காட்சிக் கலைஞன் கம்பன்: வீரகேசரியில் வெளியாகும் தொடர் (5ஆம் வாரம்)

இது காட்சி ஊடகங்களின் காலம்.

இணையம் கோலோச்சும் இன்றைய காலத்தில் அசையும் படிமங்களே நமது நினைவை நிறைக்கின்றன. அறிவைச் சமைக்கின்றன.

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து 2010 ஆம் ஆண்டு வரை பிறந்த தலைமுறையை Gen Z என்று அழைக்கிறார்கள். இந்த Gen Z தலைமுறையைச் சேர்ந்தவர்களில் 91% ஆனவர்கள், (அச்சுப் பனுவல்களைக் காட்டிலும்) யூட்யூப் முதலான தளங்கள் வழியாகக் காணொளிகளைப் பார்த்துக் கற்பதையே அதிகம் விரும்புகிறார்கள் என்று சொல்கிறது கடந்த ஆண்டு வெளியான ஹப்ஸ்பாட் (Hubspot) வலைத்தளத்தின் ஆய்வறிக்கை.

காட்சி வழியாகக் கதை சொல்லும் கலையில் தேர்ச்சி கொண்டவர்கள் சினமா முதலான துறைகளில் மிகுபுகழும் செல்வமும் ஈட்டுகிறார்கள். ஒன்றில், திரைத்துறையில் சாதனை புரிந்து மேலே வர வேண்டும்; இல்லையேல் இணைய வெளியில் காணொளிகள் வழியாகப் பல இலட்சம் பேரை அடைந்து புகழ்முகம் பெறவேண்டும் – இதுவே இன்றைய இளந்தலைமுறையினரில் பலரின் வேட்கையாக இருக்கிறது.

நடைமுறை உலகில் நிகழ வாய்ப்பற்ற பெருங்கற்பனைகளை – சாகசக் காட்சிகளை – வரைகலை மூலமாகக் காட்சியாக்கும் தொழினுட்பத்தில் (Animation / graphics) வல்லமை கொண்டவர்களும் வெகுவாகப் பணமீட்டுகிறார்கள். பாகுபலி, பொன்னியின் செல்வன், கல்கி முதலான திரைப்படங்கள் இதற்கான அண்மைக்கால எடுத்துக்காட்டுகள்.

திரைப்பட உருவாக்கத்தின்போது, எண்ணத்தைக் காட்சியாக மாற்றுவதற்கு முன்னர்  அதனை எழுத்தாகப் பதிவு செய்து கொள்வது இன்றியமையாததாகிறது. எண்ணம் எவ்வளவு சீராக எழுத்தில் பதிவு பெறுகிறதோ எடுக்கப்படும் காட்சியும் அவ்வளவு சீராக அமையும். இந்த இடத்தில் திரைக்கதாசிரியர்  (Screen writer) முதன்மை பெறுகிறார்.

தாக்கம் தரக்கூடிய கதைமாந்தர்களை உருவாக்குவது, ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அவர்களிடையேயான உரையாடலை அமைப்பது, திட்பமான முறையில் கதைக்கட்டமைப்பை உருவாக்கி எடுப்பது – இவை திரைப்பட எழுத்தாளருக்கான பணிகள். காட்சி வழியாகக் கதை சொல்வது எப்படி என்றும் உருவமற்ற மனித உணர்வுகளைக் கடத்துவற்கு உகந்த படிமங்கள் எவை என்றும் அவர் அறிந்திருக்க வேண்டும்.

நன்று வாசகரே! இந்தப் புள்ளியில் நீங்கள் உங்களை ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களிடம் காட்சிகளைச் சித்தரிக்கும் இயக்குநராக அன்றேல் திரை எழுத்தாளராக என்னைக் கருதிக்கொள்ளுங்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாகப் புனையப்பட்ட சில காட்சிகளை உங்களிடத்தில் எடுத்துக்கூற விரும்புகிறேன்.

காட்சி 1:

கருமை நிரவிக் கவிந்த ஒரு பெருவெளி.

