எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஆளரவமற்ற ஓர் இடத்தில் இருந்து தியானம் செய்ய வேண்டும் என்று ஒரு பிட்சு விரும்பினார்.
மடாலயத்திலிருந்து புறப்பட்ட அவர் தூரத்தில் இருந்த குளத்தடிக்குச் சென்று கரையிலிருந்த படகில் ஏறினார். தானே துடுப்பு வலித்தவாறு குளத்தின் மையப்பகுதிக்குச் சென்றார். தனிமையில் கண்களை மூடி தியானம் செய்யத் தொடங்கினார்.
சுற்றி வர எவருமில்லை. அடுத்த சில மணி நேரம் நிசப்தம் மட்டுமே சூழலை நிறைத்தது. ஆழ்ந்த தியானம்.
மெய் மறந்து தியானத்தில் ஆழ்ந்திருந்த நேரம் திடீரென்று தனது படகில் இன்னொரு படகு வந்து மோதியதை பிட்சு உணர்ந்தார். வணக்கத்துக்குரிய பிட்சு ஒருவர் தியானத்தில் இருப்பதைக் கூடக் கவனிக்காமல் யாரோ படகோட்டி அலட்சியமாகப் படகைச் செலுத்தி வந்திருப்பதை எண்ணியபோது மனதில் கோப அலைகள் எழுவதை பிட்சு உணர்ந்தார்.
படகோட்டியின் நடவடிக்கையைக் கடிந்து அறிவுரை சொல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டு பிட்சு கண்களைத் திறந்தார். கண்களைத் திறந்தபோதுதான் தெரிந்தது, தான் இருந்த படகில் வந்து மோதியது ஆளில்லாமல் குளத்தில் மிதந்து கொண்டிருந்த மற்றொரு படகு என்பது.
அந்தக் கணத்தில் அவருக்கு விழிப்புணர்வு கிட்டியது. நாம் கோபப்படுகிறோம் என்று உணர்வதை விட எப்போதும் இன்னொருவர் நமக்குக் கோபமூட்டுகிறார் என்றே நம்புகிறோம். நாமாகச் சென்று காலைக் கல்லில் மோதிக்கொண்டாலும், ‘கல் அடித்துவிட்டது’ என்று கல்லின் மீது குற்றம் சுமத்துவது தானே மனதின் வழக்கம்?
பிட்சு தனது கோபத்துக்கான காரணம் என்று நம்பிய படகோட்டி உண்மையில் அங்கு இருந்திருக்கவில்லை. கோபம் தனக்குள்ளேயே இருந்தது – உரிய சந்தர்ப்பம் ஏற்பட்டதும் வெளியே தலைகாட்டியது என்பதை அவர் உணர்ந்தார்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா – கணியன் பூங்குன்றனார்.
கோபமும் மகிழ்ச்சியும் பிறர் தந்து வருவதில்லை.