென்று நேற்றுப் பார்த்த தொலைக்காட்சித் தொடரின் மீதியைப் பார்த்து முடிக்க வேண்டுமே என்ற நினைவு தோன்ற ஈர உடம்போடு போயிருந்து தொலைக்காட்சி பார்க்கத் தொடங்குகிறார்.

அகத்திலே எழும் எண்ணங்களை அப்படியே செயல்படுத்தினால் இப்படித்தான் நிகழும். இப்படியானவரைத்தாம் பைத்தியம் என்று அழைக்கிறார்கள்.

தன்பாட்டில் இயங்கும் மனம் இப்படித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

இப்படிக் குலைவுற்று, தர்க்க ஒழுங்கற்று இயங்கும் மனத்தை, தெளிவு நிலை நோக்கி நகர்த்துகிற – செம்மையை நோக்கி நகர்த்துகிற – மந்திரக் கருவி ஒன்று மனிதரிடத்தில் உண்டு. மனிதன் கண்டு பிடித்ததிலேயே மகத்தான கருவி அது தான் –

அந்தக் கருவியைத்தான் ‘மொழி’ என்று அழைக்கிறோம்.

ஒன்றைப்பற்றிச் சீராக – பொருள் விளங்கும்படியாக நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றால் சிதறிக்கிடக்கும் எனது மன எண்ணங்களை நான் ஒழுங்கு படுத்தியாக வேண்டும். அகத்தை ஒருமுகப்படுத்தியாக வேண்டும்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக எண்ண அலைகள் அசைந்தபடி குழம்பிக்கிடக்கும் மனம், பேசத்தொடங்கும்போது ஒருவகை ஒழுங்குக்குள் வரத்தொடங்குகிறது. தனது கருத்தையும் கருத்தை வெளிப்படுத்தத் தக்க சொற்களையும் நேர்த்தியாக அடுக்கத் தொடங்குகிறது. மனத்தை அதன் இயல்பான பித்து நிலையில் இருந்து விடுவிக்கக்கூடிய ஒழுங்கு -மொழியின் இலக்கணம் – மொழிக்குள் தோன்றத் தொடங்குகிறது.

செம்மைப்பட்ட மனம், மொழியைத் தோற்றுவிக்கிறது. செம்மைப்பட்ட மொழி, மனத்தை உயர் நிலைக்கு இட்டுச்சென்று உய்விக்கிறது: அதன் தாழ்விலிருந்து விடுவிக்கிறது.

ஐவகை இலக்கணம்

இலக்கணத்தை ஐந்து வகையாகப் பகுப்பது தமிழ் மரபு: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன அவை.

நாம் மழலைகளாக இருந்து வளர்ந்து அடுத்த நிலைக்கு நகரும்போது முதல் மூன்றனது (எழுத்து, சொல், பொருள்) அடிப்படைகளையும் ஒருவாறு பழகி விடுகிறோம்.

பிறந்த குழந்தை ஒன்று, சொல்லையும் பொருளையும் அறியாமல், தனது உள்ளத்தே எழும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தும் அடிப்படை ஒலிக்குறிப்புகளுக்குத்தாம் ‘உயிர் எழுத்து’ என்று நாம் பெயர் தந்திருக்கிறோம். அவை உயிர்ப்பின் குறியீடு!

அ,ஆ என்று அலறி அழுவதும், இ,ஈ என்று சிரிப்பதும், உ,ஊ என்று நோவைச் சொல்வதும் எ,ஏ என்று ஏளனம் செய்வதும் இன்னபிறவும் எந்த முயற்சியும் இல்லாமல் குழந்தையால் செய்யக்கூடியன. இப்படி அடிப்படை ஒலிகள் படிந்தபிறகு, முயற்சியோடு உந்தியில் இருந்து வளியை மேலெழுப்பி ஒலிக்க வேண்டிய வல்லின ஒலிகளைக் (க்,ச்,ட்,த்,ப்,ற்) காலம் தாழ்த்தித்தான் குழந்தை பயின்றுகொள்கிறது.

இப்படியான பல்வகை எழுத்தொலி சேர்ந்து பல்வகைச் சொல் உருவாகுவதையும் அப்படி உருவாகும் சொல் எப்போதும் பொருளைக் குறித்து நிற்பதையும் (எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே – தொல்காப்பியம்) மனித மனம் படிப்படியாகப் பயின்று கொள்கிறது.