தொடக்கத்தில் அசைவேதும் அற்றிருந்தது போலத் தோன்றிய அந்த வெளி மெல்ல அசையத் தொடங்குகிறது. அப்பிக் கிடக்கும் கருமையை உற்றுப்பார்த்தால் அங்கங்கே கோடுகள் தெரிகின்றன. செந்நிறத்தில் நான்கு புள்ளிகள் ஒளிர்கின்றன. ஒளிர்ந்த மாத்திரத்தில் திடீரென்று செவி பிளக்கும் பேரோசை எழுகிறது. சிலிர்க்கும் கருப்பு நார்களில் இருந்து வண்டுகள் பரபரத்துப் பறக்கத் தொடங்குகின்றன.

என்ன நிகழ்கிறது இங்கே? இருள் இரண்டு கூறாகப் பிரிந்து ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கிறதா? இடி உண்டாக்கும் இரட்டை மேகங்களா இவை?

இல்லை! இருட்கூறு போலத் தோன்றும் அவை இரண்டும் உண்மையில் எருமைக்கடாக்கள்! செந்நிறமாகச் சுடர்வன அவற்றின் கண்கள்!

அவை ஒன்றோடு ஒன்று மோதிச் சண்டையிடத் தொடங்க, அவற்றின் மயிர்களில் ஒன்றியிருந்த வண்டுகள் சிலிர்த்துப் பறக்கத்தொடங்குகின்றன.

இவ்வளவு விவரிப்பானேன்? சிலிர்ப்பூட்டும் இந்தக் காட்சியை ஒரு செய்யுளாகவே சொல்லி விடுகிறேனே:

எருமைநா கீன்ற செங்கண் ஏற்றையோ டேற்றை சீற்றத்(து)

உருமிவை என்னத் தாக்கி ஊழுற நெருக்கி ஒன்றாய்

விரியிருள் இரண்டு கூறாய் வெகுண்டன அனைய நோக்கி

அரியினங் குஞ்சி ஆர்ப்ப மஞ்சுற ஆர்க்கின் றாரும்..

**

காட்சி 2:

இனி, நான் காட்டப்போகும் நாடு அளவற்ற செல்வம் மிக்கது. அதன் செல்வச் செழிப்பை உணர்த்துவதற்கு அந்த நாட்டு மாட மாளிகைகளையோ வானளாவும் கோபுரங்களையோ நான் இப்போதைக்குக் காட்டப்போவதில்லை. நான் காண்பிக்கப் போவது அங்கே உள்ள குப்பை மேட்டினை!

உச்சிக்கொண்டையைக் கொண்ட சிவப்பு நிறமுடைய கோழிகள் அந்த மேட்டிலே காலால் குப்பையைக் கிளறிக்கொண்டிருக்கின்றன. கிளறும் குப்பையினின்று மேலே வந்து சில கற்கள் மிகுந்த ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன. கொஞ்சம் உற்றுப்பார்த்தால் குப்பை மேட்டில் அப்படிச் சுடர்ந்து கொண்டிருப்பவை விலை உயர்ந்த மாணிக்கக் கற்கள் என்பது தெரிகிறது! அப்படிச் சுடர்வீசும் மாணிக்கங்களை மின்மினிகள் என்று நினைத்த குருவிக் கூட்டம் அவற்றைக் கொத்திக்கொண்டுபோய்த் தமது கூட்டிலே சேர்க்கிறது. எவ்வாறான கற்பனை!

சூட்டுடைத் தலைச் செந்நிற வாரணம்

தாள் துணைக்குடையத் தகை சால் மணி

மேட்டு இமைப்பன மின்மினியாம் என

கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம் அரோ!

**

காட்சி 3:

நிலத்தின் நீர்மைப் பசையையெல்லாம் வான் கதிரவன் உறிஞ்சிப் பருகிவிட்ட பாலை வெளி அது. அங்கே உலர்ந்து நிற்கின்ற பெரிய கள்ளி மரத்தின் அடி, பேயொன்று பிளந்து நிற்பது போலப் பிளவு பட்டு அச்சமூட்டுகிறது. அந்தப் பிளவில் இருந்து வெளிவந்த கரு நிறமுடைய அகிற்கட்டைகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இலைகள் உதிர்ந்து விட்ட மூங்கில் பிளந்து அவற்றினின்று வெண் முத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. கொடுவிடம் கொண்ட நாகங்கள் வாய் திறந்து சிந்திய செந்நிற மாணிக்கங்களும் அங்கங்கே பரவிக் கிடக்கின்றன. இந்தக் காட்சியைச் சொல்லும் செய்யுள் அடிகள்:

பரிதி வானவன் நிலம் பசையறப் பருகுவான்..

.

பேய்பிளந்து ஒக்க நின்று உலர்பெருங்கள்ளியின்

தாய்பிளந்து உக்க கார் அகில்களும் தழை இலா

வேய் பிளந்து உக்க வெண் தரளமும் விட அரா

வாய்பிளந்து உக்க செம்மணியுமே வனம் எலாம்!

**

காட்சி – 4:

உடலையும் உயிரையும் இயற்றும் விசை காமம். அவற்றை உந்தி இயக்கும் விசையும் அதுவே. உணர்வில் காமம் எழும் கணத்தைக் காட்சிப் படிமமாக்குவது எப்படி? குறியீடுகள் கொண்ட கலையாக்குவது எப்படி? காமனின் அம்பு காதலர் நெஞ்சைத் தைக்கும் கணத்தை உணர்த்த, நான் தயிரினைக் கடையும் மத்து ஒன்றின் இயக்கத்தைக் காண்பிக்கிறேன். ஊடுதல், பிறகு பிணக்கம் நீங்கி உடலொடு உடல் பொருதுதல், விடுபடல் – இவை யாவும் ஒரு போர்ச்செயல் போலவே தோன்றுகின்றன. வயிரத்தையொத்த உறுதி கொண்ட வெண்ணிறத் தந்தங்களையுடைய யானைகள் இரண்டு நெஞ்சில் கோபம் கொண்டு ஒன்றுடன் ஒன்று சண்டை செய்யும் காட்சி எண்ணத்தில் எழுகிறது. அந்தச் சண்டையின்போது அவற்றின் கண்கள் சிவந்த தீயை உமிழ்கின்றன. ஒன்றோடு ஒன்று பொருந்தி அதன்பின் நீங்க மாட்டாத இரண்டு மலைகள் போல அவை தோற்றம் காட்டுகின்றன:

தயிருறு மத்தின் காமன் சரம்படத் தலைப்பட்டு ஊடும்

உயிருறு காத லாரின் ஒன்றை ஒன்று ஒருவ கில்லா

செயிருறு மனத்த வாகித் தீத்திரள் செங்கண் சிந்த

வயிரவான் மருப்பி யானை மலையென மலைவ கண்டார்

**

சரியா வாசகரே? நான் விவரித்திருக்கும் காட்சிகள் எனது சொந்தச்சரக்குக் கிடையாது என்பதையும் கம்பன் கவிதையிலிருந்து கடன் பெற்றவை அவை என்பதையும் உணர்ந்திருப்பீர்கள். இப்போது நான் படித்துக்கொண்டிருக்கும் பால காண்டத்தின் பக்கங்களை எழுந்தமானமாகப் புரட்டியபோது கண்ணில் பட்ட சில பாடல்களையே மேலே பகிர்ந்திருக்கிறேன். இவை முறையே நாட்டுப்படலம், , தாடகைவதைப் படலம், மிதிலைக்காட்சிப்படலம் ஆகிய பகுதிகளில் இடம்பெறும் பாடல்கள். கம்பனிடத்தில் இப்படியான பல்லாயிரம் பாடல்கள் உள்ளன.

நான் இதை இவ்வாறு தொகுத்துத்தரும்போது ஏதோ இக்காலத்துக் கலைஞரிடத்தே இருக்கும் கற்பனைத் திறனுக்கு நிகராகக் கம்பனிடத்தும் புதுமை புனையும் ஆற்றல் கொட்டிக்கிடந்தது என்று சொல்வதுபோன்ற தோற்றம் எழுகிறது. ஆனால் உண்மையில் கம்பன் முதலான படைப்புக் கடவுளரிடத்தில் இருந்து நம்மை அறியாமலேயே கடன் பெற்ற எண்ணங்களைத்தாம் நாம் நமது சொந்தக் கற்பனைகள் என்று கருதிக்கொள்கிறோம்.

ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் ஒரு பண்பாட்டில் ஆழமாக வேரூன்றி விட்ட இதிகாசக் கதை மாந்தர்களும் தொன்மப் படிமங்களுமே அந்தப் பண்பாட்டைச் சார்ந்த மனிதரது எண்ணங்களையும் எண்ணத்தின் வழியான செயல்களையும் முகாமையான பல முடிவுகளையும் உந்தித் தள்ளுகிறார்கள் என்பது தெரியவரும். தொன்மக் கதைமாந்தர் பின்பற்றி ஒழுகியதாகச் சொல்லப்படும் நெறிகள் அவை சார்ந்த சமூகத்தின் விழுமியங்களாக மாறுகின்றன. அந்த விழுமியங்களால் வழி நடத்தப்படும் வாழ்க்கையில் இருந்து பெறப்படும் கதைகள் மறுபடி இதிகாசங்களை / தொன்மக்கதைகளை நினைவுபடுத்துவதும் தவிர்க்க இயலாதது.

இயக்குநர் கௌதம் மேனனின் ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எங்கே இருக்கிறாள் என்று தெரியாமலே தனது காதலியைக் காண்பதற்காகத் தவிப்போடு கடல் கடந்து செல்லும் நாயகனின் உள்ளத்தை, சீதையைத் தேடிச்சென்ற இராமனே பல காலத்துக் கண்ணிகளாக இழைந்து வந்து இயக்குகிறான் என்று சொல்வது மிகையாகாது.

பிருதிவிராஜ் நடித்த ‘அனார்கலி’ என்ற மலையாளத் திரைப்படம் பற்றி எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில இதழ் ஒன்றில் எழுதியிருந்தேன். காதலியை, காதலன் அறியாத இடத்தில் அவளது தந்தை சிறை வைத்து விடுகிறார். காதலன் கடல் கடந்து அவளைத் தேடி அலைந்து திரிகிறான். தான் இருப்பதை உணர்த்துவதற்குத் தனது கணையாழியைக் கொடுத்தனுப்பிய இராமனைப் போல, அந்தக் காதலனும் காதலிக்குச் செய்தி அனுப்பச் சில வழிகளில் முயல்கிறான்.

காதலியைத் தேடிக் கடல் கடந்து சென்று அலைந்து திரிபவன் அதற்கான உந்துதலைப் பெறுவதற்கு நேரடியாக இராமனை நினைக்க வேண்டும் – அவன் கதையை அறிந்திருக்க வேண்டும் – என்றில்லை. பல்வேறு காலப் படி நிலைகளின் வழியாக, பல்வேறு மனிதர்தம் அகத்தைக் கடந்து அவனிடத்தில் அந்த உணர்வு கடத்தப்பட்டிருக்கும். அதை எங்கிருந்து பெற்றோம் என்பது அவனுக்கே தெரியாமல் இருக்கும்.

இந்த ஆண்டு ‘லவ்வர்’ என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. பல்திறன் மிக்க நடிகரான மணிகண்டன்  நடித்திருந்தார்.  இளந்தலைமுறையினரில் ஒரு சாரார் அதை வரவேற்றுக் கொண்டாடினர். இன்னொருசாரார் கடிந்து ஒதுக்கினர். தான் உளமாரக் காதலிப்பதாக நம்பும் பெண்ணைத் தொடர்ச்சியாகச் சந்தேகப்பட்டுத் துன்புறுத்தும் ஆடவன் தான் கதையின் நாயகன். சீதையைத் தீக்குளிக்கச்சொன்ன இராமனே காலம் பல கடந்தும் அவன் உள்ளத்துள் நின்று பேசுகிறான் என்பதை ஐயமின்றிச் சொல்லலாம்.