மழலைகளாக இருக்கும் நாம் மொழி கிடைத்த பிறகு மனிதர்களாக மாறுகிறோம். (தனது ‘புன்கவி’ சிறுபிள்ளைகள் கீறும் ஒழுங்கற்ற சித்திரத்தை ஒத்தது என்று கம்பன் போலியாக வருத்தமுறுவதை இன்னோர் அவையடக்கப் பாடலில் பார்க்கலாம்: ‘அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள் தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ?’)

இவ்வண்ணம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றனதும் அடிப்படை வாய்க்கப்பெற்ற பிறகு மனித மனத்தின் பித்து – ஒழுங்கின்மை – ஒருவாறு தணிகிறதே தவிர முற்றுமாக நீங்குவதில்லை. கோபத்தின்போதும் கூச்சத்தின்போதும் பல நூறு பேர் முன்னிலையில் மேடையில் ஏறிப் பேசுகையில் தோன்றும் அச்சத்தின்போதும் பலரிடத்தில் மனம் சமநிலை இழந்து மொழி குழறத் தொடங்குவதைக் கண்டிருக்கிறோம்.

மொழியைக் கருவியாகக் கொண்டு மனத்தை உயர்தனிச் செம்மையை நோக்கி நகர்த்த வேண்டும் என்றால் நான்காம் இலக்கணமாகிய யாப்பினைப் பயின்றாக வேண்டும். மொழியின் முதல் மூன்று இலக்கணமும் அடிப்படையில் பொருள் அல்லது கருத்தை நோக்கியவை. யாப்பிலக்கணம் முதன்மையாக ஒலியை நோக்கியது; எழுத்தொலி ஒலிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் சார்ந்தது. எடுத்துக்காட்டு: ‘தழல்’ என்ற சொல்லின் பொருள் ‘தீ’ என்பது பற்றி மொழியிலக்கணம் அக்கறை கொள்கிறது. த-ழ-ல் என்று இரண்டு குறிலாலும் ஒரு மெய்யாலும் ஆன ஓர் ‘அசை’ அது என்பது யாப்பின் அக்கறையாக இருக்கிறது. (எளிமைப்படுத்திச் சொல்வதென்றால் இக்காலத்தில் ‘மரபுக்கவிதை’ என்று அழைக்கிறார்களே, அதற்கான இலக்கணம் தான் யாப்பு. செய்யுள் இலக்கணம் எனினும் ஒக்கும் – ஆனால் இது வெறுமனே எதுகை, மோனைகளை அடுக்கும் சொல்வித்தை மட்டும் அன்று).

யாப்புக்குள் நின்றபடி இயங்கும் மொழி, எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றையும் இறுகக் கட்டிக்கொண்டு, நெறி பிசகும் சலனங்களை உதறி விடுத்தபடி நடை பயிலத் தொடங்குகிறது. அன்றாட மொழியின் பிசிறு அங்கே அகன்று போகிறது. மொழி ஒருவகை மீநிலை ஒழுங்குக்குள் வந்து விடுகிறது.

எழுத்து, சொல், பொருள் என்ற எண்ணத்தின் கட்டுமானமும் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற காலவழிக் கட்டுமானமும் அங்கே ஒத்திசைந்து நடந்தாக வேண்டும். எண்ணம் – ஓசை: இவற்றின் ஒத்திசைவு இம்மியளவு குறைந்தாலும் புலவன் முயன்ற கவிதை கோணலாகிப் பல்லிளிக்கும்.

காலத்தின் அசைவையும் எண்ணத்தையும் ஒரே நேர்கோட்டில் கொண்டுவந்து வைக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்ட மனத்தில் தோன்றும் மொழி மந்திரமாகிறது. இதனாற்றான் ‘மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா’ என்றனர் பெரியோர். செம்மையான மனம் சொல்லும் மொழியெல்லாம் மந்திரம் என்பது அதன் உட்பொருள் ( நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப – தொல்காப்பியம். ‘மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்’ – மகாகவி பாரதி). இந்தச் செம்மையை அடைவதற்கான திறவுகோலாக யாப்பு விளங்குகிறது.

இந்த இடத்தில் ஒருவர் கேட்கலாம்: கட்டறுந்து நிற்பது தானே கவிதை மனம்? கற்பனை வானில் சிறகடித்துப் பறப்பது தானே கவிதை மனம்? நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் நிற்பது கவிதை என்கிறீர்களே?

நல்ல கேள்வி.

இங்கேதான் ‘அணி’ என்ற ஐந்தாம் இலக்கணம் வந்து நிற்கிறது. ஓசை ஒழுக்கத்துக்குக் காப்பாக யாப்பும் அழகுணர்ச்சிக்குக் காப்பாக அணியும் அமைகின்றன. ஒன்றைக் கைவிடாமல் மற்றதையும் தக்க வைத்துக்கொள் பார்க்கலாம் என்பதுதான் இங்கே புலவனுக்கு விடுக்கப்படும் அறைகூவல். விரிவு – ஒடுக்கம், ஒழுங்கு – ஒழுங்கின்மை, ஒத்திசைவு – முரண் முதலான பேரண்டத்தின் துருவ நிலை இருமைகள் யாப்புக்குள் நுட்பமாக நின்று தொழிற்படுகின்றன. ஒன்றோடு ஒன்று ஊடாடி, ஒன்றை மற்றொன்று மோதி அழிக்காமல் சமநிலையில் இயங்குகின்றன.

கம்பன் இந்தக் கலையில் உச்சம் தொட்டவன். வாழ்வின் எண்ணற்ற சிக்கல்களையும் சுழிவுகளையும் உள்ளடக்கிய ஒரு காவியத்தை ஓசை ஒழுங்கு குன்றாமல் யாப்புக்குள் நின்றபடி பல்லாயிரம் பாடல்களாகப் புனைந்து சொல்லி முடிக்கலாம் என்று நிறுவிக்காட்டியவன். அவனது கவிதைக்குள் ஆயிரம், ஆயிரம் சந்தங்கள் சுரந்து பெருகுகின்றன. சொல்லின் பொருளும் ஒலியும் அவனது ஏவலுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன. இதனாற்றான் ‘விருத்தமெனும் ஒண்பாவுக்கு உயர்கம்பன்’ என்றனர். ஒண்பா என்றால் ஒளி பொருந்திய கவிதை என்று பொருள்.

இந்த ஓசை ஒழுக்கத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லா வகையில் சிறந்தவன் என்றபடியால்தான் அவன் ‘ நடையில் நின்று உயர் நாயகன்’.

பன்னூற்றாண்டு காலப் படிப்பாலும் இடையறாத ஆராய்ச்சியாலும் இன்று முழு உலகுக்கும் புலப்படும் கம்பனின் மேதைமை அவன் காலத்தவர்களால் போதிய அளவில் போற்றப்படவில்லை போலும். மாமலையின் மாட்சி, பக்கமாக அதன் அடிவாரத்தில் இருப்பவர்களுக்குப் புலப்படுவதில்லை. தூரம் வந்து பார்க்கும்போதுதான் அது எவ்வளவு பெரியது – அரியது என்பது தெரிகிறது. பேரறிவு வாய்க்கப்பெற்ற ஒருவர் நம் அருகிலேயே இருந்தாலும் அவரைப் பித்தர் என்று கருதிக் கடந்து போயிருப்போம். குழம்பிய நிலையில் உள்ள மனம் மாயையால் மெய்யறிவைக் காண மறுத்துவிடும். தகை உடையோரைப் போற்றாது தயங்கி நிற்கும். இதேகதிதான் கம்பனுக்கும் நேர்ந்திருக்கிறது. சுதாரித்துக்கொண்ட கம்பன், ‘ நான் எளிமையான ஒரு குடிசை கட்டியிருக்கிறேன், வந்து பாருங்கள்’ என்று கூட இருப்போரை அழைத்துச் செல்கிறான். அவர்களும் அலட்சியத்தோடு போகின்றனர். உள்ளே போகப் போகத்தான் அது மயன் சமைத்த மாட மாளிகை என்பதும் அங்கே கோடி அழகு கொட்டிக்கிடப்பதும் தெரிகிறது.

வையம் வாரிதி மாமலை கானெனத்

துய்ய யாவிலுந் தோன்றுவ துன்கவி

மெய்யும் உள்ளமும் நையயான் வேண்டுவன்

ஐய நீயெனை ஆண்டருள் செய்திடாய்

(அடுத்த வாரம்: கலீல் ஜிப்ரான், கணியன் பூங்குன்றன், கம்பன்)

1 thought on “பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்: தமிழின் ஐவகை இலக்கணம் உணர்த்தும் சூட்சுமம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×