திக்கற்றுத் திரியும் சுடலைப் பித்தனான சிவனைப் பிச்சியாகிக் காதலித்தாள் – குலப்பெருமை அழியும் வண்ணம்  அவனைக் கைப்பிடித்தாள் – என்று, தான் பெற்ற மகளை வெறுத்தொதுக்கும் தக்கர்கள் இந்திய மண்ணில் இன்னமும் நிறைந்துதாம் உளர். (இத்தொடர்பில், கம்பரின் சமகாலத்தவர் என்று கருதப்படும் ஒட்டக்கூத்தர் எழுதிய ‘தக்கயாகப்பரணி’ நூலை வாய்ப்புள்ளோர் படித்துப்பாருங்கள் – சந்தச்சுவை சொட்டும் பனுவல்). கண்ணகியைத் தன்னினைவில் வைத்திருக்கும் தமிழ்ச்சமூகம், தன்னை விடுத்து விலைமாதரிடம் சென்ற கணவன் மீளும்போது அவனை வெறுக்காது போற்றிப் பேணுமாறு பெண்ணிடத்தே நெடுங்காலமாக அறிவுறுத்தித்தான் வந்தது.

துரியோதனாதியரின் தொந்தரவு வேண்டாது வெவ்வேறு தொழில் செய்தபடி மறைவு வாழ்க்கை (அஞ்ஞாதவாசம்) வாழும் மகாபாரதப் பாண்டவர்களை, ‘பாட்ஷா’ என்ற திரைப்படத்தில் மாணிக்கமாக வரும் ரஜினிகாந்தும் அவரது தோழர்களாகத் தோன்றும் நடிகர்களும் நினைவுபடுத்தக்கூடும்.

சில நாள் முன்பு வெளிவந்து எல்லா இடங்களிலும் பேசுபொருளாக இருக்கும் நடிகர் விஜயின் திரைப்படம் GOAT (எஞ்ஞான்றும் மாப்பெரியன் – நன்றி: கவிஞர் மகுடேசுவரன்). வெங்கட் பிரபு எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் வரும் எதிர் நாயகன், சிறுவயதில் பெற்றோரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டுத் தீயவர்களால் வளர்க்கப்படுகிறான். வளர்ந்து பெரியவனானதும் வளர்த்தவனின் தூண்டுதலில் – தனது வளர்ப்புத் தந்தைக்கு நன்றிக்கடன் செலுத்தும் பொருட்டுத் – தன்னை ஈன்ற உயிரியல் தந்தைக்கு எதிராகப் போர் தொடுக்கிறான். பாரதத்தில், குழந்தையாக இருந்தபோதே குந்தியால் கைவிடப்பட்டு, துரியோதனன் ஆதரவால் உயர்ச்சி பெறும் கன்னன் (கர்ணன்), பாண்டுவின் மைந்தர்களுக்கு எதிராக குருஷேத்திரத்தில் களம் கண்ட கதையை இதனோடு பொருத்திப் பார்ப்பதொன்றும் கடினமில்லை.

இயக்குநர் மணிரத்னம் இதிகாசக் கதை நிகழ்வுகளை நேரடியாகத் தற்கால வாழ்க்கைக்கு ஏற்றபடி மாற்றியமைப்பதை தனது திரைப்படப் பாணியாகவே வகுத்துக்கொண்டவர் (தளபதி, ராவணன்..).

தனது கணவனின் சாவுக்குக் காரணமாக இருந்தான் என்ற காரணத்தால், தான் பெற்ற மகனை வாழுந்தோறும் வெறுத்து ஈற்றில் நஞ்சூட்டிக்கொல்லும் தாயை இயக்குநர் பாலா எடுத்த ‘நந்தா’ என்ற திரைப்படத்தில் காண்கிறோம். அவள் ஏறத்தாழ அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு நிகரானவள். காதலனான கணவன் இறந்த கணத்திலேயே தானும் உயிர் துறக்க விரும்பியவள் உத்தரை. குரு வம்சத்தின் கடைசி வழித்தோன்றல் அவளது வயிற்றில் கருவாக இருந்தது. எனவே அவள் விருப்பம் அனுமதிக்கப்படவில்லை. சபித்தபடியே வயிற்றில் இருந்த சிசுவைக் குறைமாதப் பிண்டமாக ஈன்றெடுத்து உயிர் துறந்தாள் உத்தரை.

நிலவும் சமூக விழுமியங்களை முற்றுமாகப் புரட்டிப்போட்டுப் புதிய மாற்றங்களைக் கொண்டுவர எண்ணிய தந்தை பெரியார் (ஈ.வெ.ரா) போன்ற புரட்சிச்சிந்தனையாளர்கள் ஏன் இத்தகைய இதிகாசங்களைக் குறிவைத்துத் தாக்கினார்கள் என்பதையும் இந்தப் பின்னணியிலேயே விளங்கிக் கொள்ளலாம் (இதுபற்றிப் பிறிதொரு பொழுது விரிவாக எழுதலாம்).

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த உளவியல் விற்பன்னரும் உளப்பகுப்பாய்வாளருமான கார்ல் யூங் ((1875-1961) ‘கூட்டு ஆழ்மனம்’ (collective unconsciousness) என்ற ஒன்றைப் பற்றிப் பேசுகிறார்.

ஆழ்மனம் பற்றிய சிக்மண்ட் பிராய்டின் அறிவிப்புகளை அடித்தளமாகக்கொண்டு தனது ஆய்வுகளை முன்னெடுத்துச் சென்ற யூங், பிராய்ட் சொல்லும் தனிமனிதரின் ஆழ்மனம் தவிர, ‘கூட்டு ஆழ்மனம்’ என்ற ஒன்றும் உண்டு என்று கூறுகிறார். பிராய்ட் சொல்லும் தனிமனித ஆழ்மனம் அந்த மனிதரின் தனிப்பட்ட அனுபவங்களால் உருவாவது. யூங் முன்மொழியும் கூட்டு ஆழ்மனம் archetype எனப்படும் மூலப்படிமங்களால் உருப்பெறுவது. தொல்காலத்தில் இருந்து மனிதரிடையே நிலவும் வழக்கங்கள் இந்த மூலப்படிமங்களை உருவாக்குகின்றன. ஒவ்வொரு மனிதரதும் தன்னிலை (self), சமூகத்துக்குத் தன்னைப் பற்றி ஒருவர் வழங்கும் சித்திரம் (persona), வெளிப்படுத்தப்படாத, உள்ளொடுங்கிக்கிடக்கும் ஆழ்மன விகாரங்கள், ஆசைகள், வலிமையீனங்கள் (shadow) முதலானவற்றின் உருவாக்கத்தில் இந்த மூலப்படிமங்கள் (archetypes) பங்களிக்கின்றன என்கிறார் யூங்.

ஏனைய பண்பாடுகளைப் போலவே, பாரத மரபிலும் அதன் பண்டைய இதிகாசங்களும் இலக்கியத் தொன்மங்களும் இந்தக் கூட்டு மனத்தையும் அதன் உட்கிடையான மூலப்படிமங்களையும் உருவாக்கி வந்திருப்பதை உணரலாம்.

வேறு வகையில் சொல்வதென்றால், காவியம் புனைவோரும் கதை எழுதுவோரும் திரைப்படம் எடுப்போரும் இந்த மூலப்படிமங்களை உன்னிப்பாக உள்வாங்குதல் இன்றியமையாதது. இந்த மூலப்படிமங்களின் தாக்கத்தை விளங்கிக்கொள்ளாமல் வலுவான கதைகளைத் தருவது இயலாது எனலாம்.

நீங்கள் காட்சி ஊடகத்தை ஆட்சி செய்ய விரும்பும் ஒருவராக இருந்தால், கம்பனை எடுத்துப் படியுங்கள். அவன் தன்னிகரற்ற கதாசிரியன் மட்டுமன்றி, ஏற்கனவே எழுதப்பட்ட கதையின் வழுக்களைச் சுட்டித் திருத்தித் தரக்கூடிய மதியுரைஞனும் (script consultant) கூட. மூலக் கதாசிரியனான வால்மீகி சறுக்கிய பல இடங்களை இந்தத் திறமை கொண்டுதான் கம்பன் பண்படுத்திச் சுடர்விடச் செய்தான்.

கம்பன் துதி

நாமகள் கொழுநன் இந்த நானிலம் படைத்தான் என்பர்

பாமிசைச் சந்தம் என்னும் பரியினைப் பூட்டி ஓட்டி

யாமமும் பகலும் வாழ்வும் யாத்தனன் கம்பன் பாட்டில்

தூமலர்ப் பிரமன் அல்லன் தொண்டனே படைத்தான் கண்டீர்!

அடுத்த வாரம்: கம்பனும் தமிழர் அரசியல் வியூகங்களும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×